விஜயநகரக் கட்டிடக்கலை

விஜயநகரக் கட்டிடக்கலை என்பது, கிபி 1336–1565 காலப்பகுதியில், தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவிய காலத்தில் வழங்கிய கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்திருந்த விஜயநகரம் இப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. இதனால் இக்காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கோயில்கள், மாளிகைகள் மற்றும் பல கட்டிடங்கள் இப் பகுதியிலேயே செறிந்து காணப்படுகின்றன. இவற்றுள் விஜயநகரத்தினுள் அடங்கும் ஹம்பி பகுதியில் இருக்கும் கட்டிடச் சின்னங்களின் தொகுதி யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹம்பியில் உள்ள விஜயநகர ராய கோபுரம்

இக் காலத்தில் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன, அத்துடன், தென்னிந்தியா முழுவதும் ஏற்கனவே இருந்த பல நூற்றுக்கணக்கான கோயில்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டதுடன், திருத்தவேலைகளும் செய்யப்பட்டன. பழைய தலைநகரப் பகுதியில் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான கட்டிடச் சின்னங்கள் இன்றும் காணப்படுகின்றன. இவற்றுள் 56 சின்னங்கள் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படுகின்றன. அறுநூற்று ஐம்பது சின்னங்கள் கர்நாடக அரசினால் பாதுகாக்கப்படுகின்றன. இன்னும் 350 வரையிலான சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டி உள்ளன.[1][2][3]

சிறப்பு இயல்புகள்

தொகு
 
ஹம்பியில் உள்ள ஹோய்சாலர் பாணிச் சிற்பங்கள்
 
அம்பியில் உள்ள யாளி உருவம் செதுக்கப்பட்ட தூண்கள்

விஜயநகரக் கட்டிடக்கலையைச் சமயம் சார்ந்தவை, அரசு சார்ந்தவை, குடிசார்ந்தவை என மூன்றாகப் பிரித்துப் பார்க்க முடியும். விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி இதற்கு முன், இப்பகுதிகளில் நிலவிய சாளுக்கிய, ஹோய்சல, பாண்டிய, சோழர் கட்டிடக்கலைகளின் இயல்புகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியது.

விஜயநகரப் பேரரசும், ஹோய்சாலப் பேரரசும் ஆட்சி புரிந்த சுமார் 400 ஆண்டுகளாக இளகல் தீப்பாறை (chloritic schist) அல்லது மாவுக் கற்களே (soapstone) கோயில் கட்டிட வேலைகளில் விரும்பப்பட்டன. மாவுக்கல் செதுக்குவதற்கு இலகுவானது என்பதால் சிற்பவேலைகளுக்கும் இது பெரிதும் பயன்பட்டது. விஜயநகரக் காலத்தில், பாதமி சாளுக்கியப் பாணிக் கட்டிடங்களுக்கு உள்ளூர்க் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சில சிற்பங்களிலும், புடைப்புச் சிற்பங்களிலும் மாவுக்கற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காணலாம். கருங்கற் பயன்பாடு சிற்பவேலையின் செறிவைக் குறைத்துவிட்டாலும், கருங்கல் நீண்டகாலம் நிலைக்கக் கூடியது என்பதால் கோயில் கட்டிடங்களுக்கு விரும்பப்பட்டது. இங்கே பயன்பட்ட கருங்கற்கள் செதில்களாக உடையக்கூடியனவாக இருந்ததால், முன்னைய காலத்தைப் போல் உயர் தரம் வாய்ந்த சிற்பங்கள் மிகச் சிலவற்றையே உருவாக்க முடிந்தது. சிற்பங்களில் பயன்பட்ட கற்களில் காணப்பட்ட சீரற்ற மேற்பரப்பை மறைப்பதற்காக, சிற்பிகள் சாந்துப் பூச்சுக்களைப் பூசி மேற்பரப்பை வழுவழுப்பு ஆக்கியதுடன், நிறங்களும் பூசி அழகுபடுத்தினர்.

கோயில் அமைப்பு

தொகு

விஜயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. சிறிய கோயில்கள் ஒரு கருவறையையும் அதன் முன் அர்த்த மண்டபம் எனப்படும் சிறிய மண்டபம் ஒன்றையும் மட்டும் கொண்டவை. நடுத்தர அளவிலான கோயில்களில், கருவறையயும், அர்த்த மண்டபத்தையும் இணைக்கும் சிறிய இடைநாழி எனும் ஒரு சிறிய இடம் அமைந்திருக்கும். அத்துடன் அர்த்த மண்டபத்துக்கு அப்பால் முக மண்டபம் என்னும் இன்னொரு மண்டபமும் இருக்கும். பெரிய கோயில்களில் சுற்று மதில்களில் வாயில்கள் இருக்கும் இடங்களில் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசர்களான ராயர்களின் பெயரைத் தழுவி இக் கோபுரங்கள் ராய கோபுரங்கள் என அழைக்கப்பட்டன. இவை, மரம், செங்கல், சாந்து ஆகியவற்றைக் கொண்டு, பெரும்பாலும் சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில், மக்கள், கடவுளர் ஆகியோரின் பெரிய அளவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு அழகூட்டப்பட்டன. தமிழர் கட்டிடக்கலைச் செல்வாக்கினால் உருவான இவ்வழக்கம், பேரரசன் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் பிரபலமாகிப் பின்வந்த 200 ஆண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில் கோபுரம், ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் ஆகிய இடங்களில் உள்ள கோயில் கோபுரங்கள் ஆகியவை ராய கோபுரங்களுக்கு நல்ல எடுத்துக் காட்டுகள் ஆகும்.

இவை தவிர, மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம், கல்யாண மண்டபம், திருக்குளம் என்பனவும் இக் காலக் கோயில்களின் கூறுகள் ஆயின. இக் காலத் தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். யாளிகள், குதிரைகள் போன்றவை இல்லாத தூண்கள் சதுர வடிவாக அமைந்து அவற்றில் பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்ட அழகூட்டல்கள் காணப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Global Heritage Fund பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம்
  2. Hampi – A Travel Guide, pp 36, Department of Tourism, India
  3. Art critic Percy Brown calls Vijayanagara architecture a blossoming of Dravidian style, A Concise History of Karnataka, pp 182, Dr. S.U. Kamath, History of Karnataka, Arthikaje
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநகரக்_கட்டிடக்கலை&oldid=4153016" இலிருந்து மீள்விக்கப்பட்டது