கோபுரம் (கோயில்)

கோபுரம் என்பது தற்போதைய பரவலான வழக்கில் இந்துக் கோயில்களின் நுழை வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிக்கும். பல்வேறு அளவுகளிலும் காணப்படும் இக் கோபுரங்கள், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலேயே அவற்றின் உச்ச வளர்ச்சியைப் பெற்றுக் காணப்படுகின்றன. ஒரு பட்டைக்கூம்பு (பிரமிட்) போல் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் இந்த அமைப்பு, ஒன்றிமேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட தளங்களாகக் காட்சி தருகின்றன. ஒரு தளம் கொண்டவை முதல் 12 தளங்கள் கொண்ட கோபுரங்கள் வரை தமிழ் நாட்டில் உள்ளன. இது போலவே ஒரு கோயிலில் இருக்கக்கூடிய கோபுரங்களின் எண்ணிக்கையும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒரேயொரு கோபுரத்தைக் கொண்ட கோயில்களும், 16 கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் உள்ளன.

மதுரையில் உள்ள ஒரு கோபுரம்

கோயில்களில் பிரமிட் வடிவில் உயர்ந்து நிற்பனவெல்லாம் கோபுரங்கள் அல்ல. வட நாட்டுக் கோயில்களிலும், தமிழ் நாட்டின் ஆறு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் கட்டப்பட்ட கோயில்களிலும் உள்ள உயர்ந்த பிரமிட் வடிவ அமைப்புக்கள் விமானங்கள், அல்லது சிகரங்கள் எனப்படுகின்றன. இவை கருவறைக்கு மேலேயே கட்டப்பட்டிருக்கும். ஆனால் கோபுரங்கள் கோயிலைச் சூழவுள்ள சுற்று மதில்களில் அமைந்துள்ள வாயில்களில் கட்டப்பட்டிருக்கும். தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவற்றில் பெரிய அளவில் காட்சி தருபவை விமானங்கள் ஆகும்.


கோபுரம் என்ற சொல் முற்காலத்தில் கோயில் நுழைவாயில் அமைப்புக்களை மட்டுமன்றி, நகரங்கள், அரண்மனைகள் ஆகியவற்றின் வாயியில் கட்டப்பட்ட அமைப்புக்களையும் குறித்தது. இன்று இது கோயில் கோபுரங்களையே பெரிதும் குறித்தாலும், உயரமான பிற கட்டிட அமைப்புக்களையும் கோபுரம் என்ற பெயர் கொண்டு அழைப்பதுண்டு. மணிக் கோபுரம், மணிக்கூட்டுக் கோபுரம், ஈபெல் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்கள் போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இக் கட்டுரை கோயில் கோபுரங்களைப் பற்றியது ஆகும்.

புதுவை வேதபுரீஸ்வரர் ஆலயக் கோபுரம்

சொற்பிறப்பு

தொகு

தமிழில், கோபுரம் என்னும் சொல்லின் தோற்றம் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. தேவநேயப் பாவாணர் போன்ற சில அறிஞர்கள் இது ஒரு தூய தமிழ்ச் சொல்லே என்கின்றனர். ஆனால் வேறு சிலரோ இது சமஸ்கிருதம் அல்லது வேறு பிராகிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது என்கின்றனர். கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட மகாபாரதம் போன்ற சமஸ்கிருத நூல்களில் கோபுரம் என்ற சொல் ஆளப்பட்டிருக்க, சங்க காலத் தமிழ் நூல்களிலோ அல்லது பிற்பட்ட சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலோ கோபுரம் என்ற சொல் காணப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்[1]. வேதகாலத்தில் பசுக்களை அடைத்து வைக்கும் பட்டிகளுக்கு மூங்கிலால் வேலியிடப்பட்டு அதன் வாயிலில் மூங்கிலாலேயே ஒரு வாயில் அமைப்பும் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கோ என்றால் பசு, புரம் என்பது காத்தல் என்னும் பொருளுடையது இதனால் பசுக்களைக் காக்கும் இடத்தின் வாயில் கோபுரம் எனப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அரண்மனை, நகரங்கள் முதலியவற்றின் வாயில் அமைப்புக்களையும் இப் பெயராலேயே அழைத்தனர். காலப்போக்கில் கோயில்களின் வாயில் கட்டிட அமைப்புக்களையே கோபுரம் என்னும் சொல் குறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோபுரங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

தொகு
 
சாஞ்சியில் உள்ள பௌத்த கட்டிடக்கலைக் கூறான தாது கோபுரம் ஒன்றைச் சூழவுள்ள கல் வேலியின் நுழை வாயிலில் அமைந்துள்ள அமைப்பு. வேதகால நுழைவாயில்களின் நேரடி வாரிசாகக் கருதப்படுகிறது.

வேலியிடப்பட்ட இடங்களின் வாயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டிட அமைப்புக்களை அமைக்கும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது. கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தில் வாயிற் கட்டிட அமைப்புக்களுடன் கூடிய கோயில்கள் இருந்துள்ளன. இன்றுள்ள அமைப்பில் இந்துக் கோயில் கோபுரங்கள் கி.பி 6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவையே எனலாம். எனினும் இவற்றுக்கான கருத்துரு இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. வேத கால ஊர்களிலே கோபுரங்களின் கருத்துருவுக்கான அடிப்படைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு வீடுகளிலும், ஊர்களிலும் காணப்பட்ட, மூங்கில் முதலிய இயற்கைப் பொருட்களாலான எளிமையான வாயிற்கட்டிட அமைப்புக்கள், காலப்போக்கில் நீடித்துழைக்கும் கட்டிடப் பொருட்களினால் அளவில் பெரியனவாக உருவாக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத் தொகுதிகளின் வாயில் அமைப்புக்களாக வளர்ச்சியடைந்தன. இவை தோரண வாயில்கள் எனப்பட்டன. இந்தியாவின் சாஞ்சியில் உள்ளது போன்ற பௌத்த கோயில்களில் இவ்வாறான தோரண வாயில்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் சில இந்துக் கோயில்களில் முற்காலத்தில் இவ்வாறான தோரண வாயில்கள் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. கோபுரம் என்ற சொல்லின் தோற்றமும், வாயில் கட்டிட அமைப்புக்களுக்கான பழைய எடுத்துக் காட்டுகளும் தமிழ் நாட்டுக்கு வெளியிலேயே காணப்பட்டாலும், இன்றைய வடிவத்தில் கோபுரக் கட்டிடக் கலையின் வளர்ச்சிக்குக் களமாக அமைந்தது தமிழ் நாடே.

தமிழ் நாட்டின் தொடக்க காலக் கோபுரங்கள்

தொகு
 
காஞ்சி கைலாசநாதர் கோயில் கோபுரம். தற்காலக் கோபுரத்தின் மிக எளிமையான வடிவம்

தமிழ் நாட்டில் காணப்படும் காலத்தால் முந்திய கோபுரம், பல்லவர் காலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், கைலாசநாதர் கோயிலில் உள்ள கோபுரம் ஆகும். அக்காலக் கோயில்களில் கோபுரம் ஒரு முதன்மையான கூறு அல்ல. முக்கியத்துவத்திலும் அளவிலும் முதன்மையாக இருந்தது கருவறைக்கு மேல் அமைந்த விமானமே. எனவே கைலாசநாதர் கோயிலிலும் கோபுரம் மிகவும் சிறிதாகவே காணப்படுகிறது. கோயில் கட்டிடக்கலை வளர்ச்சியடைந்து சோழர் காலத்தில் மிகப் பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டபோதும், விமானமே நெடிதுயர்ந்து காணப்பட்டது. கோபுரங்கள் ஒப்பீட்டளவில் சிறிதாகவே இருந்தன. ஒரு கோயிலில் இறைவன் உருவம் வைக்கப்பட்டுள்ள கருவறையே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதால் அதனை அமைப்பு அடிப்படையிலும் முதன்மை பெறச் செய்தது புரிந்துகொள்ளத் தக்கதே. இதன் காரணமாகவே சிற்பிகளும் தமது திறமைகளை விமானத்தை உருவாக்குவதிலேயே பெரும்பாலும் காட்டினர்.

பாண்டியர் காலம்

தொகு

ஏறத்தாழ கி.பி 1100 அளவில் தொடங்கிய பிற்காலப் பாண்டியர் காலத்தில் இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. கருவறையைச் சுற்றியிருந்த பிற கட்டிட அமைப்புக்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. சிறப்பாக வாயில் கோபுரங்கள் முதன்மை பெறத்தொடங்கின. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பதற்கு இந்தியக் கட்டிடக்கலை பற்றிய நூலொன்றை எழுதிய பேர்சி பிரவுண் என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் ஏராளமான சிறிய கோயில்களுட் பல, கட்டிடக்கலை அடிப்படையில் சிறப்பு வாய்ந்தனவாக இல்லாவிட்டாலும், புனிதத்தன்மை கொண்டனவாகக் கருதப்பட்டன. இந்த உணர்வு காரணமாகப் பெரிதாக்குவதற்காக அவற்றை இடிப்பது கூடாது எனக் கருதப்பட்டது. இதனால் கருவறையை அவ்வாறே இருக்கவிட்டு அதனை அண்டி வேறு அமைப்புக்களை உருவாக்கிக் கோயிலை விரிவாக்கத் தலைப்பட்டனர். கோயிலின் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக அதனைச் சூழப் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. வாயில்களிலே கோபுரங்களும் விமானத்தையும் தாண்டிப் பெரியவையாக வளரலாயின[2]. கோபுரங்களின் உயரம் வளர்வது கோயிலின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி அதனைக் கட்டுவித்தவரது அதிகார பலத்துக்கும் சாட்சியாக அமைந்தது.

குறிப்புகள்

தொகு
  1. குடவாயில் பாலசுப்பிரமணியன்; கோபுரக்கலை மரபு; கோயிற் களஞ்சியம்; 2004. பக் 1-13
  2. பிரவுண், பேர்சி.; இந்தியக் கட்டிடக்கலை பௌத்த மற்றும் இந்து காலப்பகுதி (Indian Architecture, Buddhist and Hindu Period); டி. பி, தாராப்பூர்வாலா சன்ஸ் அண்ட் கம்பனி; 1971 (ஆறாம் பதிப்பு); பக் 88.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபுரம்_(கோயில்)&oldid=2594793" இலிருந்து மீள்விக்கப்பட்டது