மக்கள் தொலைக்காட்சி
மக்கள் தொலைக்காட்சி, மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில் இயங்கும் இத்தொலைக்காட்சி செப்டம்பர் 6, 2006 இல் தொடங்கப்பட்டது.[1] இன உணர்வும் சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி "மண் பயனுற வேண்டும்" என்னும் நோக்கத்தை இத்தொலைக்காட்சி முன்வைத்துள்ளது.[2]
மக்கள் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 2006 |
உரிமையாளர் | மக்கள் தொலைத்தொடர்புக் குழுமம் |
பட வடிவம் | MPEG-4 |
கொள்கைக்குரல் | மண் பயனுற வேண்டும் TV |
நாடு | இந்தியா |
ஒளிபரப்பாகும் நாடுகள் | International |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வலைத்தளம் | Makkal TV Homepage |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
Tata Play (இந்தியா) | 802 |
Astro (மலேசியா) | 211 |
மின் இணைப்பான் | |
Rogers Cable (கனடா) | Channel 865 |
Mozaic Qtel (கத்தார்) | Channel 269 |
StarHub TV (சிங்கப்பூர்) | Channel 133 |
சமுதாயத்துக்குத் தீங்கானவை என இந்நிறுவனம் கருதும் விளம்பரங்களை ஏற்றுக்கொள்ளாமை[சான்று தேவை], இந்திய வணிகத் திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தங்கியிராமை[சான்று தேவை], நெடுந்தொடர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமை[சான்று தேவை] என்பவற்றின் மூலம் இத்தொலைக்காட்சி பிற தொலைக்காட்சிச் சேவைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது.
பல தமிழ் ஊடகங்கள் பெருமளவில் பிறமொழிச் சொற்களைக் கலந்து நிகழ்ச்சிகளை வழங்கிவரும் காலகட்டத்தில் பிற மொழிகள் அதிகம் கலவாமல் நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் இத்தொலைக்காட்சி கூடிய கவனமெடுத்துக்கொள்கிறது. இதற்காக இதன் ஊழியர்களுக்குப் போதிய தமிழ்ப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இது மட்டுமல்லாது, தொலைக்காட்சி நேயர்களிடையே நல்ல தமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் பல நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அறிஞர்கள் பதிலளிக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், தமிழ் பேசு தங்கக் காசு போன்ற போட்டி நிகழ்ச்சிகள் என்பன இத்தகையவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தமிழகத்தின் ஊரகப் பண்பாடு தொடர்பான பல நிகழ்ச்சிகளுக்கும் இத்தொலைக்காட்சி முதன்மை அளித்து வருகிறது.[சான்று தேவை]
நிகழ்ச்சிகள்
தொகுதமிழை வளர்க்கவும், நல்ல தமிழை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நடத்தப்படும் முதன்மையான சில நிகழ்ச்சிகள் இங்கே:
நிகழ்ச்சியின் பெயர் | நேரம் | சிறு குறிப்பு |
---|---|---|
சொல் விளையாட்டு | தினமும் இரவு 8 முதல் 9 மணி வரை | கலைந்திருக்கும் எழுத்துக்களில் மறைந்திருக்கும், நல்ல பொருள் பொதிந்த சொற்றொடரைக் கண்டுபிடித்தல், கொடுக்கப்படும் எழுத்துக்களைக் கொண்டு சொற்களை அமைத்தல், படம் பார்த்து பழமொழியை கண்டுபிடித்தல். |
தமிழ் பேசு தங்கக் காசு | ஞாயிறுதோறும் இரவு 9 முதல் 10 மணி வரை | நாப்பிறழ வைக்கும் தமிழ் சொற்றொடர்களை ஒப்பித்தல், பிறமொழிச் சொற்களுக்கு இணையானத் தமிழ்ச் சொற்களைக் கூறல், பிழையற்றத் தமிழில் உரையாடல். |
தமிழ்பண்ணை | தினமும் காலை 7.30 முதல் 8 மணி வரை | முனைவர் நன்னன் அவர்கள், தற்கால தமிழ் பயன்பாட்டில் உள்ள நிறைகுறைகளையும், குறைகளுக்கான சரியானத் தீர்வுகளையும் ஆராய்கிறார். |
களத்துமேடு | ஞயிறுதோறும் காலை 7 முதல் 8 மணி வரை | வார நாட்களில் 'தமிழ்பண்ணை'யில் ஆய்வு செய்த கருத்துக்கள் குறித்து அன்பர்களுடன் நேரடியாக உரையாடுகிறார் முனைவர் நன்னன். |
வில்லும் சொல்லும் | தினமும் காலை 6.30 மணி | வில்லுப்பாட்டில் குறளும் விளக்கமும் வழங்குகிறார் கலைமாமணி சுப்பு ஆறுமுகம், தன் குழுவினருடன். |
தமிழ்க்கூடல் | தினமும் காலை 7 முதல் 7.30 மணி வரை | சங்க(கழக) கால இலக்கியங்கள், தமிழ் இலக்கணம், அரிய தமிழ்ச் சொற்கள், தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை, நூல் அறிமுகம், நல்ல தமிழ்ப் பெயர்கள் என்பன போன்ற சிறு நிகழ்ச்சிகளின் தொகுப்பு. |
விருதுகள்
தொகுதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி ஊடகத்திற்கான தூய தமிழ் ஊடக விருது 2020 ஆம் ஆண்டுக்கு இத்தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Makkal TV to be launched on September 6". The Hindu. 22 August 2006 இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100822142053/http://www.hinduonnet.com/2006/08/22/stories/2006082206000200.htm.
- ↑ "Makkal TV pact with Sun TV". The Hindu Businessline. 22 August 2006. http://www.thehindubusinessline.com/bline/2006/08/22/stories/2006082204291900.htm.
- ↑ https://cms.tn.gov.in/sites/default/files/go/tamil_t_33_2021_D.pdf தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் விருது வழங்கலுக்கான அரசாணை