அரசு அருங்காட்சியகம், சென்னை
சென்னை அரசு அருங்காட்சியகம் (Government Museum) சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத் தொகுதி இன்று, 16.25 ஏக்கர் (66,000 சதுர மீட்டர்) பரப்பளவுள்ள நிலத்தில் அமைந்த ஆறு கட்டிடங்களுடனும் அவற்றில் அடங்கிய 46 காட்சிக்கூடங்களுடனும் விளங்குகிறது. தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1][2][3]
வரலாறு
தொகு1846 ஆம் ஆண்டில் மதராசு கல்விக் கழகம் (Madras Literary Society), சென்னைக்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அப்போது சென்னை மாகாணத்தின் பிரித்தானிய அரச ஆளுனராக இருந்த சர் ஹென்றி பாட்டிங்கர் (Sir Henry Pottinger), இலண்டனில் இருந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் நெறியாளர் குழுவிடமிருந்து இதற்கான அனுமதியைப் பெற்றார். இந்த அருங்காட்சியகத்தின் முதல் பொறுப்பாளராக மருத்துவரான எட்வார்ட் பல்ஃபர் (Edward Balfour) என்பவரை ஆளுனர் நியமித்தார். 1851 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அரசு அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படுவது பற்றிய அரசு ஆணை முதன்முதலாக வெளியிடப்பட்டது. மதராசு கல்விக் கழகத்தின் 1100 நிலவியல் மாதிரிகளுடன், கல்லூரிச் சாலையில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை கல்லூரியின் முதலாம் மாடியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அருங்காட்சியகம் விரிவடைந்து வந்த நிலையில், அதன் கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், 1854 ஆம் ஆண்டில் இது பந்தியன் (Pantheon) என அழைக்கப்பட்ட இன்னொரு கட்டிடத்துக்கு இடம் மாற்றப்பட்டது.[4]
1853 ஆம் ஆண்டில் இங்கே பொது நூலகம் ஒன்றும் தொடங்கப்பட்டது. 1862ஆம் ஆண்டில் இது பொது மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டது. 1873ஆம் ஆண்டில் நூலகம், விரிவுரை மண்டபம் ஆகியவற்றுக்காகப் புதிய கட்டிடம் ஒன்றின் கட்டிட வேலைகள் தொடங்கின. 1875 ஆம் ஆண்டில் இக் கட்டிடம் முறைப்படி அப்போதைய ஆளுனரால் திறந்துவைக்கப்பட்டது. கண்காணிப்பாளர் கப்டன் மிச்சேல் நூலகத்தை உறுதிப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்தார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி நூலகம் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் "கன்னமாரா நூலகம்" என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்டது. இந் நூலகம் பின்னர் பொதுக் கற்பித்தல் நெறியாளரின் (Director of Public Instruction) நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1854 ஆம் ஆண்டில் ஒரு புலியும் சீத்தாக் குட்டியும் மக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இதனால் அருங்காட்சியகத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மருத்துவர் பல்ஃபர், கர்நாடக நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுப் பெற்றுக்கொண்டார். 1856 ஆம் ஆண்டு முதல் அரைப்பகுதியளவில் அருங்காட்சியகத்தில் விலங்கினக் காட்சிச்சாலையில் 360 விலங்குகள் இருந்தன. 1863 ஆம் ஆண்டில் மாநகரசபை விலங்கினக் காட்சிச்சாலையைப் பொறுப்பேற்று வேறிடத்துக்கு மாற்றியது.
1909 ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு நீர்வாழ்விலங்குகள் காட்சியகமும் (Aquarium) அரசு அருங்காட்சியகத்தின் கீழ் திறந்துவைக்கப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இக் காட்சியகத்தை 1910 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீன்வளத்துறை பொறுப்பேற்றுக் கொண்டது. 1942 ஆம் ஆண்டில் யப்பானியத் தாக்குதலுக்குப் பயந்து நகரத்திலிருந்து நிறுவனங்கள் அகற்றப்பட்டபோது நீர்வாழ்விலங்குகள் காட்சியகத்திலிருந்த விலங்குகள் அனைத்தும் கைவிடப்பட்டன. இதனை மீண்டும் அமைப்பதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.
1984 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி சமகால ஓவியங்களுக்கான புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பனவற்றுள் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களும் அடங்கும். 1988 ஆம் ஆண்டில் ஒரு சிறுவர் அருங்காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது.
அமைப்பு
தொகுபிரிவுகள்
தொகு- தொல்பொருளியல்
- மானிடவியல்
- கலை
- நாணயவியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- புவியமைப்பியல்
- குழந்தைகள் அருங்காட்சியகம்
- வேதியியல் பாதுகாப்பு
கட்டிடங்கள்
தொகுஅருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள ஆறு தனித்தனியான கட்டிடங்களில் காட்சிக்கூடங்கள் அமைந்துள்ளன. இவை:
- தலைமைக் கட்டிடம்
- முன் கட்டிடம்
- வெண்கலக் காட்சிக்கூடம்
- சிறுவர் அருங்காட்சியகம்
- தேசிய ஓவியக் காட்சிக்கூடம்
- சமகால ஓவியக் காட்சிக்கூடம்
என்பனவாகும்.
காட்சிக்கூடங்கள்
தொகு- தலைமைக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் சிற்பங்கள், இந்துச் சிற்பங்கள், அமராவதி, சமணம், பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், பொது நிலவியல் போன்றவற்றுக்கான 13 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்தளத்தில் தபால்தலைகள், முறைமைசார் தாவரவியல், பொருளாதாரத் தாவரவியல், பவளப்பாறைகள், முதுகெலும்பிலிகள், மீன்கள், பறவைகள், பொருளாதார நிலவியல், கல்வெட்டியல், சிந்துவெளி நாகரிகம், சிற்பம் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்கள் உள்ளன.
- முன் கட்டிடத்தில், மானிடவியல் பகுதியில் படைக்கலங்கள், வரலாற்றுக்கு முந்தியகாலம், இனவியல், இசைக்கருவிகள், நாட்டார் கலைகள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்களும், தொல்லியல் பகுதியில் தொழில்துறைக் கலைக்கான காட்சிக்கூடமும் அமைந்துள்ளன.
- வெண்கலக் காட்சிக்கூடக் கட்டிடம் தொல்லியல், நாணயவியல், வேதிக் காப்பு ஆகிய பிரிவுகளில் வைணவ, சைவ, பௌத்த, சமண மதங்களைச் சார்ந்த வெண்கலச் சிற்பங்களுக்கான காட்சிக்கூடங்களும், நாணயங்கள், பதக்கங்கள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்களும் உள்ளன.
- சிறுவர் அருங்காட்சியகத்தில் நாகரிகம், சிறுவர் பகுதி, அறிவியல், போக்குவரத்து, தொழினுட்பம், பல்வேறுவகை ஆடைகளுடன் கூடிய பொம்மைகள் ஆகியவற்றுக்கான காட்சிக் கூடங்கள் காணப்படுகின்றன.
- தேசிய ஓவியக் காட்சிக்கூடக் கட்டிடத்தில், இந்திய மரபு ஓவியப் பிரிவில் இந்தியச் சிற்றோவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், பிற இந்திய மரபு ஓவியங்கள் என்பவற்றுக்கான காட்சிக்கூடங்கள் உள்ளன.
- சமகால ஓவியக்காட்சிக்கூடக் கட்டிடம் பிரித்தானிய ஓவியங்களுக்கும், தற்கால ஓவியங்களுக்குமான காட்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.
இங்கு முக்கியமாக பார்க்க வேண்டியவை
தொகு- பாரதியாரின் கவிதைகளின் கையெழுத்து பிரதி
- பல்வேறு அரசுகளின் செப்பு பட்டையங்கள்
- சமண காலத்து சிற்பங்கள்
- ரவிவர்மாவின் ஓவியங்கள்
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Suresh, S. (21 May 2011). "Times Property Section". The Times of India (Chennai: The Times Group): pp. 2.
- ↑ J.Jeyaraj, George. "Indo Saracenic Architecture in Chennai" (PDF). CMDA. Archived (PDF) from the original on 25 July 2021. பார்க்கப்பட்ட நாள் July 6, 2012.
- ↑ "heritage buildings" (PDF). CMDA. Archived (PDF) from the original on 26 June 2013. பார்க்கப்பட்ட நாள் July 6, 2012.
- ↑ "Museum, Library and Theatre". Madras Musings XX (3). 16–31 May 2010. http://madrasmusings.com/Vol%2020%20No%203/museum-library-and-theatre.html. பார்த்த நாள்: 1 July 2012.
வெளியிணைப்புகள்
தொகு- - சென்னை அரசு அருங்காட்சியகம் - காணொலி
- இந்த சென்னை அரசு அருங்காட்சியக இணையதளத்தில் அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பயணம் செய்யலாம்.