தஞ்சாவூர் ஓவியப் பாணி

தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களில் வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களின் ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களின் மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரின் மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது.

தேவிக்கு வெண்மையும், தூண்கள் தங்க வேலைப்பாடுடனும், கற்கள் பதிக்கப்பட்டும், ஓவியத்தின் சில பகுதிகள் புடைப்பாகவும், திரைச்சீலையுடனும் காணப்படும் தஞ்சாவூர் ஓவியப்பாணியில் வரையப்பட்ட கஜலட்சுமி ஓவியம்.
குருநானக்கும் சீடர்களும், ஓர் அரிய தஞ்சாவூர் பாணி ஓவியம்
ஸ்ரீகிருஷ்ணர் - ருக்மணி, தஞ்சாவூர் பாணி ஓவியம்

வரலாறு

தொகு

சோழர் ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், தஞ்சாவூரின் ராஜூக்கள் சமுதாயத்தினர், விஜயநகரப் பேரரசின் நாயக்கர்கள், திருச்சி, மற்றும் மதுரை நாயுடுக்கள் ஆகிய ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். எனவே அவை இக்காலங்களில் வளர்ந்து செழித்தோங்கியது. தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன.[1] பல நூற்றாண்டுகளாக இக் கலைப் பாணியைக் கால ஓட்டத்துக்குத் தக்கவாறு வளர்த்து வந்தவர்கள் தஞ்சாவூர், மதுரை நகரங்களைத் தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயக்கர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய மூச்சிகள் (moochys) எனப்படும் ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவார். இந்தப் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாகப் படைக்கப்பட்டன. இவர்களை அக்காலத்து அரசர்கள் ஆதரித்து வந்தனர். தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி கலைகளில் பெரும் பற்றுக் கொண்டவர். ஓவியர்களுக்குப் போதிய அளவு வாய்ப்புக்களை வழங்கி அவர்களை ஆதரித்து வந்தார்.மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது. இவர் காலத்தில் தஞ்சாவூர் நிர்வாகம் முற்றாகவே ஆங்கிலேயர் வசம் சென்றிருந்தது. எனினும், சரபோஜி பெயரளவில் மன்னராக இருந்தார். இவரது அரண்மனையிலிருந்த ஓவியங்கள் மூலமாக அக்காலத்திய தஞ்சாவூர்ப் பாணிபற்றி அறிந்த ஆங்கிலேயர் பலர் அவற்றை வரைந்தவர்களை அணுகி ஓவியங்களை வரைந்து பெற்றுக்கொண்டனர். இக்காலத்திலேயே ஆங்கிலேயரின் விருப்பத்திற்கு ஏற்ப, மேற்கத்திய நுட்பங்களையும் கலந்து ஓவியங்கள் வரையப்பட்டன. நுட்பங்களில் மட்டுமன்றி, உள்ளடக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பெரும்பாலும் கடவுளரையும், அரசர்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையும் பழக்கம் மாறி, சாதாரண மக்களின் வாழ்க்கையும் ஓவியங்களிலே இடம் பெறத்தொடங்கின. இன்று, இந்த ஓவியப் பாணி அனைவருக்குமானதாகி விட்டது. ஓவியத்தில் உருவமோ, வண்ணங்களின் கோர்வையோ மாறுவதில்லை. கித்தானும் நவீன வண்ணங்களும் மரபை ஒதுக்கி இடம் பிடித்துக் கொண்டு விட்டன. அந்த ஓவியக் குடும்பங்களும் இப்போது இல்லை. எனவே நேர்த்தியில்லாத கொச்சைப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.[2]

இந்தியக்கலை மரபில் ஓவியக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாய் வளர்ந்து செழித்து வரும் சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு கால ஓவியங்களையும், பின்னாளில் தீட்டப்பெற்ற பல்வேறு வகையான ஒவியங்களையும் ஒருங்கே கொண்டு திகழும் ஒரே கோயில் தஞ்சைப் பெரிய கோயிலாகும். இக்கோயிலில் வளர்ந்த இக்கலை பின்னாளில் தஞ்சைப்பாணி ஓவியம் என்னும் ஒரு புதிய ஓவிய மரபை உலகுக்குத் தந்தது. அதுவே தஞ்சாவூர் ஓவியம் என்று தற்போது வழங்கப்படுகிறது.[3]

கருப்பொருள்

தொகு

தஞ்சாவூர் ஓவியங்களில் கருப்பொருள் என்பது இந்து மதம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. கடவுளரின் உருவங்கள் மற்றும் புராணக்கதை மாந்தர்களின் உருவங்கள் அதில் வரையப்பட்டன. வடிவங்கள் உறைந்த தன்மையிலேயே இருந்தன. இதை, முகம் ஓவியமாக்கப்படும் (Portrait) மேலை நாட்டு ஓவியப் பாணியுடன் ஒப்பிடலாம். அசைவுகள், நிகழ்வுகள் போன்றவை தவிர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ‘வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணன்’, ‘ஆலிலைமேல் குழந்தை கிருஷ்ணன்’, ‘இராமர் பட்டாபிசேகம்’, ‘தேவியர் உருவங்கள்’ என்பதான ஓவியங்கள் திரும்பத் திரும்பப் படைக்கப்பட்டன. மக்களால் அவை விரும்பி வாங்கப்பட்டன.

உத்தி

தொகு

பொதுவாகப் பெரிய அளவில் இருக்கும் இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியான, செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும். சட்டமும் ஓவியத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும். வரையப்படும் உருவங்கள் உருவ அளவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். கடவுளின் உருவம் பெரிய அளவில் கித்தானின் (கேன்வாஸ்) பெரும்பகுதியை நிறைத்திருக்கும். மற்ற உருவங்கள் ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் வரிசையிலோ, அல்லது ஒழுங்குடன் கூடிய குழுவாகவோ அமைந்திருக்கும். உருவங்களும் உருண்டு திரண்ட பருமனான உடல் கொண்டபடியாகவே படைக்கப்படும். அவற்றில் பெண்மை சாயல் மேலோங்கியிருக்கும். முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம் கூடியதாக அவை காணப்படும்.

இப்பாணி ஓவியங்களின் பின்புல வண்ணம் கரும்பச்சை, அடர் நீலம், ஒளிர் சிவப்பு ஆகிய வண்ணங்களில் இருக்கும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை வண்ணங்களில் மைய உருவங்கள் அமையும். வண்ணங்கள் திடமான கலவையாகத் தீட்டப்படும். உருவக்கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையை முடிவு செய்யும். உருவம் எப்போதும் ஒரு மாளிகையின் உட்புறத்தையோ, அல்லது கோயிலின் உள்சுற்றையோ பின்புலனாகக் கொண்டிருக்கும். பின்புலன் எவ்விதக் கட்டிட அமைப்பும் இல்லாது இருப்பினும் மேற்கவிகை, திரைசீலைகள் போன்றவை அதை உணர்த்தும் விதத்தில் இடம் பெற்றிருக்கும். திடமானதும் அழுத்தமானதுமான கோடுகள் ஓவியத்தை அமைக்கும்.இந்த ஓவியங்கள் இருண்ட அறையில் ஒளியை வீசும்.[1]

வடிவம்

தொகு

தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன.அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன. இதற்கான வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[2] இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணங்கள் தான், காலத்தால் அழியாத ஓவியங்களாக இன்றளவும் கோலோச்சி நிற்கின்றன. இந்த வண்ணங்கள் ஓவியத்தில் தீட்டப்பட்ட பிறகு, வெளிப்புறக் கோடுகளுக்காக பொதுவாகக் கரும்பழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு பின்னணி வண்ணத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், கரும்பச்சையும் பயன்படுத்தப்படுகின்றது. பெண் கடவுள்களுக்கு மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்பட்டாலும் கடவுள்களுக்கு வண்ணம் மாறுபடும்: கிருஷ்ணருக்கு நீலமும், நடராஜருக்கு வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றது.[1]

தஞ்சாவூர் ஓவியங்களின் தூண்கள், உடைகள், வில்வளைவு கைச்சிம்மாசனங்கள் ஆகியவை வெவ்வேறு வண்ணங்களிலுள்ள தங்க இலைகள் மற்றும் இரத்தினங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. படங்களில் பதிக்கப்படும் கற்களும் கையாலேயே செய்யப்பட்டுள்ளன. வெறும் ரசக் கண்ணாடியை, வண்ணம் ஏற்றிய கற்களாக மாற்றப்படுகிறது. இதை, தேய்ப்புக்கல் என்கின்றனர்.[4] பின்னர், அவை ஆடம்பரம் மிகுந்த, காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிக அளவில் தங்க வேலைப்பாடுகள் கொண்டதாகவும், அழுத்தம் கூடின ஒளிர் வண்ணங்களால் தீட்டப்பட்டதாகவும் மாறத் தொடங்கின. உருவங்களைச் சுற்றிய கோடுகளின் வெளிப்புறத்தில் வரிசையான புள்ளிகளும், மேல்பகுதியில் நெளிநெளியாகத் தொங்கும் சரிகை திரைச்சீலைகளும், செல்வச் செழிப்பை மிகைப்படுத்திக் காண்பித்தன. மலர்களும், மலர் மாலைகளும் இயற்கையிலிருந்து விலகி ஒரு அலங்காரம் கூடிய விதத்தில் அமைந்திருந்தன.

தஞ்சாவூர் ஓவியங்களின் மேற்புறத்தில் பறக்கும் மனித உருவங்களைக் காணலாம். அவை மையத்தில் அமைந்திருக்கும் கடவுள் உருவத்தின் மேல் மலர் தூவியபடி அமைந்திருக்கும். இந்திய ஓவிய, சிற்பங்களில் பறக்கும் மனித உருவங்கள் என்பது புதியது அல்ல. ஆனால் இந்த உருவங்கள் தமது தோளின் பின்புறத்தில் முளைத்த இறக்கைகளை விரித்தபடி படைக்கப்பட்டிருக்கும். இந்த வடிவம் ஈரானிய, கிருஸ்துவ மரபுகளிலிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும். கிருஷ்ணரை குழந்தையாக உருவகப்படுத்தும் ஓவியங்களின் மேற்புறத்தில் காணப்படும் வடிவமைக்கப்பட்ட மேகக் கூட்டத்தின் பின்னாலிருந்து இவ்வித உருவங்கள் மேலெழும்பி பூக்கூடையிலிருந்து மலர்களை இறைப்பதைக் காணலாம்.

கித்தான் உருவாக்கும் முறை

தொகு

தஞ்சாவூர் ஓவியங்கள் பெரும்பாலும் மா அல்லது பலா பலகைகளில் தான் வரையப்படுகின்றன.[4] பதப்படுத்தப்பட்ட பலா மரத்தின் பலகைகளை ஒருங்கிணைத்து, புளியங்கொட்டையை அரைத்துக் கிடைக்கும் பசைகொண்டு பலகையின் மேல் தடிமனான அட்டையைப் பிசிரு இன்றியும், காற்றுக்குமிழ் இல்லாதவாறும் ஒட்டுவார்கள். நன்கு காய்ந்த பலகையின் மீது இரண்டு அடுக்குகளாகத் துணியை ஒட்டிக் காயவைப்பதுடன் முதல்நிலை முடியும். பொடி செய்யப்பட்ட கல்லுடன் கிளிஞ்சலைப் பொடி செய்து கிடைக்கும் சுண்ணாம்பை நன்கு கலந்து, அதில் கோந்து சேர்த்து இளகிய பதத்தில் பிசைந்து, பலகையின் மேல் இரண்டு மூன்று முறை பூசுவார்கள். வழுவழுப்பான கல்கொண்டு பலகையின் பரப்பை நன்கு தேய்த்து தடையற்ற வழுவழுப்பான தளமாக ஆக்குவார்கள். தற்போது நவீன கலைஞர்கள் ஒட்டுப்பலகையை (பிளைவுட்) பயன்படுத்துகின்றனர்.[1]

ஓவியம் வரைதல்

தொகு

முன்பே துணி அல்லது தாளில் வரையப்பட்டிருக்கும் உருவங்களைக் கித்தான் பரப்பில் பொருத்தி, அதன்மேல் விளம்பில் பதிவெடுப்பார்கள். அதில் அனைத்து வடிவங்களின் கோடுகளும் இடம்பெறும். பின்பு தூரிகைகொண்டு வடிவங்களை வண்ணத்தால் வரைந்துகொள்வார்கள்.தூரிகையாக அணில் வாலைப் பயன்படுத்துவதுண்டு.[4]

கொதிக்கவைக்காத சுண்ணாம்புப் பொடியைப் பசையுடன் கலந்து பிசைந்து, கித்தான் பரப்பில் தேர்ந்தெடுத்த பகுதிகளில் சீராகப் பூசிச் சிறிதுபோலப் புடைக்கச் செய்வார்கள். வெட்டிய கண்ணாடித் துண்டுகள், விலை உயர்ந்த கற்கள் அந்தப் பரப்பில் பதிக்கப்படும். அவற்றைச் சுற்றி கலவையைத் திரும்பவும் பூசி திடப்படுத்துவார்கள். தங்கம் வெள்ளி தகடுகளையோ காகிதங்களையோ வெட்டி வடிவங்களாக்கி ஒட்டுவார்கள். அணிகலன்கள், ஆடைகள் போன்றவற்றில் இவை இடம் பெறும். இதன் பின்னர்தான் வண்ணம் தீட்டுவது தொடங்கும். வண்ணம் தீட்ட இயற்கை வண்ணங்களே பயன்பட்டன. ஓவியம் முடிந்தபின் அதற்குப் பளபளப்பான பூச்சு கொடுத்து, சட்டம் கட்டுவார்கள்.

தற்கால நிலை

தொகு

தற்காலத்தில் இந்த ஓவியப் பாணி அனைவருக்குமானதாகி விட்டது. ஓவியத்தில் உருவமோ, வண்ணங்களின் கோர்வையோ மாறுவதில்லை. கித்தானும் நவீன வண்ணங்களும் மரபை ஒதுக்கி இடம் பிடித்துக் கொண்டு விட்டன. தஞ்சாவூர் பாணி வரையும் ஓவியக் குடும்பங்களும் இப்போது இல்லை. எனவே நேர்த்தியில்லாத கொச்சைப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.[2] பழைய தஞ்சை ஓவியத் தொகுப்புகள் கடவுள் உருவங்களை வரைவதோடு நின்றுவிட்டன. ஆனால் இன்றைய காலத்தில் நவீன கலைஞர்கள் புதிய பரிமாணங்களை வெளிக்காட்டுகிறார்கள். அவர்களும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஆட்சி செய்யும் கடவுள்களை வரைந்து காட்டத் தொடங்கியுள்ளனர்.[1]

மேற்கோளும் குறிப்புகளும்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "இந்தியர்களின் கைவினைத்தொழில்". தமிழ்நாடு- மதுரை சிறு தொழிற்சாலைகள் தயாரிப்பு மேம்பாட்டு அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2012.
  2. 2.0 2.1 2.2 "தஞ்சாவூர் ஓவியங்கள்". அரவக்கோன். பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2012.
  3. ந.இராதா, தஞ்சை ஓவியம், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  4. 4.0 4.1 4.2 "காலத்தால் அழியாத தஞ்சாவூர் ஓவியங்கள்". ஆர்.ரங்கராஜ் பாண்டே. தினமலர். 26 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2012. {{cite web}}: Check date values in: |date= (help)

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_ஓவியப்_பாணி&oldid=3930608" இலிருந்து மீள்விக்கப்பட்டது