தமிழ்நாட்டு ஓவியக் கலை

தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும், சிதைந்த நிலையிலும் குகைகளிலும், பழைய அரண்மனைகளிலும், கோயில்களிலும், வேறு கட்டிடங்களிலும் காணப்படுகின்றன.

இலக்கியத்தில் ஓவியம் தொகு

ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புக்கள் பல சங்கப் பாடல்களிலே காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும், ஓவியம் பற்றிய தகவல்கள் இலக்கியங்களில் உள்ளன.

"ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற சிலப்பதிகாரம் வரிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக்கூறியிருக்கின்றனர்"[1].

ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானது. படம் என்னும் பெயர் இக்காரணத்தினாலேயே வந்தது என்பர் (படம் - வஸ்திரம்)[இதில் சேர நாட்டு ஒலி பதிவு இல்லை]

பாண்டியர் கால ஓவியங்கள் தொகு

 
17ஆம் நூற்றாண்டு சுவர் ஓவியங்கள், மதுரை

முற்காலப் பாண்டியர் காலத்தைச் (கி.பி 550 - 950) சேர்ந்த குகை ஓவியங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இக்காலத்தைச் சேர்ந்த, சித்தன்னவாசல் என்னுமிடத்தில் உள்ள குடைவரைக் கோயில் ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது தவிர அரிட்டாபட்டி, திருமலைப்புரம், ஆனைமலை, கீழ்க்குயில்குடி, கீழவளவு, கரடிப்பட்டி ஆகிய இடங்களிலும் மேற்படி காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.

பல்லவர் கால ஓவியங்கள் தொகு

தமிழ் நாட்டு ஓவியக் கலை வளர்ச்சியில் பல்லவர் காலத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. ஓவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமன்றிப் பல்லவ மன்னர்கள் சிலர் சிறந்த ஓவியர்களாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக் கலையில் சிறந்து விளங்கியதை அவனது பட்டப் பெயர்களான விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி ஆகிய பட்டப் பெயர்கள் மூலம் அறியலாம்.மாமண்டூர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனைமலை, ஆர்மாமலை மற்றும் செஞ்சி அருகே உள்ள பாக்கம் மலையில் அமைந்துள்ள நீலகிரி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன.

சோழர் கால ஓவியங்கள் தொகு

இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியங்களோடு ஒப்பிடத்தக்க பெருமையுடைய ஓவியங்களை சோழர் காலம் தமிழ் நாட்டுக்கு வழங்கியது. தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயிலிலுள்ள ஓவியங்கள் இத்தகைய பெருமை வாய்ந்தவை.

விசயநகர கால ஓவியங்கள் தொகு

விஜய நகரப் பேரரசு காலத்திலும் ஓவியக்கலை தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது. காஞ்சி கைலாச நாதர் கோவிலிலுள்ள ஓவியங்களைச் செப்பனிட்டதுடன், காஞ்சி வரதராஜபெருமாள் கோயில்,திருப்பருத்திக் குன்றம் சந்திரபிரபா கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவெள்ளறை புண்டரீகபெருமாள் கோயில், ஆகிய இடங்களிலும் ஓவியங்களை விஜயநகர அரசர்கள் வரைவித்தனர்.

நாயக்கர் கால ஓவியங்கள் தொகு

நாயக்கர் காலத்து ஓவியங்கள் தமிழ் நாட்டில் செங்கம் வேணுகோபாலசாமி கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், அழகர் கோயில், திருகோகர்ணம் கோகர்ணேசுவரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் போன்ற பல இடங்களில் காணப்படுகின்றன.

17 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆண்ட மராட்டியரும் தமிழ் நாட்டு ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். தற்காலத்தில் தஞ்சாவூர் ஓவியப் பாணி என்று அறியப்படுவது இவர்கள் காலத்தில் உருவானதே.

தமிழகக் கோயில்களும் ஓவியங்களும் தொகு

தமிழகக் கோயில்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது குறித்த சில தகவல்களை டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் எனும் நூலில் 198 முதல் 201 வரை உள்ள பக்கங்களில் தெரிவித்துள்ளார். அவை

 • இவற்றில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பருத்திக் குன்றத்தில் மகாவீரர் கோயிலின் சங்கீத மண்டபத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. இதில் சில காட்சிகளே மிஞ்சியுள்ளன. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் கருவறையின் முன்னுள்ள மண்டபத்திலும், ஆண்டாள் ஊஞ்சல் மண்டபத்திலும், நரசிம்மர் கருவறைக்கு முன்பாகவுள்ள மண்டபத்திலும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரதி - மன்மதன், வஸ்திர அபகர்ணன், காளியன் என்னும் அசுரன் ஆகியோரது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
 • திருவண்ணாமலையில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, சிவன் உமையம்மையைத் திருமணம் புரியும் காட்சிகள், கோபியருடன் கண்ணன், முருகன் - வள்ளி திருமணக் காட்சி ஆகியன காணப்படுகின்றன.
 • திருவரங்கம் கோயில் வேணுகோபாலன் சந்நிதியின் முன்பாக உள்ள மண்டபத்தில் பாகவத புராணக் காட்சிகளும், ஸ்ரீரங்கமகாத்மியம் தொடர்பான காட்சிகளும் அமைந்துள்ளன.
 • தஞ்சை - திருவீழிமிழலைச் சிவன் கோயிலில் கண்ணனது லீலைகளே காணப்படுகின்றன. திருவெள்ளறை புண்டரிகாட்சர் கோயில் சித்திர மண்டபவிதானத்தில் திருமாலின் தசாவதாரம் மற்றும் இராமாயண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
 • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருவிளையாடற் புராணக் காட்சிகளைத் தீட்டியிருந்தனர். இவை சமீபத்தில் நடந்த திருப்பணியின் போது அழிக்கப்பட்டு விட்டன. இதில் எஞ்சியிருப்பது மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண நிகழ்ச்சியை இராணிமங்கம்மாள் கண்டுகளிப்பது போன்ற ஓவியத் தொகுதி மட்டுமே.
 • மதுரை கூடழலகர் கோயிலானது அஷ்டாங்க விமானக் கோயிலாதலால் மேலிரண்டு அடுக்குக் கருவறைகளிலும் திருமாலின் அவதாரங்கள், மும்மூர்த்திகள், திக்கு பாலகர்கள் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
 • "மதுரை அழகர்கோயில் வசந்த மண்டபத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. கி.பி.1700-ல் வரையப்பட்ட இந்த ஓவியத் தொகுதியில் தெலுங்கு இராமாயணம் இடம் பெறுகிறது. இடில் தெலுங்கிலும், தமிழிலும் விளக்கம் எழுதப்பட்டுள்ளன. வட்டாரப் பழக்க வழக்கங்களின் தாக்கம் இடம் பெற்றுள்லது. இயக்க உத்திமுறை காணப்படுகிறது. ஆறுகளைக் காட்டும் போது வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதில் மீ, ஆமை முதலியனவும் வரையப்பட்டுள்ளன." [2].இதே போன்று இராமாயண ஓவியங்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணேசுவரர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளன.
 • மதுரைக்கருகிலுள்ள நத்தம் கோவில்பட்டியில் உள்ள சிவன் கோயிலில் சுந்தரபுராணம் தொடர்பாகவும், லிங்கமநாயக்கன் என்னும் மன்னன் செய்த சேத்திராடனம் என்னும் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வந்த நிகழ்ச்சியையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.
 • தஞ்சை பிருகதீசுவரர் கோயிலில் சோழர்கால ஓவியங்களுக்கு மேலே தீட்டப்பட்டிருந்த நாயக்கர் கால ஓவியங்களும் கருவறையின் மேற்பகுதி வெளிச்சுவரின் மேற்கு நோக்கிய சுவரில் இடம் பெற்றுள்ளன. அவை திசைக் காவலர்களது ஓவியம், அரம்பை, ஊர்வசி, அசுரர்களும் தேவர்களும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, திருமால், போர்க்களக் காட்சி, துர்க்கை, சும்பன், நிசும்பனை அழித்தல் முதலான போர்க்காட்சிகளாகும்."[3].
 • சிதம்பரம் நடராசர் கோயிலில் இடம் பெற்றுள்ள விசயநகர நாயக்கரது சிற்பங்கள் லெபாக்ஷி பாணியை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. அவற்றில் ரிசிபத்தினிகள் சிவபெருமானின் அழகில் மயங்கித் தமது ஆடைநெகிழ பின் தொடரும் காட்சி மிக அருமையாகத் தீட்டப்பட்டுள்ளது.
 • கும்பகோணம் இராமசுவாமி கோயிலின் கருவறைப் பிரகாரச் சுவரில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் இவை மறு திருத்தம் செய்யப்பட்டது போலத் தோன்றுகின்றன.
 • நார்த்தாமலை விசயாலய சோழீசுவரர் கோயிலில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் சோழர் காலத்தவை என்றும், நாயக்கர் காலத்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் புகைபடிந்து காணப்படுகின்றன.
 • திருக்கோட்டியூர் சௌமிநாராயணப் பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானம் இடம் பெற்றுள்ளதால் மேலிரு கருவறைகளில் திசைக் காவலர்களது ஓவியங்களும் திருமாலின் பல்வேறு அவதாரங்களும் என ஓவியங்கள் அமைந்துள்ளன.
 • திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாரது வரலாறு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் கோயில் கருவறைப் பிரகாரத்தில் 108 திவ்ய தேசங்களில் உறைகின்ற திருமாலின் வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் பெரும்பாலனவை அழிந்து விட்டன. இக்கோயிலின் கொடிக்கம்ப மண்டபத்தில் உள்ள சிறு மண்டபத்தின் விதானத்தில் நவதிருப்பதிகளில் உறைகின்ற திருமாலின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
 • இடைகால் மற்றும் திருப்புடைமருதூர் கோயில்களில் இடம் பெற்றுள்ள நாயக்கர் கால ஓவியங்கள் இன்றும் அழியாது மிகத் தெளிவாக அக்கால ஓவியங்களை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன
 • இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. தவிர பாகவத புராணமும் இங்கு முழுமையாகத் தீட்டப்பட்டுள்ளது.

உசாத்துணை தொகு

 1. பக் 78, சாமிநாதையர், உ. வே., நல்லுரைக்கோவை 2ம் பாகம், 6 ஆம் பதிப்பு, சென்னை, 1991
 2. பக் 165-171, எல்.மணிவண்ணன், பாண்டியநாட்டு வைணவக் கோயில்களின் கலையும் கட்டடக் கலையும்
 3. பக் 467,செ.வைத்தியலிங்கன், தமிழ்ப்பண்பாட்டு வரலாறு, 1991
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டு_ஓவியக்_கலை&oldid=3359934" இலிருந்து மீள்விக்கப்பட்டது