திரைப்படம்

படங்கள் தொடர்ந்து அசைவிற்கு உட்படுத்தப் படுவதால் அசைவூட்டம் ஏற்புத்தம்படும் படம்

திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது அனுபவங்களை உருவகப்படுத்தி, யோசனைகள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது சூழ்நிலையைப் பயன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தும் காட்சிக் கலைப் பணியாகும். இந்தப் படங்கள் பொதுவாக ஒலியுடனும் மிகவும் அரிதாக, பிற உணர்ச்சி தூண்டுதல்களுடன் இருக்கும். [1]

த பாண்ட் (1918) என்னும் சார்லி சாப்ளினின் ஊமைப்படத்தில் இருந்து ஒரு காட்சி.

திரைப்படம் ஆக்கம் செய்யும் முறையானது ஒரு கலையாகவும், ஒரு தொழிற்துறையாகவும் விளங்குகிறது. திரைப்படங்கள் பொதுவாக ஒளிப்படலங்களில் பதியப்பட்டு, பின் அதனை ஒளிப்படப் பெருக்கியின் மூலம் திரையின் மீது பெரிய அளவிலான படமாக காட்சிப்படுத்துவர். தற்காலத்தில் எண்முறை ஒளிப்படலங்களாக வன்வட்டிலோ அல்லது பளிச்சுவட்டிலோ ரெட் ஒன் ஒளிப்படக்கருவியின் உதவியால் காட்சிகளைப் பதியப்படுகிறது.

திரைப்படம், பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.

திரைப்படங்கள் பெரும்பாலும் பின்னணி இசை, உரையாடல்கள் மற்றும் பாடல்களுடன் காணப்படும். அவ்வகையான ஒலிப்படலம் திரையில் காணப்படும் ஒளிப்படத்திற்கு ஏற்றார் போன்று அமைந்திருக்கும். படச்சுருளுக்குள் ஒரு பகுதியில் உள்ளதாகவும், திரையில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பகுதியாகவும் இது அமைந்திருக்கும்.

வரலாறு

தொகு

ஒளிப்படம் எடுக்கும் முறையினை 1830ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு, எட்வர்ட் மைபிரிட்ஷ் என்னும் ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் அசைவுகளை இயக்கப்படமாக எடுத்து வெற்றி கண்டார். அதன்பின், ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்க, அமெரிக்க அறிஞர் பிரான்சிஸ் சென்கின்ஸ் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படமொன்றைப் பலரும் காணும்வகையில் வடிவமைத்துக் காட்டினார். இதுவே, புதிய படவீழ்த்திகள் உருவாக அடிப்படையாக அமைந்தது. பிரான்சிஸ் உருவாக்கிய இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதும் காட்சிகள் முதலியன காணப்பட்டது. மேலும், இவையனைத்தும் ஊமைப் படங்களாக அமையப்பெற்றன. இவற்றை மக்களிடையே காண்பித்து கட்டணம் பெறப்பட்டது.

இந்தியா, சீனா, ஜாவா போன்ற நாடுகளில் சினிமா போன்று திரையில் காட்டப்படும் பாவைக்கூத்து நடைமுறையில் இருந்தது. திரைப்படத்தின் வரலாறு தொடங்கும் முன்பே, நாடகம் மற்றும் நடனங்களுக்கு பல அங்கங்கள் இருந்தன.அவை நாடகக் குறிப்புகள், நாடக வடிவமைப்புகள், நாடக உடைகள், தயாரிப்பு, இயக்கம், நாடகக் கலைஞர்கள், ரசிகர்கள், கதைப்படங்கள், இசை ஆகியவையாகும். அதன் பிற அங்கங்கள் புதிதாக உருவாயின. அத்துடன் மைஸ் அன் சீன் (முழுத் திரைப்படமும் ஒரே ஒரு முறை மட்டும்) போன்று பல விமர்சனங்களும் எழுந்தன. அப்பொழுது இருந்த தொழினுட்பங்களினால் ஒரு முறை திரையிடப்பட்ட திரைப்படத்தை மறுமுறை திரையிட இயலவில்லை.

ஒளி ஊடுருவும் வகையில் மெல்லியதாக உள்ள இழைத்து பக்குவப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோல்களில் வண்ண உருவங்களை வரைந்து, அவற்றை ஒளி உமிழும் விளக்குக்கும், வெண்திரைக்கும் நடுவில் அசைய செய்து, அதன் மூலம் பாவைக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையும், விளக்கங்களையும் உண்மையான மனிதர்கள் தங்கள் குரலில், திரைக்குப்பின் நின்று கொண்டு, அந்த கதாபாத்திரங்களுக்காக பேசினார்கள். இவற்றின் முக்கிய அம்சம் பொழுதுபோக்கு ஆகும்.

திரைப்படக் கருவிகள்:படச்சுருள்

தொகு

திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும். தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும்.

படம்பிடிக்கும் கருவி

தொகு

திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர். இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும்.

ஒலிப்பதிவு

தொகு

திரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும். இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன. இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும்.

நவீன சினிமா

தொகு

ஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்து வேகமாக இயக்குவதன் மூலம் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்று முதன்முதலில், பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே கண்டறிந்தார். படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமையும் கண்டுபிடித்தனர். இதை வைத்து ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் 1893 வருடம் கண்டுபிடித்தார். சி. பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்கர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன. இவ்விரண்டு கருவிகளையும் ஒன்றிணைத்து லூமியேர் சகோதரர்கள், சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள். அதன் பயனாக அவர்கள் நவீன திரைப்படத்திற்கு வித்திட்டனர்.

நவீன திரைப்படக் காட்சிப்பதிவு முறைகள்

தொகு

நவீன திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி, ஒலிப்படக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் மேலும் அடியிலும் வட்டவடிவில் இரு பெட்டிகள் அமையப்பெற்றிருக்கும். காட்டவேண்டிய படச்சுருள் மேல் பெட்டியில் பொருத்தப்படும். இதில் பல பற்சக்கரங்களும் சக்கரங்களும் காணப்படும். படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கிடையில் செலுத்தி அடிப்பக்கம் உள்ள பெட்டியில் மீளவும் சுற்றிக் கொள்ளும்படி அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் பழையபடி சுருளாகிக் கொள்ளும். ஒளிமிகு விளக்குகளுக்கும் உருப்பெருக்கிகளுக்கும் இடையே படம் வரும். முன்புறமுள்ள மூடிக்கு இரு கைகள் உண்டு. நொடிக்கு எட்டு முறை வீதம் அவை பதினாறு முறை சுழலும். அப்படிச் சுழலும்போது, அதன் கைகள் ஒளியை மறைக்கும். அந்த நேரம் படச்சுருள் நழுவி, அடுத்த படம் வந்து நிற்கும். அதற்குள் மூடியானது திறந்துவிட, பதிவு செய்யப்பட்ட படமானது திரையில் விழுந்து காட்சியாகும்.

திரைப்பட வகைகள்: கருத்துப்படம்

தொகு

வால்ட் டிஸ்னி என்பவர் முதன்முதலில் கருத்துப்படம் உருவாக்கியவராவார். அடிப்படையில் அவர் ஓர் ஓவியராக இருந்தமையால் ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறும்படியான பல்லாயிரக்கணக்கான படங்களை வரைந்துகொண்டு இப்படங்களை வரிசைப்படி அடுக்கி மிக வேகமாகப் புரட்டி ஒரே நிகழ்வாகத் தோன்றும் கருத்துப்படங்களை வடிவமைத்தார். ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும் பின்னணியையும் தனித்தனியாக எழுதியும், ஒளிபுகும் செல்லுலாய்ட் தகட்டில் தீட்டியும் திரைப்படப் படப்பிடிப்புக் கருவியைக்கொண்டும் கருத்துப்படம் எடுக்கப்படும். கதைக்கேற்ப ஒலிப்பதிவு செய்யப்படும். நவீன கருத்துப்படங்கள் பொம்மைகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

செய்திப்படம்

தொகு

உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும். செய்திப்படம் தயாரிப்பதென்பது எளிய காரியமல்ல.

விளக்கப்படம்

தொகு

விளக்கப்படம் என்பது ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அது குறித்து முழு விளக்கத்தையும் தருவதாகும்.

கல்விப்படம்

தொகு

கற்போர் எளிதில் கல்வி கற்க எடுக்கப்படும் படங்கள் கல்விப்படங்களாகும்.

முதல் திரைப்படம்

தொகு

1895–ம் வருடம், டிசம்பர் மாதம் 28–ந்தேதி முதன் முதலில் மாலை நேரத்தில் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்படத்திற்கு ஒரு பிராங்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் திரைப்படத்தை அரங்கேற்றியவர்கள் லூமியேர் மற்றும் லூயி லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் ஆவர். 1903ஆம் வருடம் காட்டப்பட்ட இரயில்கொள்ளை என்ற எட்டு நிமிடம் ஓடிய படம்தான் முதல் சினிமா என்கின்றனர்.

லூமியர் சகோதரர்கள் காட்டியதை இயங்கும் படமென்றாலும் கதையம்சத்துடன் திகழ்ந்த முதல் திரைப்படமாக ரயில்கொள்ளை உள்ளது. தொடர்ந்து படம் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்படிப்புத் தளங்கள் தோன்றின.இதனால் புதிய நடிகர்கள் உருவாயினர்.கிரிபித் என்பார் 1915இல் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஒரு நாட்டின் தோற்றம் என்ற படத்தை பல்வேறு புது உத்திகளைப் பயன்படுத்தி எடுத்திருந்தார். இப்படத்தில் முதன்முதலாக 75 பேர் கொண்ட இசைக்குழு இசையமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பல ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 1927இல் முதல் பேசும் படம் வார்னர் பிரதர்சால் ஜான்சிங்கர் என்னும் பெயரில் எடுக்கப்பட்டது. இதில் உரையாடலுடன் பாடல்களும் இடம்பெற்றிருந்தது. நாளடைவில் வண்ணத் திரைப்படங்கள் வெளிவரத்தொடங்கின.

தமிழகத்தில் திரைப்பட வளர்ச்சி

தொகு

1897இல் திரைப்படக்கலையானது லூமியர் சகோதரர்களால் சென்னை வந்தடைந்தது. 1900இல் மேஜர் வார்விக், மின் திரையரங்கம் என்னும் முதல் அரங்கத்தைத் தோற்றுவித்தார். பின், ரகுபதி வெங்கையா, திருச்சி சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகிய இருவரும் திரையரங்கு அமைத்தனர். ஆர். நடராஜ முதலியார் புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் தென்னிந்தியாவில் முதல் முறையாகத் தயாரிக்கப்பட்ட அவரது கீசக வதம் 1916 இல் வெளியிடப்பட்டது.தமிழ் சினிமாவின் வரலாற்றின் தொடக்கமாக இது கருதப்பட்டு வருகிறது. பிரகாஷ் என்பவர் பீஷ்மப் பிரதிகளும் கஜேந்திர மோட்சம் போன்ற புராணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார். தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ் 1931இல் வெளியானது. ஹெச். எம். ரெட்டி என்பார் இதை இயக்கியிருந்தார். இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உரையாடல்கள் காணப்பட்டன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றன.

எல்லிஸ் ஆர்.டங்கனின் திரைப்பட பங்களிப்புகள்

தொகு

எல்லிஸ் ஆர்.டங்கன் (1909-2001)அமெக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பார்டன் நகரில் பிறந்தவர்.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒளிப்பதிவியலில் பட்டம் பெற்று, 1935ல் இந்தியா வந்து சேர்ந்தார். அதற்குக் காரணமானவர் அவரோடு அமெரிக்காவில் சினிமாவைப் பயின்ற மணிலால் டான்டன் என்ற மும்பையைச் சேர்ந்த இந்தியராவார். டங்கனுடன் அவரது வகுப்புத் தோழன் மைக்கேல் ஆர்மலேவ் என்பவரும் உடன் வந்தார். கொல்கத்தாவில் நந்தனார் படத்தை எடுத்துக்கொண்டிருந்த டான்டன் குழுவினர் மூலமாக சதிலீலாவதிபடத்தின் தயாரிப்பாளருடன் அறிமுகமானார் டங்கன். அப்போது சதிலீலாவதியை இயக்க டங்கன் ஒப்பந்தமானார். டங்கனின் அந்த நுழைவு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

சதிலீலாவதியின் சிறப்புகள்

தொகு

எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதியில் எம்.கே.ராதா, எம்.எஸ்.ஞானாம்பாள், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா முதலான நட்சத்திரங்கள் அறிமுகமாயினர்.எம்.கே.ராதாவின் தந்தையும் முன்னணி நாடகக்காரருமான எம்.கந்தசாமி முதலியார் இப்படத்திற்கு வசனம் எழுதினார். பாடல்களை சுந்தர வாத்தியார் இயற்றினார். ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதி வந்த எஸ்.எஸ்.வாசனின் புதினமே இப்படத்தின் கதையாகும்.இந்தப் படத்தின் தயாரிப்பை கோவை மருதாசலம் செட்டியார் என்பவர் ஏற்றிருந்தார்.18ஆயிரம் அடி மொத்த நீளம் கொண்ட இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டன.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வைத் தூண்டும் படமாக சதி லீலாவதி இருந்தது.அத்துடன் இலங்கைத் தீவில் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இது படம்பிடித்துக் காட்டியிருந்தது.1936 இல் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி சதிலீலாவதி முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.புராணங்களை மையப்படுத்திக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா முதன்முறையாக சமூகப் பிரச்சினையைப் பேசிய காரணத்தால் ஆடல்பாடல் எனும் சினிமா பத்திரிகை தனது 1937ஜனவரி மாத இதழில் சதி லீலாவதி படத்தைப் பாராட்டி எழுதியிருந்தது.

டங்கனின் பிற படங்கள்

தொகு

எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் இந்தியிலும் படங்களை இயக்கி இந்திய திரைப்பட வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றினார்.சதி லீலாவதியைத் தொடர்ந்து சீமந்தினி (1936), இரு சகோதரர்கள்(1936), அம்பிகாபதி(1937), சூர்யபுத்திரி(1940), சகுந்தலா(1940), காளமேகம்(1940), தாசிப் பெண்(1943), வால்மீகி(1945), மீரா(1945), பொன்முடி(1950), மந்திரிகுமாரி(1950) ஆகிய படங்களைத் தமிழில் எடுத்தார்.பின்னர் 1947இல் மீராவை இந்தியிலும் இயக்கினார்.மேலும்,டங்கன் தி ஜங்கிள்(1952),தி பிக் ஹன்ட், ஹாரி பிளாக் அண்ட் தி டைகர்(1958),வீல்ஸ் டு ப்ராகிரஸ்(1959),டார்ஜான் கோஸ் டு இன்டியா(இரண்டாவது யூனிட் தயாரிப்பாளர்) (1962),ஃபார் லிபர்ட்டி அண்ட் யூனியன் (1977),ஜேசையாஃபாக்ஸ் (1987) போன்ற படங்களை ஆங்கிலத்திலும் உருவாக்கினார்.இதுதவிர,அவர் ஆன்டிஸ் கேங்(1955-1960)எனும் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியையும் இயக்கி வழிகாட்டினார்.

இந்தியாவின் தரம்மிக்க கலைப்படைப்பாக மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்கள் அமைந்திருந்தன. அவற்றில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்துப் பெருமைப்படுத்தியிருந்தார்.1945இல் வெளியான மீரா படத்தைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு, மௌண்ட்பேட்டன் பிரபு,கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பின் திறத்தைக் கண்டு வியந்து போயினர்.

திரைப்படமும் தொழில்நுட்பமும்

தொகு

அடிப்படையில் நிழற்படக் கருவியும் (கேமரா),, ஆடியும்(லென்ஸ்)தான் சினிமாவை உருவாக்குகிறது. எனினும், அது கலைப்படைப்பாகவோ அல்லது தொழில்நுட்பமாகவோ உருவாகவில்லை. மாறாக, சினிமா என்பது ஒரு கிளர்ச்சியூட்டும் புதிராக நோக்கப்படுவதால் சினிமா, மற்ற கலைகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. சினிமாவின் இரண்டாவது நூற்றாண்டில்,டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட எளிய காட்சி ஊடகமாகிவிட்டது.

படப்பிடிப்பு

தொகு

அடிப்படையில் திரைப்பட படப்பிடிப்பு என்பது கேமரா வைப்புமுறை, ஒளியமைப்பு, சூரிய ஒளித்தன்மை பற்றிய தெளிவு,ஒலியமைப்பு,லென்ஸ் குறித்த அறிவு என்று தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

பின் தயாரிப்புப் பணிகள்

தொகு

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததும்,பட பின் தயாரிப்புப் பணிகள் (Post Production Works)தொடங்கும்.இப்பணிகளின்போது, படத்தொகுப்பு மற்றும் ஒலிச் சேர்க்கைப் பணிகள் அடங்கும்.இந்த ஒலிச் சேர்க்கையின் போது பின்னணி இசைக் கோர்ப்புகளும் பாடல்களும் சேர்க்கப்படும். இவையனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகும்.

உசாத்துணை நூல்கள்

தொகு
  1. பத்தாம் வகுப்பு,தமிழ்ப் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்,சென்னை.
  2. வகைமை இலக்கிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, பாக்யமேரி,NCBH வெளியீடு,சென்னை-98.
  3. திரைவிருந்து,கீற்று இணையதளம்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Severny, Andrei (2013-09-05). "The Movie Theater of the Future Will Be In Your Mind". Tribeca. Archived from the original on September 7, 2013. பார்க்கப்பட்ட நாள் September 5, 2013.

மேலும் படிக்க

தொகு
  • Basten, Fred E. (writer); Peter Jones (director and writer); Angela Lansbury (narrator).Glorious Technicolor[Documentary].Turner Classic Movies.
  • Schultz, John (writer and director); James Earl Jones (narrator).The Making of 'Jurassic Park'[Documentary].Amblin Entertainment.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்படம்&oldid=3885641" இலிருந்து மீள்விக்கப்பட்டது