சாமிக்கண்ணு வின்சென்ட்

சாமிக்கண்ணு வின்சென்ட் (Samikannu Vincent, 18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.[1][2]

சாமிக்கண்ணு வின்சென்ட்
Samikannu Vincent.jpg
பிறப்புஏப்ரல் 18, 1883(1883-04-18)
கோட்டைமேடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு
இறப்பு22 ஏப்ரல் 1942(1942-04-22) (அகவை 59)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியா
பணிதயாரிப்பாளர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் தம்புசாமி. இவர் கோவை நகராட்சியில் பணிபுரிந்தார்.[3] தனது 22-ஆவது அகவையில் தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது. பின்னொரு நாளில் டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்றுவிட்டு தனது தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் கையிலிருந்த பணத்துடன், தான் மனைவியின் நகைகளை விற்று திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “கூடார (டென்ட்) கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று கூடாரம் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்.[4]

 
டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்) தற்போதைய தோற்றம்

தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். (இந்த காலகட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) அதன் பின் அதே சாலையில் எடிசன் எனும் சாமி திரையரங்கு, பேலஸ் எனும் நாஸ் திரையரங்கு (தற்போதும் செயல்பட்டுக்கொண்டியிருக்கிறது), ரெயின்போ திரையரங்கு (தற்போது ரெயின்போ அடுக்குமாடி குடியிருப்பு) என அவரது திரையரங்கு சாம்ராஜ்யம் விரிவடைந்தது. இதே காலகட்டத்தில் இவர் சினிமா ப்ரொஜெக்டர் தயாரிக்கும் அமெரிக்கா நிறுவனம் ஒன்றின் முகவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த முகாமையே தென்னிந்தியாவின் முக்கிய இடங்களுக்கு சலனப்படக்காட்சியை எடுத்துச்சென்றது. திரைப்பட தொழில் போக, ஒரு அச்சகமும், மாவு ஆலையும் வைத்திருந்தார். மின்சாரம் மூலம் இயங்கிய அந்த அச்சகத்தின் பெயரே 'எலக்ட்ரிக் பிரின்டிங் ஒர்க்ஸ்' என்பதாகும். இவருக்கு உறுதுணையாக இவரின் சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட் இருந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் வின்சென்ட் கோவை ரத்தின சபாபதி புரத்தில் லைட் ஹவுஸ் எனும் கென்னடி திரையரங்கை நிறுவினார். ஒரே நேரத்தில் அவர்களிடம் கிட்டத்தட்ட அறுபது கூடார (டென்ட்) கொட்டைகள் கைவசம் இருந்தன [5] . கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலை, அரசு மருத்துவமனைக்கு அடுத்து உள்ள ரெயின்போ திரையரங்குக்கு (இப்பொழுது அடுக்குமாடி குடியிருப்பு) நேர் எதிரே அவர் துவங்கிய கம்பெனிதான் வின்சென்ட் சோடா மற்றும் குளிர்பான நிறுவனம். அதேபோல கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 1937-ம் ஆண்டு உருவான சென்ட்ரல் ஸ்டூடியோ-வின் இயக்குனர்களில் இவரும் ஒருவர். கோவை, கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள 'வின்சென்ட்' சாலை இவர் பெயரிலேயே அமைந்துள்ளது. இவர் கோயம்புத்தூர் அடுத்து உதகமண்டலம், மதுக்கூர், ஈரோடு, அரக்கோணம், கொல்லம் உட்பட சில கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார்.

தொழில் வளர்ச்சிதொகு

படம் காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார் சாமிக்கண்ணு, அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) சினிமா. ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிட்டார். சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார். மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்திக் காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது).

அயல் நாடுகளிலிருந்து படச்சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார். தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவினார். பின்னர் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலை ஒன்றையும் நிறுவினார். தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு விற்க அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமி ஐயரின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.

தயாரிப்பாளராகதொகு

ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்கேற்ப புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 1927 இல் எடிசன் திரையரங்கை விலைக்கு வாங்கி அதில் தமிழ்ப் படங்களைத் திரையிட்டார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, அப்புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினார். 1933 இல் கல்கத்தாவின் பயனியர் ஃபிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளி திருமணம் என்ற பேசும் படத்தைத் தயாரித்தார். புகழ்பெற்ற நடிகை “சினிமா ராணி” டி. பி. ராஜலட்சுமி, வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணுவின் வெரைட்டி ஹால் டாக்கீஸ் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் (1935).

1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார். 1937 இல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்ட போது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.

மறைவுதொகு

சாமிக்கண்ணு 1942 இல் மரணமடைந்தார். அவருக்கு பின் அவரது மகன் பால் வின்சென்ட் அவரது நிறுவனங்களுக்கு பொறுப்பேற்றார்.[6]

மேற்கோள்கள்தொகு

  1. He brought cinema to South
  2. Unsung heroes Sound bytes
  3. சாமிக்கண்ணு வின்சென்ட் பக்கம்:132, கோவை வரலாறு, ஆசிரியர்:சி.ஆர்.இளங்கோவன், ஸ்ரீகாந்த் பப்ளிகேஷன்ஸ், கோவை
  4. கோயம்புத்தூர் சாமிக்கண்ணு வின்சென்ட்
  5. சாமிக்கண்ணு வின்சென்ட் பக்கம்:132-133, கோவை வரலாறு, ஆசிரியர்:சி.ஆர்.இளங்கோவன், ஸ்ரீகாந்த் பப்ளிகேஷன்ஸ், கோவை
  6. சாமிக்கண்ணு வின்சென்ட் பக்கம்:133, கோவை வரலாறு, ஆசிரியர்:சி.ஆர்.இளங்கோவன், ஸ்ரீகாந்த் பப்ளிகேஷன்ஸ், கோவை