திரையரங்கு

திரையரங்கு என்பது திரைப்படங்களைப் பார்ப்பதற்கான ஒரு இடம் ஆகும். சில தற்காலிகத் தேவைகளுக்காகவும், வசதிகள் குறைந்த இடங்களிலும் திரைப்படங்களைத் திறந்த வெளியில் காண்பிப்பது உண்டு. ஆனால், தற்காலத்தில் திரையரங்குகள் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்ட கட்டிடங்களாகவே இருக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகள் பொதுமக்களுக்குத் திரைப்படங்களைக் காண்பிப்பதற்காக வணிக நோக்கில் இயங்குகின்றன. மக்கள் குறித்த தொகையைக் கொடுத்து நுழைவுச் சீட்டுக்களை வாங்கித் திரை அரங்குகளில் திரைப்படம் பார்க்கின்றனர். திரையரங்குகளின் ஒரு பக்கத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டு இருக்கும். படமெறிகருவிகளைப் பயன்படுத்தி அத்திரையில் படம் காண்பிக்கப்படும். பார்வையாளர்கள் திரையை நோக்கியபடி அமர்ந்து திரைப்படங்களைப் பார்ப்பர். நவீன திரையரங்குகள் எண்ணிமப் படமெறிதல் வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன. இதனால், திரைப்படச் சுருள்களை உருவாக்கும் தேவையும், அவற்றை ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு எடுத்துச் செல்லும் தேவையும் இல்லாமல் ஆக்கப்படுகிறது.

ஆசுத்திரேலியாவில் உள்ள ஒரு திரையரங்கு

வடிவமைப்பு தொகு

மரபுவழியாக ஒரு திரையரங்கு, ஒரு நாடக அரங்கைப் போலவே வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் இருக்கைகளைக் கொண்ட ஒரு பார்வையாளர் மண்டபத்தைக் கொண்டிருக்கும். இதுவே ஒரு திரையரங்கின் முக்கியமான பகுதி. திரையரங்கக் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நுழைவுக் கூடம் இருக்கும். திரைப்படம் பார்க்க வரும் மக்களையும், படம் முடிந்து வெளியேறும் மக்களையும் கொள்ளத்தக்கதான இடவசதியை இது கொண்டிருக்கும். பார்வையாளர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் இடமும் பெரும்பாலும் இந்த நுழைவுக் கூடத்திலேயே இருக்கும். இதைவிடச் சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் போன்றவை விற்பதற்கான இடம், ஆண்களுக்கும் பெண்பளுக்குமான தனித்தனிக் கழுவறைகளும் நுழைவுக்கூடப் பகுதியிலேயே அமைந்திருக்கும்.

பார்வையாளர் மண்டபத்தின் ஒரு பக்கத்தில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு பெரிய திரை இருக்கும். இதற்கு எதிர்ப்புறச் சுவருக்குப் பின்புறத்தில் உயரத்தில், படமெறி கருவிகளுக்கான அறை இருக்கும். சுவரில் உருவாக்கப்படும் சிறிய துவாரங்களூடாக படமெறிகருவிகளில் இருந்து படம் திரையில் விழுமாறு காண்பிக்கப்படும்.

பார்வையாளர் பகுதியின் தளம், திரைக்கு அண்மையில் இருந்து பின்னோக்கிச் செல்லும்போது உயர்ந்துகொண்டு செல்லும் வகையில் படியமைப்புக் கொண்டதாக அமைந்திருக்கும். இதனால் பின் பகுதியில் அமர்ந்திருக்கும் பார்வையாளரும், முன்னே இருப்பவர்களினால் மறைக்கப்படாமல் படத்தைப் பார்க்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரையரங்கு&oldid=3506497" இலிருந்து மீள்விக்கப்பட்டது