மீரா (திரைப்படம்)

எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மீரா 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி மீராவாக நடித்திருந்தார். எல்லிஸ் ஆர். டங்கனினால் சென்னை நியூட்டோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது.[1] வழுவூர் இராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார். படத்திற்கான கதை மற்றும் உராயாடலையும், ஐந்து பாடல்களையும் கல்கி எழுதினார்.[2]

மீரா
இயக்கம்எல்லிஸ் ஆர். டங்கன்
கதைகல்கி
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
கே. வி. நாயுடு & பார்ட்டி
நடிப்புஎம். எஸ். சுப்புலட்சுமி
சித்தூர் வி. நாகையா
செருக்களத்தூர் சாமா
கே. சாரங்கபாணி
டி. எஸ். பாலையா
எம். ஜி. இராமச்சந்திரன்
கே. ஆர். செல்லம்
டி. எஸ். துரைராஜ்
ஆர். சந்தானம்
கே. துரைசாமி
ஒளிப்பதிவுஜிதன் பானர்ஜி
விநியோகம்நாராயணன் கம்பனி, சென்னை
வெளியீடு1945
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பால மீரா (குழந்தை ராதா) வளர்ந்த வீட்டுக்கு, கண்ணன் பிறந்த புண்ணிய தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி (செருக்களத்தூர் சாமா) வருகிறார். அவர் கொண்டுவந்த கிருஷ்ணர் சிலை குழந்தையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது. பால மீரா நந்தபாலனையே தனது மணாளனாக நினைத்து மாலையிடுகிறாள்.[3]

மீரா (எம். எஸ். சுப்புலக்ஷ்மி) யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டனாரின் விருப்பத்திற்கு இணங்கி மேவார் ராணாவை (சித்தூர் வி. நாகையா) மணந்து சித்தூர் செல்கிறாள். சித்தூர் அரண்மனையின் அழகிய உத்தியான வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம் குழலூதிய நீலநிறத்துப் பாலகனை எண்ணி எண்ணி உருகுகிறது.[3]

ஆரம்பத்தில் மேவார் ராணா தான் கைப்பிடித்த தர்ம பத்தினியின் கிருஷ்ண பக்தியையும் அவள் பாடிய கீதங்களையும் குறித்துப் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறான். போகப் போக, அவனுக்குச் சலிப்பு உண்டாகிறது. ராணாவின் சகோதரி உதாவும் (கே. ஆர். செல்லம்) சகோதரன் விக்ரமனும் (டி. எஸ். பாலையா) மீராவைக் குறித்து அவனிடம் புகார் செய்து கோபமூட்டி வருகிறார்கள். விஜயதசமியன்று நடந்த தர்பாருக்கு மீரா வருவதாக வாக்களிக்கிறாள். ஆனால் தர்பாருக்குப் புறப்படும் போது கண்ணன் வேய்ங்குழலின் நாதம் அவளைக் கவர்ந்திழுக்கச் சபா மண்டபத்திற்குப் போவதற்குப் பதிலாகக் கோயிலுக்குப் போகிறாள். ராணா கோபங்கொண்டு மீராவை நிந்தித்து விட்டு வேட்டைக்குச் செல்கிறான்.[3]

விக்கிரமனுடைய தூண்டுதலின் பேரில் உதா மீராவுக்கு நஞ்சு கொடுத்து விட்டுப் பிறகு வருந்துகிறாள். பாம்பின் தலைமீது நடனமாடிய இறைவனின் அருளால் மீராவுக்குத் தீங்கு நிகழாததைக் காண்கிறாள். உதாவின் மனம் மாறுகிறது.[3]

டில்லி பாதுஷாவின் சபையில் இருந்த தான்சேன், மான்சிங் என்ற இருவர் மீராவின் பாடல்களைக் கேட்க ஆவல் கொண்டு மாறு வேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய்மறந்து இருந்தபிறகு அவர்கள் பாதுஷா அளித்த முத்துமாலையை மீராவிடம் தந்துவிட்டுக் கிளம்புகிறார்கள்.[3]

காட்டிலிருந்து ராணா திரும்பி வந்ததும் விக்கிரமனும் தளபதி ஜயமல்லும் (எம். ஜி. ராமச்சந்திரன்) முத்துமாலையைக் காட்டி ராணாவுக்குத் தூபம் போடுகிறார்கள். "அது இனிமேல் கோயில் அல்ல. பீரங்கி வைத்து இடித்துத் தள்ளுங்கள்", என்று ராணா உத்தரவு இடுகிறான்.[3]

ஆலயத்தை இடிக்க உத்தரவிட்டது ராணா தான் என்று தெரிந்ததும் மீரா, அரண்மனை வாழ்வும் அரசபோகமும் தனக்கு உகந்தவை அல்ல என்று தீர்மானித்து தம்புராவையே துணையாகக் கொண்டு சித்தூரை விட்டுப் பிருந்தாவனம் செல்கிறாள். அங்கிருந்து ரூபகோஸ்வாமியுடன் துவாரகாபுரிக்குப் போகிறாள். வெகுகாலமாக மூடிக்கிடந்த துவாரகா நாதனின் சந்நிதிக் கதவைத் திறந்து தரிசனம் அருள வேண்டுமென்று கதறுகிறாள். ஆலயக்கதவு திறக்கிறது. அடியாள் மீரா பரந்தாமனுடன் ஐக்கியமாகின்றாள்.[3]

நடிகர்கள்

தொகு
மீரா படத்தின் நடிக, நடிகையர்[3]
நடிகர் பாத்திரம்
ம. ச. சுப்புலட்சுமி மீரா
ராதா பால மீரா
சித்தூர் வி. நாகையா ராணா
செருகளத்தூர் சாமா ரூபகோசுவாமி
கே. சாரங்கபாணி உத்தம்
டி. எஸ். பாலையா விக்ரம்
ம. கோ. இராமச்சந்திரன் ஜயமல்
கே. ஆர். செல்லம் உதா
டி. எஸ். துரைராஜ் நரேந்திரன்
ஆர். சந்தானம் சுரேந்திரன்
கே. துரைசாமி தூதாராவ்
பேபி கமலா கிருட்டிணன்

மற்றும் ஜெயகௌரி, லீலா.[3][4]

பாடல்கள்

தொகு

பாடல்களை எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார்.[3][5] இவை "எச்.எம்.வி" இசைத்தட்டுகளில் வெளிவந்தன.[6] "காற்றினிலே வரும் கீதம்" தவிர்ந்த அனைத்துப் பாடல்களையும் பாபனாசம் சிவன் எழுதியிருந்தார். "காற்றினிலே வரும் கீதம்" பாடலை கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். சிந்து பைரவி இராகத்தில் அமைந்திருந்த இப்பாடல்,[7][8] கமல் தஸ்குப்தா இசையமைத்து, சீலா சர்க்கர் பாடிய "தூத் காயி மான் பினா" என்ற இந்தி-மொழிப் பாடலை ஒத்திருந்தது.[9][10] "பிருந்தாவனத்தில்", "எங்கும் நிறைந்தாயே" ஆகிய பாடல்களும் சிந்து பைரவி இராகத்தில் பாடப்பட்டன,[11] "கிரிதர கோபாலா" பாடல் மோகனத்தில் அமைந்திருந்தது.[12]

 1. நந்தபாலா என் மணாளா
 2. முரளீ மோகனா
 3. இந்தப் பாரிலில்லை எனக்கிணையே
 4. காற்றினிலே வரும் கீதம்
 5. எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே
 6. விண்ணும் மண்ணும் நிறைந்த உன் கண்ணன்
 7. கிரிதர கோபாலா
 8. யது நந்தனா கோபாலா
 9. லீலைகள் செய்வானே
 10. ஹே ஹரே தயாளா
 11. மறவேனே என் நாளிலுமே
 12. சராசரம் உன்னை யாரும் தேடுமே
 13. அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்
 14. பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
 15. எங்கும் நிறைந்தாயே
 16. ஜனார்த்தனா ஜகன்னாதா

மேற்கோள்கள்

தொகு
 1. ராண்டார் கை (28 மார்ச் 2008). "Meera 1945". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080331211142/http://www.hindu.com/cp/2008/03/28/stories/2008032850441600.htm. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016. 
 2. அறந்தை நாராயணன் (அக்டோபர் 27 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-6 பேராசிரியர் கல்கி". தினமணிக் கதிர்: 22-23. 
 3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 மீரா பாட்டுப் புத்தகம், 1945
 4. Meera (motion picture). Chandraprabha Cinetone. 1945. Opening credits, from 0:15 to 0:32.
 5. "Meera". JioSaavn. Archived from the original on 28 November 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
 6. George 2016, ப. 143.
 7. Saravanan, T. (20 September 2013). "Ragas hit a high". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181226035819/https://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece. 
 8. Jeyaraj, D. B. S. (19 August 2018). "♥'Kaatriniley Varum Geetham'-Melodiously Sung by M.S. Subbulakshmi in/as "Meera"♫". DBSJeyaraj.com. Archived from the original on 2 December 2019. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.
 9. Vamanan (10 December 2018). "இந்தி திரைப்பாடல் தமிழுக்கு தந்த இனிமை!". தினமலர். Nellai. Archived from the original on 2 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2 December 2019.
 10. Sriram, V. (30 May 2018). "The Tune Behind Katrinile Varum Geetham". Madras Heritage and Carnatic Music. Archived from the original on 6 June 2019. பார்க்கப்பட்ட நாள் 6 June 2019.
 11. Sundararaman 2007, ப. 126, 129.
 12. Sundararaman 2007, ப. 131.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_(திரைப்படம்)&oldid=3958660" இலிருந்து மீள்விக்கப்பட்டது