ம. கோ. இராமச்சந்திரன்

இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்
(எம். ஜி. இராமச்சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், 17 சனவரி 1917 – 24 திசம்பர் 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

எம். ஜி. இராமச்சந்திரன்
புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் நினைவு முத்திரை
தமிழ்நாடு முதலமைச்சர்
பதவியில்
9 சூன் 1980 – 24 திசம்பர் 1987
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்இரா. நெடுஞ்செழியன்
பதவியில்
30 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980
முன்னையவர்ஆளுநர் ஆட்சி
பின்னவர்ஆளுநர் ஆட்சி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்
பதவியில்
17 அக்டோபர் 1986 – 24 டிசம்பர் 1987
முன்னையவர்எஸ். இராகவானந்தம்
பின்னவர்இரா. நெடுஞ்செழியன்
பதவியில்
17 அக்டோபர் 1972 – 22 சூன் 1978
முன்னையவர்நிலை நிறுவப்பட்டது
பின்னவர்இரா. நெடுஞ்செழியன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
பதவியில்
27 சூலை 1969 – 10 அக்டோபர் 1972
கட்சியின் தலைவர்மு. கருணாநிதி
பொதுச்செயலாளர்இரா. நெடுஞ்செழியன்
தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் தலைவர்
பதவியில்
1957–1959
முன்னையவர்என். எஸ். கிருஷ்ணன்
பின்னவர்அஞ்சலி தேவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மருதூர் கோபாலன் இராமச்சந்திரன்

17 சனவரி 1917
நாவலப்பிட்டி,
கண்டி மாவட்டம், மத்திய மாகாணம், பிரித்தானிய சிலோன் (தற்போது இலங்கை)
இறப்பு24 திசம்பர் 1987(1987-12-24) (அகவை 70)
மதராசு (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா
இளைப்பாறுமிடம்எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா நினைவிடம்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்(கள்)தங்கமணி (இறப்பு 1942)
சதானந்தவதி (இறப்பு 1962)
வி. என். ஜானகி (இறப்பு 1996)
உறவினர்உடன்பிறந்தோர் :-
1)எம்.ஜி.சக்கரபாணி,
2)எம்.ஜி.காமாட்சி,
3)எம்.ஜி.சுமதிரா,
4)எம்.ஜி.பாலகிருஷ்ணன்
வேலைநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், அரசியல்வாதி
விருதுகள்பாரத ரத்னா (1988)

எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.[1] காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2] 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.

இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

இளமைப் பருவம்

இராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார்.[4][5][6]

அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு அந்தமான்தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயர்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினர். அதற்கு காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர் குடும்பத்துடன் இலங்கையில் உள்ள கண்டிக்கு அருகே நாவலப்பிட்டியில் குடியேறினார்கள். பின்பு அவரது நண்பர் வேலுபிள்ளை அவர்கள் காவல் துறையில் பணியாற்றிவந்தார். அவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தார்.

எம். ஜி. ஆர்க்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் ராம என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.

பின்பு எம். ஜி. ஆர் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரது ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்காவும் இலங்கையில் தொடர்ந்து இறந்துவிட மனவெறுப்புடன் அன்னை சத்யபாமா இலங்கையில் இருந்து வெளியேறினார்கள். பின்பு சிறிது காலம் கேரளாவிற்கு அவரது தாயார் சத்யபாமா அவர்கள் உடன் சென்று தனது கணவரின் பெற்றோர்களிடம் அவரின் பங்கை கேட்டு அதைத் தர மறுத்ததால் சத்யபாமா தனது தாயார் சரஸ்வதி உடன் கேரளாவில் சில நாட்கள் அங்கு வசித்துவந்தபோது அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

இல்லறம்

முதல் திருமணம்

எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.

இரண்டாவது திருமணம்

அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.[7]

மூன்றாவது திருமணம்

 
1948 மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி

ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.[8] இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர்.12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.[9]

வளர்ப்பு குழந்தைகள்

மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.[10] எனவே ஜானகி- கணபதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.[9]

கல்வி உதவி

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன் மற்றும் சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25இல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

செல்லப் பிராணிகள்

எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.

சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.[11]

சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்துவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாகத் துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.

திரைப்பட வாழ்க்கை

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை

ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.

1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவரின் தொண்டர் அனகாபுத்தூர் இராமலிங்கம் ஆரம்பித்தார். அந்த கட்சியின் உறுப்பினராக சேர்ந்து அதன் தலைவராகவும்,பாெதுச்செயலாளாராகவும் பொறுப்பு ஏற்றார்.பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் மகோஇரா.1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் 2016 வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இவரது அரசியல் வாரிசு ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[12] இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[13] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

திட்டங்கள்

  • சத்துணவுத் திட்டம்
  • விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
  • மகளிருக்கு சேவை நிலையங்கள்
  • பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
  • தாய் சேய் நல இல்லங்கள்
  • இலவச சீருடை வழங்குதல் திட்டம்
  • இலவச காலணி வழங்குதல் திட்டம்
  • இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்
  • இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்
  • வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.[14]

தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்

1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த ம. கோ. இரா. முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

  • முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.
  • 1981 ஆகத்து 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.[15]

தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு

இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.

பழ நெடுமாறன் கருத்து

1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன்

விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலகட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.[16] எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.[17]

எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்

1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.

நாம் தமிழர் சீமான் நம்பிக்கை

"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.[18]

இவர் எழுதிய புத்தகங்கள்

நாடோடி மன்னன் புத்தகம்

எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார்.[19] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.[20]

சுயசரிதைத் தொடர்

‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.[21]

சிறப்பு விருதுகளும் பட்டங்களும்

ம.கோ.இரா. என்கிற ம.கோ.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்

  1. பாரத் விருது - இந்திய அரசு
  2. அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
  3. பாரத ரத்னா விருது - இந்திய அரசு
  4. பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
  5. சிறப்பு முனைவர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
  6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

  1. இதயக்கனி - பேரறிஞர் அண்ணா
  2. புரட்சி நடிகர் - உடந்தை உலகப்பன்
  3. நடிக மன்னன் -சி.சுப்பிரமணியம்
  4. மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்
  5. பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்
  6. மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
  7. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
  8. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
  9. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
  10. கலை மன்னன் - சென்னை ரசிகர்கள்
  11. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
  12. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்

அரசியல் சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்

  1. கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
  2. கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
  3. நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
  4. பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
  5. மக்கள் திலகம் - தமிழ்வாணன்
  6. வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
  7. புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
  8. இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
  9. மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
  10. ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்

செயல்பாடுகள்

  • 1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.[22] 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார்.

எம்.ஜி.ஆர் நினைவிடங்கள்

எம்.ஜி.ஆர் சமாதி

 
எம்.ஜி.ஆர் நினைவிடம்

தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருகில் இவரது அரசியல் வாரிசான ஜெ. ஜெயலலிதா நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.[23]

சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.[24]

டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்

 
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.[25] மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்

திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.[26]

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.[27]

படத்தொகுப்பு

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

  1. எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. காந்தியை சந்தித்த எம்.ஜி.ஆர். - கே.பி. ராமகிருட்டிணன்
  3. "இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள். புதினம் செய்திகள் தளம்". Archived from the original on 2013-04-16. பார்க்கப்பட்ட நாள் 2013-07-09.
  4. திராவிடநாடு (இதழ்) நாள்:10-8-1952, பக்கம் 3
  5. எம்.ஜி.ஆர். வாழ்க்கை
  6. எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்" (in தமிழ்). பி.பி.சி.. http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/. பார்த்த நாள்: 2006-11-08. 
  7. MGR Remembered – Part 2
  8. எம்.ஜி.ஆர்.; நான் ஏன் பிறந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
  9. 9.0 9.1 எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4
  10. "வாழ்க்கைக் குறிப்பு". Archived from the original on 2008-01-18. பார்க்கப்பட்ட நாள் 2007-04-25.
  11. "எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்". Archived from the original on 2010-09-21. பார்க்கப்பட்ட நாள் 2011-01-27.
  12. எல்.ஆர்., ஜெகதீசன். "ஆளும் அரிதாரம்". பி.பி.சி.. http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/. பார்த்த நாள்: 2006-11-08. "திரைப்படத்தில் தாங்கள் பார்க்கும் கதாநாயக நாயகிகளின் பிம்பங்களை நிஜ வாழ்வில் ஆராதிக்கும் மனோபாவம் தமிழர்கள் மத்தியில் சற்றே அதிகம் என்பது சமூகவியலாளர்களின் கருத்து. எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரனுக்கு கோயில் கட்டும் அளவுக்கு சிலர் சென்றதற்கும் இதுவே காரணம்." 
  13. [The nurturing hero Changing images of MGR Sara Dickey (2005). Appeared in Tamil Cinema: The cultural politics of India’s other film industry]
  14. "தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்வோம்: ஜெயலலிதா". Archived from the original on 2011-01-18. பார்க்கப்பட்ட நாள் 2011-01-27.
  15. ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
  16. * எம்.ஜி.ஆர்ப் பற்றி பிரபாகரன்
  17. * பழ.நெடுமாறன் மற்றும் பிரபாகரன்[தொடர்பிழந்த இணைப்பு]
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2012-09-21.
  19. "நாடோடி மன்னன் திரைப்படம் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2011-01-26.
  20. http://cinema.maalaimalar.com/2009/11/16110341/nadodi-mannan.html தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்து எம்.ஜி.ஆர். இப்படத்தை எடுத்ததால், அவருடைய நண்பர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இது குறித்து எம்.ஜி.ஆரிடமே நிருபர்கள் கேட்டபோது, "படம் வெற்றி பெற்றால், நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
  21. [lakshmansruthi.com]
  22. http://www.dinakaran.com/News_Detail.asp?nid=24202 பரணிடப்பட்டது 2012-09-04 at the வந்தவழி இயந்திரம் சென்னையின் முக்கிய அடையாளம் அண்ணா பவள விழா வளைவு இடிப்பு -தினகரன்
  23. "எம்.ஜி.ஆர் நினைவிடம்". Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 2012-09-21.
  24. எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அன்னதானம்[தொடர்பிழந்த இணைப்பு]
  25. http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_56.asp பரணிடப்பட்டது 2014-08-29 at the வந்தவழி இயந்திரம் வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு - எம்.ஜி.ஆர். முத்து
  26. எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே... கோஷம் முழங்க கும்பாபிஷேகம்!
  27. "அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்". Archived from the original on 2011-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._கோ._இராமச்சந்திரன்&oldid=3906873" இலிருந்து மீள்விக்கப்பட்டது