திராவிட முன்னேற்றக் கழகம்

இந்திய அரசியல் கட்சி

திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் [2] கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம்
Dravida Munnetra Kazhagam
சுருக்கக்குறிதிமுக
தலைவர்மு. க. ஸ்டாலின்
நிறுவனர்கா. ந. அண்ணாதுரை
பொதுச்செயலாளர்துரைமுருகன்
மக்களவைத் தலைவர்த. ரா. பாலு
மாநிலங்களவைத் தலைவர்திருச்சி சிவா
தொடக்கம்17 செப்டம்பர் 1949 (71 ஆண்டுகள் முன்னர்) (1949-09-17)
பிரிவுதிராவிடர் கழகம்
முன்னர்நீதிக் கட்சி(1917–1944)
திராவிடர் கழகம் (1944–1949)
தலைமையகம்அண்ணா அறிவாலயம், அண்ணா சாலை, சென்னை – 600018
செய்தி ஏடுமுரசொலி (தினசரி)
தொழிலாளர் அமைப்புதொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச)
கொள்கைசமூக மக்களாட்சி
சமூக நீதி
திராவிடம்
நிறங்கள்     சிவப்பு
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி[1]
கூட்டணிமூன்றாவது அணி (1989-90, 1996-98)
தேசிய ஜனநாயகக் கூட்டணி (1999–2004)
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (2014–2016)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2006–2013) (2016–தற்போது வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
24 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
7 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
97 / 234
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(புதுச்சேரி சட்டப் பேரவை)
3 / 30
தேர்தல் சின்னம்
Indian Election Symbol Rising Sun.png
கட்சிக்கொடி
Flag DMK.svg
இணையதளம்
www.dmk.in

வரலாறு

1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.

1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.

1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.

1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது.

1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.

ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது.

1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார்.

1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 சூன் 8, 9, 10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க.

தி.மு.க.வினர் ஆட்சி செய்த காலமும், சில நிகழ்வுகளும்

1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.[3]

அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.

அண்ணாவிற்கு பிறகு

அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[4]

1969- சூன் மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.

1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார்.

1972 அக்டோபர் 14இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது.

1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

1975 சூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவை முக்கியமானவையாகும்.

1977 சூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது.

1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க.[சான்று தேவை]. 1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது.

1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது.

1983 ஆகத்து 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1987 திசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

1989 திசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.[சான்று தேவை] இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது.

1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது.

1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை. கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது.

1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது.

1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் மு. க. இசுதாலின் செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார்.[5][6]

தலைவர்கள்

 1. மு. கருணாநிதி (1969 - 2018)
 2. மு. க. ஸ்டாலின் (2018 முதல்)

பொதுச்செயலாளர்கள்

 1. கா. ந. அண்ணாதுரை (1949 முதல் 1957 வரை)
 2. இரா. நெடுஞ்செழியன் (1957 முதல் 1962 வரை)
 3. கா. ந. அண்ணாதுரை (1962 முதல் 1969 வரை)
 4. இரா. நெடுஞ்செழியன் (1969 முதல் 1975 வரை)
 5. க. அன்பழகன் (1975 முதல் 2020 வரை)

பொருளாளர்கள்

 1. காஞ்சி மணிமொழியார் (1949 - 1957)
 2. கே. கே. நீலமேகம் (1957 - 1962)
 3. மு. கருணாநிதி (1960 - 1969)
 4. ம. கோ. இராமச்சந்திரன் (1969 - 1972)
 5. ? (1972 - 1977)
 6. எஸ். ஜே.சாதிக்பாட்சா (1977 - 1994)
 7. ஆற்காடு நா. வீராசாமி (1994 - 2008)
 8. மு. க. ஸ்டாலின் (2008 முதல் 28 ஆகத்து 2018 வரை)
 9. துரைமுருகன் (28 ஆகத்து 2018 – 3 செப்டம்பர் 2020)
 10. த. ரா. பாலு (2020 செப்டம்பர் 3ஆம் நாள் முதல்)

மாநாடுகள்

மாநில மாநாடுகள்

திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை:

 1. முதல் மாநில மாநாடு 1951ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13, 14, 15, 16ஆம் நாள்களில் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.[7]
 2. இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு மே மாதம் 17, 18, 19, 20ஆம் நாள்களில் திருச்சி பந்தயத்திடலில் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.[8]
 3. மூன்றாவது மாநில மாநாடு 1961ஆம் ஆண்டு நாள்களில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சூலை 13, 14, 15, 16ஆம் நாள்களில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.[9],[10], [11]
 4. நான்காவது மாநில மாநாடு 1966ஆம் ஆண்டு திசம்பர் 29ஆம் நாள் முதல் 1967 சனவரி 1ஆம் நாள் வரை சென்னை விருகப்பாக்கத்தில் நடைபெற்றது.[12]
 5. ஐந்தாவது மாநில மாநாடு மு. கருணாநிதி தலைமையில் 1975 திசம்பர் 25, 26, 27, 28ஆம் நாள்களில் கோயமுத்தூரில் நடைபெற்றது[9],[10],[11]
 6. ஆறாவது மாநில மாநாடு 1990 பிப்ரவரி 9, 10, 11ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.[11]
 7. ஏழாவது மாநில மாநாடு 1993 மார்ச் 26, 27, 28ஆம் நாள்களில் கோவையில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.[9],[11]
 8. எட்டாவது மாநில மாநாடு 1996 சனவரி 26, 27, 28ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.[11]
 9. ஒன்பதாவது மாநில மாநாடு 2006 மார்ச் 3, 4, 5ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.[9],[11]
 10. பத்தாவது மாநில மாநாடு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 15, 16 ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.[13]. இம்மாநாடு திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே நடைபெற்றது.[14]
 11. பதினோராவது மாநாடு 2021 ஆம் ஆண்டு மார்ச் 14 தேதி திருச்சியில் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.இம்மாநாடு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நடைபெறவுள்ளது.[15]

மாவட்ட மாநாடுகள்

திருச்சி மாவட்டம்

 • திருச்சி மாவட்ட இரண்டாவது திமுக மாநாடு 26-4-1953ஆம் நாள் லால்குடி பாண்டியனார் அரங்கில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ஈ.வெ.கி.சம்பத் தலைமை வகித்தார்; மாநாட்டை கே. ஏ. மதியழகன் திறந்து வைத்தார். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.எஸ்.இளங்கோ, எஸ்.கே.சாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, க. அன்பழகன், என்.வி.நடராசன், இராசு-தங்கப்பழம், தில்லை வில்லாளன், அரங்கண்ணல், தாமரைச்செல்வன், இளம்வழுதி, கண்ணதாசன், சத்தியவாணி முத்து, பூங்கோதை, அருண்மொழி ஆகியோர் உரையாற்றினர்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க.

1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது.

புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு.[சான்று தேவை] திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது.

இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது.

2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.

15ஆவது மக்களவைத் தேர்தல்


திராவிட கருத்தியல்

இயக்கங்கள்
சுயமரியாதை இயக்கம்
திராவிட இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
அதிமுக
பெரியார் திராவிடர் கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
நபர்கள்
அயோத்திதாசர்
இரட்டைமலை சீனிவாசன்
ஈ. வெ. இராமசாமி
அண்ணாத்துரை
கருணாநிதி
எம். ஜி. ஆர்
ஜெயலலிதா
இரா. நெடுஞ்செழியன்
கார்த்திகேசு சிவத்தம்பி
கொள்கைகள்
பகுத்தறிவு
சமத்துவம்
சமூக முன்னேற்றம்
பெண்ணுரிமை
நாத்திகம்
இட ஒதுக்கீடு
அதிகாரப் பகிர்வு
அனைவருக்கும் இலவசக் கல்வி
தொழிற்துறை மேம்பாடு
போராட்டங்கள்
இட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)
மொழிகள்
திராவிட மொழிக் குடும்பம்

தொகு

ஐக்கிய முன்னணியின் அங்கமான திமுக தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[16] அதன் விபரம் [17]

 • சிறீபெரும்புதூர் - த. ரா. பாலு
 • தருமபுரி - தாமரைச்செல்வன்
 • நாமக்கல் - காந்தி செல்வன்
 • நீலகிரி (தனி) - ஆ. ராசா
 • மதுரை - மு.க. அழகிரி
 • கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்
 • தூத்துக்குடி - செயதுரை
 • திருவண்ணாமலை- வேணுகோபால்
 • நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எசு. விஜயன்
 • அரக்கோணம் - செகத்ரட்சகன்
 • வட சென்னை - டி.கே.எசு. இளங்கோவன்
 • மத்திய சென்னை - தயாநிதி மாறன்
 • கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்
 • கிருஷ்ணகிரி - சுகவனம்
 • பெரம்பலூர் - நெப்போலியன்
 • தஞ்சாவூர் - எஸ். எஸ். பழனிமாணிக்கம்
 • இராமநாதபுரம் - ஜே. கே. ரித்தீசு

16ஆவது மக்களவைத் தேர்தல்

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது. இதன் மூலம் மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லாத சூழ்நிலை உருவானது.

2011 சட்டமன்றத் தேர்தல்

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு,பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு முன்னேற்றக் கழகம், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகளில் வெற்றிபெற்றது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் தேர்வாகவில்லை.

2016 சட்டமன்ற தேர்தல்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.[18] 89 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர் கட்சியாக உள்ளது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் தொகுதிகளில் வேறுபாடு பெற்ற வாக்குகள் வாக்கு % வாக்குகளில் வேறுபாடு
176[19] 89  66 1,36,70,511 31.6  9.21

17ஆவது மக்களவைத் தேர்தல்

17ஆவது மக்களவைத் தேர்தல் ஆனது, 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 38 பேர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2021 சட்டமன்றத் தேர்தல்

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக பிரசாந்து கிஷோர் எனும் தேர்தல் வியூக வகுப்பாளருடன் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற திமுக முடிவு செய்துள்ளது.[20][21]

வெளியீடுகள்

 1. சட்டதிட்டங்கள், 1952 [22]
 2. தீர்மானங்கள், 1952 [22]
 3. நம்நாடு என்னும் நாளிதழ் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதழாக 1953 சூன் 15 முதல் அண்ணாதுரையை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது.[23]
 4. The Answer என்னும் ஆங்கில வெளியீடு. 15-சூன் -1953ஆம் நாள் நடைபெற்ற மும்முனைப்போராட்டத்தில் சென்னையில் கைதுசெய்யப்பட்ட கா. ந. அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், ஈ. வெ. கி. சம்பத், என். வி. நடராசன், கே. ஏ. மதியழகன் ஆகியோர் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலங்கள்.[24]

மேற்கோள்கள்

 1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). பார்த்த நாள் 9 May 2013.
 2. http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece
 3. திராவிடர் முன்னேற்றக் கழக இணையதளம்
 4. நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 657-661
 5. "MK Stalin named DMK working president". indianexpress. பார்த்த நாள் சனவரி 5, 2017.
 6. "Stalin at the helm". இந்து. பார்த்த நாள் சனவரி 5, 2017.
 7. திராவிடநாடு (இதழ்) நாள்:28-10-1951, பக்கம் 12
 8. திராவிடநாடு (இதழ்) நாள்:22-4-1956, பக்கம் 20
 9. 9.0 9.1 9.2 9.3 Mathi (15 February 2014). "நாற்பதையும் வெல்வோம்... நாளைய பிரதமரை தீர்மானிப்போம்: திருச்சி மாநாட்டில் திமுக நிர்வாகிகள் பேச்சு". https://tamil.oneindia.com.
 10. 10.0 10.1 "ஓய்வறியா உதயசூரியனின் வாழ்க்கை வரலாறு!" (7 August 2018).
 11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 "தி.மு.க.,விற்கு திருப்புமுனையை தருமா திருச்சி மாநாடு?". Dinamalar (28 February 2011).
 12. "வரலாற்றுக் குறிப்புகள்".
 13. திருச்சியில் திமுகவின் 10ஆவது மாநில மாநாடு நாள்:22-4-1956, பக்கம் 20
 14. Mathi (15 February 2014). "திருச்சி: திமுகவின் பிரம்மாண்டமான 10வது மாநில மாநாடு - கோலாகல தொடக்கம்!". https://tamil.oneindia.com.
 15. Tiruchy being decked up for DMK meet. New Indian Express. 19th February 2021. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/feb/19/tiruchy-being-decked-up-for-dmk-meet-2265950.html. 
 16. http://pib.nic.in/elections2009/default.asp Indian general election, 15th Lok Sabha
 17. http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/dmk-candidates.html
 18. http://www.tamiltel.in/dmk-manifesto-2016-1801
 19. "DMK concludes seat-sharing with Puthiya Thamizhagam, IUML". தி இந்து (8 ஏப்ரல் 2016).
 20. https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-dmk-stalin-announces-joining-hands-prasanth-kishore
 21. https://www.indiatoday.in/india/story/dmk-teams-up-with-prashant-kishor-s-i-pac-for-2021-tami-nadu-polls-1642677-2020-02-03
 22. 22.0 22.1 திராவிடநாடு (இதழ்) நாள்:6-4-1952, பக்கம் 12
 23. திராவிடநாடு (இதழ்) நாள்:7-6-1954, பக்கம் 2
 24. திராவிடநாடு (இதழ்) நாள்:18-10-1953, பக்கம் 11

வெளி இணைப்புகள்