ஈ. வெ. இராமசாமி

தமிழ் அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் பகுத்தறிவுவாதி

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.[2] இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தருமம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.[3][4][5][6][7] இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வு சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.[8] தமிழக அரசு இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாக(செப்17) அறிவித்தது.

ஈரோடு வெங்கட்டர் இராமசாமி
தபால் தலையில் பெரியார் ஈ.வெ.ரா. படம்
பிறப்பு(1879-09-17)17 செப்டம்பர் 1879
ஈரோடு, சென்னை மாகாணம், இந்தியா இந்தியா
இறப்பு24 திசம்பர் 1973(1973-12-24) (அகவை 94)
வேலூர், தமிழ்நாடு
நினைவகங்கள்பெரியார் - அண்ணா நினைவு இல்லம், தந்தை பெரியார் நினைவகம்
மற்ற பெயர்கள்ஈ.வெ.ரா., பெரியார்.
பணிசெயற்பாட்டாளர், அரசியல்வாதி, சீர்திருத்தவாதி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
நீதிக்கட்சி
திராவிடர் கழகம்
அரசியல் இயக்கம்சுயமரியாதை இயக்கம், திராவிட தேசியம்
சமயம்இறைமறுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
நாகம்மை (இ. 1933), மணியம்மையார் (1948–1973)

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.[9]

வாழ்க்கை

பெயர்க்காரணம்

குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 திசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 திசம்பர், 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது. இது குறித்து வே. ஆனைமுத்து 'பெரியார் களஞ்சியம்' எனும் தொகுப்பு நூலில்,

அவ்வாறாக, 'நாயக்கர்' என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில், 'நாயக்கர்' என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது, அவருக்கு உரிய பெருமையைக் குறைத்துவிடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் 'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து 'ஈ. வெ. இராமசாமிப் பெரியார்' என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளையே ஆவார் என்று கூறுகிறார். இந்த விளக்கத்தினை 21-5-1973இல், திருச்சியில் இராமசாமி, தனக்கு உணர்த்தியதாகக் குறிப்பிடுகிறார்.[10]

இளமைக் காலம்

ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார்.[11] இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர்.[n 1] இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருட்டிணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர் ஆவர்.[11][12]

1929 இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில்,[13] தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். இராமசாமி மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.[14][15][16] பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும், இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.[17]

குடும்பம்

இராமசாமியின் 19ஆவது வயதில் அவருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மை தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.[18]

தனது அண்ணன் மகன் ஈ. வெ. கி. சம்பத்தை திராவிடர் கழகத்தின் எதிர்காலத் தலைவராக நியமிப்பதாக இருந்தார். ஆனால் சம்பத் அண்ணாதுரையின் சீடராக விளங்கியதால், ஈ. வெ. இராமசாமி தமது 70-ஆவது வயதில் 32 வயதுடைய காந்திமதி எனும் மணியம்மையை மணந்தார். இத்திருமணத்தால் திராவிடர் கழகத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்ணாதுரை போன்ற தலைவர்கள் இராமசாமியை விட்டுப் பிரிந்தனர். ஈ. வெ. இராமசாமி, மணியம்மையை தனது சொத்துக்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் பாதுகாவலராக நியமித்தார்.

காசிப் பயணம்

1904இல் இராமசாமி, இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை[1][11] தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள்[1] போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.[11]

இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிராமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிராமணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி, இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்.[1]

பசிதாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிக்கொண்டார். பிராமணரல்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிராமணரல்லாதாருக்கு உணவு வழங்கப் பிராமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றத்தாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார்.[1] அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவராக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின், தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார்.[19]

அரசியல் வாழ்வு

காங்கிரசு கட்சியின் உறுப்பினர் (1919–1925)

இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரசு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்துப் பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.[6]

1922 இல் இராமசாமி சென்னை இராசதானியின் (மதராசு இராசதானி) காங்கிரசு கட்சித் தலைவராகத் (தற்பொழுது -தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரசு கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரசு கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் 1925 இல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார்.[20]

வைக்கம் போராட்டம் (1924–1925)

கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ளது. கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் (சத்தியாகிரகம்) போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[21][22]

வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. டி. கே. மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக ஆனதும், அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அன்னி பெசண்டின் உதவியையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தைக் காந்தியின் வழிகாட்டலுடன் (சத்தியாகிரக) அறப்போராட்டமாக முன்னெடுத்தார்.

நாடெங்கிலும் இருந்து காங்கிரசு தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். வினோபா பாவே அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரசு தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ. பி. கேசவமேனன், இ. எம். எசு., ஏ. கே. கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் இருந்து ஈ. வே. ரா, கோவை அய்யாமுத்து, எம். வி. நாயுடு ஆகியோர் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ. வே. ரா முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். ஈ. வே. ரா அந்தப்போரில் பங்கெடுத்தது சில மாதங்கள் மட்டுமே. ஆனால் வைக்கம் போராட்டம் மேலும் பல மாதங்கள் நீடித்தது.

ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி, இப்போராட்டத்தில் கேரளாவைச் சாராதவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை. இராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். விடுதலைக்கான பல போராட்டத்தில் கலந்து கொண்ட இராமசாமிக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது.[23]

நடுவே போராட்டம் வலுவிழந்தபோது காந்தியும் நாராயணகுருவும் நேரில் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு பங்கெடுத்து நடத்திய ஒரே போராட்டம் இதுவே. கடைசியில் வெற்றி ஈட்டியது. அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாசு காந்தியும் போராட்டக்குழு சார்பில் இராசாசியும் கையெழுத்திட்டனர்

பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது

சுயமரியாதை இயக்கம்

 
சுயமரியாதை இயக்கத்தின் துவக்க காலத்தின் பொழுது இராமசாமி

இராமசாமி மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.[24]

சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.

  • சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.[25]
  • ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.[25]
  • சாதி மறுப்பு திருமணத்தையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
  • அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுப்பாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது.[25]
  • கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.[25]
  • இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராசு அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928லேயே வலியுறுத்தியது.[25]

இந்த பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாக இராமசாமி 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கினார். ஆங்கிலத்தில், ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார்.[26] சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எசு.குருசாமி மேற்பார்வையில் மதராசு இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.அழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராசு இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக் களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்கவும் வழி செய்தது.[27]

வெளிநாடு சுற்றுப்பயணம் (1929–1932)

1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலாக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எசு.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரீசு, துருக்கி, உருசியா, செருமனி, இங்கிலாந்து, சுபெயின், பிரான்சு, மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியா திரும்பினார்.[13]

இச்சுற்றுப்பயணங்கள் இராமசாமியின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. உருசியாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடைய கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் இராமசாமியின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை.[28] இராமசாமி திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம். சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் இராமசாமியின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று.[13]

இந்தி எதிர்ப்பு

1937 இல் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் மதராசு மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில், இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது.[29] நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் இராமசாமி இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராசாசி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது.[30] இராமசாமி பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்கத் திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார்.[30] இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாகப் பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று இராமசாமி வலியுறுத்தினார்.[31] தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன[32]

நீதிக்கட்சித் தலைவராக (1938–1944)

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் துவக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி எனப் பெயர்மாற்றம் பெற்றது. பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிராமணரல்லாதாரை ஒடுக்க, பிராமணர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது.[33]

1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராசு மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது. நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939, இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் இராமசாமியின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்.[33]

திராவிடர் கழகம் (1944-முதல்)

திராவிடர் கழகம் உருவாதல்

1944 இல் நீதிக்கட்சித் தலைவராக இராமசாமி முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என இராமசாமியால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் இராமசாமி நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பொ. தி. இராசன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது.

திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன.[34] அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய்மொழித் தாக்குதல்களைத் தொடுக்கலாயினர் [35]. 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் [36] இவற்றில் தனிக்கவனம் செலுத்தினர்.

அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு

1949 இல் இராமசாமியின் தலைமைத் தளபதியான காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை இராமசாமியிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை 17 செப்டம்பர் 1949 அன்று சென்னையில் துவக்கினார்.[35][37] இந்தப் பிரிவுக்கு இராமசாமி மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார்.[38] அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். இராமசாமி தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், சூலை 9, 1948 அன்று இராமசாமி, தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர்.[39]

அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால், அண்ணாதுரையின் திமுக கட்சியை, கண்ணீர்த்துளி கட்சி என அதுமுதல் இராமசாமி வர்ணிக்கலானார்.[40] அதன் பின், பெரியாருக்காக திமுக தலைவர் பதவி காலியாக உள்ளது என அண்ணாதுரை அறிவித்தார். அண்ணாதுரை மறைவின் பின் திமுக தலைவராக பெரியாரின் ஆசியுடன் மு.கருணாநிதி பொறுப்பு ஏற்றார்.

1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு

இராமசாமி 1957 தேர்தலில் காங்கிரசை முழுமையாக ஆதரித்தார். அத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களைப் பிடித்தது.[41]

இறுதிக் காலம்

1956 இல் சென்னை, மெரினாவில் இந்துக் கடவுளான இராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய இராமசாமிக்குத் தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன்னால், கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.[42] இராமசாமி அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[42]

1958 இல் இராமசாமி மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் இராமசாமி ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். 1962 இல் இராமசாமி தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இராமசாமி வட இந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி 1970 சூன் 27 அன்று இயுனசுகோ மன்றம் என்ற உள்ளூர் அமைப்பு[43] "புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்கிரடிசு; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.[44][45][46][47]

இதழ்கள், ஏடுகள் மற்றும் நாளிதழ்கள்

ஈ.வெ.ராமசாமி தன்னுடைய கருத்துகளைப் பரப்புவதற்காகப் பின்வரும் இதழ்களை வெளியிட்டு வந்தார்:

  1. குடிஅரசு (வார இதழ்) 1925 மே 2ஆம் நாள் தொடங்கப்பட்டது.[48]
  2. ரிவோல்ட் (Revolt) (ஆங்கில வார இதழ்) 1928 நவம்பர் 07 ஆம் தொடங்கப்பட்டது.[48] முதல் இதழை கோவை இரத்தினசபாபதியார் தலைமையில் பட்டிவீரன்பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் 6-11-1928ஆம் நாள் வெளியிட்டார். இதழுக்கு ஈ.வெ.இராவும் எசு. இராமநாதனும் ஆசிரியராக இருந்தனர்; நாகம்மையார் வெளியீட்டாளர்.
  3. சசுடிசைடு (Justicite).[49]
  4. புரட்சி (வார இதழ்) 1933 நவம்பர் 20 ஆம் நாள்தொடங்கப்பட்டது.[48] 17.6.1934ஆம் நாள் இறுதி இதழ் வெளிவந்தது.
  5. பகுத்தறிவு (நாளிதழ்).[50] 1934 ஏப்ரல் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டு 1934 மே 27ஆம் நாளோடு நிறுத்தப்பட்டது
  6. பகுத்தறிவு (வார இதழ்) 1934, ஆகத்து 26 ஆம் நாள் முதல் 1935 சனவரி 1ஆம் நாள் வரை 20 இதழ்கள் வெளிவந்தன.[50][51]
  7. பகுத்தறிவு (மாத இதழ்) 1935, மே 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது 1939 சனவரி வரை வெளிவந்தது.
  8. விடுதலை (வாரம் இருமுறை) 1935, சூன் 01ஆம் நாள் தொடங்கப்பட்டது.[48]
  9. விடுதலை (நாளிதழ்) 1937, சூன் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது
  10. உண்மை (மாத இதழ்)
  11. தி மார்டர்ன் இரேசனலிசிட்டு (The Modern Rationalist) (ஆங்கில மாத இதழ்) 1971 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது.[52],[48]

மறைவு

 
பெரியார் சிலை, வைக்கம்

தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற இராமசாமி, வேலூர் சி. எம். சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இராமசாமி, சிகிச்சை பலனின்றி திசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.[39]

விமர்சனங்கள்

  • இராமசாமி மத மூடநம்பிக்கைகளையும், பிராமணியத்தையும் இந்து மத இதிகாசம் இராமாயணத்தையும் எதிர்த்தார். பிற மதங்களைப் பற்றி அவர் விமர்சிக்கவில்லை.[சான்று தேவை]
  • பாரதியாரை, கிறுக்கன் பாரதி என்று குறிப்பிடுகின்றார்.
  • பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல் என்றும், "விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிசம்" என்றும் இராமசாமி சிலப்பதிகாரத்தை விமர்சித்தார்.[53]
  • தமிழ் மொழியை "காட்டுமிராண்டி பாடை" என்றார். தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சி இல்லை எனவும் பழந்தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் நிறைந்து இருப்பதாகவும் அதற்குக் காரணம் சொன்னார்.[54][54][55][56][57][58]

நினைவகங்கள்

தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு இராமசாமியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இராமசாமி அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.

மறைக்கப்பட்ட புத்தகம்

1979 ஆம் ஆண்டு ம.கோ.இரா தலைமையிலான அரசு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் குழு அமைத்து நெ.து. சுந்தரவடிவேலுவை இராமசாமி வாழ்க்கை வரலாற்றைச் சிறுவர்களுக்காக எழுதப்பணித்தது. 1000 பக்க அளவிலான நூலாக அவரும் எழுதித்தந்த பின்னரும் அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை.[59]

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  • ^[n 1] சில இடங்களில் கன்னடம் என குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் தெலுங்கு என்பதே சரி.

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "About Periyar: A Biographical Sketch from 1879 to 1909". Dravidar Kazhagam. Archived from the original on 10 July 2005. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
  2. மேத்தா, ராஜேந்திர ராஜ் (2006). நவீன இந்தியாவின் அரசியல் கொள்கைகள்: கட்டுரையை ஆராய்தல். சேஜ் பதிப்பகம் : ஆயிரம் கருவாலிமரம். p. 48.
  3. Mehta, Vrajendra Raj; Thomas Pantham (2006). Political Ideas in Modern India: thematic explorations. Sage Publications: Thousand Oaks. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-3420-2.
  4. Arora, N.D.; S.S. Awasthy (2007). Political Theory and Political Thought. Har-Anand Publications: New Delhi. p. 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1164-2.
  5. Thakurta, Paranjoy Guha; Shankar Raghuraman (2004). A Time of Coalitions: Divided We Stand. Sage Publications. New Delhi. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7619-3237-2.
  6. 6.0 6.1 "Biography of Periyar E.V. Ramasami (1879–1973)". Barathidasan University. Archived from the original on 14 June 2007. பார்க்கப்பட்ட நாள் 6 September 2008.
  7. Kandasamy, W.B. Vansantha; Florentin Smarandache; K. Kandasamy (2005). Fuzzy and Neutrosophic Analysis of E.V. Ramasamy's Views on Untouchability. HEXIS: Phoenix. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-931233-00-2.
  8. "10 Reasons Why Ambedkar Would Not Get Along Very Well With 'Periyar'". Archived from the original on 7 May 2016.
  9. "Statue wars: Who was Periyar and why does he trigger sentiment in Tamil Nadu?". The Economic Times. 2018-03-07. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/statue-wars-who-was-periyar-and-why-does-he-trigger-sentiment-in-tamil-nadu/articleshow/63200079.cms?from=mdr. 
  10. வே.ஆனைமுத்து. பெரியார் களஞ்சியம் தொகுப்பு 1. pp. Chapter xxix.
  11. 11.0 11.1 11.2 11.3 டையல், Anita (1977). ஈ.வெ. இராமசாமி நாயக்கர். சுவீடன்: ஸ்கான்டிநேவியன் பல்கலைக்கழக புத்தகங்கள். pp. பக்கம். 19.
  12. "பெரியாரைப் பற்றி: வாழ்க்கை வரலாறு 1879 to 1909". திராவிடர் கழகம். Archived from the original on 2005-07-10. பார்க்கப்பட்ட நாள் 2008-09-06.
  13. 13.0 13.1 13.2 சரசுவதி. சுயமரியாதையை நோக்கி, பக்கம். 54.
  14. கூகுல் புத்தகம்
  15. கூகுல் புத்தகம்
  16. "பெரியாரைப் பற்றி:புரட்சிகரமான கருத்துக்கள்". திராவிடர் கழகம். Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.
  17. வீரமணி, கே. (1992) பெண்ணுரிமைக் குறித்து பெரியார். எமரால்டு பதிப்பகம்: சென்னை, அறிமுகப்படுத்தப்பட்டது - xi.
  18. கோபாலகிருஷ்ணன், எம்.டி. (1991) பெரியார்: தமிழர் புரட்சியின் தந்தை, சென்னை. எமரால்டு பதிப்பகம், பக்கம். 3.
  19. கோபாலகிருஷ்ணன், பெரியார்: தமிழர் புரட்சியின் தந்தை, பக்கங்கள். 14-17.
  20. கந்தசாமி, டபுள்யு.பி. வசந்தா (2005). வெண்தாடி வேந்தர் பெரியாரைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவரின் தீண்டாமை ஒழிப்பு பார்வை. எக்சிஸ்: போனிக்ஸ். p. 106.
  21. டைய்ல், அனிதா, "ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்", பக்கங்கள். 22-24
  22. கென்ட், டேவிட். "பெரியார்". ACA. Archived from the original on 2010-06-15. பார்க்கப்பட்ட நாள் 2007-06-21.
  23. ரவிகுமார் (2 மார்ச் 2006). "பெரியார் மறுவாசிப்பு". கவுன்டர் கரன்ட்ஸ். http://www.countercurrents.org/dalit-ravikumar020306.htm. 
  24. Diehl, ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கங்கள். 77 & 78.
  25. 25.0 25.1 25.2 25.3 25.4 பெரியார் காலத்தில் சுயமரியாதை இயக்கம் பரணிடப்பட்டது 2013-12-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 26-06-2009
  26. சரசுவதி, எஸ். சுயமரியாதையை நோக்கி, பக்கம். 4.
  27. சரசுவதி, எஸ். சுயமரியாதையை நோக்கி, பக்கம். 19.
  28. டீல், ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கம். 69.
  29. சட்டர்ஜி, உயர்சாதி எதிர்ப்பு: அம்பேத்கார் மற்றும் பெரியாரின் ஒற்றுமைகள், பக்கம். 40.
  30. 30.0 30.1 சரசுவதி, எஸ். சுயமரியாதையை நோக்கி, பக்கங்கள். 118 & 119.
  31. சரசுவதி. சுயமரியாதையை நோக்கி, பக்கம். 88.
  32. டீல், ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கம். 79.
  33. 33.0 33.1 பாண்டியன், சாதி, தேசியவாதம் மற்றும் மனித இனம், பக்கம். 62.
  34. https://www.dinamalar.com/news_detail.asp?id=2617174
  35. 35.0 35.1 பாண்டியன், ஜே., (1987).சாதி, தேசியவாதம் மற்றும் மனிதநேயம். பாப்புலர் பிரக்காசன் பிரைவேட் லிமிடெட்.: மும்பை, பக்கம். 64.
  36. பன்னாட்டு தமிழ் மொழி நிறுவனம், (2000).திருக்குறள்/ தமிழர் பரம்பரை மற்றும் பண்பாட்டுக் கையேடு. ஐ டி எல் எப்: சிகாகோ, பக்கம். 1346.
  37. The September which split Dravidians: Periyar weds Maniyammai, DMK is born
  38. டீல், ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார், பக்கம். 29.
  39. 39.0 39.1 "20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழர்கள் - பெரியார் ஈ. வெ. ராமசாமி". தமிழ்நேசன்.ஒஆர்ஜி. பார்க்கப்பட்ட நாள் 2009-01-17.
  40. பெரியார் இவர்களைக் கண்ணீர்த்துளிகளாகப் பார்க்கின்றார்-ஞாநி-திண்ணை பார்த்து பரணிடப்பட்ட நாள் 28-06-2009
  41. நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 257
  42. 42.0 42.1 ரிச்மென், பவுலா (1991). தெற்காசியாவின் பழைமை வழக்கங்களின் காணப்படும் வேற்றுமைகள், அத்தியாயம் 9: ஈ.வெ. இராமசாமியின் இராமாயண வாசிப்பு. கலிபோர்னியா பல்கலைக்கழகம்.
  43. "யுனெஸ்கோ விருது பெரியாருக்கு வழங்கப்படவில்லையா? - வெடிக்கும் சர்ச்சை!". பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2024.
  44. "Periyar's 45th death anniversary: Here are some rare photos of the Dravida Kazhagam founder". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். http://www.newindianexpress.com/galleries/nation/2018/mar/07/periyars-45th-death-anniversary-here-are-some-rare-photos-of-the-dravida-kazhagam-founder-101314--5.html. பார்த்த நாள்: 7 May 2019. 
  45. "One Hundred Tamils of the 20th Century Periyar E.V.Ramaswamy - பெரியார்". பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019.
  46. "Periyar's Movement". Countercurrents.org. சூன் 28, 2003. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2019.
  47. கந்தசாமி. வெண்தாடி வேந்தர் பெரியாரின் பகுத்தறிவு ஆய்வு மற்றும் தீண்டாமை குறித்த பார்வை. p. 104.
  48. 48.0 48.1 48.2 48.3 48.4 பெரியார் பகுத்தறிவாளர் நாள் குறிப்பு
  49. இறையன் அ; முன்னுரை, இதழாளர் பெரியார்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை; முதற்பதிப்பு, 2005; பக்.ix
  50. 50.0 50.1 பகுத்தறிவு வார இதழ், 1934 ஆகஸ்ட் 26, பக்.10
  51. பகுத்தறிவு வார இதழ், 1935 சனவரி 1, பக்.11
  52. Saraswathi, S. (2004) Towards Self-Respect. Institute of South Indian Studies, p. 6.
  53. http://siragu.com/?p=9481
  54. 54.0 54.1 Raghavan, B. S. (9 October 2000). "Thanthai Periyar". The Hindu Business Line இம் மூலத்தில் இருந்து 23 November 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011123031012/http://www.hinduonnet.com/businessline/2000/10/09/stories/040955of.htm. பார்த்த நாள்: 4 January 2015. 
  55. Cho Ramaswamy. "E.V. Ramaswami Naicker and C.N. Annadurai". India Today: 100 people of the millennium இம் மூலத்தில் இருந்து 24 October 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081024183112/http://www.india-today.com/itoday/millennium/100people/durai.html. பார்த்த நாள்: 27 October 2008. 
  56. Sundaram, V. (6 March 2006). "The boy who gives a truer picture of 'Periyar'". News Today இம் மூலத்தில் இருந்து 20 October 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081020232217/http://www.newstodaynet.com/2006sud/06mar/0803ss1.htm. பார்த்த நாள்: 4 January 2015. 
  57. Dasgupta, Shankar (1975). Periyar E. V. Ramaswamy: A Proper Perspective D.G.S. ; [with an Introd. by Avvai. Sambandan]. Vairam Pathippagam. p. 24.
  58. "Periyar's Otherside". thanthaiperiyar.org. Archived from the original on 21 January 2009. பார்க்கப்பட்ட நாள் 21 February 2009.
  59. http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/25421-2013-11-08-10-29-17

மேற்கோள்கள்

மேலும் படிக்க

 
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஈ. வெ. இராமசாமி
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஈ.வெ.ரா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Bandistse, D.D., (2008). Humanist Thought in Contemporary India. B.R. Pub: New Delhi.
  • Biswas, S.K., (1996). Pathos of Marxism in India. Orion Books: New Delhi.
  • Chand, Mool, (1992). Bahujan and their Movement. Bahujan Publication Trust: New Delhi.
  • Dirks, Nicholas B., (2001). Castes of mind : colonialism and the making of modern India. Princeton University Press: Princeton, New Jersey.
  • Geetha, V., (1998). Periyar, Women and an Ethic of Citizenship. Sameeksha Trust: Bombay.
  • Kothandaraman, Ponnusamy, (1995). Tamil Varalarril Tantai Periyar (Tamil). Pumpolil Veliyitu: Chennai.
  • Mani, Braj Ranjan, (2005). Debrahmanising History: Dominance and Resistance in Indian Society. Manohar: New Delhi.
  • Mission Prakashan, (2003). Second Freedom Struggle: Chandapuri’s Call to Overthrow Brahmin Rule. Mission Prakashan Patna: Bihar.
  • Omvedt, Gail, (2006). Dalit Visions. Oscar Publications: New Delhi.
  • Pandian, M.S.S., (2007). Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present. Manohar: New Delhi.
  • Ram, Dadasaheb Kanshi, (2001). How to Revive the Phule-Ambedkar-Periyar Movement in South India. Bahujan Samaj Publications: Bangalore.
  • Ramasami, Periyar, [3rd edition] (1998). Declaration of War on Brahminism. Chennai.
  • Ramasami, Periyar E.V., [ new ed] (1994). Periyana. Chintakara Chavadi: Bangalore.
  • Ramasami, Periyar, [new ed] (1994). Religion and Society:: Selections from Periyar’s Speeches and Writings. Emerald Publishers: Madras.
  • Sen, Amiya P., (2003). Social and Religious Reform: The Hindus of British India. Oxford University Press: New Delhi; New York.
  • Srilata, K., (2006). Other Half of the Coconut: Women Writing Self-Respect History – an anthology of self-respect literature, 1928–1936. Oscar Publications: Delhi.
  • Thirumavalavan, Thol; Meena Kandasamy (2003). Talisman, Extreme Emotions of Dalit Liberation: Extreme emotions of Dalit Liberation. Popular Prakashan: Mumbai.
  • Thirumavalavan, Thol; Meena Kandasamy (2004). Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers. Popular Prakashan.
  • Venugopal, P., (1990). Social Justice and Reservation. Emerald Publishers: Madras.
  • Yadav, Bibhuti, (2002). Dalits in India (A set of 2 Volumes). Anmol Publications. New Delhi.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._வெ._இராமசாமி&oldid=4178749" இலிருந்து மீள்விக்கப்பட்டது