வைக்கம் போராட்டம்

சமூக இயக்கம்

வைக்கம் போராட்டம் அல்லது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பது 1924 - 1932 ஆம் ஆண்டுகளிலான காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டம். வைக்கம் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை அவர்ண சாதியினர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க இப்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்ட வரலாறு

தொகு

கேரளா மாநிலத்தில் வைக்கம் எனும் ஊரில் இருந்த மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது. இந்நிலையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவருமான டி. கே. மாதவன் என்பவர் இப்பிரச்சனைக்காகப் போராட முன் வந்தார். அவர் காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவர்களை ஒன்று திரட்டினார். இதற்காக 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் காலை 6 மணிக்குப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இவர்களது திட்டம் அரசுக்குத் தெரிந்த போது காவல்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்த தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பவில்லை. அவர்கள், இப்போராட்டத்தினால் தங்களுக்குக் கிடைத்து வரும் சில சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்று அச்சம் கொண்டனர். இதனால் இப்போராட்டத்தில் நம்பிக்கையின்றியும் இருந்தார்கள்.

டி. கே. மாதவன் காவல்துறையின் தடையை மீறி ஊர்வலமாகச் சென்று இப்போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்தார். தடையை மீறி நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் சென்றவர்களில் குஞ்ஞப்பி என்கிற புலையர் சாதியைச் சேர்ந்தவர், பாகுலேயன் என்கிற ஈழவர் சாதியைச் சேர்ந்தவர், கோவிந்தப் பணிக்கர் என்கிற நாயர் சாதியைச் சேர்ந்தவர் என மூன்று நபர்கள் காவல்துறையினர் நின்று கொண்டிருந்த இடம் வரை சென்றனர். இந்த மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து 6 மாத காலம் சாதாரணத் தண்டனைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.

கைதானவர்களுக்கு ஆதரவினைத் திரட்டி மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்திற்கு டி. கே. மாதவன், மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து வைக்கம் ஊரின் நிலையை எடுத்துக் கூறி ஒப்புதல் கடிதம் பெற்று ஆதரவு திரட்டினார். அதன் பிறகு டி. கே. மாதவன், கே. பி. கேசவமேனோன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் முன் வந்து காவல்துறையினரின் தடுப்புச் சுவரை மீறிச் சென்றனர். இந்தக் குற்றத்திற்காக இருவரையும் காவல்துறை கைது செய்ததுடன் 6 மாத காலம் கடுங்காவல் தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட டி. கே. மாதவன் ஈழவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கேரள மாநிலத்திலிருந்த ஈழவர் சாதியைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்தில் இறங்கியவர்களுள் முக்கியமானவர் சகோதரர் அய்யப்பன். நியாயமான இப்போராட்டத்திற்கு ஸ்ரீ நாராயண குரு ஆதரவளித்தார். ஸ்ரீ நாராயண குரு தனக்குச் சொந்தமான பேளூர் மடத்தைப் போராட்டக் காரர்கள் தங்குவதற்காக அளித்தார். இந்தப் போராட்டத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாயும் அளித்தார். இந்த மடத்தில்தான் மக்கள் ஒன்று கூடி போராட்டத்திற்குச் சென்றனர். டி. கே. மாதவன் கைது செய்யப்பட்டதும், நியாயமான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீ நாராயண குரு தன் கைப்பட ஒரு கடிதமெழுதி அதை மக்களிடையே பரப்பிடச் செய்தார். ஸ்ரீ நாராயண குரு செய்தி கேரளா முழுவதும் சென்றது. கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்காக, ஸ்ரீ நாராயண குருவின் சன்னியாசி சீடர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று உண்டியல் ஏந்திப் பணம் சேகரித்துப் போராட்டக்காரர்களுக்கு அனுப்பினர். அத்துடன் ஒவ்வொரு வீட்டினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் முன்பு பெண்கள் ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். இப்படி சேகரிக்கப்படும் அரிசி போராட்டக்காரர்களின் உணவுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணம் படைத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் சில வன்முறையாளர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்துத் துன்புறுத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர். படிப்படியாகத் தலைவரக்ள் கைது செய்யப்பட்டவுடன் போராட்டம் தொய்வடையும் நிலையில் ,ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதினர்.[சான்று தேவை] “நீங்கள் இங்கு வந்துதான் இந்தப் போராட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்தால் ஒரு பெரிய காரியம் கெட்டுவிடுமே என்று கவலைப்படுகிறோம்” என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.இந்தக் கடிதத்தின் அடிப்படையில் பெரியார் வைக்கம் விரைந்தார். களத்தில் இறங்கி சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கினார். பெரியார் சூறாவளி போல் சுற்றி வந்து சூடு பறக்கும் சொற்களால் மக்களைத் தீண்டாமைக் கொடுமைக்கெதிராகத் தட்டியெழுப்பினார்.[சான்று தேவை] இப்போராட்டச் செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் முக்கியச் செய்தியாக வெளியானது. எனவே இந்தப் போராட்டம் குறித்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. இதன் பிறகு காங்கிரசு இயக்கத் தலைவர்கள் கேரள மாநிலத்திற்குச் செல்லத் தொடங்கினர். இராஜகோபாலாச்சாரி, டாக்டர் வரதராஜூலு நாயுடு, அய்யாமுத்துக் கவுண்டர், சுவாமி சர்தானந்தி, எம். பெருமாள் நாயுடு ஆகியோர் கேரளாவிற்குச் சென்றனர்.

கேரள மாநிலத்திற்குச் சென்ற காங்கிரசு பேரியக்கத் தலைவர்களில் ஈ.வெ.ரா பெரியாரின் பேச்சு கேரள மக்களை அதிகமாகக் கவர்ந்தது.[சான்று தேவை] இதனால் அங்கிருந்த காவல்துறையினரால் ஈ.வே.ரா பெரியார் 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று கைது செய்யப்பட்டார். அப்போதைய அரசர் உத்தரவின்படி ஒரு மாத கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. இதன்படி அவர் அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து சென்று சத்தியாக்கிரகத்தில் குதித்தனர்.

தண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ.வே.ரா பெரியார் விடுதலையானார். விடுதலையான ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஆறு மாத காலம் தண்டனை அளிக்கப்பட்டு திருவாங்கூர் மத்திய சிறையில் கடினக் காவல் கைதியாகவும் வைக்கப்பட்டார். இந்த தண்டனைக் காலத்தில் நான்கு மாத காலத்தில் அரசர் இறந்து போனார். இதனால் அரச விளம்பரத்தின் அடிப்படையில் ஈ.வே.ரா பெரியார் விடுவிக்கப்பட்டார். விடுதலையான ஈ.வே.ரா பெரியார் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்குத் திரும்பி விட்டார்.

காங்கிரசு பேரியக்கத்தின் இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டும் பிரச்சனை முடிவடையாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. காங்கிரசு பேரியக்கத்திற்கு இந்த அறவழிப் போராட்டம் ஒரு சவாலான போராட்டமாகவே நடந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மகாத்மா காந்தி 1925 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று வைக்கம் போராட்டத்திற்குச் சென்றார்.

அதன் பின்னரும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு தலைவர்களின் போராட்டங்களுக்கும், பேச்சுகளுக்கும் பின்னால் 1925 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. அகிம்சை எனும் அறவழியில் போராடி வெற்றி கண்ட போராட்டம் இதுதான்.

வைக்கம் போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள்

தொகு

ஸ்ரீ நாராயணகுருவின் ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையின் அமைப்புச் செயலாளரும், காங்கிரசு பேரியக்கத்தின் கேரள மாநிலத் தலைவர்களில் ஒருவருமான டி. கே. மாதவன் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் பெருந்தலைவர்கள் பலர் பங்கு பெற்றுள்ளனர். அவர்களில் கீழ்காணும் சிலர் முக்கியமானவர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  • பேராசிரியர் டாக்டர். அம்பேத்கார் பிரியன் எழுதிய “ஸ்ரீ நாராயணகுரு வாழ்க்கை வரலாறு” நூலின் பக்கங்கள் 101 - 110.
  • பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கம்_போராட்டம்&oldid=3819155" இலிருந்து மீள்விக்கப்பட்டது