ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன்

ஊ. பு. அ. சௌந்தரபாண்டியன் (W. P. A. Soundarapandian, டபிள்யூ. பி. ஏ. சவுந்திரபாண்டியன் (செப்டம்பர் 15, 1893பெப்ரவரி 22, 1953) ஒரு தமிழ் தொழிலதிபரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகவும் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளராகவும் திகழ்ந்தார். நாடார் சாதி மக்களின் பெருந்தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர்.

டபிள்யூ.பி.ஏ. செளந்தரபாண்டியன்

பிறப்பு (1893-09-15)செப்டம்பர் 15, 1893
பட்டிவீரன்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்புபெப்ரவரி 22, 1953(1953-02-22) (அகவை 59)
சென்னை, இந்தியா
குடியுரிமைஇந்தியா
இனம்தமிழர்
துறைஅரசியல்

1920 களிலும் 30களிலும் நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான செளந்திரபாண்டியன், 1920ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு நீதிக்கட்சித் தலைவர் பி. டி. ராஜனின் பரிந்துரையால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். நீதிக்கட்சியில் பெரியார் ஈ. வே. ராமசாமியின் தீவிர ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார். நாடார் சமூகத்தில் சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பவும், சுயமரியாதைத் திருமணங்களைப் பிரபலப் படுத்தவும் உறுதுணையாக இருந்தார். 1937-40ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு நிதியுதவி செய்தார். 1930களின் பிற்பகுதியில் தொடங்கிய காமராஜரின் வளர்ச்சி, நாடார்களிடையே செளந்திரபாண்டியனின் செல்வாக்கைக் குறைத்து விட்டது. 1940களில் காமராஜர் நாடார்களின் முன்னணித் தலைவராக ஆகிவிட்டார். சென்னை தி. நகரின் பாண்டி பசார் இவரது நினைவாகப் பெயரிடபட்டதே ஆகும்.

பிறப்பும் குடும்பமும்

தொகு

ஊத்தாம்பட்டி புன்னைவன நாடார் அய்யநாடார் சோமசுந்தர சொக்கலிங்க வடிவுள்ள சற்குண செளந்திர பாண்டியன் என்னும் டபிள்யூ.பி.ஏ. செளந்தரபாண்டியன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் (தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்) நிலக்கோட்டை வட்டம் பட்டிவீரன்பட்டியில் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் ஊ.பு.அ.அய்யநாடார், சின்னம்மாள் இணையர்களுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு பெரியநாயகி என்னும் தமக்கையும் இராசலட்சுமி, இராசேசுவரி என்னும் தங்கையரும் இரெங்கசாமி என்னும் தம்பியும் இருந்தனர்.

இன்றைய விருதுநகர் மாவட்டம் (அன்றைய இராமநாதபுரம் மாவட்டம்) ஊத்தாம்பட்டியை சொந்த ஊராகக்கொண்ட செளந்தரபாண்டியனின் முன்னோர்கள் விருதுநகருக்கும் பட்டிவீரன்பட்டிக்கும் இடையே பொதிமாடுகளைக்கொண்டு மளிகைப்பொருள்கள், மலைவிளைபொருள்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவருடைய முப்பாட்டனார் புன்னைவன நாடார் பட்டிவீரன்பட்டியில் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியதும் அவ்வூரே அவர்களுடைய சொந்த ஊராக மாறியது.

கல்வி

தொகு

செளந்திரபாண்டியன் தொடக்கக் கல்வியை தன்னுடைய வீட்டில் வந்து தங்கியிருந்து கற்றுக்கொடுத்த மதுரை சின்னசாமி நாயுடுவிடம் பெற்றார். பின்னர் மதுரையில் உள்ள ஐக்கிய கிறித்துவ உயர்நிலைப் பள்ளியிலும் (Union Christian High School, Madurai) விருதுநகர் சத்திரிய வித்தியாலாவிலும் பயின்று தன்னுடைய பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். இக்காலத்தில் பள்ளியின் கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்தார்.

சென்னை கிறித்துவ கல்லூரியில் (Madras Christian College) கலை இணையர் (Fellow of Arts) கல்வியைப் பெறச் சேர்ந்தார். பின்னர் குடும்பப் பொறுப்பின் காரணமாக அக்கல்வியை இடையிலேயே கைவிட்டார்.

குடும்பம்

தொகு

செளந்திரபாண்டியன் தன்னுடைய 20ஆவது அகவை நிரம்பிய பின்னர் 1913ஆம் ஆண்டில் விருதுநகரில் பிறந்த பாலம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு தீனதயாளான், விஜயாம்பிகை, இராசசேகரன் என்ற போசு, பாசுகரன், கிருட்டிணமூர்த்தி என்னும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். இவர்களுள் இராசசேகரன் கோடைக்கானல் ஏரியில் ஏற்பட்ட விபத்தில் இளவயதிலேயே மரணமடைந்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

1916ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை செளந்திரபாண்டியன் தொடங்கினார். 1926ஆம் ஆண்டில் ஈ.வே.ரா.பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவ்வியக்கம் செங்கல்பட்டு நகரில் 1929ஆம் ஆண்டில் கூட்டிய முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

1920ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மாண்டேகு-சேம்சுஃபோர்டு சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் உருவான சென்னை மாகாண சட்டமேலவையில் 1920 ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செளந்திரபாண்டியன் உறுப்பினராக (Member of Legislative Assembly) இருந்தார். 1927ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டு வரை சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் கொறடாவாக செளந்திரபாண்டியன் இருந்தார்.

1928 ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டு வரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத்தின் (Ramanathapuram District Board) தலைவராக இருந்தார். 1943 ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்ட ஆட்சிக் கழகத்தின் (Madurai District Board) தலைவராக இருந்தார்.

1942ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபொழுது இந்தியாவிற்கு வருகை தந்த சர். கிரிப்சு குழுவினைச் சந்திக்க நீதிக்கட்சியின் சார்பில் சென்றா குழுவில் செளந்திரபாண்டியன் இடம்பெற்றார்.

சமூகப்பணி

தொகு

அந்நாளில் சமுதாய ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்த தான் பிறந்த நாடார் சமூகத்தினரின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு பணிகளில் செளந்திரபாண்டியன் ஈடுபட்டார். நாடார் மகாசன சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அச்சங்கத்தின் சார்பில் 1920ஆம் ஆண்டில் நாடார் அச்சகம் தொடங்கத் தூண்டுகோலாக இருந்தார். 1921ஆம் ஆண்டில் நாடார் வங்கியைத் தொடங்க பெருமுயற்சி எடுத்தார். அவ்வங்கியே இன்றைய தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆகும்.

தொழில் முனைவு

தொகு

மரபார்ந்த வணிகக் குடும்பத்தில் பிறந்த செளந்திரபாண்டியன், தன்னுடைய காலத்திற்கு ஏற்ற தொழில்களைத் தொடங்கி நடத்துவதில் முனைந்தார். 1933ஆம் ஆண்டில் இந்தியன் சர்க்கார் லைப் இன்சூரன்சு கம்பெனி (Indian Circar Insurance Company) என்னும் நிறுமத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராக இருந்தார். அந்நிறுமத்தின் ஐந்து இயக்குநர்களில்[1] ஒருவராகவும் திகழ்ந்தார். பின்னர் இந்நிறுமம் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தோடு (Life Insurance Corporation of India) இணைக்கப்பட்டது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு மதர் இந்தியா லைப் இன்சூரன்சு கம்பெனி (Mother Indian Insurance Company) என்னும் மற்றொரு நிறுமத்தைத் தொடங்கி நடத்தினார்.

பட்டிவீரன்பட்டியில் திராட்சைச்சாறு வடிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கும் முயற்சியில் இறங்கி, அதனை தன் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க கைவிட்டார்.

1947ஆம் ஆண்டில் சர் பி.டி.ராசனோடு இணைந்து மதுரை, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மதுரை சக்கரை ஆலை(Madurai Sugar Factory)யைத் தொடங்கினார். எனவே அந்த ஆலையை ஒட்டி உருவான புதிய ஊருக்கு செளந்திரபாண்டியன், பி.டி.இராசன் ஆகிய இருவரின் பெயரையும் இணைத்து பாண்டியராஜபுரம் என கி. ஆ. பெ. விசுவநாதம் பெயர் சூட்டினார். அந்த ஆலையை உருவாக்குவதற்காக அவ்விடத்திலேயே செளந்திர பாண்டியன் 1947ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை குடியிருந்தார்.

வேளாண்மை

தொகு

பட்டிவீரன்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலத்தில் நன்செய், புன்செய், தோட்ட, பணப்பயிர் வேளாண்மைகளை செளந்திரபாண்டியன் மேற்கொண்டிருந்தார். மேலும் மைசூர் மாநிலத்தில் இருந்த “அசோகா பண்ணை” என்னும் பண்ணையில் 1943ஆம் ஆண்டு தொடங்கி சில ஆண்டுகாலம் வேளாண்மை செய்தார். இப்பண்ணைகளில் புதிய புதிய வேளாண்மை உத்திகளைப் பயன்படுத்தி வேளாண்மை ஆய்விலும் பண்ணை மேலாண்மையிலும் ஈடுபட்டிருந்தார். அதன் காரணமாக

  1. மதுரை மாவட்ட கரும்பு விவசாயப் போட்டியில் ஐநூறு ரூபாய் பரிசை வென்றார்.
  2. கறம்பு நிலத்தில் கரும்பைப் பயிரிட்டதற்காக அரசின் பாராட்டுப் பதக்கம் பெற்றார்.[2]
  3. 1951ஆம் ஆண்டில் சிறந்த நெல் வேளாண்மைக்கான பரிசு.
  4. 1953ஆம் ஆண்டில் சிறந்த நிலக்கடலை வேளாண்மைக்கான பரிசு.

வேளாண்மையின் நன்மைக்காக 1943ஆம் ஆண்டில் தென்னிந்திய ஏல விவசாயிகள் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக 1943ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டில் தனது மரணம் வரை பதவி வகித்தார். 1941ஆம் ஆண்டில் காஃபி வாரியத்தின் (Coffee Board) உறுப்பினராக இருந்தார்.

கூட்டுறவு இயக்கம்

தொகு

நாடு விடுதலை அடைந்த பின்னர் எழுச்சி பெற்ற கூட்டுறவு இயக்கத்தில் செளந்திர பாண்டியன் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் விளைவாக பின்வரும் அமைப்புகளை உருவாக்கி, அவற்றில் தலைவர், இயக்குநர் பதவிகளை வகித்தார்:

  1. பட்டிவீரன்பட்டி காஃபி பதனிடும் கூட்டுறவுத் தொழிற்சாலை
  2. பட்டிவீரன்பட்டி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம்
  3. பட்டிவீரன்பட்டி கூட்டுறவு பண்டகசாலை

இறப்பு

தொகு

சென்னையில் 15.1.1953ஆம் நாள் முதன்முறையாக மாரடைப்பிற்கு ஆளான செளந்திரபாண்டியன், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 22.2.1953 ஆம் நாள் இரண்டாவது மாரடைப்பால் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார். அவருடைய உடல் பட்டிவீரன்பட்டிக்கு எடுத்துவரப்பட்டு அவருடைய பண்ணையில் அடக்கம் செய்யப்பட்டது.

சான்றடைவு

தொகு
  1. சர் கே.வி.ரெட்டி, சர் ஆர்.கே.சண்முகம் செட்டி, சர் ஏ.பி.பத்ரோ, பொப்பிலி அரசர், ஊ.பு.அ.செளந்திரபாண்டியன்
  2. பேராசிரியர் அ.கேசவமூர்த்தி எழுதிய சோமசுந்தரச் சொக்கலிங்க வடிவுள்ள சற்குண செளந்திர பாண்டியன்; நாடார் மகாசன சங்கம், மதுரை; இ.பதிப்பு 1977; பக்.39
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊ._பு._அ._சௌந்திரபாண்டியன்&oldid=3110622" இலிருந்து மீள்விக்கப்பட்டது