நாடார்

தென்னிந்திய சமூகம்

நாடார் (Nadar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழுகின்றனர். மேலும், மதுரை, தேனி, சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர்.[சான்று தேவை] நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்களாக உள்ளனர். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது.[சான்று தேவை] இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும், அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி, லிங்காயத் சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவர்கள் ஆவர். திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.

நாடார்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கன்னியாகுமரி, கொல்லம், மதுரை, திருவனந்தபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, விருதுநகர்
மொழி(கள்)
தமிழ், மலையாளம்
சமயங்கள்
இந்து, கிறிஸ்தவம், அய்யாவழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்

வரலாறு

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள்[சான்று தேவை], தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று என்றும், அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அவர்கள் கருதினர். பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது.

இச்சமுதாயத்தினரைக் குறிக்கும் சாணார், நாடார் போன்ற சொற்கள் சான்றார், சான்றோர், நாடாள்வார் ஆகிய சொற்களில் இருந்து மருவியவை போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதற்குரிய நம்பகமான ஆதாரங்களோ ஆவணங்களோ இல்லை.[1] கால்டுவெல் குறிப்பிட்டது போல் நாடார்கள் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் அல்ல என்றும், பதனீர் இறக்குபவர்கள் மட்டுமன்றி அவர்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும் இருந்தனர்[சான்று தேவை].

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.[1][2]

ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாக தொழிற்பேட்டைகளை அமைத்து நாடார்கள் வணிகம் செய்துவந்தனர். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நாடார்களின் கூட்டு முயற்சியால் உருவான ஒன்றாகும். சங்க அமைப்புகள் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள், சிறு தொழிற் வளாகங்கள், தங்குமிடங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் மற்றும் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் என சமுதாய வளர்ச்சிப் பணிகளை நாடார் இயக்கங்கள் செய்து வருகின்றன. இவர்கள் வெளிநாடுகளான இலங்கை, இலண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சங்கம் அமைத்திருக்கின்றனர்.

முந்தைய திருவிதாங்கூர் வரலாறு

திருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை நம்பூதரி மட்டும் தங்க ஆபரணம் அணியலாம். நாடார், நாயர், ஈழவர் போன்ற பிற சமூக மக்கள் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் கருணையால் நாடார், ஈழவர் முதலிய சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.[3]

பெயர் மாற்றம்

நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது.[சான்று தேவை] ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் நாடார் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Channar) என்று குறிக்கப்பட்டுள்ளனர்.[சான்று தேவை] சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும், சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர்.[4] நாடார் சாதியில் பின்வரும் ஜந்து உட்பிரிவுகள் உள்ளன:

  1. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர்,
  2. முக்கந்தர் அல்லது முக்கந்த நாடார்,
  3. சிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள்,
  4. மேனாட்டார், கள்ளச் சாணார், ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர்.[5]
  5. மூப்பன், மூப்பர் (தலைமைக்காரன் என்ற பட்டங்களுக்குரிய நாடார்)

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74 இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது.[6]

தொழில்கள்

 
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரங்கநாதன் தெருவில் உள்ள பெரும்பாலான கடைகள் நாடார்களுக்குச் சொந்தமானவை

நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும், வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் இடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது. பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

திருவிதாங்கூர் நாடார் வரலாறு

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.[சான்று தேவை] நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த அரசினால் சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் இருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப் பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.[சான்று தேவை] முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதிக் கொடுமை இருந்தது.[சான்று தேவை] உதாரணமாக, “ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர். கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850ம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேறி நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் வாழும் ஈழவர் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுகத்தினரும் ஆவர்.[7]

திருவிதாங்கூர் நாடார் போராட்ட வரலாறு

பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார், நாயர், ஈழவர், பரதவர், முக்குவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தோளுக்கு மேல் குறுக்காகச் சேலை அணிய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிரான போராட்டமே தோள்சீலைப் போராட்டம் எனப்பட்டது.[8] நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உரிமை இருந்தது. இவர்கள் நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் பனையேறி நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்தனர். நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்திற்கு நிலக்கிழார் நாடார்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815–1829) "பனையேறி நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார்கள் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, பனையேறி நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, சூலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார்.[7][9]

சமுதாயத்தினர் இன்றைய நிலை

இன்று தமிழ்நாட்டில் பொருளாதார வசதியுடையவர்களாக இச்சமூகத்தினர் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் இவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இச்சாதியினரில் பலர் தமிழக அமைச்சரவையிலும், இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். தமிழக அமைச்சரவையில் இந்து அறநிலைத் துறை அமைச்சராக சண்முகநாதன், வனத்துறை அமைச்சராக பச்சைமால், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக செல்லபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் முக்கிய தலைவர் ஆவார். இச்சமூகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலங்காணா ஆளுநராக உள்ளார்.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Hardgrave 1969, ப. 80–90
  2. Richard G. Fox (Jan 1970). "Avatars of Indian Research". Comparative Studies in Society and History 12 (1): 70. doi:10.1017/s0010417500005624. https://archive.org/details/sim_comparative-studies-in-society-and-history_1970-01_12_1/page/70. 
  3. ப.சிவனடி. இந்திய சரித்திரக் களஞ்சியம் 12ம் பாகம் 1811-1820. siddharthan books. pp. 62&63.
  4. எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு -அ. கணேசன், ஜூனியர் விகடன் 22-10-2006 இதழில் "விஜயகாந்தின் கள்ளுக்கடை புரட்சி" கட்டுரையிலிருந்து
  5. 1750ஆம் வருடத்திய குலசேகரபட்டினம் கல்வெட்டு, Annual Report on Epigraphy – 271/1941.
  6. "பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்".
  7. 7.0 7.1 Robert Hardgrave (1969). The Nadars of Tamil Nadu. University of California Press. pp. 55–70.
  8. "எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு".
  9. நான் தமிழன் - குமுதம் வாரஇதழ் 07.01.09 தொடர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடார்&oldid=4113707" இலிருந்து மீள்விக்கப்பட்டது