மலையாளம்

திராவிட மொழி
(மலையாள மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலையாளம் (Malayalam மலையாளம்: മലയാളം, "மலயாளம்") தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். தமிழினை மூல மொழியாக கொண்டு தோன்றிய மலையாளம், நாளடைவில் தனி மொழியாக உருப்பெற்றது. சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.

மலையாளம்
മലയാളം (மலயாளம்)
நாடு(கள்)இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்
பிராந்தியம்கேரளம், புதுச்சேரி, மைய்யழி, ஐக்கிய இராச்சியம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
35,757,100[1].
35,351,000 இந்தியாவில்
37,000[2] மலேசியாவில்
10,000 சிங்கப்பூரில்  (date missing)
திராவிடம்
  • தென் திராவிடம்
    • தமிழ்-கன்னடம்
      • தமிழ்-கொடகு
        • தமிழ்-மலையாளம்
          • மலையாளம்
மலையாள எழுத்துக்கள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
இந்தியா
  • கேரளம்,
  • புதுச்சேரி (மாஹே)
  • மொழிக் குறியீடுகள்
    ISO 639-1ml
    ISO 639-2mal
    ISO 639-3mal

    மொழியின் பழமொழி

    தொகு
    • ஒரு மலையாளி மலையாளம் கற்றுக் கொள்கிறானோ இல்லையோ மந்திரம் கற்றுக் கொள்ள வேண்டும் அவன் தான் உண்மையான மலையாளி என்ற மலையாளிகளின் பழமையான பழமொழி உள்ளது.
    • அதாவது மலையாளம் என்பதே வடவர்களால் அதாவது இன்றைய வட இந்தியாவில் இருந்து வந்த வடநாட்டவர்களான பிராமணர்களின் ஒரு பிரிவினரான (நம்போதிரிகள்) வடமொழியால் உருவாக்கப்பட்ட ஒரு மந்திர மொழி என்று கூறப்படுகிறது.
    • இந்த வடவர்களால் உருவாக்கப்பட்ட நகரமே கேரளாவில் வடவனூர் என்ற பெயரில் ஒரு பெரிய நகரம் உள்ளது.

    தோற்றம்

    தொகு

    தமிழ், தோடா, கன்னடம் மற்றும் துளுவுடன் இணைந்து மலையாளம் தென் திராவிட துணைக்குடும்பத்தை சார்ந்தது ஆகும். தமிழுடன் மிகுந்த ஒற்றுமையுடைய மொழி மலையாளம். மலையாளம் ஆதித் தமிழ்-மலையாளம் என்ற கூட்டுமொழியிலிருந்து நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளில் வேறுபடத் துவங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழிலிருந்து மிக வேறுபட்டு மலையாளம் ஒரு தனி மொழியாக உருப்பெற்றது. ஆட்சி மொழியாகவும் அவை மொழியாகவும் இருந்த தமிழின் பெருந்தாக்கம் மலையாளத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் நம்பூதிரிகளின் வரவால், வடமொழி ஆதிக்கம் நிலவியது. அரேபியர்களுடான வணிகம், போர்த்துகீசியர் வரவு ஆகியவற்றால் ரொமானிய மற்றும் செமிட்டிக் மொழியின் தாக்கத்தையும் மலையாளத்தில் உணரலாம்

    பழங்காலத்தில் கேரளம் என்பது சேர நாடாகத் தமிழக இலக்கியங்களில் அறியப்படுகிறது.

    சொற்பொருளாக்கம்

    தொகு

    மலையாளம் என்ற சொல்லுக்கு 'மலை மற்றும் கடல் சார்ந்த பகுதி' என்று பொருள் ஆகும். அதாவது மலை + ஆளம் (கடல்) என்பதே மலையாளமாக ஆனது என சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். முதலில் இந்த சொல் மலைகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை குறிக்க பயன்பட்டு பின்னர் அந்த நிலப்பகுதியில் பேசப்பட்ட மொழிக்கும் பெயராயிற்று என்று கருதப்படுகிறது.

    மொழி வரலாறு

    தொகு

    மலையாள மொழி தமிழும் வடமொழியும் சேர்ந்து தோன்றிய மொழி. இதை நிராகரிப்பதற்காக இரண்டு விதமான வாதஙகள் வைக்கப்பட்டன. ஒன்று மலையாளம் மலைநாட்டுத்தமிழில் இருந்து தோன்றியது இன்னொன்று பழந்திராவிடமொழியிலிருந்து தமிழுடன் ஒத்த மொழியாக உருவாகியது.

     
    மலையாள ழகரம்

    மலையாள மொழியைக் குறித்து முதல் முதலில் ஆய்வு செய்தவர் அறிஞர் கால்டுவெல் அவர்கள். இவரைப் பொறுத்த வரையில் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். புருடபேத நிராசம், சமசுகிருத பாகுல்யம் முதலியவற்றால் தமிழிலிருந்து மலையாளம் தமிழிலிருந்து வேறுபட்டு நிற்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து ஏ.ஆர்.ராசராசவர்மாவும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்தது தமிழே. தமிழ் செந்தமிழ், கொடுந்தமிழ் என இரண்டு வகையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பலவகை கொடுந்தமிழ்களில் ஒன்றுதான் மலையாளமாக உருமாறியது. மலைநாட்டில் வழங்கி வந்த கொடுந்தமிழே சமசுகிருதத்தின் தாக்கத்தினால் தனி மொழியாக ஆனது என்பது ராசராசவர்மாவின் கருத்தாகும்.

     
    மலையாளத்தில் பொது அறிவித்தல் பலகை

    ஆனால் வி.கே.பரமேசுவரன் அவர்களின் கருத்துப்படி தமிழும் மலையாளமும் தனித்த மொழிகளாகும். கேரளத்தில் ஏற்பட்ட சோழ, பாண்டிய நாடுகளின் ஆதிக்கத்தால் மலையாளம் தமிழால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அரசு சாசனங்களிலும், ஆட்சிமொழியாகவும், உயர்குடி மக்களின் மொழியாகவும் செந்தமிழே வழங்கிவந்தது. ஆனால் இந்தத் தாக்கம் அரசர்களிடம் மட்டுமே இருந்தது. மக்களிடம் மலையாளமே வழங்கி வந்ததாகவும் இவர் கருதுகின்றார். எனவே பிரதான திராவிட மொழியான தமிழுக்கு மலையாளத்துக்கு உள்ள பந்தம் மிகவும் முக்கியமானது ஆகும்.

    ஆட்சியாளர்களின் மொழியாக ஒரு காலத்தில் கேரளத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் தாக்கம் மலையாளம் காண்பதில் வியப்பொன்றும் இல்லை. பிராமண குடியேற்றங்களினால் இந்தோ-ஆரிய மொழிகளின் தாக்கமும், அரபு மொழியின் தாக்கமும், ஐரோப்பிய தேசங்களின் ஆக்கிரமப்பினால் ஐரோப்பிய மொழிகளின் தாக்கமும் மலையாளத்தில் சில மற்றங்களை ஏற்படுத்தியுள்ளன

    மலையாளம் என்ற சொல் ஒரு காலத்தில் நாட்டின் பெயரை மட்டும் குறித்தது. எனவே மலையாள நாட்டில் பேசப்பட்டு வந்த மொழியாகையால் மலையாளம் என்பது மொழியின் பெயராக ஆகியிருக்கலாம். என்றாலும் இம்மொழி மலையாண்ம என்ற பெயராலேயே அறியப்பட்டு வந்தது. நாட்டின் பெயர் மொழியின் பெயர் ஆனவுடன், பழைய மலையாள மொழியின் பெயரை குறிக்க சிலர் மலையாண்ம என்ற சொல்லை பயன்படுத்தினர்.

    மொழியியல் வல்லுனர்கள் கருத்து பின்வருமாறு. மலையாளம் தமிழிலிருந்தே பிறந்ததாகும். எல்லா மொழிகளையும் போல் தமிழுக்கும் வட்டார வழக்குகள் உள்ளது. இது ஒரு விதமான கொடுந்தமிழிலிருந்து தான் பின்னர் மலைநாட்டின் மொழியான மலையாளம் உருவம் பெற்றது. இவ்விதமான மாற்றம் நிகழ்ந்ததற்கு பின்வருபவன காரணமாகத் திகழ்ந்தன:

    • மலைநாட்டையும் தமிழ்நாட்டையும் புவியியல் ரீதியாக மலை வேறுபடுத்தியது;
    • வட்டார ஆசாரங்களும் வாழ்க்கைமுறையும்;
    • நம்பூதிரிகளின் ஆரிய பண்பாடு.

    மலையாள மொழியின் வரலாற்றில் நிலையான பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களில் முதன்மையானது நம்பூதிரிமார்களின் சமஸ்கிருத பிரச்சாரமாகும். மேற்குடி சமூக-அரச சம்பவங்கள் இந்த ஒரு மாற்றத்தின் தாக்கத்தை கூட்டுவதாக இருந்தது. பாண்டிய சோழ சேர அரசர்களின் அதிகாரம் தென்னிந்தியாவில் குறைந்ததும், மலையாள நாட்டில் பெருமக்கன்மாரின் ஆட்சி ஏற்பட்டதும் தமிழக மக்களுடான வணிக உறவுகளில் குறைவுகள் ஏற்பட்டன. கிழக்கே இருந்த மலையும் தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்குமான தூரத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இந்த காரணங்களினால் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாயின. மேலும் மருமக்கன்தாயம், முன்குடுமி, உடை வேறுபாடுகள் போன்றவை பண்பாட்டு வேறுபாடுகளும் தமிழகமக்களையும் மலையாள மக்களையும் வேறுபடுத்தி பிரித்தது.

    பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டுகளில் கேரள கிராமங்களில் பிராமண சமூகங்கள் குடியேறத் துவங்கின. தங்களுடைய உடைகளையும் சில ஆசார அனுட்டானங்களையும் திராவிட மக்களுக்க்காகப் புறக்கணித்ததினால் அவர்களுக்கு மலைநாட்டில் ஒரு நீங்காத இடம் கிடைக்குமாறு செய்தது. பிராமணர்களிடமிருந்தும் சமஸ்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் கொடுந்தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து ஒன்று சேர்ந்து மலையாண்ம என்ற மொழியாக உருவம் பெற்றது.

    நெடுங்கணக்கு

    தொகு

    மலையாள நெடுங்கணக்கில் வடமொழி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களோடு தமிழ் ஒலிகளான எ, ஒ, ற, ள, ழ ஆகியவையும் மலையாள நெடுங்கணக்கில் உள்ளன. மேலும் னகரம் முற்காலத்தில் இருந்தது, ஆனால் ந, னகரத்துக்கான வேறுபாடுகள் மறைந்ததால், னகரம் மறைந்து விட்டது.

    உயிரெழுத்துக்கள்
    குறில்
    நெடில்
    மெய்யெழுத்துக்கள்
    க வர்கம்
    ச வர்கம்
    ட வர்கம்
    த வர்கம்
    ப வர்கம்
    மத்தியமம்
    ஊட்டுமாவ் (ഊഷ്മാവ്)
    கோட்டி (ഘോഷി)
    திராவிட மத்தியமம்

    உயிரெழுத்துக்கள் சேர்க்கப்படக்கூடாத சில்லெழுத்துக்கள். இவை அனைத்தும் ஒற்றெழுத்துக்களாக கருதப்படவேண்டும்

    சில்லுகள்
    சில்லுகள்‍ ര്‍ ല്‍ ള്‍ ണ്‍ ന്‍

    மலையாள எழுத்துக்கள்

    தொகு
     
    வடமொழி சமசுகிருத சுலோகம் கிரந்த எழுத்துகளில்

    திராவிட மொழிகளின் வரி வடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும். இந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், சமசுகிருதம் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுத்து முறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுதப்பட்டது.

    சமசுகிருததில் பிராசரத்தினால் சமசுகிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமசுகிருத ஒலிகளை குறிக்க வட்டெழுத்து போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமசுகிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. மணிப்பிரவாள இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினையே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளை தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதை மலையாள எழுத்துமுறையினை நிறுவினார்.

    இலக்கணம்

    தொகு

    மூல மொழியில் வரலாற்றுரீதியாக, வந்துசெல்லும் உள்ளார்ந்த வேறுபாடுகளை கொண்டு மட்டுமே ஒரு மொழியினைத் தனித்த, சுதந்திர மொழியாகக் கொள்ளல் ஆகாது. எனினும், இவ்விதமான மாற்றங்கள் அந்த மொழியின் தோற்றத்திலும், இலக்கணத்திலும் ஏற்படுத்தும் நிரந்தர மாற்றங்களே மூல மொழியிலிருந்து அதை ஒரு சுதந்திரமான தனித்த மொழியாக உருமாற்றி அடையாளப்படுத்துகிறது. மலையாள வையாகரணனும் கேரளபாணினி என்றழைக்கப்படும் ஏ. ஆர். ரவி வர்ம்மாவின் கருத்துப்படி தமிழ் மொழியில் இருந்து மலையாளம் இவ்விதமாக வேறுபடுகிறது. அவையாவன:

    • அனுனாசிகாதிப்ரசரம் (അനുനാസികാതിപ്രസരം)

    அதாவது, மெல்லினத்தை ஒட்டி வரும் இன எழுத்துக்கள், மெல்லினமாகவே மாறுதல்.

    எடுத்துக்காட்டுகள்
    தமிழ் மலையாளம்
    நீங்கள் നിങ്ങള്‍(நிங்ஙள்)
    நெஞ்சு നെഞ്ഞ്(நெஞ்ஞு)
    • அவர்க்கோபமர்த்தம் அல்லது தாலவ்யாதேசம் (തവര്‍ഗ്ഗോപമര്‍ദ്ദം അഥവാ താലവ്യാദേശം)
    • சுவரசம்வரணம் (സ്വരസംവരണം)
    • புருடபேதனிராசம் (പുരുഷഭേദനിരാസം)
    • கிலோபசங்கிராகம் (ഖിലോപസംഗ്രഹം)
    • அங்கபங்கம் (അംഗഭംഗം)

    இலக்கியம்

    தொகு

    பழங்கால இலக்கியம்

    தொகு

    மலையாள இலக்கியத்தின் ஆரம்ப காலம் நாடோடி பாடல்கள், தமிழ் - சமசுகிருத மொழிகளுடன் துவங்கியது. . மலையாளத்தில் கிடைத்திருக்கும் மிகப்பழைய கல்வெட்டு சேரப்பெருமக்கன்மார்காளில் ராசசேகரன் பெருமாளின் காலத்தியதாகும். பொ.ஊ. 830இல் எழுதப்பட்டதாக இந்த வாழப்பள்ளி கல்வெட்டு கருதப்படுகிறது. கிரந்த எழுத்துக்களில் உள்ள இந்த கல்வெட்டு, சேரப்பெருமக்கன்மார்களுடைய வம்சாவளியும் நிலவிவரங்களும் (കാര്‍ഷികവിവരങ്ങളും) பதிவாகப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்த மலையாள இலக்கியத்தை இவ்விதமாக பிரிக்கலாம்.

    1. தமிழ் மரபை ஒட்டிய பாட்டு இலக்கியங்கள்.
    2. வடமொழி மரபை ஒட்டிய மணிப்பிரவாள இலக்கியங்கள்.
    3. மலையளத்திலுள்ள தூது காவியங்கள் (സന്ദേശകാവ്യങ്ങള്‍), சம்பூக்கள் (ചമ്പൂക്കള്‍) மற்றும் இதர படைப்புகள்.

    பாட்டிலக்கியத்தில் பழமையானது சீராமன் எழுதிய ராமசரிதம் (രാമചരിതം) ஆகும். பெயரில் குறிப்பிட்டது போல் இது ராமனின் கதையாகும். இதில் யுத்தகாண்டத்தின் சம்பங்களே பிரதானமாகவும் விவரமாகவும் கூறப்பட்டுள்ளது. வடமொழி காவிய முறையில் இருந்து விலகி உள்ளூர் முறையில் எழுத்தப்பட்ட காவிய என்ற நிலையில் ராமசரிதம் சிறந்த படைப்பாகும். லீலாதிலகத்திலும் மற்றும் அதைச்சார்ந்த பாட்டு காவியங்களையும் படித்தால் ஒரு தமிழ் படைப்பென்று பொது மக்களுக்கு தோன்றும். தமிழ் கலப்பில் இருந்து விலகி முற்றிலும் மலையாள மரபில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அது கண்ணசராமயணத்தில் காணலாம்.

    அதிதே வனிலமிழ்ந்த மனகாம்புடய சீரமானன்பினோடியற்றின தமிழ்கவி வல்லோர்
    - என தமிழ் கலப்போடு உள்ளது ராமசரிதம்

    நரபாலகர் சிலரிதின் விறச்சார் நலமுடெ சானகி சந்தோசிச்சாள் அரவாதிகள் பயமீடுமிடி த்வனியால் மயிலானந்திப்பதுபோலே -
    என தெளிவான மலையளத்தில் உள்ளது கண்ணசராமாயணம்‍

    ராமசரிதம் எழுதப்பட்ட 12ஆம் நூற்றிண்டிலேயே வைகாசிகதந்திரம் என்ற மணிப்பிரவாள நூல் எழுதப்பட்டது. பொது மணிப்பிரவாளப் படைப்புகள் சமசுகிருத விபக்திபிரயோகங்களும் (വിഭക്തിപ്രയോഗങ്ങളും) தமிழ்ச் சொற்களும் மற்றும் பழைய மலையாளச் சொற்களும் சேர்ந்தவையாக இருந்தன. சமசுகிருதத்தின் கூடுதல் தாக்கமுடைய சுகுமாரகவின் சிரீகிருட்டிவிலாசமும், சங்கராச்சாரியருடைய தோத்திர மரபில் இயற்றப்பட்ட நூல்களும் இதே காலகட்டத்தில் பிரபலமாக இருந்தன. வில்வங்கள சுவாமியாரின் சமசுகிருத தோத்திரங்களும் மணிப்பிரவாளத்தில் வசுதேவத்தவம் போலுள்ள படைப்புகளும் 12ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவையாகும்.

    கேரள காவிய மரபு தெரிந்தது செறுச்சேரின் கிருட்டிணகாதையில் ஆகும். தமிழிலிருந்தும் சமசுகிருதத்திலிருந்தும் கலப்பதில் இருந்து இது அகன்று நின்றது. நாடோடிப் பாடல்களும் தெளிவான மலையாள மொழியும் சேர்ந்த கிருட்டிணகாதை மலையாள கவிதைகளுக்கு ஒரு புதிய பிறவி நல்கியது. தற்கால மலையாள கவிகளான வள்ளத்தோள், வைலோபிள்ளி, பாலாமணியம்ம போன்றவர்களுடைய கவிதைகளில் கிருட்டிணகாதையின் தாக்கத்தை காணலாம்.

    தனித்த மலையாள மரபு என்ற நிலையில் மலையாள இலக்கியத்தில் தூதுகாவியங்களும் சம்பூக்களும் இவ்வகையில் சேரும்.

    தற்கால இலக்கியம்

    தொகு

    தற்கால இலக்கியக்கூறுகளை ஈர்த்துக்கொள்வதின் மூலம் மலையாள இலக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆங்கிலேயரின் காலத்தில், மற்ற ஐரோப்பிய மொழிகளைக் குறித்த அறிவு, அப்போதைய படைப்புகள் முதலியவற்றின் தாக்கம் மலையாள இலக்கியத்தில் சில நவீன சிந்தனைகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அகராதிகள், இலக்கண நூல்கள், பத்திரிக்கைகள் முதலியவை இந்த வளர்ச்சிக்கு உதவின. ஆங்கிலேயர் காலத்துக் கல்விமுறைகள் மூலம் பெறப்பட்ட அறிவியல், சர்வதேசக் கருத்துகள் ஆகியவை மலையாள இலக்கியத்தின் கதியை நிர்ணயித்தது.

    உரைநடை இலக்கியமே தற்கால மலையாள இலக்கியத்தின் முகாந்திரமாக இருந்தது. திருவிதாங்கூர் மகாராசாவின் ஆயில்யம் திருநாள் அன்று ராமவர்ம்மாவின் பாட்சாசாகுந்தளம் (ഭാഷാശാകുന്തളം) என்ற காளிதாசரின் நூலுக்கான உரை வெளியிடப்பட்டது. சில காலத்திலேயே மலையாள இலக்கியம் உரைநடையை நோக்கி வழிமாறச்செய்தது இந்தச்செயல். பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பதென்பது ராமவர்மாவின் காலம் முதல் இன்று வரை தொடர்கிறது.

    எர்மன் குண்டர்ட் என்ற ஜெர்மன் பாதிரியாரின் மிகுந்த உழைப்பினால் மலையாளத்தின் முதல் அகராதியும் இலக்கண நூலும் இயற்றப்பட்டன. இந்த நூல்களை ஆதாரமாக கொண்டுதான் 19ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற நூல்கள் எழுந்தன. பி.கோவிந்தவிள்ளாவின் பாட்சாசரித்ரம் (ഭാഷാചരിത്രം) பிரசித்தி பெற்றதும் 19ஆம் நூற்றாண்டில் தான். கேரளவர்மாவின் தாய்மாமன் ஏ.ஆர்.ராசராசவர்மாவின் படைப்புகள் காதல் கதைகளுக்கும் (റൊമാന്‍റിസം) பிற உயர்தரமான (നിയോ-ക്ലാസിക്) இலக்கியத்துக்கும் வித்திட்டன.

    வட்டார வழக்குகள்

    தொகு

    கேரள பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிப்பிரிவு நடத்திய ஆய்வில், 12 வட்டார வழக்குகள் மலையாளத்துக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொக்கன் (திருவிதாங்கூர்), மத்திய கேரளம் (கோட்டயம்), திரிச்சூர், மலபார் ஆகிய நான்கு வழக்குகள் முதன்மையாக வழக்குகளாகும். இவற்றுள் கோட்டயம் வழக்கின் தாக்கம் எழுத்து மொழியில் அதிகமாக உள்ளது. இதற்கு அச்சுப்பதிப்பு கோட்டயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முதலில் தோன்றியதே காரணமாகும்.

    பிற மொழிகள் ஏற்பு

    தொகு

    மலையாள மொழி மிகவும் அதிக அளவில் ஏற்றுக்கொண்டது தமிழ் மற்றும் வடமொழியே ஆகும். இதற்கு திராவிட பின்புலமும், பிராமண தாக்கமுமே காரணம் ஆகும். உலகின் பிற மொழிகளின் கூறுகளையும் மலையாள மொழியில் காணலாம். ஆதி காலம் தொட்டே, கேரளத்தின் வணிக உறவினால் இது நிகழ்ந்துள்ளது. இந்தி, உருது, ஐரோப்பிய மொழிகள், சீனம் ஆகியவற்றின் பல கூறுகளையும் மலையாளம் நல்கியுள்ளது.

    மலையாள யூனிகோடு

    தொகு

    மலையாள யூனிகோடு U+0D00 முதல் U+0D7F வரை

    0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
    D00  
    D10  
    D20  
    D30   ി
    D40  
    D50
    D60
    D70   ൿ

    துணுக்குச் செய்திகள்

    தொகு

    ஆங்கிலத்தில் மலையாளம் என்பது இருவழி ஒக்கும் சொல் (Palindrome) ஆகும். Malayalam என்பதை முன்னிருந்து பின்னாக படித்தாலும், பின்னிருந்து முன்னாக படித்தாக ஒரே சொல் வருவதை கவனிக்க.

    இவற்றையும் காண்க

    தொகு
    கேரளப்
    பண்பாடு
     

    மொழி
    இலக்கியம்
    நடனம்
    இசை
    நாடகம்
    ஓவியம்
    சினிமா
    உணவு
    உடை
    கட்டிடக்கலை
    சிற்பம்
    விளையாட்டு
    பாதுகாப்பு கலை

    மேற்கோள்கள்

    தொகு
    1. "Malayalam". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 200Ok7-05-28. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    2. "Languages of Malaysia". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 2007-05-28.
    • கேரளபாணினீயம் - ஏ. ஆர். ராஜாவர்ம்மா
    • கேரள சரித்தரம் - ராகவ வாரியர், ராஜன் குருக்கள்


    வெளி இணைப்புகள்

    தொகு
     
    Wikipedia
    கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மலையாளம்ப் பதிப்பு
    "https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாளம்&oldid=3906952" இலிருந்து மீள்விக்கப்பட்டது