இல்லத்துப் பிள்ளைமார்

(இல்லத்துப்பிள்ளைமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியாவில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அதிகமாகவும் மற்ற மாவட்டங்களில் குறைவாகவும் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஈழவர், இல்லத்தார், பணிக்கர் என பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகவும், படைவீரர்களாகவும், களரி பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். சிலர் துணித்தயாரிப்பு, கள்ளிறக்கம் மற்றும் மது வணிகம் ஆகிய தொழில்களில் உள்ளனர்.ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது.[1] [2] [3] [4] சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு [5] [6] உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.இவர்களில் சிலர் களரி பயட்டு விளையாட்டில் சிறந்து விளங்கினர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஏனாதி நாயனார் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இல்லத்துப் பிள்ளைமார்
(ஈழவர்)
மொத்த மக்கள்தொகை
10 இலட்சம்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து சமயம் (96%), கிறித்துவ சமயம் (4%)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஈழவர், பில்லவா,

இந்த சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் தந்தை வழி உறவுத் துவக்கத்தில் மாறுபட்டு தாய் வழி உறவுத் துவக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தச் சமுதாயத்தினரில் ஒரு பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித்தோன்றலாகவே கருதப்படுகிறது. இந்த சமுதாயத்தில் மூட்டு இல்லம், பளிங்கில்லம், தோரணத்தில்லம், சோழிய இல்லம், மஞ்சநாட்டு இல்லம் எனும் ஐந்து இல்லங்கள் வழியிலான உட்பிரிவுகள் உள்ளது. இந்தப்பிரிவுகளை மையமாகக் கொண்டே உறவுமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்ணிற்கு சமனுரிமை கோரிப் போராடி வரும் இன்றைய நிலையில் துவக்கத்திலேயே முன்னுரிமை கொடுத்த முதல் சமுதாயம் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

இல்லம் எனும் உட்பிரிவுகள்

இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தில் மூட்டு இல்லம், மஞ்சநாட்டு இல்லம், பளிங்கு இல்லம், சோழிய இல்லம், தோரணத்து இல்லம் என ஐந்து இல்லங்கள் உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மூட்டில்லம்

சிவருத்திரரின் முதல் மனைவியான பாணபண்டிதரின் மகளான கண்டிகை தேவி இந்தக் குடும்பத்திற்கு ஆதி மூட்டானவள் என்பதாலும், முதலில் இல்லற இன்ப மூட்டியவள். துணி மூட்டும் தொழில் செய்யும் வகுப்பைச் சேர்ந்தவள் மற்றும் வீணை மீட்டும் வீட்டிலிருந்து வந்தவள் ( மீட்டுதல் மூட்டுதல் என மருவியது) என்ற உட்கருத்துக்களுக்கேற்ப அவளை மூட்டு இல்லத்தாள் என்று அழைத்து , அவள் குழந்தைகள் "மூட்டில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சிவருத்திரருக்கு கண்டிகைதேவி முதல் மனைவியானதால் அவளை முதலில் பெருமைப் படுத்துவது போல மூட்டில்லத்தவருக்கு எவ்விடத்திலும் முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

மஞ்சநாட்டில்லம்

சிவருத்திரரின் இரண்டாவது மனைவியான மஞ்சளை உபயோகித்து மளிகை வியாபாரம் செய்து வந்த தத்த செட்டியாரின் மகளான உமையாள், மஞ்சகுப்ப நாட்டில் பிறந்தவள், மஞ்சள் வியாபாரம் செய்து வந்தவரின் மகள், மேகங்கள் (மஞ்சு) வந்து தூங்கும் அளவிலான உயர்ந்த மாளிகையில் வளர்ந்தவள், மெத்தை (மஞ்சம்) விரித்த வீடுகளில் வசித்தவள் என்ற கருத்துகளுக்கேற்ப அவளை மஞ்சநாட்டில்லத்தாள் என அழைத்து இனி அவள் குழந்தைகள் "மஞ்ச நாட்டில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

பளிங்கில்லம்

சிவருத்திரரின் மூன்றாவது மனைவியான நள்ளி வேந்தர் குமாரியான தத்தை, அரண்மனைப் பெண், பளிங்கு மாளிகையில் வசித்தவள் என்று பொருள் விளங்க பளிங்கில்லத்தாள் என்று அழைத்தார். அவள் குழந்தைகள் "பளிங்கில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

சோழிய இல்லம்

சிவருத்திரரின் நான்காவது மனைவியான வேளாண்மைத் தொழில் செய்து வந்த அபிராமி அங்கசன் மகளான மதி, சோழி எனும் மண்வெட்டி முதலிய உழவுச் சாதனங்கள் உடைய வீட்டில் பிறந்தவள், பன்னாங்குழி எனும் சோழியாடியவள், சோழிய வகுப்பினள் எனும் பல கருத்துக்கள் வர சோழியில்லத்தாள் என்று கூறினார். அவள் குழந்தைகள் "சோழிய இல்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

தோரணத்தில்லம்

சிவருத்திரரின் ஐந்தாவது மனைவியான மித்திரசேனையின் சுயம்வரம் மண்டபம் முழுவதும் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதை மனதில் கொண்டும் சுயம்வரத்தின் போது மணமாலைத் தோரணம் கையில் கொண்டு வந்ததையும், அம்மான் (தாய்மாமன்) மகள் என்கிற தோரணையிலும் தோரணத்தில்லத்தாள் என்று அழைத்தார். அவள் குழந்தைகள் "தோரணத்தில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார் -என்று சிவருத்திர புராணம் தெரிவிக்கிறது.

திருமண உறவு முறை

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி வரும் இன்றைய நிலையில், துவக்கத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து குடிவழியை தாயின் வழிக்குக் கொண்டு வந்த ஒரு சில சமுதாயத்தில் இந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயமும் ஒன்று. இதன் மூலம் இச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் அந்தப் பெண்ணின் வழிமுறையிலேயே அழைக்கப்படுகின்றனர். அதாவது அந்தப் பெண்ணின் இல்லம் வழியே குழந்தைகளுக்கும் இல்லமாக இருக்கிறது. இந்த இல்லங்களை அடிப்படையாகக் கொண்டு திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து சிவருத்திர புராணம் இப்படி கூறுகிறது,

"சிவருத்திரர் தனது மக்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர் ஏற்கனவே முடிவு செய்தபடி ஒரு இல்லத்து ஆணுக்கும் மற்றொரு இல்லத்துப் பெண்ணுக்குமாக திருமணம் செய்து கொள்ளும் புதிய வழிமுறையை உருவாக்கினர். இதன்படி, முதல் மனைவி மகனான மூட்டில்லத்தைச் சேர்ந்த தருமகூத்தனுக்கு நான்காவது மனைவி மகளான சோழிய இல்லத்துப் பெண்ணான மந்திரையையும், இரண்டாவது மனைவி மகனான மஞ்சநாட்டில்லத்தைச் சேர்ந்த தருமனுக்கு முதல் மனைவி மகளான மூட்டில்லத்தைச் சேர்ந்த காந்திமதியையும் , மூன்றாவது மனைவியின் மகனான பளிங்கில்லக் கலுழனுக்கு இரண்டாவது மனைவியின் மகளான மஞ்சநாட்டில்லத்தைச் சேர்ந்த மந்திரையையும் , நான்காவது மனைவியின் மகனான சோழிய இல்ல இலவனுக்கு மூன்றாவது மனைவியின் மகளான பளிங்கில்ல சுதையையும் திருமணம் செய்து வைத்தார். தோரணத்தில்ல மனைவியின் மகன் புரந்திர சிங்கருக்கு மூட்டில்லக் காந்திமதியின் மகள் சந்திராவையும், பளங்கில்லச் சுதையின் மகள் பூசனையை தோரணத்தில்லக் காரணச்சாமிக்கும், தோரணத்தில்ல மதியம்மையை சோழிய இல்ல இலவனுக்கு இரண்டாம் மனைவியாகவும் மணம் முடித்து வைத்தார்.

இப்படி திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்தத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தாய் எந்த இல்லத்தைச் சேர்ந்தவரோ அதையே இல்லமாகக் கொள்ள வேண்டும். ஒரு இல்லத்தைச் சேர்ந்தவர் அந்த இல்லத்தைத் தவிர பிற இல்லங்களில் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு புதிய திருமண உறவு முறையை வகுத்தார்."[7] இந்தத் திருமண உறவுமுறை தமிழகத்திலிருக்கும் மற்ற சாதியினர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்திக்காட்டுகிறது. தமிழகத்தில் பெரும்பான்மையான சாதியினரில் ஒரு ஆண் தனது அக்காள் மகளை மணமுடித்துக் கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. ஆனால் இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தில் அக்காள் மகள் இல்லம் எனும் அடிப்படையில் ஒரே இல்லமாக அமைந்து விடுவதால் தாய்மாமனை மணந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது போல் திருநெல்வேலி பகுதியில் உள்ள மறவர் சாதிகளிலும் தாய்மாமனை மணந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாயத்தினர் நிலை

பொதுவான நிலை

 • இந்தியாவில் தமிழக அரசால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினராக அறிவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கல்வி மற்றும் பொருளாதார நிலை

 • இவர்கள் கல்வி, பொருளாதார நிலையில் மேம்பட்ட நிலையில் இருக்கின்றனர். இதுவரை நடந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் மற்றும் அரசு பதவிகளில் இந்த சமுதாயத்தினர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தத்தில் சமூக, பொருளாதார நிலைகளில் நல்ல நிலையில் உள்ளனர். இந்த சமூகத்தினர் (தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அரசியல் பங்களிப்புகள்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம்

உள்ளாட்சி அமைப்புகள்

கட்சிப் பொறுப்புகள்

செப்புப் பட்டயம்

1564 ஆம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த இராணி மங்கம்மாள் இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தவர்களைப் பாராட்டும் வழியாக செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அந்த செப்புப் பட்டயத்தில் இருக்கும் தகவல்:

முதலில் அக்கால நடைமுறைப்படி, ராணியின் பராக்கிரமங்களையும், மதுரையம்பதியின் சிறப்பையும் கூறி, அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதரையும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியக் கடவுளையும் போற்றுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரையில் வாழும் ஐந்தில்ல முறைப் பணிக்கமார் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் அன்னதானம் உண்டு பண்ணுவதற்கு மதுரையில் வாழும் ஐந்தில்ல முறையார் முதல் தெற்கே கோட்டாறு, நாஞ்சில் நாட்டுக்கு வடக்கே, மலையாளத்திற்கு கிழக்கே, வடக்கே வேங்கட மலை வரையும், தஞ்சாவூர் உள்ளிட்ட சூரிய கிரகணம் படும் பூமியில் வாழ்ந்து வரும் ஐந்தில்லப் பணிக்கமார் அனைவரும் சேர்ந்து, மதுரையில் கூடி சேர்த்த பொது நிதியைக் கொண்டு சத்திரம் கட்டி, அன்னதானமும், விளக்கு நைவேத்தியமும் உண்டு பண்ணினார்கள் என்றும் கூறி, இவர்களது இந்த சேவை சூரிய சந்திரர்கள் உள்ளவரை தொடரும் என வாழ்த்தி, இவர்களுக்கு யாராவது இடைஞ்சல் செய்தால் காராம்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செப்புப் பட்டயம் பொதுமக்கள் பார்வைக்காக மதுரை அருங்காட்சியகம் வழியாக மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் வைக்கப்பட்டுள்ளது.

சமுதாயச் சிறப்புகள்

இல்லத்துப் பிள்ளைமார் கல்வி நிறுவனங்கள்

இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் இச்சமுதாயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நிறுவனர்களின் நிர்வாகங்களிலுள்ள சில கல்வி நிறுவங்கள்

அமைப்புகளின் நிர்வாகங்கள்

தனிப்பட்ட நிறுவனர் நிர்வாகங்கள்

தமிழ்நாடு இல்லத்துப்பிள்ளைமார் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரைச் சேர்ந்த வி.பி.எம்.சங்கர் என்பவரின் தலைமையிலான வி.பி.எம்.எம். கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள்:

 • வி.பி.எம்.எம். மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன் கோயில்
 • வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன் கோயில்.
 • வி.பி.எம்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி, கிருஷ்ணன் கோயில்.
 • வி.பி.எம்.எம். மகளிர் ஆசிரியப் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணன் கோயில்.
 • வி.பி.எம்.எம். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணன் கோயில்.

கேரள ஈழவர்கள்

 • தமிழ்நாட்டின் அருகிலுள்ள கேரளாவில் இருக்கும் ஈழவர்கள் இந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்துடன் தொடர்புடையவர்கள். கேரளாவின் அனைத்துப் பகுதி ஈழவர்களிடமும், தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார்களிடையே உள்ள இல்லம் எனும் உட்பிரிவுகள் இல்லை. குறிப்பாக கேரளாவின் தென் மாவட்டங்களில் வசித்து வரும் ஈழவர்களிடையே இருக்கும் இல்லம் எனும் உட்பிரிவுகளும் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார்களிடையே இருக்கும் இல்லம் எனும் உட்பிரிவுகளும் ஒன்றாக இருக்கிறது. இவர்கள் மொழியால் மட்டுமே வேறுபட்டு இருக்கிறார்கள். ஆனால் இல்லத்துப் பிள்ளைமார்களுக்கும் ஈழவர்களுக்கும் திருமண உறவு இல்லை.
 • ஈழம் என்ற சொல்லுக்குத் தமிழில் பனை என்ற பொருள் உண்டு. ஈழவர் என்று கேரளாவிலே சொல்லப்படுகின்ற சாதியார் ஈழத்திலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். அதுபோல நெல்லை மாவட்டத்தினுடைய எல்லையோரத்திலே வாழ்கிற இல்லத்துப்பிள்ளைமார் என்று சொல்லப்படக்கூடிய சாதிகள் ஈழப்பிள்ளைமார் என்றுதான் சொல்வார்கள். அவர்களும் அங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும்.[8]
 • கேரளாவில் அனைத்து சமுதாய மக்களின் உரிமைகளுக்குமாக போராடிய சமூகச் சீர்திருத்தவாதியான ஈழவர் சமுதாயத்தில் பிறந்த ஸ்ரீ நாராயணகுருவின் படம் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினர் வீடுகளில் இடம் பெற்றிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

 1. "Religion and Social Conflict in South Asia, Page 31,32". Bardwell L. Smith. BRILL Publishers (1976). பார்த்த நாள் 2008-07-29-04
 2. "Customs, law, family system in 19th Century Malaba" (PDF). Praveena Kodoth. CDS Publishers (1997). பார்த்த நாள் 2008-07-29-04.
 3. "Nambutiris: Notes on Some of the People of Malabar". F. Fawcett, Fawsett Fred, Florence. Asian EducationalServices (2001). பார்த்த நாள் 2008-07-29-04.
 4. "Malabar Manual". William Logan. Asian Educational Services (1996). பார்த்த நாள் 2008-07-29-04.
 5. A. Aiyappan, Social Revolution in a Kerala Village: A Study in Culture Change. (Asia Publishing House, 1965), Page 85
 6. Social Revolution in a Kerala Village: A Study in Culture Change.Page 85. Asia Publishing House, 1965. பார்த்த நாள்: 2007-12-28.
 7. வரகவி மு.கணபதியா பிள்ளை இயற்றிய சிவருத்திரர் கலிவெண்பா - முதற்பதிப்பு - 1949
 8. கால்டுவெல் என்ற மனிதர் - தொ. பரமசிவன் நேர்காணல்: முனைவர் ஆ.தனஞ்செயன்


இதையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்லத்துப்_பிள்ளைமார்&oldid=3954039" இலிருந்து மீள்விக்கப்பட்டது