தைப்பூசம்
தைப்பூசம் (Thaipusam) என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.[1][2] தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தான் முருகப்பெருமான் ஞானபழத்திற்கு ஏமாந்து தற்போதைய தமிழகத்தில் உள்ள பழநி மலையில் பண்டார கோலத்தில் தஞ்சமடைந்த நாளாக கடைப்பிடிக்கபடுகிறது. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.[3] இது கேரளாவில் தைப்பூயம் (തൈപൂയം) என்று அழைக்கப்படுகிறது.[4]
தைப்பூசம் | |
---|---|
தைப்பூச திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி | |
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
முக்கியத்துவம் | முருகனின் பிறந்தநாள் |
அனுசரிப்புகள் | தமிழர், மலையாளிகள், இலங்கைத் தமிழர், மலேசியத் தமிழர், சிங்கப்பூர் தமிழர், மற்றும் இந்தோனேசியத் தமிழர் |
நாள் | தமிழ்நாட்காட்டியின் படி |
2023 இல் நாள் | சனவரி 21 (திங்கள்) |
2024 இல் நாள் | சனவரி 25 (வியாழன்) |
தைப்பூசத்தின் வரலாறு
தொகு- தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தில் முருகப்பெருமான் தனக்கு கிடைக்க வேண்டிய ஞானப்பழம் கிடைக்காமல் கோபித்துக் கொண்டு கயிலாயத்தில் இருந்து தனது பெற்றோர்களான சிவன்–பார்வதி–விநாயகர் ஆகியோர் மீது வெறுப்புற்று பண்டார கோலத்தில் பழநி மலையில் முருகப்பெருமான் குடியேறிய நாளே தை பூசம் திருவிழாவாக தமிழகத்தில் பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.
- மேலும் இவ்வழி பக்தி மார்க்கத்தை ஏற்று சிவன், முருகன் சார்ந்த சைவ திருக்கோயில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
- பின்னர் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகளுள்ளன.
- குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
- ஆனால் பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன.
- குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[5][6][7]
சிறப்புகள்
தொகு- முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
- சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
- சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
- தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
- வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.[8]
தைப்பூச விரத முறை
தொகு- தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.
இந்தியாவில் தைப்பூசம்
தொகுபழனி
தொகுபழனி (திருவாவினன்குடி - சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
- அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
- சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
- தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
- பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
- பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
- மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
- மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
திருச்செந்தூர்
தொகுகடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதையாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர். பெரும்பாலோனோர் மாட்டு வண்டி அல்லது டெம்போ வண்டி பிடித்து பாடல் கட்டி கூட்டம் கூட்டமாக நடந்து வருகிறனர். வண்டியை மின் விளக்குகளால் அலங்கரித்து முருகப்பெருமானை மலர்களால் அலங்கரித்து வண்டியிலேற்றி வண்டி முன் செல்ல விரதமிருந்தவர்கள் பின்னால் நடந்து வருகின்றனர்.ஆடலும் பாடலுமாய் திருச்செந்தூர் நோக்கி விரைகின்றனர்.
கீழ்க்காணும் காவடிகள் இங்கே சிறப்பு வாய்ந்தவை:
- மயில் காவடி - மயிலிறகை வைத்து செய்வது
- சந்தன காவடி - உடம்பு முழுவதும் சந்தனம் பூசி வருதல்
- சர்ப காவடி - நல்ல பாம்பை இறைவனுக்கு அர்பணிப்பது
- சேவற் காவடி - சேவலை இறைவனுக்கு அர்பணிப்பது
- அன்னக் காவடி - இறைவனுக்கு சோறு படைத்தல்
- வேல் காவடி - இறைவனுக்கு வேல் கொடுத்தல்
- பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
- வாள் காவடி - இறைவனுக்கு வாள் பரிசளித்தல்
- விளக்கு காவடி - விளக்கு ஏந்தி வருதல்
வடலூர்
தொகுகடலூர் மாவட்டம், வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று சத்தியஞான சபையில் அதிகாலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள், காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும். வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழா முதன்மையானது. வடலூரில் ஆண்டுதோறும் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் வாழும் சமரச சுத்த சன்மார்க்க பக்தர்கள் வடலூருக்கு பல லட்சக்கணக்கான பேர் வந்து தரிசனம் செய்கின்றார்கள்.
இந்தியாவுக்கு வெளியில் தைப்பூசம்
தொகுஈழம்
தொகுதைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.
மலேசியா
தொகுபத்துமலை முருகன் கோவில்
தொகுமலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.
பினாங்கு தைப்பூசம்
தொகுமலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்
தொகுமலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .
சிங்கப்பூர்
தொகுசிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
மொரீஷியஸ்
தொகுசுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.
இரேயூனியன் ரீயூனியன்
தொகுகாவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.
தென்னாப்பிரிக்கா
தொகுதைப்பூசத் திருவிழா காவடி விழா டர்பன் (கிளேர்வுட் ஸ்ரீ சிவா சூப்ரமோனியர் கோயில்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரங்களில் கொண்டாடப்படுகிறது.
பிஜி
தொகுபிஜியில், நாடி என்னுமிடத்தில் அமைந்துள்ள உள்ள ஸ்ரீ சிவா சுப்ரமண்ய சுவாமி கோவிலில் தைபுசம் விழா கொண்டாடப்படுகிறது.
ஆஸ்திரேலியா (விக்டோரியா)
தொகுஇலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். பிரசாதம் மற்றும் அன்னதானம் என்று எல்லாம் உண்டு.
தமிழ்நாட்டில் அரசு விடுமுறை
தொகு2021 ஆம் ஆண்டு, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தைப்பூச தினத்தினை, அரசு பொது விடுமுறையாக அறிவித்தார்.[9] கேரளா மற்றும் பாண்டிச்சேரியிலும் தைப்பூச நாளில் அரசு பொது விடுமுறை.
மேற்கோள்கள்
தொகு- ↑ காமராஜ், மு ஹரி. "புண்ணியம் தரும் பூசம்... அறிந்துகொள்ள வேண்டிய தைப்பூசத் திருவிழாவின் மகத்துவங்கள்!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
- ↑ "Thaipusam viratham 2022 | தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?". News18 Tamil. 2022-01-16. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
- ↑ "Thaipooyam Mahotsavam, Harippad, Festivals, Alappuzha festivals". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
- ↑ "സുബ്രഹ്മണ്യന് ഏറെ പ്രിയങ്കരം തൈപൂയം; ഇങ്ങനെ ആചരിച്ചോളൂ!". KVARTHA: MALAYALAM NEWS | KERALA NEWS | KERALA VARTHA | ENTERTAINMENT ചുറ്റുവട്ടം മലയാളം വാര്ത്തകൾ. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
- ↑ தமிழகத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா: வரலாற்று ஆய்வாளர் தகவல், இந்து தமிழ் (நாளிதழ்), 2021 சனவரி, 24
- ↑ "உலகெங்கும் தைப் பூசம்". www.dinakaran.com. Archived from the original on 2022-05-27. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
- ↑ "தைப்பூசத்தின் வரலாறு!". Seithipunal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
- ↑ "தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்". www.dinakaran.com. Archived from the original on 2022-07-12. பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
- ↑ "தைப்பூசம் அரசு விடுமுறையாக அறிவிப்பு". Dinamalar. 2021-01-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-05.
வெளி இணைப்புகள்
தொகு- தைப்பூசத் திருநாள் செந்தமிழ்.org[தொடர்பிழந்த இணைப்பு]
- பழனியில் தைப்பூசம்
- தைப்பூசம் (பிபிசி)
- மலேசியாவில் தைப்பூசத் திருநாள் பரணிடப்பட்டது 2006-12-30 at the வந்தவழி இயந்திரம்
- சிங்கப்பூரில் தைப்பூசவிழா
- வடலூர் தைப்பூச திருவிழா