ஈப்போ (ஆங்கிலம்: Ipoh; மலாய்: Ipoh; சீனம்: 怡保; ஜாவி: إڤوه); மலேசியா, பேராக் மாநிலத்தின் தலைநகரம்; கிந்தா ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும். 'மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம்' என்று போற்றப்படும் இந்த நகரம், கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து வடக்கே 180 கி.மீ; பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரத்தில் இருந்து தெற்கே 123 கி.மீ; தொலைவில் அமைந்துள்ளது.

ஈப்போ
Ipoh
பேராக்
Jalan Tun Sambanthan
Ipoh railway station
Old Town Hall
St. Michael's Institution
லிட்டில் இந்தியா, ஈப்போ
மேலிருந்து... இடமிருந்து வலமாக:
ஈப்போ பழைய நகருக்குள் துன் சம்பந்தன் சாலை, ஈப்போ தொடருந்து நிலையம், மாநகர் மன்ற கட்டடம், செயிண்ட் மைக்கல் உயர்நிலைப்பள்ளி, லிட்டில் இந்தியா, ஈப்போ

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்):
கோடீசுவரர்களின் நகரம்
போகன்விலா நகரம் [1]
ஈப்போ is located in மலேசியா
ஈப்போ
      ஈப்போ;       மலேசியா
ஆள்கூறுகள்: 04°35′50″N 101°04′30″E / 4.59722°N 101.07500°E / 4.59722; 101.07500
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்கிந்தா மாவட்டம்
நிறுவல்1880
நகராண்மைக் கழகத் தகுதி31 மே 1962
மாநகரக் கழகத் தகுதி27 மே 1988
அரசு
 • நகர முதல்வர்ருமாசி பகரின்
(Rumaizi Baharin)
பரப்பளவு
 • நகரம்643 km2 (248 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • நகரம்8,40,000
 • அடர்த்தி1,023/km2 (2,650/sq mi)
 • பெருநகர்
10,22,240
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
30xxx, 31xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+05
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்A
இணையதளம்http://www.mbi.gov.my

2021-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஈப்போவின் மக்கள் தொகை 1,022,240. அந்த வகையில், அதிக மக்கள் தொகை கொண்ட மலேசிய மாநகரங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது.[2]

ஈப்போ நகரத்தைச் சீன மொழியில் பாலோ (Paloh) என்று அழைக்கிறார்கள். 'பாலோ' என்றால் ஈயத்தைத் தோண்டி எடுக்கப் பயன்படுத்தப்படும் ’எக்கி’ என்று பொருள். ”கோடீஸ்வரர்களின் சொர்க்க பூமி” எனும் அடைமொழியும் இந்த நகரத்திற்கு உண்டு.[3] இங்கே உணவுப் பொருட்களின் விலையும் குறைவு. மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கும் இடம் என்று பெருமையாகச் சொல்லப் படுவதும் உண்டு.

சொற்பிறப்பியல்

தொகு

19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் ஈப்போ பெரும் வணிகத் தளமாகப் புகழ் பெற்று விளங்கியது என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ’இப்போ’ (Eppo) எனும் சொல் மலேசியப் பூர்வீகச் சொல் ஆகும். இப்போ எனும் சொல் மறுவி ஈப்போ என்று இப்போது அழைக்கப் படுகிறது.[4]

வரலாறு

தொகு

19-ஆம் நூற்றாண்டில் ஈப்போவில் வெள்ளீயம் பெரும் அளவில் தோண்டி எடுக்கப்பட்டது.[5] சீனாவில் இருந்து இலட்சக் கணக்கான சீனர்கள் ஈப்போவில் குடியேறினர். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் வாணிகம் செய்ய வந்தனர். குஜராத்தியர்கள் கம்பளம், பட்டுத் துணிகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை வியாபாரம் செய்ய ஈப்போவிற்கு வந்தனர்.[6]

பர்மியர்கள் வைரம், மாணிக்கக் கற்களை விற்க வந்தனர். தாய்லாந்து மக்கள் பட்டுத் துணிகளை எடுத்து வந்தனர். அதன் காரணமாக மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற நகரமாக ஈப்போ விளங்கியது. ஒரு கட்டத்தில் மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும்; ஆங்கிலேயர்களின் தலையாய நிர்வாகத் தலமாகவும் இருந்தது. [7]

கோப்பேங் நகரம்

தொகு

1820-ஆம் ஆண்டில் கிந்தா ஆற்றுக் கரையோரம் அமைந்திருந்த ஈப்போ ஒரு சிறிய கிராமமாக இருந்தது. அப்போது அது புகழ் பெற்று இருக்கவில்லை. ஈப்போவிற்குத் தெற்கே 20 கி.மீ. தொலைவில் கோப்பேங் எனும் ஒரு நகரம் இருந்தது. அந்த நகரம்தான் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக விளங்கியது.[8]

ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. இப்போது இந்தக் கோப்பேங் நகரம் மக்கள் நடமாட்டம் குறைந்து அமைதியாக இருக்கிறது. ஆனால், ஈப்போ தலைநகரமாக மாறி விட்டது.[9]

ஈப்போவைப் புகழ் பெறச் செய்தவர்களில் முக்கியமானவர் சர் பிராங்க் சுவெட்டன்காம் (Sir Frank Swettenham). இவர் மேற்கு மலேசியாவில் பெரிய மாற்றங்களைச் செய்தவர். மலேசியாவில் பல சாலைகளுக்கு இவருடைய பெயர் வைக்கப் பட்டுள்ளது. இவர்தான் ஈப்போவிற்கு ஒரு புதுப் பொலிவை வழங்கியவர் ஆகும்.

ஆங்கிலேய நிறுவனங்கள்

தொகு
 
1906-இல் ஈப்போ தொடருந்து நிலையம்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல பிரித்தானிய நிறுவனங்கள் ஈப்போவில் வியாபார மையங்களைத் தொடங்கின. அதனால் ஈப்போ நகரம் புகழ் பெறத் தொடங்கியது. 1902-ஆம் ஆண்டு இந்தியாவின் 'சார்ட்டர்ட் வங்கி', 'ஆத்திரேலியா-சீனா' நிறுவனம் போன்ற பிரபலமான வங்கிகள் ஈப்போவில் தங்கள் அலுவலகங்களைத் தொடங்கின.

அதற்கு அடுத்து ஈஸ்டர்ன் ஸ்மெல்ட்டிங் கம்பனி தனது அலுவலகத்தைத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் போட்லி அன் கோ.; ஏ.எச். விட்டேக்கர் அன் கோ.; சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் எவட் அன் கோ.; Estate Visiting Agents Milne & Stevens போன்ற பங்கு வர்த்தக நிறுவனங்களும் செயல்படத் தொடங்கின.

உலக மக்களின் பார்வை

தொகு

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் இருந்த கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை அங்கே திரும்பியது.

ஆயிரக் கணக்கான மக்கள் செல்வந்தர்களாகும் நோக்கத்தில் அங்கு குவியத் தொடங்கினர். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, பலர் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். ஈப்போ நகரமும் வளப்பம் அடைந்தது.

ஈப்போ நியூ டவுன்

தொகு

1920-ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. செல்வந்தர்களான சீனர்கள் சிலர் ஈப்போ நகரை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டினர். அவர்களில் ஒருவர்தான் 'யாவ்-தெட்-சின்' (Yau Tet Shin) எனும் செல்வந்தர் ஆவார். இவர் நியூ டவுன் எனும் புதிய ஈப்போ நகரைத் தோற்றுவித்தார். ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது.

இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக் காரைக்குடியில் இருந்து பல தமிழர்கள் ஈப்போவிற்கு வந்தனர். அவர்கள் சீனர்களின் ஈய வாணிகத்திற்குப் பல வகைகளில் பண உதவிகள் செய்தனர். அதன் மூலம் அவர்கள் வட்டி வசூல் செய்தனர். பின் நாளில் இவர்கள் தான் நகரத்தார்கள் அல்லது செட்டியார்கள் என்று அழைக்கப்பட்டனர். உள்நாட்டு வங்கிகளுக்குப் பண உதவி செய்யும் அளவிற்கு இவர்கள் செல்வாக்குப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈப்போ நகரத்தார்

தொகு

நகரத்தார் எனும் சமூகத்தவர் ஈப்போவில் வாழ்ந்தனர். பெரும் பணக்காரர்கள் என்று ஆங்கிலேயர்களே போற்றும் அளவுக்கு அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கின் பணச்சுழற்சியே இவர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது.

ஈப்போ நகரத்தார்கள் பற்றி ஒரு தனி வரலாறே இருக்கின்றது. இப்போது ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படும் லகாட் சாலை, இரும்புச் சாமான்கள் விற்கப்படும் ஜாலான் பெண்டகாரா, புருவ்ஸ்டர் சாலை போன்றவை நகரத்தார்களின் ஆதிக்கத்தில் இருந்தவை. செட்டித் தெரு என்று ஒரு தனிச் சாலையே இருந்தது.

ஜப்பானியர் படையெடுப்பு

தொகு
 
1942-ஆம் ஆண்டு மலாயாவில் ஜப்பானியர்களின் படையெடுப்பு.

1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி ஜப்பானியர்கள் ஈப்போவின் மீது படை எடுத்தனர். ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாக ஈப்போ அறிவிக்கப்பட்டது.[10] அதற்கு முன்னர் தைப்பிங் எனும் நகரம் தான் பேராக் மாநிலத்தின் தலைப் பட்டணமாக இருந்தது.

ஈப்போவில் ஜப்பானியர்

தொகு

1942-ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் தங்களின் பேராக் சு செயிச்சோ (Perak Shu Seicho) எனும் ஜப்பானிய நிர்வாகத்தை ஈப்போவில் நிறுவினர். ஈப்போ ஜப்பானியர்களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.[11]

அப்போது அதன் தலைமை அலுவலகம் செயிண்ட் மைக்கல் பள்ளியில் (St. Michael's Institution) இருந்தது. இந்தப் பள்ளியில் தான் ஜப்பானியர்கள் பல கொடுமைகளைச் செய்தனர். பல நூறு பேர் கொல்லப்பட்டதாகவும் அறியப் படுகிறது.

புவியியல்

தொகு

இட விளக்கவியல்

தொகு

ஈப்போ நகரம், மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் மாநகரில் இருந்து 200 கி.மீ. வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடையலாம். ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது.

ஈப்போ நகரத்தைக் கிந்தா ஆறு இரு பெரும் பிரிவுளாகப் பிரிக்கின்றது. இந்தக் கிந்தா ஆற்றுடன் சுங்கை பிஞ்சி, சுங்கை பாரி எனும் இரு துணை ஆறுகளும், ஈப்போ நகரில் இணைந்து கொள்கின்றன.

சுண்ணாம்புக் குன்றுகள்

தொகு

ஈப்போ நகரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் நிறைய உள்ளன.[12] சுண்ணாம்பு மலைகள் குடையப்பட்டு அங்கிருந்து சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப் படுகின்றன. அவை சிமெண்ட் தயாரிக்க உதவுகின்றன.[13] ஈப்போவைச் சுற்றிலும் சிமெண்ட் ஆலைகள் உள்ளன.[14]

தட்பவெப்ப நிலை

தொகு

ஈப்போவின் தட்ப வெப்ப நிலை வெப்பமண்டல மழைக்காடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை. அதன் சராசரி தட்ப வெப்ப நிலை 30° செல்சியசு ஆகும். ஓர் ஆண்டிற்கு 2340 மி,மீ மழை பொழிகிறது. நவம்பர் மாதத்தில் மிகையான மழை பொழிவும் பிப்ரவரி மாதத்தில் குறைவான மழை பொழிவும் காணப்படுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஈப்போ [15]
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35
(95)
36
(97)
36
(97)
36
(97)
37
(99)
36
(97)
36
(97)
36
(97)
35
(95)
35
(95)
33
(91)
35
(95)
37
(99)
உயர் சராசரி °C (°F) 32
(90)
33
(91)
33
(91)
33
(91)
33
(91)
33
(91)
32
(90)
32
(90)
32
(90)
31
(88)
31
(88)
31
(88)
32
(90)
தாழ் சராசரி °C (°F) 22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
22
(72)
பதியப்பட்ட தாழ் °C (°F) 17
(63)
17
(63)
17
(63)
20
(68)
21
(70)
21
(70)
20
(68)
20
(68)
20
(68)
20
(68)
20
(68)
18
(64)
17
(63)
பொழிவு cm (inches) 20
(7.9)
7
(2.8)
19
(7.5)
21
(8.3)
15
(5.9)
9
(3.5)
18
(7.1)
17
(6.7)
22
(8.7)
27
(10.6)
32
(12.6)
22
(8.7)
234
(92.1)
[சான்று தேவை]

நிருவாகம்

தொகு

பேராக் மாநிலத்தின் மந்திரி பெசார் அல்லது பேராக் மாநில முதல்வராக சரானி முகமது (Saarani Mohammad) உள்ளார். இவர் 10 டிசம்பர் 2020 தொடங்கி பதவியில் உள்ளார். இவருக்கு முன்னர் அகமட் பைசால் அசுமு (Ahmad Faizal Azumu) என்பவர் பதவியில் இருந்தார். இவர் 13 மார்ச் 2020 தொடங்கி 5 டிசம்பர் 2020 வரையில் பதவியில் இருந்தார்.

அதற்கும் முன்னதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் சாம்பிரி அப்துல் காதீர் (Dr. Zambry Abdul Kadir) என்பவர் பொறுப்பில் இருந்தார். இவர் பங்கோர் தீவு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பேராக் மாநிலாத்தின் 12-ஆவது மந்திரி பெசார். இவருக்கு முன்னதாக முகமது நிஜார் ஜமாலுடின் (Mohammad Nizar Jamaluddin) என்பவர் மந்திரி பெசாராகப் பதவி வகித்தார்.

ஈப்போ மாநகர மன்றம்

தொகு

ஈப்போ மாநகரம் ஈப்போ மாநகர மன்றத்தினால் (மலாய்: Majlis Bandaraya Ipoh) ஆட்சி செய்யப்படுகிறது. டத்தோ ருமாசி பகரின் (Datuk Rumaizi Baharin) என்பவர் மாநகர மன்றத்தின் மேயராகப் பதவி வகிக்கிறார்.

ஈப்போ மாநகரம் இரு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது.

  • ஈப்போ பாராட் (Ipoh Barat) - 'மேற்கு ஈப்போ தொகுதி'
  • ஈப்போ தீமோர் (Ipoh Timur) - 'கிழக்கு ஈப்போ தொகுதி'

ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாண்புமிகு எம். குலசேகரன் (M. Kulasegaran) மக்களவை உறுப்பினராக இருக்கின்றார்.

சரி சமமான உரிமைகள்

தொகு

மலேசியாவில் எம். குலசேகரன் ஒரு புகழ்பெற்ற வழக்குரைஞர். 2004-ஆம் ஆண்டு மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியர்களுக்குச் சரி சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார். இந்துக் கோயில்கள் உடைக்கப் படுவதைத் தடுத்து நிறுத்துவதில் முன்னெடுப்பு செய்கிறார்.

ஈப்போ தீமோர் நாடாமன்றத் தொகுதிக்கு சூ கியோங் சியோங் (Su Keong Siong) என்பவர் மக்களவை உறுப்பினராக இருக்கின்றார். இவர்கள் இருவரும் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருவரும் மலேசிய மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் ஆவர்.

ஈப்போ அகல் பரப்புத் தொடர் காட்சி

ஈப்போ மாநகர மன்றம்

தொகு

ஈப்போ நகராண்மைக் கழகம் முன்பு ஈப்போ நகர மன்றம் என்று அழைக்கப் பட்டது. 27 மே மாதம் 1988-இல் மாநகர் தகுதியைப் பெற்றது. ஈப்போ மாநகர் மன்றம் (Ipoh City Council) என்று அழைக்கப் படுகிறது. மாநகர் முதல்வர் அல்லது மேயர் அவர்களை டத்தோ பண்டார் என்று அழைக்கிறார்கள்.

ஈப்போ மாநகர் முதல்வர்கள்

தொகு
எண் முதல்வர் தொடக்கம் நிறைவு
1 உமர் அபு 27 மே 1988 31 மே 1993
2 இசுமாயில் சா புடின் 1 சூன் 1993 31 டிசம்பர் 1994
3 அகமது சலே சரிப் 2 சனவரி 1995 31 டிசம்பர் 1997
4 தலாத் உசைன் 1 பிப்ரவரி 1998 2 டிசம்பர் 2002
5 சிராசுதீன் சாலே 3 டிசம்பர் 2002 15 ஏப்ரல் 2004
6 அசன் நவாவி அப்துல் ரகுமான் 1 மே 2004 23 சூலை 2006
7 முகமது ராபியாய் மொக்தார் 24 சூலை 2006 5 சூன் 2008
8 ரோசிடி அசிம் 23 சூலை 2008 2 சனவரி 2014
9 அருன் ராவி 2 சனவரி 2014 30 சூன் 2015
10 சம்ரி மேன் 1 சூலை 2015 1 சூலை 2019
11 அகமது சுவைதி 1 சூலை 2019 31 மார்ச் 2020
12 ருமாசி பகரின் 1 ஏப்ரல் 2020 பதவியில் உள்ளார்

ஈப்போ மாநகர் மன்றத்தின் பிரிவுகள்

தொகு
  1. நிர்வாக மேம்பாட்டுப் பிரிவு (Jabatan Pentadbiran dan Pembangunan Organisasi)
  2. சுகாதாரப் பிரிவு (Jabatan Kesihatan)
  3. உரிமம், ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு (Jabatan Perlesenan dan Penguatkuasaan)
  4. தகுதி நிர்ணயப் பிரிவு (Jabatan Penilaian)
  5. பொறியியல் பிரிவு (Jabatan Kejuruteraan)
  6. திட்டமிடல் பிரிவு (Jabatan Perancang)
  7. நிதிப் பிரிவு (Jabatan Kewangan)
  8. நிலக்காட்சிப் பிரிவு (Jabatan Landskap)
  9. சமூகப் பொதுநலப் பிரிவு (Jabatan Hal Ehwal Komuniti)
  10. கட்டிடங்கள் பிரிவு (Jabatan Bangunan)
  11. ஒருங்கிணைந்த சேவைப் பிரிவு (Pejabat OSC)
  12. நகர சிறப்புத் திட்ட மேம்பாட்டுப் பிரிவு (Pejabat Pembangunan Projek Khas Bandaraya)

மாநகர்க் கிளை அலுவலகங்கள்

தொகு

மக்கள் தொகை

தொகு

ஈப்போ மாநகரம் மலேசியாவின் நான்காவது பெரிய நகரமாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஈப்போவின் மக்கள் தொகை 1,022,240. [16]

ஈப்போ நகரத்தில் சீனர்கள் ஆதிக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழர்களையும் இங்கே அதிகமாகக் காணலாம். மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஈப்போவும் ஒன்று. ஈப்போவில் தமிழர்களும் சீனர்களும் மிகவும் நெருங்கிப் பழகி வாழ்கின்றனர்.

1892 ஈப்போ மக்கள் தொகை

தொகு
  • ஆங்கிலேயர் - 80
  • சீனர்கள் - 39,513
  • மலாய்க்காரர்கள் - 14,950
  • இந்தியர்கள் - 2,645

1901 ஈப்போ மக்கள் தொகை

தொகு
  • சீனர்கள் - 93,003
  • மலாய்க்காரர்கள் - 18,273
  • இந்தியர்கள் - 6,284

புந்தோங் இந்தியர்கள்

தொகு

நூற்றுக் கணக்கான தமிழர்கள் சீனப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் நகரங்களில் ஈப்போ இரண்டாவது இடம் வகிக்கிறது. புறநகர்ப் பகுதியான புந்தோங்கில் இனவாரியாகத் தமிழர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.

மலேசியாவில் ஈப்போ புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் தான் இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை 46 விழுக்காடாக இருக்கிறது. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை புள்ளி விவரங்களின் படி ஈப்போவில் 110,024 இந்தியர்கள் வாழ்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

இவர்களில் கணிசமான அளவில் சீக்கியர்களும் இருக்கின்றனர். மலேசியாவில் அதிகமாகச் சீக்கியர்கள் வாழும் இடம் ஈப்போ புந்தோங் ஆகும். ஏறக்குறைய 4000 சீக்கியர்கள் இங்கு இருக்கிறார்கள்.

2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள்

ஈப்போ மக்கள் தொகை இன வாரியாக 2010 ஆம் ஆண்டு
இனங்கள் மக்கள் தொகை விழுக்காடு
சீனர்கள் 270,165 44.11%
மலாய்க்காரர்கள் 253,592 38.55%
இந்தியர்கள் 110,024 14.07%
மற்றவர்கள் 19,989 3.04%

ஈப்போவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்ய வந்துள்ளனர். வங்காள தேசத் தொழிலாளர்கள் தான் மிகுதியாகத் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.

இவர்களில் சிலர் உள்நாட்டுப் பெண்களுடன் பழகி அவர்களைத் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு சமூகப் பிரச்னையாக மாறியது. அரசாங்கம் தலையிட்டு வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்குள் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

ஈப்போவில் பிறந்து உலக அரங்கில் பலர் அரசியல், சமூகம், கலை, விளையாட்டுத் துறைகளில் தடம் பதித்துள்ளனர். இந்தியர்கள் சிலர், இன்றும் மக்கள் மனதில் அழியாத இடங்களையும் பிடித்துள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள் சீனிவாசகம் சகோதரர்கள்.

இவர்கள் ஈப்போவில் புகழ் பெற்ற தமிழர்கள். டி. ஆர். சீனிவாசகத்தின் முழுப் பெயர் சீனிவாசகம் தர்ம ராஜா. இவர் தன்னுடைய சகோதரர் எஸ்.பி. சீனிவாசகத்துடன் இணைந்து 1953-இல் மக்கள் முன்னேற்றக் கட்சியை (People’s Progressive Party (PPP)) உருவாக்கினார்.

பின்னர் அக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார். எஸ்.பி. சீனிவாசகத்தின் முழுப் பெயர் சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா.

எஸ்.பி.சீனிவாசகம்

தொகு

ஈப்போவின் வரலாற்றை மாற்றி அமைத்த தலைவர்களில் டத்தோ ஸ்ரீ எஸ்.பி.சீனிவாசகம் ஒருவராகக் கருதப் படுகிறார். எஸ்.பி என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவர் டி.ஆர். சீனிவாசகத்தின் சகோதரர் ஆவார். மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற அரசியல் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் இவர் வாதாடி உள்ளார்.

அந்த வகையில் 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சர் ரகுமான் தாலிப் லஞ்ச ஊழல் வழக்கு மிக முக்கியமானதாகும். ரகுமான் தாலிப் அப்போது மலேசியாவின் கல்வி அமைச்சராக இருந்தார். அந்த வழக்கில் ரகுமான் தாலிப் தோல்வி கண்டார். அவருடைய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ரகுமான் தாலிப் நோயுற்று இறந்து விட்டார்.

மெங்லெம்பு நாடாளுமன்றத் தொகுதி

தொகு

சீனிவாசகம் அவர்கள், ஈப்போ மெங்லெம்பு நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். சுங்கை பாரி சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாகவும் சேவை ஆற்றியவர்.

எஸ்.பி. சீனிவாசகம் ஒரு மிகச் சிறந்த வழக்குரைஞர். ஒரு கட்டத்தில் இவருக்கு நீதிபதி பணியும் வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் மறுத்து விட்டார். பின்னர் ஆளும் பாரிசான் நேசனல் கட்சியுடன் இணைந்தார். அதனால் ஈப்போ மக்களிடையே மனக் கசப்புகள் உருவாகின.

அதன் பின்னர் ஈப்போ அரசியலில் பற்பல மாற்றங்களும் ஏற்பட்டன. இவருக்கு 1964-ஆம் ஆண்டு டத்தோ விருதும் 1972-ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ விருதும் வழங்கப் பட்டது. 1975 ஜூலை 4-ஆம் தேதி மாரடைப்பினால் காலமானார். அவரின் சேவையைப் பாராட்டி ஈப்போவில் ஒரு சாலைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

சிபில் கார்த்திகேசு

தொகு

புகழ்பெற்ற சிபில் கார்த்திகேசு எனும் பெண் போராளி ஜப்பானிய ஆட்சி காலத்தில் ஜப்பானியருக்கு எதிராகப் போராடினார். ஜப்பானியருக்கு எதிராக ஓர் இயக்கம் ஈப்போ, பாப்பான் போன்ற இடங்களில் 1943–1944 களில் இயங்கி வந்தது. அந்த இயக்கத்தில் காயம் பட்டவர்களுக்குச் சிபில் கார்த்திகேசுவும் அவருடைய கணவரும் உதவிகளைச் செய்து வந்தனர்.

இதை அறிந்த ஜப்பானியர்கள் அவர்களைக் கைது செய்தனர். மிருகத்தனமாகச் சித்ரவதைகள் செய்தனர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஆங்கிலேயர்கள் அவரை இங்கிலாந்திற்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் மருத்துவம் செய்யப்பட்டது.

ஐக்கிய் இராச்சியத்தின் குடிமக்களின் வீரத்துக்கு அளிக்கப்படும் விருதுகளில் இரண்டாம் உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' அவருக்கு வழங்கப்பட்டது.

டத்தோ மிச்சல் இயோ

தொகு
 
டத்தோ மிச்சல் இயோ

ஈப்போவில் பிறந்து உலக அரங்கில் பலர் அரசியல், சமூகம், கலை, விளையாட்டு என்று பல துறைகளில் தடம் பதித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் டத்தோ மிச்சல் இயோ (Dato Michelle Yeoh). இவர் 1962-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ஆம் தேதி ஈப்போவில் பிறந்தார்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களான

  • Tomorrow Never Dies
  • Memoirs of a Geisha
  • The Mummy: Tomb of the Dragon Emperor

போன்ற படங்களில் நடித்து உலகளாவிய நிலையில் புகழ் பெற்றவர் ஆவார்.

இவருடைய தந்தை ஒரு வழக்குரைஞர். பின்னர் அரசியல்வாதியாக மாறினார். மிச்சல் இயோ தன்னுடைய பள்ளி வாழ்க்கையை ஈப்போ கான்வெண்ட் பள்ளியில் தொடங்கினார். 15-ஆவது வயதில் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு தொடர்ந்து படித்தார்.

1983-இல் அவருடைய 21-ஆவது வயதில் மலேசிய அழகு ராணியாகத் தெரிவு செய்யப் பட்டார். அவருக்குப் பேராக் சுல்தான் டத்தோ விருது வழங்கிக் கௌரவித்துள்ளார். 2007=ஆம் ஆண்டு பிரான்சு அரசாங்கம் செவாலியர் விருது வழங்கியது.

தன்னுடைய கணவர் டிக்சன் பூன் என்பவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இப்போது ஹாங்காங்கில் வாழ்ந்து வருகிறார்.

எம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள்

தொகு

1940-ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் எம்.எஸ்.எம்.எம். எனும் பெயரில் ஒரு வங்கி செயல் பட்டு வந்தது. அதை எம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள் என்று அழைக்கப்படும் சகோதரர்கள் இருவர் நடத்தி வந்தனர். அந்த வங்கியின் தலைமையகம் அப்போது காரைக்குடியில் இருந்தது.

இரண்டாம் உலகப் போர் நிதிக்கு எம்.எஸ்.எம். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 10,000 ரூபாய் நன்கொடை வழங்கினர். அக்காலத்தில் அது பெரும் தொகையாகும். மலாயாவுக்கு வந்த நகரத்தார்கள் பொதுவாகத் தங்களுடைய மனைவிமார்களை அழைத்து வருவதில்லை.

திருமதி. சொக்கலிங்கம் செட்டியார்

தொகு

அந்தப் பாரம்பரிய வழக்க முறையை மாற்றி அமைத்தவர் திருமதி. சொக்கலிங்கம் செட்டியார். 1933-ஆம் ஆண்டு தன் கணவருடன் ஈப்போ வந்தார். அதன் பின்னர் நகரத்தார் தம் மனைவி பிள்ளைகளை அழைத்து வரத் தொடங்கினர்.

அவ்வாறு வந்த அவர்களுடைய பேரப் பிள்ளைகள் பலர் தமிழகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. ஈப்போவிலேயே தங்கிவிட்டனர். வழக்குரைஞர்கள, மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். சமயத் தொண்டுகளும் செய்து வருகின்றனர்.

பண்பாடு

தொகு

காரைக்குடி மாளிகைகள்

தொகு

ஈப்போ செட்டித் தெருவில் தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் உள்ள மாளிகைகளைப் போன்ற பல வீட்டு மனைகள் இன்றும் உள்ளன. அவை செட்டித் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்தக் கட்டிடங்களில் பலவற்றைச் சீனர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டனர்.

வரிசை வரிசையாக இருந்த காரைக்குடி மனைகள் இப்போது சீனர்களின் வியாபார வணிகத் தளங்களாக மாற்றம் கண்டுள்ளன. 1969-ஆம் ஆண்டு மலேசியாவில் ஓர் இனக் கலவரம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து காரைக்குடித் தமிழர்கள் பலர் தத்தம் வீடுகளை விற்று விட்டுத் தமிழகம் திரும்பினர். சீனர்கள் மிகக் குறைந்த விலையில் அந்த வீடுகளை வாங்கிக் கொண்டனர்.

பட மேடைகள்

தொகு

ஈயம் மிகுதியாகத் தோண்டி எடுக்கப் பட்ட காலத்தில் ஈப்போ நகரத்தில் அதிகமான எண்ணிக்கையில் படமேடைகள் திரையரங்குகள் உருவாகின. தமிழ்ப் படங்களுக்கு என்று ஓடியன் (Odion), கிரேண்ட் (Grand) போன்ற திரை அரங்குகள் கட்டப்பட்டன.

தி லைப் ஒப் மகாத்மா காந்தி (The Life of Mahatma Gandhi) எனும் படம் ஈப்போ ஓடியன் படமேடையில் 31 மே 1941-ஆம் தேதி திரையிடப் பட்டது. அதைக் காண ஈப்போ மக்கள் திரண்டு நின்றனர். அதைப் பற்றி ’தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் ஒரு நீண்ட செய்தியையும் வெளியிட்டது.

புந்தோங் வாழ் தமிழர்களுக்குக் குளோரி (Glory) படமேடையும் கட்டப்பட்டது. இப்போது அந்தக் குளோரி படமேடை இல்லை. அந்த இடத்தில் புந்தோங் மக்கள் மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. தமிழர்களின் திருமண, கலாசார நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுகின்றன.

கேளிக்கை அரங்குகள்

தொகு

ஈப்போ நகரில் பணம் புரண்ட காலத்தில் நூற்றுக் கணக்கான கேளிக்கை அரங்குகள் இருந்தன. அவற்றுக்கு மலேசியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்தனர். 1970-களில் உலகச் சந்தையில் ஈய விலை சரிந்து போனது.

அதனால் பெரும்பாலான ஈப்போ வாழ் மக்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். சில வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை அண்டை நாடுகளுக்கு மாற்றிக் கொண்டன. அதனால் வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான ஈப்போ இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற மாநகரங்களுடன் ஈப்போ நகரத்தினால் போட்டிப் போட இயலவில்லை. இருப்பினும் மலேசியாவிலேயே ”மிகவும் சுத்தமான நகரம்” எனும் அடைமொழியுடன் ஈப்போ சிறப்பிடம் பெறுகிறது.[17]

கிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளிகள்

தொகு

பேராக்; கிந்தா மாவட்டத்தில் (Kinta District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 3,447 மாணவர்கள் பயில்கிறார்கள். 343 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்தப் பட்டியலில் ஈப்போ மாநகரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ABD2158 தஞ்சோங் ரம்புத்தான் SJK(T) Tanjong Rambutan தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி 31250 தஞ்சோங் ரம்புத்தான் 237 27
ABD2159 ஈப்போ SJK(T) Kerajaan Ipoh ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 30200 ஈப்போ 281 29
ABD2160 ஈப்போ SJK(T) St Philomena Convent பிலோமினா தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 30100 ஈப்போ 390 31
ABD2161 ஈப்போ SJK(T) Perak Sangeetha Sabah சங்கீத சபா தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 30100 ஈப்போ 193 15
ABD2163 புந்தோங் SJK(T) Methodist மெதடிஸ்ட் தமிழ்பள்ளி (ஈப்போ) 30100 புந்தோங் 112 15
ABD2164 ஈப்போ SJK(T) Chettiars செட்டியார் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 30200 ஈப்போ 334 24
ABD2166 கம்போங் சிமி SJK(T) Kg. Simee கம்போங் சிமி தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 31400 ஈப்போ 197 19
ABD2167 குனோங் ராபாட் SJK(T) Gunong Rapat குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 31350 ஈப்போ 117 14
ABD2168 மெங்லெம்பு SJK(T) Menglembu மகிழம்பூ தமிழ்ப்பள்ளி (ஈப்போ) 31450 மெங்லெம்பு 323 25
ABD2169 பத்து காஜா SJK(T) Changkat சங்காட் தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) 31000 பத்து காஜா 260 28
ABD2170 துரோனோ SJK(T) Tronoh துரோனோ தமிழ்ப்பள்ளி 31750 துரோனோ 58 12
ABD2173 சிம்மோர் தோட்டம் SJK(T) Ladang Chemor சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 31200 சிம்மோர் 101 13
ABD2174 சங்காட் கிண்டிங் தோட்டம் SJK(T) Ladang Changkat Kinding சங்காட்டு கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தஞ்சோங் ரம்புத்தான்) 31250 தஞ்சோங் ரம்புத்தான் 42 10
ABD2175 கிளேபாங் SJK(T) Klebang கிளேபாங்_தமிழ்ப்பள்ளி (சிம்மோர்) 31200 சிம்மோர் 483 37
ABD2176 செப்போர் SJK(T) Ladang Strathisla சத்தியசாலா தமிழ்ப்பள்ளி (சிம்மோர்) 31200 சிம்மோர் 43 13
ABD2177 கிந்தா கிலாஸ் SJK(T) Ladang Kinta Kellas கிந்தா கிலாஸ் தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) 31000 பத்து காஜா ? ?
ABD2178 செண்ட்ரோங் SJK(T) Ladang Kinta Valley கிந்தாவெளி தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) 31007 பத்து காஜா 69 11
ABD2189 தாமான் தேசா பிஞ்சி SJK(T) Taman Desa Pinji தாமான் தேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி 31500 லகாட் 207 20

நட்பு நகரங்கள்

தொகு

ஈப்போவின் நட்பு நகரங்கள்

  • புக்கோக்கா, ஜப்பான்
  • நானிங், சீனா

மேற்கோள்கள்

தொகு
  1. The Bougainvillea City referring to Bougainvillea as the symbol flower of the city.
  2. "Info Ipoh: Halaman 2 dari 2 | Portal Rasmi Majlis Bandaraya Ipoh (MBI)". mbi.gov.my. Archived from the original on 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  3. The Town Built on Tin and City of Millionaires referring to the vast fortunes made during the boom of the tin-mining industries.
  4. Ng, Francis. "Ipoh's terrible tree" (in en). The Star. https://www.thestar.com.my/business/business-news/2012/01/07/ipohs-terrible-tree/. 
  5. Ipoh cities into the turn of 19th century to developed the booming tin-mining industry propelled the sleepy town into the height of its glory peaked in the 1950s.
  6. Tan, Peter (2015-02-21). "The city that tin built". BorneoPost Online | Borneo, Malaysia, Sarawak Daily News. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  7. hermes (2016-03-22). "Sleepy Ipoh awakens" (in en). The Straits Times. http://www.straitstimes.com/asia/se-asia/sleepy-ipoh-awakens. 
  8. Tam, Susan. "Ipoh - Malaysia | The Star Online". பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  9. "Old Town restored to rightful place in history of Ipoh". theedgeproperty.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
  10. Khoo Salma Nasution & Abdur-Razzaq Lubis, Kinta Valley: Pioneering Malaysia's Modern Development, Ipoh: Perak Academy, 2005. pp. 273–292
  11. Khoo Salma Nasution & Abdur-Razzaq Lubis, Kinta Valley: Pioneering Malaysia's Modern Development, Ipoh: Perak Academy, 2005. pp. 273–292
  12. "Home". Cavesofmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 10 December 2015.
  13. Jacq-Hergoualc'h, Michel; Victoria Hobson (September 2002). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk Road (100 BC - 1300 AD). BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11973-6.
  14. Ipohworld’s World » Yau Tet Shin’s New Town Under Construction 1908. Ipohworld.org. Retrieved on 10 December 2015.
  15. June 2010 வானிலைத்தகவல்கள்
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
  17. "Ipoh is Malaysia's cleanest city - Nation | The Star Online". thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈப்போ&oldid=3999316" இலிருந்து மீள்விக்கப்பட்டது