சிபில் கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர்.[1] ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்.

சிபில் கார்த்திகேசு
Sybil Kathigasu
Sybil-kartigasu.jpg
பிறப்புசிபில் டெலி
1899
மெடான்,  இந்தோனேசியா
இறப்புசூன் 12, 1948(1948-06-12)
லானார்க், ஸ்காட்லாந்து,  ஐக்கிய இராச்சியம்
இறப்பிற்கான
காரணம்
மனிதச் சித்ரவதை
கல்லறைஈப்போ கொனாலி சாலை கிறித்துவ மயானம்
அறியப்படுவதுபோராட்டவாதி, தேசியவாதி, செவிலியர்
வாழ்க்கைத்
துணை
ஏ. சி. கார்த்திகேசு
பிள்ளைகள்வில்லியம் பிள்ளை
ஒல்கா கார்த்திகேசு
தவம் கார்த்திகேசு

இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர்.[2] மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது.[3] ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[4]

வரலாறுதொகு

சிபில் கார்த்திகேசுவின் முழுமையான பெயர் சிபில் டெலி. இவர் இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899 ஆம் ஆண்டு பிறந்தவர்.[5] இவருடைய தந்தையார் ஓர் ஆங்கிலேயர். ஒரு தோட்ட நிர்வாகி. சிபில் கார்த்திகேசுவின் தாயார் ஒரு தமிழர்.

சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு செவிலியலர் (தாதி). சீன மொழியில் இயல்பாகப் பேசக் கூடியவர். 1919 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.[6] இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், 'புக்கிட் நானாஸ் செயிண்ட் ஜான்' தேவாலயத்தில் நடந்தது. ஆறுமுகம் கணபதி பிள்ளை என்பதன் சுருக்கமே ஏ. சி. கார்த்திகேசு ஆகும். ஏ.சி.கார்த்திகேசு, சிங்கப்பூர் காலாங் மருத்துவக் கல்லூரியில் படித்து 21 வயதிலேயே மருத்துவர் ஆனவர்.

ஈப்போவில் மருத்துவ விடுதிதொகு

கார்த்திகேசுவும் சிபில் டெலியும் சேர்ந்து ஈப்போ பிரவுஸ்டர் சாலையில் (ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா) ஒரு சிறிய மருத்துவ விடுதியை நடத்தி வந்தனர்.[5] அந்த மருத்துவ விடுதியில் கணவருக்கு மருத்துவப் பணி. சிபில் கார்த்திகேசுவிற்குத் செவிலியர் பணி. ஏறக்குறைய 15 ஆண்டுகள் அங்கே தொழில் புரிந்தனர். ஏ. சி. கார்த்திகேசு சீன சமூகத்தவரிடம் மிகவும் அன்பாகப் பழகினார். அதனால் அவருக்கு அங்கே நல்ல மரியாதை கிடைத்தது. ஈப்போ வாழ் சீனர்கள் அவரைச் செல்லமாக 'யூ லோய் டெ' என்றும் அழைத்தனர்.

1941 ஆம் ஆண்டு சப்பானியர்கள் மலாயா மீது படை எடுத்தனர். சப்பானியர்கள் ஈப்போ நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கணவனும் மனைவியும் பாப்பான் எனும் சிறு நகருக்குப் புலம் பெயர்ந்தனர்.[5]

அங்கே புதிதாக ஒரு மருத்துவ விடுதியைத் திறந்தனர். இந்தப் பாப்பான் சிறு நகரம் ஈப்போ மாநகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. சீனர்கள் அதிகமாக வாழும் இந்த நகரம் அலுமினியச் சுரங்கத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.[5]

சப்பானியர் படையெடுப்புதொகு

சப்பானியர்கள் மலாயாவைக் கைப்பற்றிய பின்னர் கொடுங்கோல் ஆட்சி செய்தனர். மலாயா மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனர். இலட்சக் கணக்கான மக்களைச் சித்திரவதையும் செய்தனர். இவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சீனர்களே.

இந்தியர்களைப் பார்த்தால் ‘காந்தி.. காந்தி’ என்று சத்தம் போட்டு இரைந்து கைகளைத் தூக்கிச் செல்வார்கள். இருப்பினும் சியாம் மரண இரயில் பாதை போடுவதற்காக இந்தியர்கள் ஆயிரக் கணக்கில் சியாம்-மியன்மார் எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் கொத்தடிமைகளாகக் கசக்கிப் பிழியப் பட்டனர். பல்லாயிரம் பேர் மலேரியா, வயிற்றுப் போக்கு போன்றவற்றினால் மாண்டு போயினர்.

சப்பானிய எதிர்ப்பு இராணுவம்தொகு

சப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் சில கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் Malayan People’s Anti-Japanese Army (MPAJA) எனும் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம். இந்த இராணுவம் மலாயா நாடு முழுவதும் துளிர் விட்டிருந்தது. பேராக் மாநிலத்தில் சுங்கை சிப்புட், தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், பாப்பான், பூசிங், கோப்பேங் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல்பட்டது.[5]

சப்பானியர்கள் மலாயாவிற்கு வந்த சில காலத்தில் டாக்டர் கார்த்திகேசு மறுபடியும் ஈப்போவிற்கு வந்து விட்டார். பழைய ஈப்போ மருத்துவ விடுதியை மறுபடியும் திறந்து நடத்தினார். சிபில் கார்த்திகேசு பாப்பான் பட்டணத்திலேயே தங்கி பாப்பான் மருத்துவ விடுதியைப் பார்த்துக் கொண்டார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.[5]

மலாயாக் கம்னியூஸ்டு கட்சிதொகு

இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தான் பின்னாளில் மலாயாக் கம்னியூஸ்டு கட்சி என்று மாறியது. இந்தக் கட்சி மலாயாவைக் கம்னியூச நாடாக மாற்றப் பல திட்டங்கள் போட்டது. சப்பானிய ஆதிக்க எதிர்ப்புப் போராளிகள் மறைந்து இருந்து சப்பானியர்களைத் தாக்கி வந்தனர்.

அவ்வாறான தாக்குதலில் பாப்பான், பூசிங் இடங்களில் இருந்த பல போராளிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போராளிகள் சிபில் கார்த்திகேசுவின் மருத்துவ விடுதிக்கு ரகசியமாகக் கொண்டு வரப்பட்டனர்.[7]

மருத்துவ விடுதிக்குப் பின்புறம் ஒரு காய்கறித் தோட்டம் இருந்தது. மருத்துவ உதவிகள் தேவைப்படும் போராளிகளைக் கொண்டு வரும் போது அந்தக் காய்கறித் தோட்டம் அவர்களுக்கு ஒரு மறைவிடமாக அமைந்தது. அந்தப் போராளிகளுக்குச் சிபில் கார்த்திகேசு இலவசமாக மருத்துவம் செய்து அனுப்பினார். அதனால் சுற்று வட்டார சீனர்களின் மானசீகமான அன்பையும் ஆதரவையும் பெற்றார்.

பி.பி.சி வானொலிச் செய்திகள்தொகு

அந்தச் சமயத்தில் தன்னுடைய பாப்பான் மருத்துவ விடுதியில் ஒரு சின்ன சிற்றலை வானொலியையும் சிபில் கார்த்திகேசு வைத்திருந்தார். பி.பி.சி வானொலிச் செய்திகளை ரகசியமாகக் கேட்டு வந்தார்.[8]

செய்திகளைப் பாப்பான் மக்களுக்கு ரகசியமாகத் தெரிவித்தும் வந்தார். 1943 ஆம் ஆண்டு வரை அவ்வாறு நடந்து வந்துள்ளது. சிபில் கார்த்திகேசு செய்தவை அனைத்தும் சப்பானியர்களுக்கு எதிரானச் செயல்கள்.[8]

பாப்பான் நகர மக்கள் தான் அதிகமாகப் போராளிகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை கெம்பெடேய் (Kempetei) எனும் சப்பானிய இராணுவக் காவல்துறையினர் அறிய வந்தனர். அதனால் பாப்பான் மக்களைக் கைது செய்ய ஆரம்பித்தனர். சிபில் கார்த்திகேசு ஆகத்து 1943 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.[8]

ஜப்பானியர்களின் சித்ரவதைதொகு

அப்போது ஜப்பானியர்களின் காவலர் தலைமையகம் ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளியில் இருந்தது. அங்கே சிபில் கார்த்திகேசு பல நாட்கள் விசாரணை செய்யப்பட்டார். ஆனால், சிபில் கார்த்திகேசு ஜப்பானியர்களுடன் ஒத்துழைக்க வில்லை; போராளிகளின் பெயர்களைச் சொல்லவில்லை.

ஒரு நாளைக்கு பத்து பேர் விகிதம் இரண்டு ஆண்டுகளுக்குச் சிபில் கார்த்திகேசு இலவசமாக மருத்துவம் பார்த்து இருக்கிறார். பேராக் வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 6000 போராளிகளுக்கு அவர் அவசர சிகிச்சை செய்து இருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் விகிதம் 30,000 பேரின் உயிருக்கு ஆபத்து என்பதை சிபில் கார்த்திகேசு உணர்ந்தார். எனவே போராளிகளின் பெயர்களை அவர் ஜப்பானியர்களுக்குச் சொல்லவில்லை.[9]

பத்து காஜா சிறையில்தொகு

மூன்று மாதங்கள் சித்திரவதைக்குப் பிறகும் தன்னிடம் உதவி பெற்றவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. அதனால் சிபில் கார்த்திகேசு, பத்து காஜா சிறைச்சாலைக்கு மாற்றப் பட்டார். பத்து காஜா சிறையில்தான் சிபில் கார்த்திகேசுவிற்கு பெரும் கொடுமைகள் இழைக்கப்பட்டன. சிபில் கார்த்திகேசு தன்னுடைய சுயசரிதையில் இவற்றை எழுதி இருக்கிறார். ஜப்பானியர்கள் எந்த மாதிரியான சித்ரவதைகளைச் செய்தார்கள் என்றும் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.[10]

அவர் எழுதிய நூலிலிருந்து சில வரிகள்:[11]

 • வெளிக்காயம் இல்லாத சித்ரவதைகள்
 • தூங்க விடாமல் செய்தல்
 • தண்ணீருக்குள் தலையை அழுத்திப் பிடித்தல்
 • மூச்சு நின்று போகச் செய்தல்
 • புகையிலையை வாயில் திணித்தல்
 • ஐஸ் கட்டியில் பல மணி நேரம் உட்கார வைத்தல்
 • மயக்கம் அடையும் வரை முட்டிக் காலில் அடித்தல்
 • காலைக் கட்டித் தொங்க விடுதல்
 • புகை மூட்டம் போட்டு மூச்சு திணறச் செய்தல்
 • உடல்மீது ஐந்து பேர் ஏறி மிதித்தல்
 • பிறப்பு உறுப்பில் சவர்க்கார நீரைப் பாய்ச்சுதல்
 • மயக்கம் அடையச் செய்தல்
 • பழுத்தக் கம்பியால் உள்ளங் காலில் சுடுதல்
 • நகத்தைப் பிடுங்குதல்
 • பிடுங்கிய நக விரலில் ஊசியைப் பாய்ச்சுதல்
 • நிர்வாணமாக்கப்படுதல்
 • நாள் முழுவதும் தலை கீழாகத் தொங்க விடுதல்

சிரச் சேதம்தொகு

ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் ஈப்போவில் உள்ள செயிண்ட் மைக்கல் பள்ளி தான் அவர்களின் தலைமை இடமாக இருந்தது. இந்த இடத்தில் பல சீனச் சமூகத் தலைவர்கள் விசாரணை என்ற பெயரில் சிரச்சேதம் செய்யப்பட்டனர். அதனால் ஆவிகள் உலவுவதாகக் கூட இன்று வரை வதந்திகள் உலவுகின்றன.

சிபில் கார்த்திகேசுவைப் போல அவருடைய கணவர் டாக்டர் கார்த்திகேசுவையும் ஜப்பானியர்கள் கட்டி வைத்து அடித்தனர். தமக்கு ஒன்றுமே தெரியாது என்று அவர் மறுத்து விட்டார். அவர்களுடைய மகன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் விட்டு வைக்கவில்லை. அவனை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டனர். புகை மூட்டம் போட்டு மூச்சுத் திணறச் செய்தனர். தாயாரின் முன்னாலேயே மகனைப் பயங்கரமான முறையில் சித்ரவதைகள் செய்தனர். கடைசியாக அவர்களுடைய மகள் தவம் கார்த்திகேசுவையும் சித்ரவதை செய்தனர்.

எக்கியோ யோஷிமுராதொகு

அத்தனை கொடுமைகள் செய்தும் சிபில் கார்த்திகேசுவின் மனம் தளரவில்லை. ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த மலாயா ஜப்பானிய எதிர்ப்பு போராளிகளைக் கடைசி வரை காட்டிக் கொடுக்கவே இல்லை. சார்ஜண்ட் எக்கியோ யோஷிமுரா என்பவர் தான் அவர்களைச் சித்ரவதை செய்வதில் தலைவராக இருந்தார். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் சிபில் கார்த்திகேசுவின் குடும்பமே ஜப்பானியரின் சித்ரவதைக்கு உள்ளாகி இருந்தது.

போருக்குப் பின்னர்தொகு

ஜப்பான் தோற்கடிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1945 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவிலிருந்து வெளியேறினர். மலாயா மீண்டும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.

சிபில் கார்த்திகேசு பத்து காஜா சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் பாப்பான் பட்டணத்திற்கு கொண்டு வரப்பட்டார். பாப்பான், பூசிங் நகர மக்கள் அனைவருமே திரண்டு நின்று அவரை வரவேற்றனர். பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை உடனடியாக இங்கிலாந்திற்கு விமானத்தின் மூலமாகக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் மருத்துவம் வழங்கப் பட்டது. அப்போது தான் சிபில் கார்த்திகேசு No Dram of Mercy எனும் தன் சுயசரிதையை எழுதினார். அவரால் நேரடியாக எழுத முடியவில்லை. மற்றவர் துணை கொண்டு எழுதினார்.

ஆறாம் ஜார்ஜ் மன்னர்தொகு

அப்போது சிபில் கார்த்திகேசுவை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பார்க்க ஆசைப் பட்டார். சிபில் கார்த்திகேசு பக்கிங்காம் அரண்மனைக்குத் தள்ளு வண்டியில் கொண்டு வரப்பட்டார். அங்கே சிபில் கார்த்திகேசுவிற்கு இங்கிலாந்தின் இரண்டாம் உயரிய விருதான ஜார்ஜ் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் இப்பதக்கத்தைப் பெற்றதில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சிபில் கார்த்திகேசுவிற்கு ஆங்கிலேய அரசின் மிகச் சிறப்பான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் ஜப்பானிய சித்ரவதையினால் ஏற்பட்ட உள் உடல் காயங்களை மருத்துவர்களால் முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

மறைவுதொகு

அவருக்குக் கிளாஸ்கோ நகரில் உள்ள அறுவை சிகிச்சை மையத்திலும் மருத்துவம் செய்யப் பட்டது. அவருடைய உடல் உள் உறுப்புகள் மிகவும் சேதம் அடைந்து இருந்தன. சிறுநீரகப் பையும் கர்ப்பப் பையும் மிகவும் மோசமாகச் சேதமுற்று இருந்தன. உடலுக்குள் இருந்த இரத்தக் கசிவும் குறையவில்லை. லானார்க் மருத்துவமனை வளாகத்தில் நடந்து கொண்டிருந்த போது மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அந்த மயக்கத்திலிருந்து கடைசி வரை மீளவே இல்லை.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிபில் கார்த்திகேசு தன்னுடைய 49வது வயதில் மறைந்தார். அவருடைய உடல் 'ஸ்காட்லாந்து லானார்க்' எனும் இடத்தில் புதைக்கப் பட்டது. பின்னர் லானார்க் சமாதியிலிருந்து 20.3.1949ல் தோண்டி எடுக்கப் பட்டு, பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது. ஓர் ஆங்கில எழுத்தாளர் அந்த நிகழ்வை இப்படி எழுதி இருக்கிறார்.

Her remains having arrived from Scotland by a ship to Penang and then travelled home to Ipoh 141 Brewster Road. One of the largest funeral processions ever seen in Perak took place. Sybil the Ipoh Heroine was treated in royal style and 100,000 people of Perak and from all parts of the country turned out to say goodbye.Even people came from Thailand,Vietnam,Borneo and Indonesia.

மாபெரும் இறுதி ஊர்வலம்தொகு

ஸ்காட்லாந்திலிருந்து அவருடைய உடல் பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து பின்னர் ஈப்போவில் உள்ள அவருடைய புருவ்ஸ்டர் சாலை இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது. அவருடைய உடல் ஈப்போ செயிண்ட் மைக்கல் மாதா கோயில் அருகில் இருக்கும் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டது. அதைக் கொனாலி சாலை கிறிஸ்துவ மயானம் என்று இப்போது அழைக்கிறார்கள்.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப் படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று ஓர் இலட்சம் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர். வெளியூர்,மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களையும் சேர்த்து அந்தக் கணக்குச் சொல்லப்படுகிறது. அவருடைய சவ வண்டியைக் கயிற்றால் கட்டி ஈப்போ மாநகர் வீதிகளில் ஆயிரக் கணக்கான சீனர்கள் இழுத்துச் சென்றனர். 14 நாட்களுக்குப் பாப்பான் நகரில் கிராம மரியாதைகள் செய்யப்பட்டன.

பிள்ளைகள்தொகு

 1. வில்லியம் பிள்ளை (பிறப்பு 1918)
 2. ஒல்கா கார்த்திகேசு (பிறப்பு 1921)
 3. டான் கார்த்திகேசு (பிறப்பு 1936)

வில்லியம் பிள்ளைதொகு

கார்த்திகேசு தம்பதியினரின் முதல் மகன் மைக்கல் கார்த்திகேசு பிறந்த ஒரு சில மணி நேரத்தில் இறந்து போனார். அதனால் அவர்கள் வில்லியம் பிள்ளை எனும் சிறுவனை எடுத்து வளர்த்தனர். இவரும் ஜப்பானியர்களால் கைது செய்யப் பட்டார். அப்போது அவருக்கு 30 வயதிற்கும் கூடுதலாக இருக்கும். வில்லியம் பிள்ளை, கோப்பேங் சிறையில் சித்ரவதை செய்யப் பட்டார். அதற்குப் பிறகு அவர் தைப்பிங் சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டார்.

மலாயாவிலிருந்து ஜப்பானியர்கள் வெளியானதும் இவரும் விடுவிக்கப் பட்டார். பின்னர், இவர் நிங் பாய்க் சூ எனும் ஈப்போ சீனப் பெண்ணை மணந்தார். பேராக் மாநில கார் போட்டியாளர்கள் சங்கத்தை உருவாக்கினார். மேல் விவரங்கள் கிடைக்கவில்லை.

ஒல்கா கார்த்திகேசுதொகு

பெற்றோர்களையும் அண்ணன் வில்லியம் பிள்ளையையும் ஜப்பானியர்கள் பிடித்துக் கொண்டு போனதும் தனது பாட்டியையும் கடைசி தங்கை தவம் கார்த்திகேசுவையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இரண்டாவது மகள் ஒல்கா கார்த்திகேசுவின் மீது விழுந்தது.

தவம் கார்த்திகேசுவிற்கு அப்போது ஏழு வயது. அந்தச் சிறுமியையும் சித்ரவதை செய்துள்ளனர். ஒல்கா கார்த்திகேசு இன்னும் ஈப்போவில் வாழ்கிறார். இவருக்கு வயது 90. இவருக்கு ஈப்போ சீனர்கள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.(கடைசி தகவல்:2009)

டான் கார்த்திகேசுதொகு

1952 ஆம் ஆண்டு டான் கார்த்திகேசுவிற்கு மருத்துவம் படிக்க இங்கிலாந்து அரசு நிதியுதவி செய்தது. அவர் லண்டன் சென்று மருத்துவம் படிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் படித்து விட்டுப் படிப்பை நிறுத்திக் கொண்டார். மூன்று ஆண்டுகள் கழித்து 1957 ஆம் ஆண்டு மலேசியா திரும்பினார்.

இங்கிலாந்தில் இருக்கும் போது அங்கேயே அவர் ஓர் ஆங்கிலேய வழக்கறிஞரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நாடு திரும்பிய டான் கார்த்திகேசு தன் அக்காள் ஒல்கா கார்த்திகேசுவை இங்கிலாந்திற்கு வரும்படி அழைத்தார். ஓல்கா மறுத்து விட்டார். தன் தந்தையின் கடைசி காலம் வரை இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். சொன்னபடி தன் தந்தையுடன் கடைசி வரை இருந்தார்.

நினைவுச் சின்னங்கள்தொகு

சிபில் கார்த்திகேசு சாலைதொகு

சிபில் கார்த்திகேசுவினால் உயிர் தப்பியவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். மலேசியாவிலும் பேராக் மாநிலத்திலும் இன்றும் சீனர்களிடையே சிபில் கார்த்திகேசு மிகவும் சிறப்பாகப் பேசப்படுகிறார். சிபில் கார்த்திகேசுவின் பெயரை ஈப்போ மாநகரத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைத்துப் பெருமையும் செய்து இருக்கிறார்கள்.[12] சீனர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சிபில் என்று பெயர் வைத்துச் சிபில் கார்த்திகேசுவை நினைத்துப் பார்க்கிறார்கள். மலேசியத் தமிழர்களில் பலருக்கு அவரைப் பற்றி இப்போது தான் தெரிய வருகிறது.

கடைசி ஆசைதொகு

சிபில் கார்த்திகேசு இறப்பதற்கு முன்னால் தன்னுடைய கடைசி ஆசையைச் சொன்னார். தன்னுடைய பாப்பான் மருத்துவ விடுதியை இலவச மருத்துவகமாக மாற்ற வேண்டும். அங்கே ஏழை எளியவர்களுக்கு இலவசமாகச் மருத்துவச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அரசாங்கம் அந்த மருத்துவ விடுதியை ஓர் அருங்காட்சியகமாக மாற்றி அமைத்து விட்டது. பராமரிப்புச் செலவுகளைப் பாப்பான் சீனர் சங்கம் ஏற்றுக் கொள்கிறது. ஆண்டுதோறும் ஒன்று கூடும் நிகழ்ச்சியும் இங்கே நடைபெறுகிறது. நூற்றுக் கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

சிபில் கார்த்திகேசு காட்சியகம்தொகு

அவர் வாழ்ந்து மறைந்த பாப்பான் நகரத்து இல்லம் ஓர் அருங்காட்சியகமாக இப்போது மாற்றப் பட்டுள்ளது. அவர் பயன் படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப் பட்டுக் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

சீனா, தைவான், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து வரும் சீனர்கள் அவருடைய சமாதிக்குச் சென்று மலர் வளையங்கள் சார்த்தி விட்டுச் செல்கின்றனர். 74 Main Road, Old Papan, Papan, Ipoh, Perak எனும் முகவரியில் அந்தக் காட்சியகம் இருக்கிறது.

தொலைக்காட்சித் தொடர்தொகு

இவரைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பு செய்தது. பின்னர் மலேசியாவின் அஸ்ட்ரோ தொலைக் காட்சி Apa Dosaku? எனும் தலைப்பில் அஸ்ட்ரோ சித்ராவில் 8 வாரங்களுக்கு மலேசிய மொழியில் ஒளிபரப்பு செய்தது.[13]

இந்தத் தொடரில் சிபில் கார்த்திகேசுவாக எலாயின் டேலி என்பவர் நடித்தார். சிபில் கார்த்திகேசுவின் பேத்தி தான் எலாயின் டேலி. இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக, 2010 ஆம் ஆண்டின் மலேசியாவின் மிகச் சிறந்த தொலைக்காட்சி நடிகை எனும் விருதையும் பெற்றார். எலாயின் டேலி 2003 ஆம் ஆண்டின் மலேசிய அழகியாவார். இவர் ஒரு வழக்குரைஞர். அந்தத் தொடரை இயக்கிய பெர்னார்ட் சாவ்லி 2010 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த தொலைக்காட்சி இயக்குநர் எனும் விருதைப் பெற்றார்.

அதே தொடர் The Story of Sybil Karthigesu எனும் தலைப்பில் 8 வாரங்களுக்கு ஆங்கில மொழியிலும் ஒளிபரப்பு செய்யப் பட்டது.

முரண்பாடுகள்தொகு

சிபில் கார்த்திகேசு ஒரு கம்னியூஸ்ட் ஆதரவாளர் என்று இன்னும் மலேசியர்கள் சிலர் கருத்து உரைக்கின்றனர். ஜப்பானியர்கள் மலாயாவின் மீது படை எடுக்கும் போது கம்னியூஸ்ட் எனும் சித்தாந்தம் உருவாகவில்லை. ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்யுங்கள் என்று ஆங்கிலேயர்கள் மலாயா மக்களைத் தூண்டி விட்டனர். அத்துடன் அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கி ஆதரவு வழங்கினர்.

ஜப்பானியர்கள் மலாயாவை விட்டு வெளியேறியதும் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் மலாயா கம்னியூஸ்ட் கட்சியாக மாறியது. அப்போது சிபில் கார்த்திகேசு உயிருடன் இல்லை. தான் உதவிய ஆதரவாளர்கள் கம்னியூஸ்டுகளாக மாறுவார்கள் என்பது தெரியாமலேயே இறந்தும் போனார்.

ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் ஒரு பொதுவான இயக்கமாக இருந்து ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் இறங்கியது. அப்போது அந்த இராணுவம், ஒரு கம்னியூஸ்ட் கட்சியாக இல்லை. ஆங்கிலேயர்கள் மறுபடியும் மலாயாவில் புது அரசைத் தோற்றுவித்தனர்.

அதன் பிறகு தான் சிபில் கார்த்திகேசு உதவிய ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் கம்னியூஸ்ட் கட்சியாக மாறியது. அதனால் சிபில் கார்த்திகேசு ஒரு கம்னியூஸ்ட் ஆதரவாளர் என்று சொல்வது தவறு. மலேசிய வரலாற்று அறிஞர்களும் இந்தக் கருத்தையே வலுவான கருத்தாகக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் தான் மாற்றுக் கருத்தைச் சொல்லி வருகின்றனர்.[14]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

 1. No Dram of Mercy, Neville Spearman, 1954; Oxford University Press.[1]
 2. Faces of Courage: A Revealing Historical Appreciation of Colonial Malaya's Legendary Kathigasu Family by Norma Miraflor & Ian Ward
 3. Sybil Kathigasu, No Dram of Mercy with an introdcution by Sir Richard Winstedt, London: Neville Spearman. 1954.
 4. Sybil Kathigasu, No Dram of Merch, The Story of a Woman's Courage during the Japanese Occupation of Malaya, Kuala Lumpur: Promentheus Enterprise, 2006.
 5. Faces of courage: incorporating No Dram of Mercy, The Papan Guerillas and Mrs K by Chin Peng and Exploring the Legend by Norma Miraflor & Ian Ward: a revealing historical appreciation of colonial Malaya's legendary Kathigasu family, Singapore: Media Masters, 2006.
 6. Ho Thean Fook, God of the Earth, Ipoh: Perak Academy. December, 2000.
 7. Ho Thean Fook, Tainted Glory, Kuala Lumpur: University of Malaya Press, 2000.
 8. Khoo Salma Nasution & Abdur-Razzaq Lubis, Kinta Valley: Pioneering Malaysia's Modern Development, Perak Academy, 2005.
 9. Abdur-Razzaq Lubis & Khoo Salma Nasution, Raja Bilah and the Mandailings of Perak (1875-1911), Malayan Branch of the Royal Asiatic Society (MBRAS), 2003.
 10. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வீரமங்கை சிபில் கார்த்திகேசு, மலேசிய நண்பன், 9 மே 2010.
 1. Her life story and struggles are immortalised in the book called ‘No Dram of Mercy’ by Neville Spearman (Oxford University Press, 1954).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபில்_கார்த்திகேசு&oldid=2718406" இருந்து மீள்விக்கப்பட்டது