நீதிமன்றம்
நீதிமன்றம் (court of law) அ நீதிமன்று(ஈழ வழக்கு) சட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும் உரிமையியல், குற்றவியல் அல்லது நிர்வாக வழக்குகளில் சட்டவிதிகளுக்குட்பட்டு நீதி வழங்கவும் அதிகாரம் கொண்ட, பெரும்பாலும், ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும்[1].
மரபுச்சட்டம் மற்றும் உரிமையியல் சட்டங்களில் நீதிமன்றங்கள் தகராறுகளை தீர்ப்பதில் mukkiyaகொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குடிமக்களும் தமது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை அணுக இயலும் எனப் பொதுவாக அறியப்படுகிறது. குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் தங்களது எதிர்வாதத்தை எடுத்துரைக்க உரிமை கொண்டவர்கள்.
நீதிமன்றங்கள் கிராமங்களில் சிறுவீடுகளிலிருந்து (ஆலமரத்தடி பஞ்சாயத்திலிருந்து) மாநகரங்களில் பல நீதிமன்ற அறைகளுடன் பெரும் கட்டிடங்கள் வரை அமைந்துள்ளன.
நீதிமன்றம் தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் மனுக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரங்களுக்குட்பட்டு (ஆள்வரை 'jus dicere' என வழங்கப்படும்) தீர்வு காணும் ஒரு வழக்காடு மன்றம். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் மூன்று தரப்புகள் இன்றியமையாத பங்கு வகிக்கும் - வாதி, பிரதிவாதி, நீதிபதி (actor, reus, and judex)[2], எனினும் பெரும்பாலான நீதிமன்றங்களில் வக்கீல்கள், அமீனாக்கள், செய்தியாளர்கள் மற்றும், சில மன்றங்களில்,சான்றாயர்களும்(jury) இருப்பர்.
"நீதிமன்றம்" என்ற சொல் பெரும்பாலும் மன்றத்தலைவரான நீதியரசரையும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தையும் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவில் 'கோர்ட்' என்பது சட்டப்படி நீதிபதியையே குறிக்கும்[3].
ஆள்வரை
தொகு'ஆள்வரை' (Jurisdiction), ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு நபர் அல்லது உரிமை மீதான அதிகாரம். நீதிமன்றங்களுக்கு தனிப்பட்ட அதிகாரவரம்பும் துறைசார்ந்த அதிகாரவரம்பும் இருக்கவேண்டும். ஒவ்வொரு நாடும் அந்நாட்டிற்குரிய நீதி பரிபாலன அமைப்பை தீர்மானிக்கிறது. சில நாடுகளில் (எ-டு ஐக்கிய அமெரிக்கா) அந்நாட்டு மாநிலங்கள் தீர்மானிக்கின்றன. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், நிலைமுறை (hierarchy) ஆகியன வரையறுக்கப்பட்டு அதற்கான சட்டப்படியான இயற்றுச்சட்டங்களும் அரசியலைப்பில் உரிய வழிவகைகளும் நிறைவேற்றப்படுகின்றன.
விசாரணை மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள்
தொகுநீதிமன்றங்கள் விசாரணை நீதிமன்றங்கள்,(அல்லது முதற்கட்ட நீதிமன்றங்கள் அல்லது மூல ஆள்வரம்பு) மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் என வகைபடுத்தப்படுகின்றன. இந்திய நீதித்துறை அமைப்பில், நிலைமுறைப்படி:
- உரிமையியல்
- மாவட்ட முன்சீப் (முதற்கட்டம்)
- சார்பு நீதிபதி
- மாவட்ட நீதிபதி (முதன்மை,முறையீடு,மறுவிசாரணை)
- குற்றவியல்
- நீதிமுறைமை நடுவர் (முதற்கட்டம்)
- உதவி செசன்சு நீதிபதி
- தலைமை நீதிமுறைமை நடுவர்
- செசன்சு நீதிபதி (முதன்மை,முறையீடு,மறுவிசாரணை)
- மாநில உயர்நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம்
நீதி மறு ஆய்வு
தொகுஇயற்றப்பட்ட சட்டமொன்றை அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என தள்ளுபடி செய்ய நீதித்துறைக்கு உள்ள அதிகாரம் நீதி மறு ஆய்வு என்றழைக்கப்படுகிறது. இம்முறை அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் இம்முறை பின்பற்றப்படவில்லை.
இந்தியாவில் மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இவ்வதிகாரம் கீழ்கண்ட இனங்களில் வழங்கப்பட்டுள்ளது:
- மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஏற்படும் சச்சரவுகள் மற்றும் தாவாக்கள்.
- அரசியல் அமைப்பில் உள்ள விதி(சரத்து) குறித்தான ஐயங்களோ அல்லது வேறுபட்ட கருத்துக்களோ நிலவுமானால் அவற்றை விளக்குவது அல்லது விமர்சிப்பது
- ஆதார உரிமைகள் பாதுகாப்பு
- மாநில சட்டமன்றங்களால், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் அரசியல் அமைப்பிற்கு எதிரான சட்டங்கள்.
பொது
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ வாக்கர், டேவிட் (1980), ஆக்ஸ்போர்ட் சட்டத் துணைவன் (Oxford Companion to Law), ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம், p. 301, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019866110X
- ↑ ஒவ்வொரு நீதிமன்றத்திலும் மூன்று தரப்புகள் இன்றியமையாத பங்கு வகிக்கும் - வாதி, பிரதிவாதி,நீதிபதி: வாதி, உரிமையிழந்தவர்/தவறிழைக்கப்பட்டவர்; பிரதிவாதி, , தவறிழைத்தவர்; நீதிபதி அல்லது நீதியரசர், தரவுகளின் உண்மையை ஆய்ந்து,எந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக உள்ளது என தேர்ந்து தீங்கு இழைக்கப்பட்டிருந்த்தாக தெரிந்தால் அதற்கான தீர்ப்பையும் தீர்வையும் வழங்குபவர். பெரிய நீதிமன்றங்களில் வழக்குரைனர்களும் ஆதரவுரைனர்களும் உதவியாக இருப்பர். பார்க்கBlackstone's Commentaries, Book III., Ch. 3., p. 25, Yale Law School, Avalon Project
- ↑ பார்க்க: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உச்சநீதிமன்றம் என்பது தலைமை நீதிபதி உடன் எட்டு இணை நீதிபதிகளும் உட்கொண்டது.
வெளி இணைப்புகள்
தொகு- அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றங்கள்
- Courtprep, கனடிய நீதித்துறை அமைப்பு.