குற்றவியல் சட்டம்
குற்றவியல் சட்டம் (Criminal law) குற்றங்களைக் குறித்தான சட்ட அமைப்பு ஆகும். இது சமூக நடத்தையை ஒழுங்குபடுத்துவதுடன் மிரட்டல், தீங்கு விளைவிப்பது, மற்றும் உடல்நலம், பாதுகாப்பு, மக்களின் நன்னெறி நலம் ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவிக்கின்ற பிற செயல்களை தடை செய்கிறது. இந்தச் சட்டங்களை மீறுவோருக்கான தண்டனைகளையும் இது உள்ளடக்கியது. குற்றவியல் சட்டத்திற்கு மாறாக தண்டனையை விட பிணக்குத் தீர்வு மற்றும் இழப்பீடு குறித்தான சட்ட அமைப்பு பொதுச் சட்டத்தில் குடிமையியல் சட்டம் என வரையறுக்கப்படுகிறது.
வரலாறு
தொகுமுதல் நாகரிகங்கள் பொதுவாக குடியியல் சட்டத்தையும் குற்றவியல் சட்டத்தையும் வேறுபடுத்தவில்லை. முதன்முதலாக எழுதப்பட்ட சட்டங்களை சுமேரியர்கள் வடிவமைத்திருந்தனர். சுமார் கி.மு 2100-2050களில் உர்-நம்மு என்ற சுமேரிய மன்னர் உலகின் மிகத் தொன்மையான சட்ட விதிகளை எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[1] இதற்கும் முன்னதாக an earlier இலகாசின் உருகாகினவின் விதிகளும் இருந்துள்ளது. மற்றுமொரு முதன்மையான கோட்பாடாக அம்முரபி கோட்பாடு கருதப்படுகிறது. இது பாபிலோனிய சட்டத்தின் அடிப்படையாக இருந்தது. பண்டைக் கிரேக்கத்தின் தொன்மையான குற்றவியல் சட்டங்களின் சிறுபகுதிகளே கிடைக்கப்பெற்றுள்ளன; சோலோன் மற்றும் டிராகோ சட்டங்கள்.[2]
உரோமை சட்டத்தில் கையசு விவரித்த 12 விழுமியங்கள் மீதான கருத்துக்கள் குடியியல் மற்றும் குற்றவியல் சட்டங்களை விளக்கியது. தாக்குதலும் வன்முறை திருட்டும் சொத்தை அத்து மீறுவதற்கு ஒப்பானது. இத்தகைய சட்டங்களை மீறுதல் (vinculum juris) சட்டப்படி ஈட்டுப்பணம் கொடுக்க வேண்டியதை கட்டாயமாக்கியது. உரோமைப் பேரரசின் குற்றவியல் சட்டங்கள் நூலாகத் தொகுக்கப்பட்டன.[3] 12ஆம் நூற்றாண்டில் உரோமை சட்டம் மீளமைக்கப்பட்டபோது ஆறாம் நூற்றாண்டில் வகைப்படுத்தப்பட்ட நீதி முறைமைகள் அடித்தளமாக அமைந்தன. இதுவே ஐரோப்பிய சட்டங்களில் குடிமையியல் சட்டத்திற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் வேறுபாட்டை நிறுவ உதவியது.[4]
குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கான தற்கால வரையறை இங்கிலாந்தின் நோர்மன் படையெடுப்பின் போது உருவானது.[5] ஒரு நாடு நீதியை நீதிமன்றம் ஒன்றின் மூலம் வழங்கும் ஏற்பாடு 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது; இதற்காக காவல்துறை உருவாக்கப்பட்டது. இந்த மேம்பாட்டை அடுத்து குற்றவியல் சட்ட செயலாக்கத்திற்கு முறையான அமைப்பு கிடைத்தது.
குற்றவியல் சட்டத்தின் நோக்கங்கள்
தொகுசட்டத்தின்படி நடக்காமைக்கு தீவிர பாதிப்புக்களையும் தண்டனைத் தடைகளையும் விதிப்பதில் குற்றவியல் சட்டம் தனித்து விளங்குகிறது.[6] ஒவ்வொரு குற்றமும் குற்றக் கூறுகளை கொண்டுள்ளன. மிகவும் கடுமையான குற்றங்களுக்கு சில இடங்களில் மரணதண்டனையும் வழங்கப்படுகிறது. உடல் வருத்தும் சவுக்கடி அல்லது கட்டி வைத்து அடிப்பது போன்ற தண்டனைகளும் வழங்கப்படலாம்; இத்தகைய உடல் வருத்தும் தண்டனைகள் உலகின் பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பல்வேறு நிபந்தனைகளுடன் சிறையில் அடைக்கப்படலாம். சிறையிருப்பு தனிமையில் இருக்கலாம். சிறைவாசம் ஒருநாளிலிருந்து வாழ்நாள் முழுமையுமாக இருக்கலாம். கட்டாய அரசுக் கண்காணிப்பு மற்றும் வீட்டுச்சிறை தண்டனைகளும் வழங்கபடலாம். பிணைகளில் குறிப்பிட்ட செயல்முறைக்கேற்ப வாழ வேண்டியிருக்கலாம். குற்றம் இழைத்தவருக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது சொத்து அல்லது பணம் கைப்பற்றப்படலாம்.
குற்றவியல் சட்டத்தை செயலாக்க வழங்கப்படும் இந்த தண்டனைகளுக்கு ஐந்து நோக்கங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: பழிக்குப் பழி, குற்றத்தடுப்பு, செயல் முடக்கம், சீர்திருத்தம் மற்றும் மீளமைப்பு. ஒவ்வொரு நாட்டிலும் இவற்றில் ஒவ்வொன்றிற்கும் கொடுக்கப்படும் மதிப்பு மாறுபடலாம்.
- பழிதீர்ப்பு – குற்றவாளிகள் ஏதேனும் வகையில் துன்பப்பட வேண்டும். இதுவே மிகப் பரவலாக எதிர்பார்க்கப்படும் இலக்கு ஆகும். குற்றமிழைத்தவர்கள் முறையற்ற ஆதாயத்தை எடுத்துள்ளனர் அல்லது நீதியற்ற தீங்கை விளைவித்துள்ளனர்; எனவே குற்றவியல் சட்டம் "நீதியை நிலைநிறுத்த" குற்றமிழைத்தவர் ஏதேனும் துன்புறும் கேடு பெற வேண்டும். தாங்கள் கொல்லப்படாதிருக்கவே மக்கள் சட்டத்திற்கு அடிபணகின்றனர்; எனவே சட்டத்தை மீறுபவர்கள் சட்டத்தினால் தங்களுக்கு அளிக்கபட்ட உரிமையை இழக்கின்றனர். இதன்படி கொலைக்குற்றம் இழைத்தவருக்கு மரணதண்டனை வழங்கப்படலாம். இதைச் சார்ந்த ஒரு கருதுகோளாக "சமனை சீராக்குவது" உள்ளது.
- குற்றத்தடுப்பு – குற்றமிழைத்தவர் மீது தனிநபருக்கான தடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன் நோக்கம் குற்றவாளி மீண்டும் குற்றமிழைக்க விருப்பமில்லாதபடி போதுமான தண்டனை வழங்குவதாகும். பொது குற்றத்தடுப்பு சமூகத்தை நோக்கி மேற்கொள்ளப்படுவதாகும். குற்றமிழைத்தவர்களுக்கு போதிய தண்டனை வழங்குவதன் மூலம் சமூகத்தில் மற்றவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்யாதிருக்க தூண்டப்படுகிறார்கள்.
- செயல் முடக்கம் – குற்றமிழைப்போரை சமூகத்திடமிருந்து அகற்றி அவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுதல். இதனைப் பெரும்பாலும் சிறைத் தண்டனை மூலம் நிறைவேற்றுகின்றனர். மரண தண்டனையும் நாடு கடத்தலும் இதே நோக்கத்துடன் வழங்கப்பட்டன.
- சீர்திருத்தம் – குற்றவாளியை பண்படுத்தி ஒரு பயனுள்ள குடிமகனாக மாற்றிடும் நோக்கமுடையது. குற்றமிழைத்தவருக்கு போதிப்பதன் மூலம் அவரை நன்னெறிக்குத் திருப்பி மேலும் குற்றம் இழைக்காமல் இருக்கச் செய்தல்.
- மீளமைப்பு – இது பாதிக்கப்பட்டவரின் தரப்பிலான நடவடிக்கை. இதன் நோக்கம், அரசு மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவரின் பாதிப்பைச் சரி செய்தல். காட்டாக, பணம் கையாடியவரிடமிருந்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவரின் இழப்பை ஈடுகட்டுதல். மீளமைப்புடன் குற்றவியலின் மற்ற முக்கிய நோக்கங்களும் குடிமையியல் சட்ட கூறுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
குற்றவியல் சட்ட ஆட்சி எல்லைகள்
தொகுபொது பன்னாட்டு சட்டம் வட்டாரங்கள் மற்றும் சமூகம் முழுமைக்கும் தீங்கான, கோரமான குற்றச்செயல்களை விரிவாக கையாள்கிறது. தற்கால பன்னாட்டு குற்றவியல் சட்டத்திற்கான அடித்தளமாக நியூரம்பெர்க் தீர்ப்பாயம் அமைந்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்து ஐரோப்பா முழுதிலும் நாசித் தலைவர்கள் பங்குகொண்ட இனப்படுகொலை மற்றும் பிற தீச்செயல்களுக்காக விசாரிக்கப்பட்டனர். இந்த நியூரம்பெர்க் விசாரணைகள் மூலம் ஒரு தனிநபர் அரசின் சார்பாக செயல்பட்டாலும் பன்னாட்டு சட்டத்தை மீறியதற்காக எவ்வித இறையாண்மை விலக்கும் இன்றி விசாரிக்கப்படலாம் என்ற கருத்தை நிறுவியது. 1998இல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Kramer, Samuel Noah. (1971) The Sumerians: Their History, Culture, and Character, p.4, University of Chicago பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-45238-7
- ↑ "Law and Order in Ancient Civilizations பரணிடப்பட்டது 2009-07-31 at the வந்தவழி இயந்திரம்". James F. Albrecht, Professor, St. John’s University (NYC).
- ↑ Criminal Law.பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு.
- ↑ "Law, Criminal Procedure," Dictionary of the Middle Ages: Supplement 1, New York: Charles Scribner’s Sons-Thompson-Gale, 2004: 309-320
- ↑ see, Pennington, Kenneth (1993) The Prince and the Law, 1200–1600: Sovereignty and Rights in the Western Legal Tradition, University of California Press
- ↑ Dennis J. Baker (2011). "The Right Not to be Criminalized: Demarcating Criminal Law's Authority". Ashgate. Archived from the original on 2011-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.