இந்தோனேசியத் தமிழர்
தமிழ் பின்புலத்துடன் இந்தோனேசியாவில் வசிக்கும் தமிழர் இந்தோனேசியாத் தமிழர் எனப்படுவர். இந்தோனேசியாவில் தமிழர் வரலாறு முதலாம் ராஜேந்திர சோழரின் படையெடுப்புகளுடன் (கிபி 1023 - 1026) தொடங்குகிறது. ஆனாலும், தமிழர்கள் ஆயிரத்தெந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே வணிக நிமித்தம் அங்கு வந்து போயிருந்தனர். ஆங்காங்கு சில பட்டினங்களை ஏற்படுத்திக்கொண்டு அங்கு வர்த்தக மையங்கள் போன்றவற்றை வைத்திருந்தனர். ராஜேந்திர சோழர் படையெடுப்பின்போது சில இடங்களில் தமிழர்கள் நன்கு வளமுடன் வாழ்ந்துகொண்டிருந்தனர். முக்கியமான பல ஊர்களில் அவர்களும் இருந்தனர். சில தமிழர் மன்னர் குடியினரும் வந்து அரசுகளை நிறுவியிருக்கின்றனர். அவர்கள் நாளடைவில் அங்குள்ள மக்களுடன் கலந்துவிட்டனர்[1].[மேற்கோள் தேவை]
அதன் பின்னர் 1830களின் டச்சுக் குடியேற்றக்காரர்களால் தமிழ்நாட்டில் இருந்து தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு வருவிக்கப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் தொழில் பொருளாதார வாய்ப்புகள் தேடி மேலும் தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். வடக்கு சுமாத்திரா மாநிலத்தின் மெடான் நகரில் மாத்திரம் 5,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வசிக்கின்றனர்.[2] இது தவிர ஜகார்த்தா, தஙராங், பண்டுங், சுராபாயா, மலாங் போன்ற இடங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். 2009 இலங்கைப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் சில நூறு பேர் இங்கு அகதிகளாக வந்து வாழ்கிறார்கள்.
இந்தோனேசியாவில் பல தமிழர் அமைப்புகளும் இயங்குகின்றன. இந்தோனேசியத் தமிழர்கள் தமது தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிருந்தாலும், சரியாகத் தமிழ்ப் பேசும் நிலை மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலானோர் இந்தோனேசிய மொழியையே தமது முதன்மொழியாகப் பேசுகின்றனர். அவர்கள் தமிழிற் பேசினாலும் இடைக்கிடையே இந்தோனேசிய மொழிச் சொற்களைக் கலந்துவிடுகின்றனர்.