புதிர் எடுத்தல்

உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கு புதிர் எடுத்தல் எனப்படும். தைப்பூச நாளில் சில இடங்களில் புதிர் எடுத்தல் நடைமுறையில் உள்ள போதிலும் சில இடங்களில் வயல் அறுவடையைத் தொடர்ந்து வரும் நாள் புதிர் எடுத்தல் நடைபெறும்.

புதிர் சமையல் இறைவனுக்கு படைக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவிட்டபின் உண்ணும் வழக்கம் காணப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு அயலவர்களையும் உறவினர்களையும் அழைப்பர். குத்தகைக்கு வயல் எடுத்து விளைச்சல் செய்பவர்கள் அறுவடையின் பின் நில உடைமையாளருக்கு புதிர் நெல் வழங்குவர். இது தவிர நெல் விளைச்சல் செய்யாத உறவினர்களுக்கும் புதிர்நெல் வழங்கும் வழக்கம் காணப்படுகின்றது. தமிழர்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றில் உழவு செய்யாதவர்களும் மரபுப்படி தம் வீட்டில் புதிர் எடுக்கும் வரை புது நெல்லை உண்ணாத வழக்கமும் உண்டு.

யாழ்ப்பாணத்தில் புதிர் எடுத்தல் தொகு

தைப்பூசத்தன்று தான் யாழ்ப்பாண மக்கள் புதிரெடுப்பர். அன்று விடிகாலையில் எழுந்து வீடு வாசலைப் பெருக்கி வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் போன்றவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று ஞாயிறை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று வழிபாட்டு அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய நண்பகலுணவு சமைக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிர்_எடுத்தல்&oldid=1722181" இலிருந்து மீள்விக்கப்பட்டது