இராமலிங்க அடிகள்

திருவருட்பிரகாச வள்ளலார்
(வள்ளலார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கில மொழி: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஓர் சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.

இராமலிங்க சுவாமிகள்
திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்
பிறப்பு(1823-10-05)5 அக்டோபர் 1823
மருதூர், சிதம்பரம்,
இன்றைய கடலூரில், தமிழ்நாடு, இந்தியா
காணாமல்போனதுசனவரி 30, 1874 (அகவை 50)
மேட்டுக்குப்பம், வடலூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் "சத்ய ஞான சபை" என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளை கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாக 'கொல்லாமை' கொள்கை ஆகிய உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையை கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.

பிறப்பு

தொகு

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சின்னகாவனம் பகுதிக்கு சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

கல்வி

தொகு
 
திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் உருவ ஓவியம்

இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை.

இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,

என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.

காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன் இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.[சான்று தேவை]

பசியாற்றல்

தொகு
 
அரிசி மூட்டைகள் இருக்கும் இராமலிங்க அடிகளால் உருவாக்கப்பட்ட தருமசாலை

இராமலிங்க அடிகள் மே 23, 1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.[1] மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்

தொகு
  1. அருளாசிரியர்
  2. இதழாசிரியர்
  3. இறையன்பர்
  4. உரையாசிரியர்
  5. சமூக சீர்திருத்தவாதி
  6. சித்தமருத்துவர்
  7. சிறந்த சொற்பொழிவாளர்
  8. ஞானாசிரியர்
  9. தீர்க்கதரிசி
  10. நூலாசிரியர்
  11. பசிப் பிணி போக்கிய அருளாளர்
  12. பதிப்பாசிரியர்
  13. போதகாசிரியர்
  14. மொழி ஆய்வாளர் (தமிழ்)
  15. பண்பாளர்

சத்திய ஞான சபை

தொகு
 
வடலூரில் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட சத்திய ஞான தர்ம சபையின் முக்கிய நுழைவாயில்
 
புலைக் கொலையைத் தவிர்த்தலை வலியுறுத்தும் வண்ணம் நுழைவாயிலில் காணப்படும் பலகை

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் (அதாவது, உண்மையான ஆன்மீகத்துக்கு சாதி ஒரு பொருட்டல்ல, எந்த சாதியினராக இருந்தாலும் சன்மார்க்கி ஆகலாம் என்ற பொருளில் சாதி இல்லை என்று சொன்னார்) இதை தவறாக புரிந்துகொண்ட உயர் சாதி மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

இவருடைய காலத்தில் இருந்தவர்கள்

தொகு

இராமலிங்க அடிகள் கோட்பாடுகள்

தொகு

சாகாக்கல்வி ஜீவகாருண்யம்

இராமலிங்க அடிகள் கொள்கைகள்

தொகு
  1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
  2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்
  3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது
  4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
  5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
  6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
  7. புலால் உணவு உண்ணக்கூடாது
  8. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
  9. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
  10. மத வெறி கூடாது

எம்மத நிலையும் நின் அருள்

நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன்

எந்தாய்

— திருவருட்பா, ஆறாம் திருமுறை ,3639

அதாவது எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

தொகு
  1. நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
  2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
  3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
  4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
  5. பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
  6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
  7. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
  8. குருவை வணங்கக் கூசி நிற்காதே
  9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
  10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
  11. பிறரை இகழ்ந்து பேசாதே..
  12. பிற ௨யிர்களிடமும் ௮ன்பு கொள்க..

வள்ளலார் பதிப்பித்தவை

தொகு
  1. சின்மய தீபிகை
  2. ஒழிவிலொடுக்கம்
  3. தொண்டைமண்டல சதகம்

இயற்றிய உரைநடை

தொகு
  1. மனுமுறைகண்ட வாசகம்
  2. ஜீவகாருண்ய ஒழுக்கம்

திருவருட்பா

தொகு

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.[2] இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.

அருள் விளக்க மாலைப் பாடல் (4174)

தொகு

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

[3]

கண்டன நூல்கள்

தொகு

வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய சைவவாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுத்துக்களையும் புறம் தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர். 1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்க ஆரம்பித்தது. 1869 இல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது; இது அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.

1904 இல் நா. கதிரைவேற்பிள்ளை வள்ளலாருக்கு எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக ம. தி. பானுகவி என்பவர், 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்.[4]

வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.

நினைவு அஞ்சல்தலை

தொகு

இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகத்து 17இல் அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.[5]

விமர்சன கருத்துக்கள்

தொகு

ஒருவேளை, இராமலிங்க சாமியின் கோட்பாடு மதங்களுக்கு அப்பாறபட்ட தனித்துவமான வழிபாட்டு முறையாகும். அவருடைய ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கில் எவருமே அத்தகைய விளைவை எட்டவில்லை. இராமலிங்கத்தின் வழிபாட்டு முறை பிற மதத்தில் நீண்ட காலம் அறியப்பட்டுள்ளது. பசிக்கு உணவளிக்க அவர் பிரபலமானார். இந்த அர்த்தத்தில், இராமலிங்கம் என்ற பெயர் தன்னைப் பற்றி பேசுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dailythanthi.com/taxonomy/term/72364
  2. http://www.tamilvu.org/library/nationalized/pdf/C.Srinivasan/anintrotoramlingaswami.pdf[தொடர்பிழந்த இணைப்பு] Introduction to philosophy of ramalinga swami
  3. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பக்கம் 96
  4. "மறுப்பு நூல்கள். வள்ளலார் முதல் ஏங்கல்ஸ் வரை". தீக்கதிர். 28 அக்டோபர் 2013. p. 8. Archived from the original on 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2013.
  5. இராமலிங்க அடிகள்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு

இவர் பிறந்த அக்டோபர் 5ம் நாள் இனி தனிப்பெரும் கருணை நாள்.. https://mobile.twitter.com/mkstalin/status/1445292701012819975

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமலிங்க_அடிகள்&oldid=4168535" இலிருந்து மீள்விக்கப்பட்டது