சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

சமரச சுத்த சன்மார்க்க சங்கம், வள்ளலார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரால் நிறுவப்பட்டது. இவர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு பிறந்தார். 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இவர் ஆன்மீகத்தில் கொண்ட பற்று காரணமாக அவரது பாடல்களில் சமுதாய சீர்திருத்தங்கள் மற்றும் சமய உணர்வுகள் இரண்டறக் கலந்திருந்தன. ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

சாதி வேறுபாடற்ற சமுதாயம் தொகு

இராமலிங்க அடிகள், தமிழ் மக்களிடையே சமய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தினார். கடவுள் வழிகாட்டுதலால் மட்டுமே சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று எடுத்துரைத்ததோடு “இறைவன் ஜோதி வடிவானவன்” என்றும் ’அருட்பெரும் ஜோதியாக’ இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். இவர் பிறப்பினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தார். சாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவவேண்டும் என்றும் பாடுபட்டார்.

சத்திய தருமசாலை தொகு

பசி மற்றும் வறுமையே சமுதாயத்தின் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் என வள்ளலார் நம்பினார். ஏழைக்கு உணவு அளிப்பதே சிறந்த வழிபாடு என உறுதியாக நம்பினார். எனவே ஏழைகளின் பசியை நீக்குவதற்காக ”சத்திய தருமசாலையை” வடலூரில் நிறுவினார். சத்திய தருமசாலையின் தொடக்க நாளன்று அடுப்பிற்குத் தீமூட்டி இந்தத் தீ எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கட்டும், அப்போது தான் ஏழைகளுக்கு எப்பொழுதும் உணவு அளிக்க முடியும் என உறுதியுடன் கூறினார். இவர் மேற்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்றவண்ணம் ஆண்டு முழுவதும் சாதி சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

ஜீவகாருண்யம் தொகு

வள்ளலார் அன்பு வழியில் ஆன்மீகத்தை அடையலாம் என உறுதியாக நம்பினார். ஆகவே மனிதர்களிடத்து மட்டுமன்றி தாவரங்கள், புழு, பூச்சிகள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினார். இதனையே "ஜீவகாருண்யம்" என்று அழைக்கிறோம்.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனக் கூறிய வள்ளலார், உயிர்களிடத்து எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதை அரியலாம். மூடப்பழக்கங்களையும், சமய சடங்குகளையும் எதிர்த்த வள்ளலார் உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டித்தார். சைவ உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

திருவருட்பா தொகு

மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி என்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானதாகும். கடவுள், கருணை மற்றும் அறிவு வடிவமாகத் திகழ்கிறார். ஆகவே கடவுளை அடையும் வழி உயிர்களிடத்து காட்டும் கருணையும், இரக்கமும் ஆகும் என்று குறிப்பிட்டார்.

தியானம் செய்வதே வழிபாடு என்று கருதினார்.1870-ஆம் ஆண்டு சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு வழிபாட்டுக் கூட்டங்கள் மத வேறுபாடின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தினார். இவரது பக்திப் பாடல்கள் தொகுக்கப்பட்டு, அத்தொகுப்பு 'திருவருட்பா' என்றழைக்கப்படுகிறது.

வெளியிணைப்புகள் தொகு