கருணீகர்
கருணீகர் (Karuneegar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சென்னை போன்ற வட மாவட்டங்களில் கிராமக் கணக்குத் தொழிலைச் செய்த வருகின்றனர்.
புராண வரலாறு
கருணீகர் குலத்தினர் தங்களை, சித்திரகுப்தர் வழியினர் என கூறிக் கொள்கின்றனர். கருணீகர்களின் தோற்றம் குறித்து ஸ்ரீ கருணீக புராணம் மற்றும் ஆதித்திய புராணம் முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது.[சான்று தேவை]
பெயர்க் காரணம்
கர்ணம்+ஈகம்+அர் = கருணீகர். கர்ணம்- காது; ஈகம் – தன்மைப் பொருட்டாய் வருவதோர் வடசொல்; கண்ணால் கண்டறியப் பெறாதன செவியான் அறிந்து நம்பப் பெறுதல் போல, பண்டைய அரசர்கள் தாம் கண்ணுறப் பெறாதவற்றை இவர்கள் கணக்குகளால் மெய்பெற அறிந்து எழுதி வைப்பதால் இப்பெயர் பெற்றனர் என கருணீக புராணம் இயற்றிய அ. வரதநஞ்சைய பிள்ளை கூறுகிறார்.
பிரிவுகள்
இச்சமூகத்தில் சீர் கருணீகர், சரட்டுக் கருணீகர், கைகாட்டிக் கருணீகர், மற்றவழிக் கருணீகர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கருணீகர் என பல பிரிவுகள் உள்ளன. இதில் சரட்டுக் கருணீகர் மட்டும் வைணவ மரபைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். கருணீகர்கள் பிரிவுகள் ஒன்றோடொன்று திருமண உறவு வைப்பதில்லை.[1] கருணீகர்களில் 64 வகையான கோத்திரங்களும், 32 மடங்களும் உள்ளது. தமிழ்நாட்டில் பிள்ளை பட்டம் இட்டுக் கொள்ளும் இவர்கள் பிரித்தானிய இந்தியாவில் கர்ணம் எனும் கணக்குப் பிள்ளை பணி செய்தவர்கள்.[சான்று தேவை]
கோயில்
காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோயிலை கருணீக மரபைச் சேர்ந்தவர்கள், குடமுழுக்கு செய்வித்தனர். இக்கோயிலை கருணீக குலத்தினர் பராமரித்து வருகின்றனர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
தமிழ்நாடு சாதிகள் பட்டியலில், கருணீகர்களின் அனைத்து பிரிவுகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில், வரிசை எண் 53இல் உள்ளது.[2]