பார்வதி

இந்துக்கடவுள்

பார்வதி அல்லது உமையவள் அல்லது மலைமகள் அல்லது இகன்மகள் என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் சிவபெருமானின் துணைவியும் ஆவார்.[2] இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.[3][4][5] சக்தியின் பொதுவான வடிவமாக பார்வதியைக் கொள்வதே மரபாகும். இந்தியத் தொன்மங்களில் ஆயிரத்துக்கும் மேலான வடிவங்களும், அம்சங்களும் பெயர்களும் புராணக்கதைகளும் பார்வதிக்கு உண்டு. லட்சுமி, சரசுவதி ஆகியோருடன் முத்தேவியர்களில் ஒருவராகப் பார்வதி இருக்கிறார்.[6] மலையரசனான இமவான் மற்றும் மேனை ஆகியோரின் மகளாகப் பார்வதி பிறந்தார்.[7] இவர் கங்கைக்கு இளையவர் ஆவார்.[8] முருகன், பிள்ளையார் ஆகியோரின் தாயும் இவரே. பார்வதியை விட்டுணுவின் தங்கையாகவும் கருதுவது உண்டு.[9]

பார்வதி
அதிபதிசிவசக்தி
வேறு பெயர்கள்அகசை, அகிலாண்டநாயகி, அங்கணி, அத்திநந்தனி, அந்திரி, அநந்தவிபவை, அபிராமி, அம்பா, அம்பாள், அம்பிகை, அம்பை, அமிர்தை, அற்புதை, அறச்செல்வி, அனந்தவிபவை, அனுபவை, ஆரணங்கு, ஆரணி, ஆரியை, ஆவரணி, ஆனந்தி, இகன்மகள், இந்திராட்சி, இமயவதி, இமயவல்லி, இமாசலை, இலலிதை, ஈசுவரி, ஈசை, உடையாள், உமா, உமாதேவி, உமை, உமையவள், உமையாள், உலகமீன்றாள், ஏகை, ஐமவதி, கங்காளி, கபாலி, கவுமாரி, கன்னி, காத்தியாயனி, காமக்கோட்டி, காமாட்சி, கிரிசை, கிரிஜா, கோமதி, கோரி, சகமீன்றவள், சகலமங்கலை, சங்கரி, சடாட்சரி, சடாதரி, சடாதாரி, சதி, சம்பவை, சவுந்தரி, சாத்தவி, சாம்பவி, சாமளை, சித்தை, சிவதூதி, சிவப்பிரியை, சிவவல்லபை, சிற்பரை, சின்மயை, சுவாகை, சைலபுத்திரி தேவி, ஞானவல்லியம், திகம்பரி, திரிபுரசுந்தரி, திரிலோசனி, துர்க்கை, துருவை, நகநந்தினி, நாயகி, நாரி, நிர்க்குணி, நிரஞ்சனி, நிரந்தரி, நிருமலி, நீலமேனியள், பகவதி, பஞ்சமி, பரமகலை, பரமேசுவரி, பரிபூரணி, பருப்பதி, பருவதவர்த்தனி, பருவதி, பரைச்சி, பவதி, பவானி, பார்க்கவி, பார்ப்பதி, பிங்கலை, பிரதானபுருடேச்சுரி, பிரதானை, பிரமவிஞ்சை, புங்கவி, புண்ணியமுதல்வி, புராணை, புருடமோகினி, புவனை, பூதநாயகி, பைரவி, பொன்மலைவல்லி, மகதி, மகாதேவி, மகாமாயை, மகேசுவரி, மங்கலை, மதங்கி, மயேசுவரி, மரகதவல்லி, மலைமகள், மலைவளர்காதலி, மனோன்மணி, மாகேச்சுவரி, மாதங்கி, மாதா, மாதேவி, மாபெலை, மாமாயை, மாயேசுரி, மாயை, மிருடானி, மிருதி, முக்கண்ணி, மேனைமகள், யாமளை, லோபை, வரதை, வரவண்ணினி, வல்லபி, வாக்கியை, வாகீசுவரி, வாமி, விந்தை, விமலை, வேதநாயகி, வேதமுதல்வி, ஸ்கந்தமாதா [1]
தேவநாகரிपार्वती
சமசுகிருதம்Pārvatī
தமிழ் எழுத்து முறைஉமையவள்
வகைமுத்தேவியர், ஆதி பராசக்தி, தேவி
இடம்கயிலை மலை
மந்திரம்ஓம் சக்தி பராசக்தி
ஆயுதம்சூலம், பாசாங்குசம்,
துணைசிவன்
சகோதரன்/சகோதரிகங்கா தேவி, விஷ்ணு
குழந்தைகள்பிள்ளையார், முருகன்,அசோக சுந்தரி

ஈசனுடன் இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றான சைவநெறியின் மையத்தெய்வமாக பார்வதி விளங்குகிறார். உயிர்களின் சிவகதிக்கு உதவுகின்ற சுத்தமாயையும், ஈசனின் சக்தியும்[10] அவளே என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா, தென்கிழக்காசியா முதலான பல இடங்களிலும் பார்வதியின் சிற்பங்களும், நம்பிக்கைக்களும், நிறையவே காணப்படுகின்றன.[11][12]

வேர்ப்பெயரியல்தொகு

பிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள 11ஆம் நூற்றாண்டு ஒடிசாச் சிற்பம், இடப்புறம் ஈசன் துணையாக இருகைகளுடன், வலப்புறம் பிள்ளையார், முருகனுடன் லலிதையாக நாற்கரங்களுடன்1872,0701.54 .

மலையரசன் மகளென்பதால், மலையைக் குறிக்கும் "பர்வதம்" எனும் வடமொழிச் சொல்லிலிருந்து "பார்வதி" எனும் பெயர் வந்தது.[7][13] இதேபொருள்தரும் "கிரிஜை", "சைலஜை", "மலைமகள்" முதலான பல பெயர்கள் அவளுக்குண்டு.[14] லலிதையின் பேராயிரம் வடமொழிநூல், அவளது ஆயிரம் திருநாமங்களைச் சொல்கின்றது.[15] "உமையவள்" என்பது பார்வதிக்குச் சமனாக, பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.[16] "அம்பிகை"(அன்னைத்தெய்வம்), சக்தி (பேராற்றல்), அம்மன், மகேசுவரி (பேரிறைவி), கொற்றவை (பேரரசி) என்று அவளது பெயர்களின் பட்டியல் நீள்கின்றது. காமாட்சி, அன்னபூரணி ஆகிய பார்வதியின் இருவடிவங்களும் புகழ்பெற்றவை.[17]

வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில்[18] "கௌரி"[19] என்றும், கருமை நிறத்தில் "காளி" என்றும் போற்றப்படும் உமையின் இருவடிவங்களும் பரவலாகப் போற்றப்படுகின்றன,

வரலாறுதொகு

கேன உபநிடதத்தில் (3.12) "உமா ஹைமவதி" எனும் பெயர் காணப்படும் போதும்,, பார்வதி, வேதகாலத்துக்குப் பிந்திய தெய்வம் என சில ஆய்வாளர்கள்[20] கூறுகின்றனர். எனினும் சாயனரின் அனுவாக உரை, தளவாகார உபநிடதத்திலுள்ள "உமா" எனும் பெயரையும் குறிப்பிடுவதால், "உமா", "அம்பிகா" என்றெல்லாம் சொல்லும் வேதத் தெய்வம் பார்வதியே என்பதில் சந்தேகமில்லை.[21]

இராமாயணம், மகாபாரதம் முதலானவற்றிலிருந்து, இதிகாச காலத்தில் (பொ.ஊ.மு. 400 இலிருந்து பொ.ஊ. 400) பார்வதி இன்றைய சிவசக்தியாக இனங்காணப்படுகிறாள். எனினும் காளிதாசன் (ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு) மற்றும் புராணங்கள் (பொ.ஊ. 4 முதல் 13-ம் நூற்றாண்டுகள்) இன்றைய பார்வதியை முழுமைபெறச் செய்யும் வரலாறுகளைக் கூறுகின்றனர். ஆரியர் அல்லாத மலைக்குடிகளின் தொல்தெய்வமே பார்வதி என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது.[14]

உருத்திரன், அக்னி தேவன், இயமன் முதலான வேதகாலத் தெய்வங்களின கலவையாக, சிவன் பெருவளர்ச்சி கண்டதுபோல், உமா, ஹைமவதி, அம்பிகை, காளி, கௌரி, ராத்திரி, அதிதி முதலான பழந்தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளே "பார்வதி" எனும் பெரும் தெய்வத்தைப் படைத்தன.[21][22][23]

 
எல்லோரா குகைச்சிற்பம் - தேவர் புடைசூழ சிவன் - பார்வதி திருமணம்.

தட்கனின் மகளும், ஈசனின் முதல் மனைவியுமான தாட்சாயிணியே மீண்டும், பார்வதியாக அவதரித்ததாக, புராணங்கள் சொல்கின்றன.[24] தாட்சாயணியை இழந்து வருந்திய ஈசன் தியான நிலையில் ஆழ்ந்தார். சிவனை மணக்க பார்வதி தவம் செய்ய முடிவெடுத்தார். அவரின் பெற்றோர் முதலில் அதை மறுத்தனர். பின் அவரது உறுதியைக் கண்டு திகைத்து, அவரது தவத்துக்கு உதவினர். இதற்கிடையிவ் சூரபத்மன் என்னும் அசுரன், பிரம்மதேவரிடம் சிவனின் பிள்ளையைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் காமதேவனை அனுப்பி ஈசனின் தியானத்தைக் கலைத்து பார்வதியைத் திருமணம் செய்து கொள்ள வைக்க முயல்கின்றனர். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்பு பட்டு, காமதேவன் எரிந்து சாம்பலானான். பின்பு ஈசனே மாறுவேடத்தில வந்து, பார்வதியின் மனதைக் கலைக்க முயன்றும் அவர் கலங்காமல் தன் தவத்தைத் தொடர்ந்தார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதியை மணந்து கொண்டார்.[25]

 
பிள்ளையார், முருகனுடன் சிவ - சக்தியர் குடும்பம்

திருமணத்தின் பின் ஈசனுடன் பார்வதியும் கயிலை சென்று வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு பிள்ளையார், முருகன் ஆகியோர் பிள்ளைகளாக அவதரிக்கின்றனர்.[13][26]

மாற்றுக் கதைகள்தொகு

ஹரிவம்சத்தின்படி, ஏகபர்ணை, ஏகபாதலை ஆகியோரின் மூத்த சகோதரியே பார்வதி. தேவி பாகவத புராணம், சிவ மகா புராணம் கந்த புராணம் என்பவற்றின் படி, ஆதிசக்தியை, மலையரசனும் மேனையும் வேண்டித் தவமிருந்ததாலேயே அவள் அவர்களுக்கு மகளாகப் பிறக்கிறாள். பார்வதிக்கு "அசோக சுந்தரி" எனும் மகளொருத்தி உண்டு எனம் நம்பிக்கைகளும் உண்டு.[27]

சிற்பவியலும் குறியீட்டியலும்தொகு

பொதுவாக பேரழகியாக சித்தரிக்கப்படும் பார்வதி,[28][29] செந்துகில் உடுத்து, இருகரத்தினளாகக் காட்சி தருவாள். சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கண்ணாடி, மணி, கலப்பை, கரும்புவில், மலர்ப்பாணம்[5] முதலீயவற்றை ஏந்தி, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடனும் அவள் சித்தரிக்கப்படுவதுண்டு.

இருகரத்தினளாக உள்ளபோது, ஒரு கரத்தை கத்யவலம்பித (கடக) முத்திரையலும், மற்றையதை அஞ்சேல் அல்லது மலரேந்திய முத்திரையிலும் அமைப்பதுண்டு. விளைந்த வயல்களைக் குறிக்கும் மஞ்சள் அல்லது பொன்னிறத்தில் அமைந்த "கௌரி"யின் வடிவத்திலும பார்வதி போற்றப்பட்டுகிறாள்.[30] காளி முதலான பயங்கரமான உருவங்களும், மீனாட்சி, காமாட்சி போன்ற அழகொழுகும் வடிவங்களும் அவளுக்குரியவை. காமனை நினைவுகூரும் கிளி அவளது கரங்களில் காணப்படுவதும் உண்டு.[31]

சிவ சக்தியரை முறையே சிவலிங்கம் - யோனியாகக் குறிப்பது பொதுவழக்கம். இக்குறியீடு, "தோற்றம், மூலம்" என்பவற்றைக் குறிப்பிடுகின்றன[32] ஆண்மை - பெண்மை இணையும் போது தோன்றும் மீளுருவாக்கம், இனப்பெருக்கம், வளமை முதலானவற்றை இலிங்கமும் யோனியும் குறிப்பிடுக்கின்றன.[33]

மாதொருபாகன் - இலட்சியத் தம்பதிகளைக் காட்டும் இந்து எண்ணக்கரு.

பார்வதியின் வடிவங்கள்தொகு

பார்வதி எடுத்த அவதாரங்கள் பல.

விரதங்கள்தொகு

பார்வதி தேவியை கவுரி என்ற வடிவில் வழிபடுகின்றனர். இதனால் கௌரி, அனந்தா திரிதியை, [34] ஜெயபார்வதி விரதம், கோகிலா விரதம், வடசாவித்திரி விரதம் போன்ற விரதங்களை கடைபிடிக்கின்றனர்.

ஜெயபார்வதி விரதம்தொகு

ஆஷாட மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற திரயோதசி திதி நாளை ஜெயபார்வதி விரதம் இருக்கின்றனர். இந்த நாளில் விரதம் இருந்தால் வெற்றிகளை பார்வதி தருவாள் என்பது நம்பிக்கையாகும்.[35]

கோகிலா விரதம்தொகு

கோகிலம் என்ற சொல் கிளியைக் குறிப்பது. கிளியைக் கையில் ஏந்தியிருக்கும் உமையம்மைக்கு இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.[36]

சாவித்திரி விரதம்தொகு

ஆலமரத்திடியில் உள்ள உமா தேவிக்கு இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பார்வதி தேவியை வழிபடுகின்றனர்.[37]

ஆத்ம திரிதியை விரதம்தொகு

வளர்பிறை திரிதியையில் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு சக்தியை வழிபடுவது ஆத்ம திரிதியை விரதம் ஆகும்.[38]

உசாவியவைதொகு

 1. https://ta.wiktionary.org/s/6xvz
 2. Edward Balfour, கூகுள் புத்தகங்களில் Parvati, The Encyclopaedia of India and of Eastern and Southern Asia, pp 153
 3. H.V. Dehejia, Parvati: Goddess of Love, Mapin, ISBN 978-8185822594
 4. James Hendershot, Penance, Trafford, ISBN 978-1490716749, pp 78
 5. 5.0 5.1 Suresh Chandra (1998), Encyclopaedia of Hindu Gods and Goddesses, ISBN 978-8176250399, pp 245-246
 6. Frithjof Schuon (2003), Roots of the Human Condition, ISBN 978-0941532372, pp 32
 7. 7.0 7.1 H.V. Dehejia, Parvati: Goddess of Love, Mapin, ISBN 978-8185822594, pp 11
 8. William J. Wilkins, Uma - Parvati, Hindu Mythology - Vedic and Puranic, Thacker Spink London, pp 295
 9. Edward Washburn Hopkins, கூகுள் புத்தகங்களில் Epic Mythology, pp. 224-226
 10. ஆறுமுகநாவலர், "சைவவினாவிடை"
 11. Ananda Coomaraswamy, Saiva Sculptures, Museum of Fine Arts Bulletin, Vol. 20, No. 118 (Apr., 1922), pp 15-24
 12. Hariani Santiko, The Goddess Durgā in the East-Javanese Period, Asian Folklore Studies, Vol. 56, No. 2 (1997), pp. 209-226
 13. 13.0 13.1 Edward Balfour, கூகுள் புத்தகங்களில் Parvati, The Encyclopaedia of India and of Eastern and Southern Asia, pp 153
 14. 14.0 14.1 Kinsley p.41
 15. Keller and Ruether (2006), Encyclopedia of Women and Religion in North America, Indiana University Press, ISBN 978-0253346858, pp 663
 16. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 68. https://archive.org/details/indiathroughages00mada. 
 17. Kinsley pp. 142-143
 18. Ernest Payne (1997), The Saktas: An Introductory and Comparative Study, Dover, ISBN 978-0486298665, pp 7-8, 13-14
 19. Edward Balfour, கூகுள் புத்தகங்களில் Parvati
 20. Kinsley p.36
 21. 21.0 21.1 John Muir, கூகுள் புத்தகங்களில் Original Sanskrit Texts on the Origin and History of the People of India, pp 422-436
 22. Weber in Hindu Mythology, Vedic and Purbnic By William J. Wilkins p.239
 23. Tate p.176
 24. William J. Wilkins, Uma - Parvati, Hindu Mythology - Vedic and Puranic, Thacker Spink London, pp 300-301
 25. Kinsley p.43
 26. Ganesa: Unravelling an Enigma By Yuvraj Krishan p.6
 27. James W. Haag et al (2013), The Routledge Companion to Religion and Science, Routledge, ISBN 978-0415742207, pp 491-496
 28. Wilkins pp.247
 29. Harry Judge (1993), Devi, Oxford Illustrated Encyclopedia, Oxford University Press, pp 10
 30. The Shaktas: an introductory comparative study Payne A.E. 1933 pp. 7, 83
 31. Devdutt Pattanaik (2014), Pashu: Animal Tales from Hindu Mythology, Penguin, ISBN 978-0143332473, pp 40-42
 32. James Lochtefeld (2005), "Yoni" in The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, pp. 784, Rosen Publishing, ISBN 0-8239-2287-1
 33. James Lochtefeld (2005), "Yoni" in The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, pp. 784, Rosen Publishing, ISBN 0-8239-2287-1
 34. தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 3
 35. தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 4
 36. தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8
 37. தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8
 38. தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 2


"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி&oldid=3705628" இருந்து மீள்விக்கப்பட்டது