கயிலை மலை
கயிலாய மலை, கைலை மலை, கைலாச மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் இமயமலை உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு புகழ் பெற்ற பர்வதம் ஆகும். இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் சிந்து நதி, சட்லெச்சு ஆறு, காக்ரா ஆறு மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் உற்பத்தியாகின்றன. இதனருகே புகழ் பெற்ற மானசரோவர் நன்னீர் ஏரியும், இராட்சதலம் எனும் உப்பு நீர் ஏரியும் உள்ளன.[1] மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும். இங்கு வரும் யாத்திரிகர்கள் இந்த ஏரியில் புனித நீராடுவது வழக்கம். இந்த கயிலை பர்வதத்தின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வருவதைத்தான் பக்தர்கள் புனித கடமையாகக் கருதுகிறார்கள். 52 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலம் பாதையில் பயணிக்க குறைந்தபட்சம் 15 மணி நேரம் ஆகும்.
கயிலாய மலை | |
---|---|
கயிலாய மலையின் வடபகுதி | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 6,638 m (21,778 ft) |
இடவியல் புடைப்பு | 1,319 m (4,327 ft) |
புவியியல் | |
மூலத் தொடர் | கயிலை மலைத்தொடர் |
கையிலை மலையானது இந்துக்கள், பொன் பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.[2]
கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சீனாவில் இமயமலையின் வடக்கில் அமைந்துள்ளது. மானசரோவர் ஏரியும், சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
திருஞான சம்பந்தர் தென் கைலாயம் எனப்படும் திருக்காளாத்தியைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் இத்தலம் மீது திருக்கயிலாய ஞான உலா பாடியுள்ளார். இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன், கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கைலாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. விஷ்ணு புராணம் கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.
கைலாச யாத்திரைதொகு
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலம் இது.கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. பொம்பா மதம் திபெத்தின் ஆதி மதம். இவர்கள் கைலையை இடமாகச் சுற்றுகின்றனர். இந்துக்கள் வலம் வரும் போது அவர்கள் இடம் வருகின்றனர். 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
கைலாயம் சீனாவின் திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது. 1959-ஆம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த பின்னர் வெளிநாட்டினர் யாரையும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்கவில்லை. 1981-இல் ஏற்பட்ட இந்தோ-சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு இந்தியர்களை மீண்டும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்க ஆரம்பித்தது.
இந்தியா வழியாக கயிலை யாத்திரைதொகு
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டம் வழியாக திபெத் எல்லை வரை இந்திய அரசு 2020-ஆம் ஆண்டில் சாலை அமைத்துள்ளது. இப்பாதை வழியாக 97 கிலோ மீட்டர் மட்டும் திபெத் வழியாக பயணித்தால் கயிலை மலையை அடையலாம். இதனால் பயண நேரம், சுற்றுலாச் செலவு குறைவாகிறது. எனவே சுற்றுப் பாதையான நேபாளம் வழியாக இந்தியர்கள் கயிலை யாத்திரை மேற்கொள்ள தேவையிராது.[3][4][5] உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோரகர்-தாவாகாட்-காட்டியாகர் பாதையின் விரிவாக்கமே தார்ச்சுலா-லிபுலேக் பாதை. காட்டியாபார்க்கில் தொடங்கி லிபுலேக் கணவாய் சந்திப்பில் இந்த பாதை நிறைவடைகிறது. ஆரம்பத்தில் ஆறாயிரம் அடி உயரத்தில் தொடங்கும் பாதை, நிறைவு செய்யும்போது 17 ஆயிரம் அடி உயரமாக இருக்கும். மேலும், இதுவே உயரமான இமயமலையின் தாழ்வான பகுதியாக கருதப்படுகிறது. இந்த இடத்தை அடைந்ததும், திபெத்திய பகுதியில் 97 கி.மீ தூரம் பயணம் செய்தாலே போதும், கைலாஷ் மானசரோவர் பகுதியை யாத்ரீகர்கள் அடையலாம். இந்த லிபுலேக் பகுதி வரை இந்திய யாத்ரீகர்களை இந்திய பாதுகாப்புப் படையினர் அழைத்துச் சென்று திபெத்திய எல்லையில் சீன படையினரிடம் ஒப்படைப்பார்கள். அங்கு யாத்ரீகர்களின் போக்குவரத்து, தங்குமிட வசதிகளை கவனிக்கும் பொறுப்பு, சீன படையினருடையது. அவர்கள் மூலம் உரிமம் பெற்ற ஏஜென்டுகள் யாத்ரீகர்களை கைலாய மானசரோவர் பகுதிக்கு அழைத்துச் சென்று கிரிவலம் செய்ய வைத்து பின்னர் இரண்டு, மூன்று நாட்களில் மீண்டும் லிபுலேக் பகுதியில் இந்திய படையினரிடம் ஒப்படைப்பார்கள்.
மலையேற்றம்தொகு
இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. 1926 ஆம் ஆண்டு ஹக் ரட்லஜ் என்பவர் கைலாயத்தின் வடமுகமாக ஏற முனைந்தபோது அதன் உயரம் 6000 அடிக்கு செங்குத்தாக இருப்பதால் முயற்சியை கைவிட்டார். 1936 ஆம் ஆண்டு ஹெர்பர்ட் டைச்சி என்பவர் கர்லா மன்தடா ஏற முனைந்த போது அங்கிருந்த மலைவாழ் மக்களின் தலைவரிடம் கைலாய மலையை ஏறுவது பற்றி கேட்ட போது "பாவங்களற்ற மனிதனால் மட்டும் தான் அதை பற்றி நினைக்க முடியும்" என்றார்.[6] திருக்கயிலாய மலையின் உயரம் சுமார் 22,000 அடிகள் ஆகும்.
கயிலாயத்தைத் தரிசித்த சில அடியார்கள்தொகு
- காரைக்கால் அம்மையார்
- சுந்தரமூர்த்தி நாயனார்
- சேரமான் பெருமாள் நாயனார்
- பெருமிழலைக் குறும்பர் நாயனார்
- ஒளவையார்
- அப்பர் பெருமான்
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Lake Manasarovar v.s. Lake Rakshastal: fresh-water v.s. salt-water
- ↑ Mount Kailash
- ↑ Shorter, comfortable and less costlier route to Kailash Mansarovar inaugurated
- ↑ Kailash Mansarovar Yatra: Here's how you can reach Kailash Mansarovar through new route
- ↑ New road for Kailash Mansarovar pilgrims is ready, will cut travel time by three days
- ↑ Does fear of Lord Shiva residing in Mount Kailash, makes it an unclimbed peak?