தீர்த்தங்கரர்

தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தின்படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். 'பிறவிப்பெருங்கடலைக் கடந்த ஞானி' என்பது பொருள். தமிழில் இவர்களை 'அருகன்' என்பர். அருகன் என்றால் கருத்துக்களால் நம் 'அருகில் இருப்பவர்' என்பது பொருள். நம்மிடம் நண்ணியிருப்பவனை 'நண்பன்' என்பது போன்றது இது. ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றனர். தனது வாழ்நாள் முடிந்த பின்பு தீர்த்தங்கரர் பிறப்பு-இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அடைந்து பிறப்பற்ற முக்தி நிலையை அடைகிறார்.

ரிசபதேவர் (இடது)மற்றும் மகாவீரர் (வலது)

இது வரை 24 தீர்த்தங்கரர்கள் பிறந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் ஞான நிலையை அடைந்துவிட்டதால் அவர்களது சிலைகள் சமணக் கோவில்களில் வைக்கப்பட்டு முக்தி வேண்டுவோரால் வணங்கப்படுகின்றன. ரிஷபர் என்பவர் முதல் தீர்த்தங்கரராக அறியப்படுகிறார். மகாவீரர் 24-வது தீர்த்தங்கரர் ஆவார். தீர்த்தங்கரர்களின் கொள்கைகள் மற்றும் கூற்றுகளே 'சமணம்' என்ற மதமாக உருவெடுத்திருக்கிறது. தீர்த்தங்கரர்கள் இறைவனின் நிலையைப் பெற்றவர்கள் எனவும், அவர்களை வணங்கும்படியும் சமணமதம் கூறுகிறது. சமணமதத்தைத் தோற்றுவித்தவர் ரிஷபர் என்றும், மகாவீரர் என்றும் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

மகாவீரர் (பொ.ஊ.மு. 540–பொ.ஊ.மு. 467)

தொகு

இவர் பொ.ஊ.மு. 540-ல் வைசாலி நகரில் குண்டக்கிராமத்தில் சத்திரியக் குலத்தலைவர் சித்தார்த்தர் என்பவருக்கும், லிச்சாவி மன்னரின் சகோதரியான திரிசலா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். வர்த்தமானர் என்பதே இவரது இயற்பெயர். ஓர் சராசரி மனிதரைப் போலவே இவர் இளமையில் கல்வியையும், அரண்மனை வாழ்க்கையையும் வாழப் பெற்றார். யசோதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்து பிரியதர்சனா என்ற பெண்ணிற்குத் தந்தையானார்.

தம் 30-வது வயதில் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு விடைதேட, உண்மைநிலையை அறிய குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவியானார். 12 ஆண்டு தேடலுக்குப் பின் வாழ்க்கையின் உண்மைநிலையை அறிந்து, மக்களால் 'ஜீனர்' என அழைக்கப்பட்டார். தியானநிலையின்மூலம் பேரறிவைப் பெற்று, தமது கருத்துக்களைப் பலவித இடங்களுக்குச் சென்று மக்களுக்குப் போதித்தார். பார்சவநாதர் என்னும் 23-வது தீர்த்தங்கரரே இவரது குரு ஆவார். 30 ஆண்டுகள் போதனைகளிலேயே செலவிட்ட அவர் தமது 72-வது அகவையில் முக்தி அடைந்தார். இவர் பேசிய மொழி பிராகிருதம் ஆகும்.

தீர்த்தங்கரர்களின் வாழ்நாள்

தொகு

தீர்த்தங்கரர்களின் வாழ்நாள் பற்றிய கணக்கு ஒன்றும் உள்ளது.[1] இவற்றில் குறிப்பிடப்படும் எண்கள் கலைநோக்குக் கற்பனை வடிவம் கொண்டுள்ளன.

24 தீர்த்தங்கரர்களின் பெயரும் வாழ்நாளும்

தொகு
 
24 தீர்த்தாங்கரர்கள்
 
ரணக்பூர், ராஜஸ்தான், ஆதிநாதர் கோயிலில் உள்ள 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதரின் சிலை
  1. ரிசபதேவர் (ஆதிநாதர்)
  2. அஜிதநாதர்
  3. சம்பவநாதர்
  4. அபிநந்தநாதர்
  5. சுமதிநாதர்
  6. பத்மபிரபா
  7. சுபர்சுவநாதர்
  8. சந்திரபிரபா
  9. புஷ்பதந்தர்
  10. சீதளநாதர்
  11. சிரேயன்சுவநாதர்
  12. வசுபூஜ்ஜியர்
  13. விமலநாதர்
  14. அனந்தநாதர்
  15. தருமநாதர்
  16. சாந்திநாதர்
  17. குந்துநாதர்
  18. அரநாதர்
  19. மல்லிநாதர்
  20. முனீஸ்வரநாதர்
  21. நமிநாதர்
  22. நேமிநாதர் (அரிஷ்டநேமி)
  23. பார்சுவநாதர்
  24. மகாவீரர்

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. க.ஸ்ரீபால், அஞ்சிவது அஞ்சாமை பேதமை என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை, அருகன் தத்துவம், மாத இதழ் ஆகஸ்டு 2012
    • காலப்பெயர்க் கணக்கு
    84 லட்சம் ஆண்டுகள் = ஒரு பூர்வாங்கம்
    84 லட்சம் பூர்வாங்கம் = பூர்வம்

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தங்கரர்&oldid=4085964" இலிருந்து மீள்விக்கப்பட்டது