அய்யாவழி, (அய்யா+வழி) தந்தையின் வழி, இறைவன் வழி என்ற அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு தர்ம சமயமாகும்.[1]

அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது. இருப்பினும் அய்யாவழி சமயத்தை கடைபிடிப்போரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அய்யாவழி மக்கள், ஒரு கோடிக்கும் மேல் இருப்பதாக கூறப்பட்டாலும்[2] மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை.

அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக[3] சமய[4] ஆய்வலர்களும் அய்யாவழியை இந்துமதத்தில் ஓர் தனி பிரிவு சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றபடுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.

அய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும் , சில சமயச் சடங்குகளும் இந்து சமயத்துடன் ஒத்திருக்கின்றது.

இது சார்பு கட்டுரைகளின் பாகமான
அய்யாவழி
அய்யாவழியின் வரலாறு
கோட்பாடுகள்

ஏகம்- அடிப்படை ஒருமை
வேதன்-படைப்பாளர்
திருமால்-காப்பாளர்
சிவன்-அழிப்பவர்
வைகுண்டர்-அவதாரம்
அய்யாவழி மும்மை

புனித நூல்கள்

அகிலத்திரட்டு அம்மானை
விஞ்சையருளல்
திருக்கல்யாண இகனை
அருள் நூல்

வழிபாட்டுத்தலங்கள்

சுவாமிதோப்பு பதி
பதிகள்
நிழல் தாங்கல்கள்

சமயவியல்

அய்யாவழி புத்தகங்கள்
அய்யாவழி அமைப்புகள்

சமயச்சடங்குகள்

முதன்மை போதனைகள்

சார்ந்த நம்பிக்கைகள்

அத்வைதம்
சுமார்த்தம்

பெயர் காரணம்

தொகு

இச்சமயத்திற்கு அய்யாவழி என்ற பெயர் எப்போழுது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெளிவு இல்லை. பெயர் காரணத்துக்கு பல கோணப்பார்வைகள் இருக்கின்ற போதும் அவைகளை பொருள் கொள்ளுமிடத்து பெரும்பாலும் அவையனைத்தும் ஒத்த கருத்துடையனவாகவே இருக்கின்றன. மிகவும் நுட்பமாக பொருள்கொள்ளும் போது வேறுபடுகின்றன. ஆவை:

  • தந்தையின் பாதை - இச்சமயம் தோன்றிய சுவாமிதோப்பு பகுதியின் தமிழ் பேச்சு மொழியில், அய்யா (தந்தை) + வழி (பாதை). எனில், தந்தையை மிகவும் நேசத்தோடு அழைக்கும் 'ஐயா' என்னும் பதத்தை இறைவனை அழைக்க பயன்படுத்தி, 'அன்புத் தந்தையின் பாதை' என்று பொருள்கொள்ளப்படுகிறது.
  • குருவின் வழிபாடு - அய்யா (குரு) + வழி (வழிபாடு) என கொள்ளப்படுகிறது.
  • இறைவனின் பாதத்தை சேரும் வழி - அய்யா என்பது (இறைவன்) + வழி என்பது (சேரும் வழி) எனவும்

பக்தி முறையாக பொருள் கொள்ளப்படுகிறது.

வரலாறு

தொகு

அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அய்யாவழியின் சமுதாய வரலாற்றை படிக்க லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின்(தற்போதைய தெற்கு கெரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது. அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக-வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது. தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள்-கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும்.

தற்போது, பையன் வாரிசுகளில் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், அய்யாவழியின் சமயத்தலைவராக கருதப்படுகிறார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு. தென்னிந்தியா முழுவதுமாக ஏறத்தாழ 1000 தங்கல்களுக்கு மேல் அடிக்கல் நாட்டிய பெருமை இவருக்குண்டு. அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றது.

புனித தலங்களும் நூல்களும்

தொகு
 
சுவாமிதோப்பு பதியின் கொடியேற்றுக் காட்சி : ஆவணித் திருநாள் (8/19/2006)

அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது. இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அருள் நூலின் வரலாறு தெளிவு இல்லை. ஆனால் இது அய்யாவின் சீடர்களாலும், அருளாளர்களாலும் எழுதப்பட்டவைகளாக நம்பப்படுகிறது. இன்னூலில் அய்யாவழி வழிபாட்டு-வணக்க முறைகள், சடங்கு முறைகள், அருளாளர்கள் மற்றும் சீடர்களின் தீர்க்க தரிசனங்கள், அய்யாவழி சட்டங்கள் ஆகியன அடங்கும்.

அய்யாவழி மக்களுக்கு ஐந்து முக்கிய புனிதத் தலங்கள் உள்ளன. அவைகள் ஐம்பதிகள், பஞ்சப்பதி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் சுவாமிதோப்பு பதி தலைமைப் பதியாகும். இவையல்லாமல் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியனவும் அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெறுவதாலும் இவை ஏழும் முக்கிய புனிதத் தலங்களாகவே கருதப்படுகின்றன. ஆனால் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவற்றை சில உட்பிரிவுகள், ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக தற்போதைய அவதாரப்பதி எனப்படுவது, வைகுண்டர் அவதாரம் எடுத்த இடத்தில் இல்லை என்பது அவர்கள் கணிப்பு. ஆனால் அவர்களும் திருச்செந்தூரை இரண்டாம் நிலை புனித நூலாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தலைமைப்பதி வெளியிடும் பதிகளின் பட்டியலில் பஞ்சப்பதிகள் தவிர்த்து மற்றவைகள் இடம்பெறவில்லை.

அவதாரப்பதி தவிர பதிகள் அனைத்தும் குமரி மாவட்டத்துள்ளேயே இருப்பதால், மொத்த மாவட்டமே அகில இந்திய அளவில் உள்ள அய்யாவழியினரால் புனிதமானதாக கருதப்படுகிறது.

சின்னம்

தொகு

அய்யாவழியின் சமயச்சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும் அருள் நூலிலும் திருநாமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அகிலத்தின் கருத்தோட்டத்தின் கருவை ஆராயுமிடத்து அய்யாவழியின் சின்னமான நாமம் ஏந்தும் தாமரை சார்புடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றனவேயன்றி இச்சின்னம் பற்றிய நேரடிக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில வரலாற்றுக்குறிப்புகள் வாயிலாக இச்சின்னம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து அய்யாவழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது ஏற்கும் விதமாக உள்ளது.

அய்யாவழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது. ஏழு(மேல்) + ஏழு(கீழ்) என பதினான்கு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலைகீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டிடக் கலையமைப்பு அண்மைகாலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது.

அகிலத்தின் புராணவோட்டம் கூறும் எட்டு யுகத்தை தத்துவ ரீதியாக மனித உடம்பின் எட்டு ஆதாரங்கள் எனவும் கூறுவர். முதல் நீடிய யுகம் விந்து எனவும், கடைசி மற்றும் பரிபூரண நிலையான சஹஸ்ராரம் என்பது தர்ம யுகம், எனவும் இத்தத்துவம் விளக்கம் பெறுகிறது. இக்கருத்தோட்டத்தில் குண்டலினி எனப்படும் தன்னுணர்வு (சக்தி) பரஞானத்தின் துவக்கமான விந்து எனப்படும் நீடியயுகத்திலிருந்து அது பரிபூரணமடையும் சஹஸ்ராரமெனப்படும் தர்ம யுகத்தை அடையவேண்டும். அங்கே ஏகம் எனப்படும் பரிபூரண ஒருமையுடன் ஜீவான்மா சங்கமித்து, தனக்கு இனமான தனி நாமரூபம் அழிந்து, தன்னிலை கெட்டு, அதுவும் ஏகமாகிறது. ஏகமென்பது வைகுண்டம் (வைகுண்டர்) ஆதலால் வைகுண்டர் தர்ம யுகத்தை ஆள்கிறார் அல்லது வைகுண்டர் சஹஸ்ராரத்தில் ஜீவாத்மாக்களால் முழுமையாக உணரப்படுகிறார்.

மேலும் இந்து ஆகமங்களின்படி சஹஸ்ராரச் சக்கரத்தின் இதழ்களின் எண்ணிக்கை 1000 ஆகும். ஆனால் அய்யாவழி சின்னத்தில் இது 1008-ஆக கருதப்படுகிறது. காரணம் அகிலத்திலோ அருள் நூலிலோ '1000' என்பது காணப்படாத அதேபட்சத்தில் '1008' என்றவெண் திரும்பத்திரும்ப வருவதை காண முடியும். இவற்றுள் முக்கியமாக வைகுண்ட அவதார ஆண்டு கொ.ஆ 1008 ஆகும். அதனால் இப்புனித நூற்களின் குறிப்புகள் அடிப்படையில் 1008 இதழ்த்தொகுதி அய்யாவழி சின்னத்தின் பயன்படுத்தப்படுகிறது.

வழிபாட்டுத்தலங்கள்

தொகு

பதிகளும் நிழல் தாங்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1997-ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. அய்யாவழி ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால், சுவாமிதோப்பு பதி சமய ரீதியாக மட்டுமே தலைமைப்பதியாக விளங்குகிறது. ஆட்சி ரீதியாக அல்ல.

பதிகள்

தொகு

பதிகள் அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள் கோயில்களை போன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, அய்யா வைகுண்டரின், அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக பதிகளுடன் தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும்.

நிழல் தாங்கல்கள்

தொகு

நிழல் தங்கல்கள் பதிகளை போல் அல்லாமல் சிறிய அளவுடையதாக இருக்கும். இவற்றுள் பல அகிலத்திரட்டு பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவைகளில் அன்னதர்மமும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளிலுமாக, 8000 - க்கும் மேற்பட்ட தாங்கல்கள் செயல் பட்டு வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.[5]

பதி - தாங்கல்

தொகு

அய்யாவழியில் பதிகள் மற்றும் தாங்கல்களில் வேறுபாடு அகிலத்தின் அடிப்படையில் பகுக்கப்படுகிறது. ஒரு பகுதியை பதி என்று அழைக்க இரண்டு விதிமுறைகள் உள்ளன. அவை,

  • அது அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
  • அது அய்யாவின் அவதார இகனையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

நாராயண சுவாமி (அய்யா) நிழல் தாங்கல் - வெள்ளையன் தோப்பு

தொகு

சுவாமி தோப்பு பதியில் இருந்து  சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள இந்த கோயிலானது சுமார் 100 ஆண்டு கால பழமையானது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள இத்திருக்கோயில் 74 அடி உயர கோபுரம் மற்றும்  கொடி மரத்துடன் மிக கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. ஆண்டு தோறும் இங்கு பங்குனி மாத இறுதியில் 10 நாட்கள் அய்யாவின் திருக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றி திருவிழாவும், ஐப்பசி மாத இறுதியில் 18 நாட்கள் திருஏடு வாசிப்பு திருவிழாவும் நடைபெறுகின்றது.

சட்டம்

தொகு

அய்யாவழியின் வாழ்வியல் மற்றும் இறையில் சட்டங்கள் அகிலம் முழுவதுமாக பரவலாக காணப்படுகிறது. இது இறைவனால் துறவிகளிடமோ, தேவர்களிடமோ, கீழ்நிலை கடவுளர்களிடமோ அவர்களின் கேள்விகளுக்கேற்றவாறு கூறப்படுவதாக புராணத்தொகுதியின் கூடே பின்னப்பட்டு இடையிடையே நூல் முழுவதும் சிதறுண்டு காணப்படுகிறது.

அருள் நூல் இவ்வகையில் ஒரு தொகுப்பு நூலாக கருதப்படுகிறது. முதன்மை புனித நூலான அகிலம் கூறும் கோட்பாடுகள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அருளாளர்களின் தீர்க்கதரிசனங்கள், அழிவு விபரங்கள், சமய-சமுக சட்டங்கள் ஆகியனவற்றை இந்நூல் உள்ளடக்குகிறது.

நீதம்

தொகு

அய்யாவழி சட்டங்களில் நீதம் முதன்மை இடம் வகிக்கிறது. எட்டு யுகச்செய்திளை தொகுத்து விளக்குமிடத்து பழங்காலத்தில் நீதம் எவ்வாறு மக்களால் கடைபிடிக்கப்பட்டது என்பது விளக்கப்படுகிறது. அன்றைய சமுதாயம், அதனை ஆண்ட மன்னன் ஆகியவர்கள், தங்கள் செயல்களில், தங்களுக்கப்பாலுள்ள இறைவனை நிலைநிறுத்தி இயற்கையோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது.

  1. மனு நீதம்சமுதாயத்தில் தனிமனிதனின் கடமைகள்.
  2. ராச நீதம் - ஆட்சி புரியும் மன்னனுக்கான கடமைகள்.
  3. தெய்வ நீதம்இறையியல் சட்டங்கள் மற்றும் கடமைகள்.

அக்காலத்து இந்த சிறப்பு நிகழ்வுகள் உவமையாக கூறப்பட்டு அதை சட்டவடிவாக கொண்டு வாழ்வியல் கோட்பாடாக இன்று இக்கலியுகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என கூறப்படுகிறது. கலியுகத்தின் துவக்கத்திலும் வைகுண்ட அவதார துவக்கத்திலும் பொது நிலைமாற்றங்கள் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில கோட்பாடுகள் மாற்றம் பெருகின்றன. அவ்வாறு நிகழும் மாற்றங்கள் பின்னர் அவதாரத்தின் போது வைகுண்டரால் போதிக்கப்படுகின்றன.

விஞ்சை

தொகு

நாராயணரால் வைகுண்டருக்கு அளிக்கப்படும் உபதேசம் மற்றும் சட்டம் அகிலத்தில் விஞ்சை எனப்படுகிறது. வைகுண்டருக்கு மூன்று முறைகளாக கடலின் உள்ளாக கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஞ்சையின் முதல் பகுதி அவதாரம் எடுத்த உடனேயும், மற்ற இரண்டு பகுதிகளும் சில அவதார நிகழ்வுகளுக்குப் பிறகும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தந்தையாகிய அதிகாரக்கடவுள் மகனாகிய அவதாரக் கடவுளுக்கு அளிக்கும் இறை சட்டம் என்றாலும் இதில் அடங்கும் பல பகுதிகள் மனிதனின் வாழ்வியல் சட்டங்களாகவும் பின்பற்றப்படுகிறது. முதல் விஞ்சையாகிய திருச்செந்தூர் விஞ்சை அகிலத்தின் மிக நீளமான சட்டத்தொகுதியாகும்.

தர்மம்

தொகு

தர்மக் கோட்பாடு அகிலத்தில் இரண்டு கோணங்களில் விளக்கம் பெறுகிறது. தர்மத்துக்கு சமுதாய உருவம் கொடுப்பதாக முதல் பார்வையும் சமய விளக்கம் கொடுப்பதாக இரண்டாம் பார்வையும் அமைந்திருக்கிறது. சமுதாயப்பார்வையில் தர்மம் என்பது எளியோருக்கு உதவுவதெனவும் சமய விளக்கத்தில் அத்தர்மம் சீவன் பரநிலையடையும் இயல்பு எனவும் குறிக்கிறது. மேலும் தர்மத்தின் இரண்டாம் நிலையை அடைய முதல் நிலை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என்கிறது அகிலம்.

சமுதாய தர்மம்

தொகு

தர்மத்தின் சமுதாய விளக்கம் எளியோரை மேலாக்குவது எனப்படுகிறது. அகிலம் இதை "தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்." என்கிறது. சமுதாயத்தில் நிலவும் எளியோர்-வலியோர், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஆகிய வேற்றுமைகள் இதனிமித்தம் களையப்பட வேண்டுமென்கிறது அகிலம். அதன் முதல் மற்றும் மேலான நிலையாக அன்ன தர்மம் கருதப்படுகிறது. "பயந்து தர்மமிட்டந்த பரம்பொருளைத் தேடிடுங்கோ." என்கிறது அருள் நூல். இதன் மூலம் ஒருவரிடமும் வேறுபாடில்லாமல் தான-தருமங்களை செய்ய சமுதாயம் அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் பிரபல இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் சமுதாய அறத்தையே முதன்மை தர்மமாக சித்தரிப்பது அய்யாவழியில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்னும் கருத்தை உறுதி செய்வதாக அமைகிறது.

சமயப் பார்வை

தொகு

சமயப் பார்வையில் திருப்புகையில் தர்மம் என்பது அறிவுக்கு அப்பாலான "முழுமுதல் உண்மை" என சித்தரிக்கப்படுகிறது. மேலும் வைகுண்டரின் முக்கிய அவதார நோக்கம் கலி என்னும் மாயையை அழித்து உலகில் தர்மம் என்னும் மெய் இயல்பை உருவாக்குவதேயாம். ஆக அய்யாவழி சமய தர்மம் என்பது இயற்கையோடியைந்து காலம் இடம் என்னும் வரையறைக்கப்பாலான 'இருப்பதனைத்தும் ஒன்று' என்னும் மெய் நிலையேயாகும். ஏகம் என்னும் பதத்தின் பயன்பாடு துவக்கம் முதலே அகிலத்தில் அதிகமாக காணப்படுவது இதனை உறுதி செய்கிறது. அவ்வாறான மெய்யுலகு வைகுண்டரால் ஆளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருணாசிரம தர்மத்தை இவ்யுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. இதனை அகிலம், கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"சாதி பதினெட்டையும் தலையாட்டிப்பெய்களையும்
வாரிமலை வன்னியில் தள்ளி அழித்துவிடு."

நம்பிக்கைகள்

தொகு

அய்யாவழி மறுபிறவி கொள்கையையும் தர்ம யுகத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இந்து சமயத்தின் வருணாஸ்ரம தர்மம் என்னும் ஜாதி முறையை இவ்வுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. மூர்த்தி வழிபாட்டையும் அய்யாவழி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாமார மக்களும் வழிபட ஒரு உருவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அய்யாவழியில் இறைவன் அமர்வதர்க்கான இருக்கையாக, பள்ளியறையில் ஆசனம் அமைக்கப்பட்டு, அவ்வாசனத்தில் அய்யா அரூபமாக அமர்ந்திருப்பதாக உணர்த்தப்படுகிறது. அய்யாவழி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் ஒப்பற்ற ஒரே கடவுளின் மாறுபட்ட வடிவங்களாக காண்கிறது. இவ்வகையில் அய்யாவழி அத்வைதம் மற்றும் சுமார்த்தம் ஆகியவைகளை ஒத்திருக்கிறது. அய்யாவழி துவைதம் மற்றும் விசிஷ்டா துவைதம் ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திருப்பதாகவும் கருத்துகள் உள்ளன. மேலும் அய்யாவழி ஏகத்துவத்தை வலியுறுத்துகிறது.

அய்யாவழி தீய சக்தியின் மொத்த ஒருங்கிணைந்த உருவமாக குறோணி என்னும் அசுரனை உருவகிப்பதன் மூலம் இந்து மதத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்ட குறோணி, பின்வரும் ஒவ்வொரு யுகங்களிலும் ராவணன், துரியோதனன் என அசுரப்பிறவிகளாகப் பிறக்கிறான். அவர்களை அழிக்க விஷ்ணு, அந்தந்த யுகங்களில் ராமன், கிருஷ்ணன் மற்றும் கடைசியாக வைகுண்டராக அவதரிக்கிறார்.

தற்போதைய கலியுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி மாயையாக உலகத்தில் பிறக்கிறான். அக்கலியனை அழிக்க ஏகப்பரம்பொருளான இறைவன் வைகுண்ட அவதாரம் கொள்கிறார். ஆக வைகுண்டர் அவதாரம் எடுத்த உடனேயே கலி அழியத்தொடங்கி தற்பொது அழிந்துகொண்டிருப்பதாக அகிலம் கூறுகிறது.

அன்ன தர்மம் அய்யாவழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருவாரியான நிழல் தாங்கல்களில் மாதத்துக்கு ஒரு முறையாவது அன்ன தர்மம் செய்கிறார்கள்.

இறைவன்

தொகு

முக்கியக் கட்டுரை:அய்யாவழி மும்மை

அய்யாவழியின் இறையியல் மற்ற ஏகத்துவ சமயங்களிலிருந்து வேறுபடுகிறது. அது ஏகம் என்னும் அடிப்படை ஒருமையையும், பல்வேறு மாற்றங்களுக்கு பின்னால் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் கூறுகிறது. மேலும் பிரபஞ்சத்தை சிவம் என்றும் இதை இயக்கும் சக்தியை (force) சக்தி என்றும் கூறுகிறது. மேலும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை பற்றியும் கூறுவதுடன் மேலும் பல கீழ்நிலை தெய்வ சக்திகளையும் கூறுகிறது. ஆனால் கலியன் கேட்ட கொடிய வரங்கள் காரணமாக நாராயணரால் குறோணியின் ஆறாவது துண்டான கலியை நேரடியாக அழிக்க இயலாது. அதனால், அனைத்து தெய்வ சக்திகளும் ஏகத்துள் ஒடுங்கி, அந்த ஏகம் உலகில் கலியை அழிக்கும் பொருட்டு மூன்றின் தொகுதியாக வைகுண்டம் என அவதரிக்கிறது.

மேலும் வைகுண்டர் மறு மன்னர் எதிரியில்லாமல் ஆளும் எட்டாவது யுகமாக ஒரு தர்ம யுகத்தையும் அகிலம் கூறுகிறது. அனைத்து தெய்வ சக்திகளும் ஒடுங்கி வைகுண்டமாக அவதரிப்பதால் கலி யுகத்தில் அய்யா வைகுண்டர் ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக அகிலம் கூறுகிறது. இதன் அடிப்படையில் அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டு சமயமாகவும் உருவம் பெறுகிறது.

வைகுண்டர் - ஏகம் - மற்ற கடவுளர்கள் - ஆளுமை

தொகு
 
ஏகத்தின் பரிணாமம்

அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால் ஒரே கடவுள் பற்பல இயல்புகளில் பல இறை சக்திகளாக வெவ்வேறு உருவங்களில் காட்சிகொடுக்கிறார் என்றும் அகிலம் கூறுகிறது. ஆனால் நாம ரூபங்களுக்கு அப்பால் ஒரே சக்தியாக அனைத்தையும் இயக்கி, அனைத்தும் தானான சுயம்புவாக இருப்பது, ஏகம் என்னும் ஒருமை என்கிறது.

அகிலத்தின் முதல் பகுதி மும்மூர்த்தி, தேவர்கள் என பல கடவுளர்களையும் அவர்களின் ஆளுமை ஏற்றத்தழ்வுகளையும், பின்னர் இரண்டாம் பகுதியில் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கும் ஆளுமையுடன் வைகுண்டர் அவதாரம் எடுக்கின்ற போதும், அனைத்து தேவர்களும் தனித்தனியாக இருந்து இயங்கி வருகிறர்கள் (வைகுண்டரின் ஆளுமைக்கு உட்பட்டு) . அனைத்து தெய்வ சக்திகளும் வைகுண்டரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற போதும் வைகுண்டரின் அவதார காலகட்டம் முழுவது நாராயணர் வைகுண்டரின் உள்ளாகவும், வைகுண்டரின் தந்தையாகவும் இரட்டைத் தன்மையுடம் இயங்குகிறார். அதனால் அகிலம் பல கடவுளர்களின் இருப்பை ஒத்துக்கொள்கிறது. ஆனால் வைகுண்டரை அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகவும், அனைத்து தெய்வ சக்திகளை உள்ளடக்கியவராகவும் காண்கிறது.

ஆனால் கடவுள் மிக உயர்ந்த நிலையில் ஒன்றாகவும், ஒப்பற்றதாகவும், உருவமற்றதாகவும், மாறிலியாகவும், அனைத்தையும் இயக்குவதும் மறுமுனையில் அனைத்தாக இயங்குவதும், காலம் - இடம் என்னும் வரையறைக்கப்பற்பட்டவராகவும் இருக்கிறார் என ஆகிலம் கூறுகிறது. ஏகம் என்னும் பதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அகிலத்தின் துவக்கம் முதல் இறுதி வரை கூறப்படுகிறது. ஆனால் மிக உயர்ந்த கருத்தியலாக கருதப்படும் இப்பத்திற்கு வேறு எந்த நேரடி தனி விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்பதம் அனைத்துக்கும் அப்பற்பட்டதாக மட்டும் அகிலம் முழுவதும் கூறப்படுகிறது. இப்பதம் தமிழில், "ஒன்று, ஒப்பற்றது" என்று விளக்கம் பெறுகிறது. ஆக, ஏகம் என்னும் இப்பயன்பாடு இறைசக்தி தொடர்பாக அய்யாவழியில் காணப்படும் ஒருமைக்கோட்பாட்டு விளக்கமாக கருதப்படுகிறது. இவ்வேகத்தின் கீழ்னிலை தெய்வசக்திகளாக பல கடவுளர்கள் கூறப்படுகின்ற அதேவேளையில், வைகுண்டர் அனைத்துக்குமப்பாற்பட்ட ஏகத்தின் அவதாரமாக அகிலம் கூறுகிறது. ஆனால் மறுமுனையில், வைகுண்டர் கலி மன்னனால் கைதுசெய்யப்படும் இடத்தில் அவர் சான்றோரை தேற்றும் விதமாக அமைந்திருக்கும் அடிகளில் வைகுண்டரே ஏகத்தை படைத்ததாக கூறுகிறார். இக்கோணத்தில் வைகுண்டர் ஏகத்துக்கும் அப்பற்பட்ட முழுமுதல் சக்தி எனப்படுகிறார்.

அவதார மும்மையை பொறுத்த வரையில் வைகுண்டரின் உள்ளே மூன்றில் ஒன்றாக ஏகம் இருப்பதால் ஏகத்தின் அனைத்து குணங்களும் வைகுண்டருக்கும் பொருந்தும். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அருள் நூலின் பல அடிகள் வைகுண்டரை முழுமுதலாக கூறுவதோடு அவரின் விஸ்வ-ரூபத்தினை வெளிப்படுத்துகிறது.

அய்யாவழியில் இருபொருள் வாதம்

தொகு

நீடிய யுகத்தில் தோன்றிய குறோணி, ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்வரும் யுகங்களில் அவை ஆறும் அழிக்கப்பட்டு இறுதியில் கலியன் நடுத்தீர்வை செய்யப்பட்டு நரகத்தில் தள்ளி கதவடைக்கப்படுவதாக அகிலம் கூறுகிறது. இதன் மூலம் அய்யாவழி இருபொருள் வாதத்தை வலியுறுத்துவது போன்றதொரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் கலி என்பது மாயை என்று வர்ணிக்கப்படுவதால் மாயையின் அழிவே அவ்வாறு கூறப்படுவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் அகிலம் தொடக்கம் முதலேயே அடிப்படை ஒருமையாகிய ஏகத்தை கூறி வருவதால், இது இருபொருள் வாதக் கோட்பாட்டை மங்கச்செய்கிறது.

அது மட்டுமல்லாமல் அய்யாவின் சீடர்களாலோ அருளாளர்களாலோ எழுதப்பட்டவைகளாக நம்பப்படும் அருள் நூலின் பெருவாரியான பகுதிகளும் ஒருமைக்கோட்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதும் இருபொருள் வாதம் பற்றிய கூற்றுகளை அய்யாவழியிநின்று புறந்தள்ளுகிறது.

எழுவாய் - சான்றோர்

தொகு
 
பட்டத்து அய்யா, பையன் செல்லவடிவு, அவர்களின் இருபதாம் நூற்றாண்டின் வரைபடம்

அய்யாவழியின் படி சான்றோரின் சகாப்தம் துவாபர யுகத்தின் நிறைவுடன் துவங்குகிறது. அயோத அமிர்தவனத்தில் சப்த கன்னியருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளும் அவர்களது வம்சாவளியினரும் இவ்வாறு சான்றோர் என அழைக்கப்படுகின்றனர்.

அகிலத்திரட்டின் படி இச்சான்றோர் என்னும் பதம் தற்போது அய்யாவழியில் சமய ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இரு கோணத்தில் பயணிக்கிறது. இன்று பெரும்பாலும் அய்யாவழியினரின் பார்வை சான்றோர் விடயத்தில் சமய ரீதியாகவே இருக்கிறது. இப்பார்வை மூலம், தமிழ் இலக்கியங்களில் இப்பதத்தின் பயன்பாடுகளைக் கொண்டும், அகிலத்தின் சில அடிகளை மையமாகக் கொண்டும், "எவர் ஒருவர் நீதியாக வாழ்கிறாரோ", "எவர் ஒருவர் (அனுபவத்தில்) இறைவனை காணும் தகுதி பெறுகிறாரோ" அவர் சான்றவர் என்னும் பரந்த அடிப்படையினாலான உலகளாவிய பார்வையை முன்வைக்கப்படுகிறது. மறுபுறம், இப்பார்வையில் அய்யாவழியை பின்பற்றும் எவரும் சான்றவர் என்னும் கருத்தும் கொள்ளப்படுகிறது. ஆனால் அகிலத்தின் பரவலான பார்வை மேலோட்டமாக இவ்வாறல்லாமல் பெரும்பாலும், இப்பதத்தின் சமுதாய கோணத்தையே வலியுறுத்துவதாக தெரிகிறது. இதனிமித்தம் இப்பார்வை சாணார் இனத்தையே மையப்படுத்துகிறது.

ஆனால் இச்சான்றோர் இவ்வுகத்தின் முதல் மக்களினம் என்னும் கருத்து அகிலத்தில் மேலோங்குவதால், இப்பார்வையில் சாணார் எனப்படுபவர்கள், தற்போது தமிழகத்தில் வாழும் நாடார் இனம் என்னும் பார்வை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் ஆதி காலத்தில் வாழ்ந்த, அரேபியர்களால் அல் ஹிந்த் என்றும் விவிலிய காலகட்டங்களில் பஞ்ச நதிகளின் மக்களினம் என்றும் அழைக்கப்பட்டவர்களும், 250 மேல் பிரிவுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் இன்று சிதறுண்டு கிடக்கும் மக்கள் என்று கொள்ளுதலே பொருத்தமானதாகும். அகிலத்தின் ஆதிச்சாதி போன்ற பயன்பாடுகள் இதற்குச் சான்று.

ஆனால் மறுபுறம் அய்யாவின் போதனைகளும், அகிலத்தின் செய்திகளும் சாதி முறையை கடுமையாக கண்டிப்பதாலும் இக்கோணத்தாலான சமுதாய்ப் பார்வையை அகிலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே பரவலாக கருதப்படுகிறது.

தத்துவப் பின்புலம்

தொகு

அகிலத்திரட்டு அம்மானை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழிய நடையில் உயர்ந்த தத்துவங்களை கதை ரூபத்தில் வளிப்படுத்தியிருக்கும் நூல் என்னும் கருத்தும் உள்ளது. அகிலத்திரட்டு முழுவதையும் - குறோணி முதல் தர்மயுகம் வரை அனைத்தையும், மனித உடலுக்குள்ளேயே விளக்கி அதை, யோக சித்தி அடையச் செய்யும் நூல் என்பது சில கல்வியாளர்கள் கணிப்பு. மேலும் அகிலம் சித்தர் பரிபாஷையில் இயற்றப்பட்ட நூலாகும். அகிலத்திரட்டில் காணப்படும் 'ஏரணியும் மாயோன்', உச்சிச் சுழி', 'மூக்குச் சுழி', 'முச்சுழி', 'லலாடம்', 'மேலக்கால் மண்டபம்', 'கொண்டையமுது', 'அகங்காணும் பாந்தள்' போன்ற பயன்பாடுகள் இதற்கு சிறந்த சான்றுகளாகும்.

ஆறு துண்டுகளாக வெட்டப்படும் குறோணி எனப்படுவது, மனித உடலின் ஆறு அகப்பகைகள் எனவும், அவைகளை கடந்து சகஸ்ராரப் பகுதியில் இறைவனை முழுமையாக உணர்வது தான் தர்மயுகம் என்பது அய்யாவழி தத்துவ வாதிகளின் கருத்து. மேலும் அய்யாவழி ஒரு அடிப்படை ஒருமை கோட்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் காணும் அனைத்தும் ஒன்று என்றும், இங்கு காணப்படும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு ஒருமை என்னும் முழுமுதற்பொருள் இருப்பதாகவும் அகிலம் கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் திருவாசகம் இவ்வொருமையிலிருந்து பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவானதாகக் கூறுகிறது. மேலும் அகிலம் மனிதப் பிறவிக்கும் ஏனைய பிரபஞ்சத்திற்கும் ஒரே உற்பத்தி விதியை கூறுவதாகத் தெரிகிறது.

புராணம்

தொகு

(முக்கிய கட்டுரை: அய்யாவழி புராணம்)

அய்யாவழியின் புராண வரலாறு இந்து சமயத்தின் புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. அகிலத்திரட்டின் முதற்பகுதியான முந்திய யுகங்களைப்பற்றி கூறும் பகுதி இந்து புராணங்களுடன் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் பல கடவுளர்களையும், கோட்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பெருவாரியானவைகளை திருத்தியமைத்திருக்கிறது. அய்யாவழியின் யுகங்களும், அவதாரங்களும் எண்ணிக்கையில் இந்து சமயத்திலிருந்து மாறுபடுகிறது. அய்யாவழியில் கலி உருவகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்து சமயத்தில் இல்லை. இதைப்பற்றி கூறும் பொழுது அகிலத்திரட்டு அம்மானை, இவை சார்ந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் அதனால் அவை (பழைய புராணங்கள்) சாரம் கெட்டுவிட்டதாகவும் கூறுகிறது.

அகிலத்தின் இரண்டாம் பகுதி, கலி யுகத்தில் கலியை அழிக்க இறைவன் அவதரித்த செய்தியை உலகுக்கு கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏகாபரன், வைகுண்டராக அவதரிக்கிறார். வைகுண்ட அவதாரம் மிகவும் பிந்திய காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பதாததால் அவர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுகிறார். அவர் நிகழ்த்திய பெரும்பாலான அவதார இகனைகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன. இதனிமித்தம் அகிலத்திரட்டின் இரண்டாம் பகுதி வரலாறு மற்றும் புராணச்செய்திகளின் கலப்பாக அமைந்துள்ளது.

சமயச்சடங்குகள்

தொகு

முக்கியக் கட்டுரை:அய்யாவழி சமயச்சடங்குகள்

புராணம் மற்றும் கோட்பாடுகளைப்போன்று சமயச்சடங்குகளிலும் அய்யாவழி, தனக்கு இனமான புதுப்பாதையிலேயே பயணிக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களையும், புறக்கணிக்கப்படுகிறவர்களையும் இறையியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும், வெகுவாக தேற்றி தைரியமளிப்பதாக உள்ளது. இதற்கு சான்றுகளாக; புற மற்றும் அகத்தூய்மையை உணர்த்தும் துவையல் தவசு, தீண்டாமையை துரத்தும் முறையான தொட்டு நாமம், சுயமரியாதை மற்றும் உறுதியை அளிக்கும் முறையான தலைப்பாகை அணிதல், சாதி முறைகளைக்களையும் விதமாக அமைக்கப்பட்ட முத்திரிக்கிணறு, ஆகிய சடங்குகள் விளங்குகின்றன. அய்யாவழியில் சமயச்சடங்குகளுக்கு இறையியல் ரீதியாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதும், அவை சமுதாய ரீதியாக ஜாதிப் பிரிவினைகளை புறந்தள்ளி, அனைத்து மக்களும் ஒன்று என்னும் கோட்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவற்றுள் மிகச்சில இந்து சமயச்சடங்குகளை ஒத்து இருக்கின்றன.

புது வழிபாட்டு முறை

தொகு

அய்யாவழி உதயமாகி 170 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது.

அய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட புதிய சமயமாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திவிட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர். மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவொடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யாவழியோ அவ்வாறல்ல. அது தானாக எழுந்து தன்னை தான நிலைபடுத்திக்கொண்டது.[6]

ஆதாரங்கள்

தொகு
  • அகிலத்திரட்டு அம்மானை, பதிப்பாளர் பாலராமசந்திரன் நாடார், ஒன்பதாம் பதிப்பு 1989
  • அருள் நூல், பதிப்பாளர் பாலராமசந்திரன் நாடார், பதிமூன்றாம் பதிப்பு 1990
  • வே.தி. செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், பாகம் 12
  • ஆ.அரிசுந்தர மணி, அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, அய்யா வைகுண்டர் திருக்குடும்ப வெளியீடு
  • சாமுவேல் மாடீர், தி லான்ட் ஆப் சாரிட்டி
  • பின்வரும் ஆண்டுகளுக்கான லண்டன் சமயப் பணிப்பரப்பு சமூகத்தின் ஆண்டறிக்கைகள்:1838, 1843, 1847, 1872, 1892.
  • 1862, 1863, ஆகிய ஆண்டுகளுக்கான ஜெம்ஸ்டவுன் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1858, 1859, 1863, 1864, ஆகிய ஆண்டுகளுக்கான சாந்தாபுரம் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1864, 1866, 1871, 1880, ஆகிய ஆண்டுகளுக்கான நாகர்கோயில் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1863, 1869, 1871, 1872, ஆகிய ஆண்டுகளுக்கான நெய்யூர் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1867, 1869, ஆகிய ஆண்டுகளுக்கான திட்டுவிளை பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கைகள்.
  • 1871, ஆண்டுக்கான கொட்டாரம் பணிப்பரப்பு மாவட்ட ஆண்டறிக்கை.
  • என்.அமலன், வைகுண்டர் பிள்ளைத் தமிழ், சாமிதோப்பு வைகுண்ட குருகுல சேவாதள வெளியீடு, 1984.
  • அருணன், தமிழகத்தில் சமூக சீருதிருத்தம் - இரு நூற்றாண்டு வரலாறு

குறிப்புகள்

தொகு
  1. "மத அரசியல்:55 அய்யாவழி". தினமணி. https://www.dinamani.com/arasiyal-payilvom/2019/feb/11/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-55-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-3093816.html. பார்த்த நாள்: 27 December 2023. 
  2. தினகரன், நாகர்கோவில் பதிப்பு, பக்கம் 15, 25/2/2007.
  3. வே.தி. செல்லம் தமிழக வரலாறும் பண்பாடும் பகுதி 12, பக்கம் 493 தலைப்பு "வைகுண்ட சாமிகள் (1810–1851) " வரி 11 "அய்யாவழி சமயம் உதயமாகியது".
  4. சாமுவேல் மாட்டீர், லான்ட் ஆப் சாரிட்டி (ஆங்கிலம்), பக்கம் :222-223
  5. த.கிருஷ்ணநாதன், அய்யா வைகுண்டரின் வாழ்வும் சிந்தனையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பகுதி - 4, பக்கம் 83.
  6. ஜி.பாட்ரிக்,, ரிலிஜியன் ஆன்ட் சப் ஆல்டேன் ஏஜென்ஸி, 2003, சென்னை பல்கலைக்கழகம், பக்கம்:121

இவற்றையும் பார்க்கவும்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அய்யாவழி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யாவழி&oldid=3984779" இலிருந்து மீள்விக்கப்பட்டது