இராமர்

இந்துக் கடவுள்

இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். பொதுவாக இராமர் 12,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.

இராமர்
தேவநாகரிराम
சமசுகிருதம்Rāma
வகைவிஷ்ணுவின் அவதாரம்
இடம்அயோத்தி
மந்திரம்ஓம் ஸ்ரீராமாய நமஹ
ஆயுதம்வில், அம்பு
துணைசீதை

பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டுகள் (பொ.ஊ.மு. 3900) அளவில் வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயணக் காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக பல கோடி இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் (Supreme Being) கருதும் பிரிவுகளும் உண்டு. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றி பல ஆராய்ச்சிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு.

கம்ப இராமாயணம்

கம்பரால் தமிழில் இயற்றப்பட்ட இராமாயணம் கம்ப இராமாயணம் ஆகும். இது சிறந்ததோர் தமிழ் இலக்கியமாகும். கம்பரின் இராமாயணம் வால்மீகி இராமாயணத்திலிருந்து பல இடங்களில் வேறுபடுகிறது.

இராமாயண இதிகாசம்

ராமர் அவதாரம்

தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். புத்திரபேறுக்கான யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமித்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.[சான்று தேவை]

விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தல் மற்றும் தாடகை வதம்

விசுவாமித்திரர் என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். தாடகை முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். முனிவர் பலா, அதிபலா என்ற மந்திரங்களை உபதேசம் செய்தார்.

இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.

மிதிலை நகர் செல்லுதலும் திருமணமும்

பிறகு விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் செல்லும் வழியில் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டு கல்லாக கிடந்த அகலிகை மீது இராமரின் திருவடி பட்டதால், சாபம் நீங்கி மீண்டும் உண்மை உருவிற்கு வந்தாள்.

சனகன் என்ற மன்னன் மிதிலையை ஆண்டு வந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் சீதையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான். மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

பட்டாபிஷேக ஏற்பாடுகளும் காடேகுதலும்

திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. கைகேயியின் சிறப்பு பணிப்பெண் கூனி (மந்தரை) ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறிந்த தசரதன் உயிர் துறந்தான்.

கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய இறுதிக் கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான். காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அதுவரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.

காட்டில் சான்றேர்களின் தொடர்பு

இராமர் காட்டில் வாழும் காலத்தில் குகன், பாரத்துவாசர், அகத்தியர், சபரி போன்ற சான்றேர்களின் தொடர்பு கிடைத்தது.

சூர்ப்பனையின் மூக்கினை அறுத்தல்

இலங்கையை ஆண்டு வந்த இராவணன் தங்கை சூர்ப்பனகை ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி இராமனைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்து எறிகிறான். சூர்ப்பனகை அழுது கொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகள் அனைத்தையும் சொல்லாமல், `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என்னை அங்க ஈனப்படுத்தி விட்டான்' என்று கூறி அழுகிறள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறுகிறான்.

மாயமான்

இராவணன், மாரீசன் என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய சடாயு தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான். திரும்பி வந்த இராம, இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான். தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர்.

இராமருக்கும் சுக்ரீவனுக்குமான சந்திப்பு

சுக்ரீவன் குரங்குகளுக்கு அரசனாகிய வாலியின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர். இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத் தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.

அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்ல வேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் பாலம் கட்டின. அந்த பாலத்தின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.

விபீஷணன் இராமரிடம் சரணாகதி செய்தல்

இராவணனுக்குக் கும்பகருணன், வீடணன் என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். இராவணன் மறுத்து விட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டுவிட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.

போர்

பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் இந்திரசித்தும் மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர். கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர், இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.

இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான். ராமர் அயோத்திக்கு அரசராக முடிசூட்டிக் கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

சங்க இலக்கியத்தில் இராமன்

 
பல்வீழ் ஆலம்

இராமனைப்பற்றி இரண்டு சங்கப்பாடல்கள் சில செய்திகளைத் தருகின்றன.

அகநானூறு பாடல்

மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் இருக்கும் 70 வது பாடல் கருத்து: பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன்முதுகோடி என்னும் தனுஷ்கோடியில் கடலோரத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறை ஓதிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சி இலங்கை வெற்றிக்குப் பின்னர் நிகழ்ந்தது. அவனது மறையொலியைக் கேட்டு அம்மரத்தில் இருந்த பறவைகளும், அவனது படைகளும் சிறிதும் ஒலி எழுப்பாமல் கேட்டுக்கொண்டிருந்தன.[1]

புறநானூறு பாடல்

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடிய பாடல்[2] கருத்து: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தன்னைப் பாடிய புலவர் ஊன்பொதி பசுங்குடையாருக்கு பலவகையான அணிகலன்களைப் பரிசாக வழங்கினான். புலவரின் சுற்றம் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை. எனவே அவர்கள் விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதிலும், காதில் அணியவேண்டுவனவற்றை விரலிலும், இடுப்பில் அணியவேண்டுவனவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டுவனவற்றை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம். இது எப்படி இருந்தது என்றால் இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவண அரக்கன் கொண்டுசென்றபோது அவள் தன் அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டு சென்றதைக் கண்ட குரங்குகள் எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் அணிந்துகொண்டதைப் போல இருந்ததாம்.[3]

சிலப்பதிகாரத்தில்

சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டத்தில், ஆய்ச்சியர் குரவைப் பாடலில் திருமால் அவதாரங்களில் இராமரும் துதிக்கப்படுகின்றார்.

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

[4]

ராமர் உருவம் கொண்ட மதுரை நாயக்கர் காசுகள்

 
இராமன், எல்லோரா சிற்பம்

தமிழகத்தின் மதுரைப் பகுதியை ஆண்ட மதுரை நாயக்கர்கள் காசுகளில், வில் அம்புடன் நின்ற நிலையில் உள்ள ராமர் உருவம் கொண்ட காசுகளும் உண்டு.[5]

ராமர் திருக்கோயில்கள்

ராமருக்கான திருக்கோயில்கள் பல நாடுகளிலும் உள்ளன.

தாய்லாந்து மன்னர்களில் பெயர்களில் இராமர்

அவதாரக்கடவுள் இராமரின் பெயரிலேயே தாய்லாந்தின் மன்னர்கள் (Rama (Kings of Thailand))பெயர்கள் அமைகின்றன.

படக்காட்சியகம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. :வென்வேல் கவுரியர் தொன்முது கோடி,
    முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
    வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த,
    பல்வீழ் ஆலம் போல,
    ஒலி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே. அகநானூறு -70
  2. http://www.tamilvu.org/library/l1280/html/l1280g21.htm
  3. :இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்,
    விரற்செறி மரபின செவித்தொடக்குநரும்,
    செவித்தொடர் மரபின விரற் செறிக்குநரும்,
    அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
    மிடற்கு அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை,
    வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை,
    நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,
    செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு (அணிந்துகொண்டனர்) – புறநானூறு 378
  4. http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04114l2.htm
  5. http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/madurai_nayak_coins.htm

வெளி இணைப்புக்கள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இராமர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமர்&oldid=3922343" இலிருந்து மீள்விக்கப்பட்டது