சீதை இந்து சமய இதிகாசமான இராமாயணத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாவார். விஷ்ணுவின் அவதாரமான இராமரின் மனைவியாக இவரை இராமாயணம் சித்தரிக்கிறது. எனவே, இவர் லட்சுமியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.[1]

சீதா
சீதை
தேவநாகரிसीता
சமசுகிருதம்Sītā
வகைஇலக்குமியின் அவதாரம்
துணைஇராமன்
பெற்றோர்கள்ஜனகன் (வளர்ப்புத் தந்தை)
சுனைனை (வளர்ப்புத் தாய்)
சகோதரன்/சகோதரிஊர்மிளா (சகோதரி) மாண்டவி, சுருதகீர்த்தி (சித்தப்பன் மகள்கள்)
குழந்தைகள்லவன்
குசன்
நூல்கள்இராமாயணம்
இராமன், (நடுவில்) இலக்குமணன், சீதையுடன் அனுமார்

சீதையின் பிற பெயர்கள்

தொகு

ஜனகரின் மகளானதால் ஜானகி என்றும், மிதிலை நாட்டு இளவரசியாதலால் மைதிலி எனவும் சீதைக்கு பிற பெயர்கள் உண்டு. ஜனகருக்கு விதேகன் என்ற பெயர் இருந்ததால், சீதைக்கு வைதேகி என்ற பெயரும் உண்டு. பூமியில் இருந்து கிடைத்ததால் பூமிஜா என்ற பெயரும் உண்டு.

சீதையின் கதை

தொகு

குழந்தை பருவம் முதல் திருமணம் வரை

தொகு
 
சீதையின் சுயம்வரத்தில் வில்லை உடைக்கும் இராமர் - ரவிவர்மாவின் ஓவியம்
 
சீதையைக் கடத்திச் செல்லும் போது ஜடாயுவின் சிறகுகளை வெட்டி எறியும் இராவணன் - ரவிவர்மாவின் ஓவியம்

மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை பூமாதேவியின் அவதாரமாக கருதப் படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை இராமர் நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.[2]

வனவாசம்

தொகு

இராமர் காட்டுக்கு 14 வருடங்கள் வனவாசம் செய்த போது அவருடன் சீதையும் இலட்சுமணனும் சென்றனர். அப்போது இலங்கை அரசனான இராவணன் சீதையை அபகரித்துச்சென்று தன் தலைநகரில் இருந்த அசோகவனத்தில் தங்க வைத்தான். பின்னர் இராமர் வானரங்களின் துணையுடன் இராவணனை வென்று சீதையை மீட்டார்.

பிந்தைய வாழ்க்கை

தொகு

வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன் இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். சில ஆண்டுகளுக்கு பிறகு நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை வால்மீகியின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தார். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு லவன் மற்றும் குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இரு மகன்களையும் தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களுடைய தந்தையான இராமரிடம் ஒப்படைத்தாள். பிறகு பூமியை பிளந்து அதனுள்ளே ஐக்கியமானாள்.

சீதை பற்றிய சங்கப்பாடல்

தொகு

சீதை பற்றிய செய்தி ஒன்றைச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது.

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தன்னைப் பாடிய புலவர் ஊன்பொதி பசுங்குடையாருக்கு பலவகையான அணிகலன்களைப் பரிசாக வழங்கினான். புலவரின் சுற்றம் அந்த அணிகலன்களை முன்பின் பார்த்ததில்லை. எனவே அவர்கள் விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதிலும், காதில் அணியவேண்டுவனவற்றை விரலிலும், இடுப்பில் அணியவேண்டுவனவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டுவனவற்றை இடுப்பிலும் அணிந்துகொண்டனராம். இது எப்படி இருந்தது என்றால் இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவண அரக்கன் கொண்டுசென்றபோது அவள் தன் அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டு சென்றதைக் கண்ட குரங்குகள் எங்கு அணிந்துகொள்வது எனத் தெரியாமல் அணிந்துகொண்டதைப் போல இருந்ததாம்.[3]

அடிக்குறிப்பு

தொகு
  1. Sita: An Illustrated Retelling of Ramayana
  2. Sita
  3. இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்,
    விரற்செறி மரபின செவித்தொடக்குநரும்,
    செவித்தொடர் மரபின விரற் செறிக்குநரும்,
    அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
    மிடற்கு அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை,
    வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை,
    நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,
    செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு (அணிந்துகொண்டனர்) – புறநானூறு 378
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதை&oldid=3832519" இலிருந்து மீள்விக்கப்பட்டது