வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

வால்மீகி
இராமாயண காவியத்தை இயற்றிய வால்மீகி முனிவர்
தலைப்புகள்/விருதுகள்ஆதி கவி
மகரிஷி
தத்துவம்தருமம்
இராமாயணம்

வால்மீகி ஆசிரமம்

தொகு

உத்திரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரத்தின் அருகில் கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் சீதைக்கு இலவன், குசன் எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.

வரலாறு

தொகு

வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். ஒருமுறை நாரதரைக் கொள்ளையிட முயன்றபோது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டிவைத்து விட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ அந்த உறவினரிடமெல்லாம், தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் அவர்கள் பங்கு கொள்வரா என வினவ, அவர்களது மறுப்புரையைக் கேட்டு, "இதுதான் உலகம், யாருக்காகக் கொள்ளை அடித்தேனோ அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கேற்கப்போவதில்லை" என்று உணர்ந்து முனிவரிடம் சரண் புகுந்து, அவரது வார்த்தைப் படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.[1]

எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த இளைஞன் நாளடைவில் தன்னைச் சுற்றிலும் கறையான் புற்று கட்டியதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்த தியானத்தில் ஆழ்ந்தான். கடைசியில் "ஓ முனிவனே எழுந்திரு!" என்ற குரல் அவனை எழுப்பியது. அவனோ, "நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன்!” என்று திகைத்து பதில் கூற, "இனி நீ கொள்ளைக்காரனும் அல்ல, உனது பழைய பெயரும் மறைந்து விட்டது. வால்மீகி - கறையான் புற்றிலிருந்து தோன்றியவர் என்று வழங்கப்படுவாய்" என்று அக்குரல் கூறியது.[1]

திருவான்மியூர்

தொகு

சென்னையின் முக்கியப் பகுதியான திருவான்மியூர், இவரது பெயரில் வழங்கப்படுவதே. திருவான்மீகியூர் என்று இருந்து பின் மருவி திருவான்மியூர் என்று வழங்கப்படலானது. மேலும் இங்கு வான்மீகி முனிவருக்குத் தனிக்கோயிலும் அமைந்துள்ளது.

விமர்சனம்

தொகு

இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 எழுந்திரு! விழித்திரு!; பக்கம் 128-131
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்மீகி&oldid=4045056" இலிருந்து மீள்விக்கப்பட்டது