அனுமன்

(அனுமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனுமன் (மாருதி மற்றும் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துக்களின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனின் தாய் அஞ்சனை மற்றும் தந்தை கேசரீ (வானரத் தலைவர்). அனுமன் பாரம்பரியமாக காற்று தெய்வமான வாயுவின் ஆன்மீக சந்ததி என்று நம்பப்படுகிறது. இவரே அனுமனுக்குத் ஆன்மீக தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.[4][5]

அனுமன்
அனுமன் தனது இதயத்தில் ராமரையும் சீதையையும் காட்டுகிறார்
வகைராம பக்தர், தேவர், சிரஞ்சீவி, வானரம், சிவ அவதாரத்தின் பக்தர்[1] வாயு புத்திரன்[2]
இடம்கிஷ்கிந்தா
மந்திரம்ஓம் ஸ்ரீ ஹனுமதே நம:
ஆயுதம்கதை
பெற்றோர்கள்வாயு (ஆன்மீக தந்தை)
கேசரி (தந்தை)
அஞ்சனை (தாய்)
நூல்கள்ராமாயணம் மற்றும் மகாபாரதம்
அனுமன் சாலிசா[3]
விழாக்கள்அனுமன் ஜெயந்தி

சைவ மரபில், அவர் சிவனின் அவதாரமாக கருதப்படுகிறார். அவரது கதைகள் ராமாயணத்தில் மட்டுமல்ல, மகாபாரதம் மற்றும் பல்வேறு புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளன. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். வைணவக் கோயில்களில் அனுமாருக்குத் தனி சன்னிதி உண்டு. அனுமானை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று போற்றுகின்றனர்.

அனுமனை மையமாகக் கொண்ட பக்தி நடைமுறைகள் நூல்களிலோ அல்லது ஆரம்பகால தொல்லியல் சான்றுகளிலோ முக்கியத்துவம் பெறவில்லை. "ராமாயணம்" இயற்றப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இது முக்கியத்துவம் பெற்றது.[6] அனுமானின் திறமைகளுக்கு அவரது வாயு வம்சாவளி ஒருவித காரணமாகும், இது உடல் மற்றும் பிரபஞ்ச கூறுகள் இரண்டிற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கிறது. சமீப காலங்களில், அனுமான் சிலை மற்றும் கோவில் வழிபாடுகள் மூலம் வழிபடுவது கணிசமாக அதிகரித்துள்ளது.[7] சக்தி மற்றும் பக்தி ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, "அன்பு, உணர்ச்சிப்பூர்வமான பக்தி"யுடன் "வலிமை, வீர முனைப்பு மற்றும் உறுதியான சிறப்பின்" இணைவை அவர் உருவகப்படுத்துகிறார். இலக்கியங்கள் அவரை தற்காப்பு கலைகள், தியானம் மற்றும் அறிவார்ந்த நோக்கங்களின் புரவலர் தெய்வமாக சித்தரித்துள்ளன.[8] அவர் சுயக்கட்டுப்பாடு, நம்பிக்கை மற்றும் ஒரு காரணத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முன்மாதிரியாக மதிக்கப்படுகிறார்.[9] பாரம்பரியமாக, அனுமான் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியராக, கற்பின் நற்பண்புகளை உள்ளடக்கியவராகக் கொண்டாடப்படுகிறார்.[7]

பெயர்க் காரணம்

தொகு

சமக்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்குப் "பெரிதானது" என்பதால், "ஹனுமன்" என்பதற்குப் பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்க்காரணம் உண்டு.[10] அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர்.[11]

புராணக்கதைகள்

தொகு

பிறப்பு

தொகு

இந்து புராணங்களின்படி அனுமான் அஞ்சனைக்கும் கேசரிக்கும் மகனாகப் பிறந்தார்.[12] அனுமன், வாயு (காற்றின் தேவர்) என்ற இந்து தெய்வத்தின் மகனென்று தொடர்புடைய புராணக்கதைகள் கூறுகின்றனர். பொ.ஊ. 16-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஏகநாதர் 'பர்வத ராமாயானம்" என்ற கதையில் அஞ்சனை பகவான் சிவனை நினைத்து வழிபட்டார் எனவும், அதேசமயம் அயோத்தியின் அரசன் தசரதனும் குழந்தை வரம் வேண்டிப் புத்திரகாம வேள்வி செய்தார் எனவும், யாகத்தின் விளைவாக, அவருக்குப் புனிதமான (பாயசம்) கிடைத்தது எனவும், அவர் அதை அவருடைய மூன்று மனைவியருக்குப் பிரித்து வழங்கியதாகவும், அதன் விளைவாகத் தசரதனுக்கு இராமர், இலட்சுமணன், பரதன், மற்றும் சத்துருக்கன் ஆகியோர் பிறந்தனர் என்றும் கூறுகிறது. தெய்வீக கட்டளை மூலம் பருந்து ஒன்று அந்தப் பாயசத்தின் ஒரு பகுதியைப் பருகிச்சென்று, அஞ்சனா வழிபாட்டில் ஈடுபட்டிருந்த காடுகளின் மீது பறக்கும் போது அதைத் தவறவிட்டது எனவும், இந்துக் கடவுள் வாயு பகவான், விழுந்த தெய்வீக பிரசாதத்தை அஞ்சனாவின் கைகளில் வழங்கினார், அவர் அதை உட்கொண்டதன் விளைவாக அனுமன் அவளுக்குப் பிறந்தான் எனவும் கூறுகிறது.

இராமாயணம் அனுமனின் பிறப்பிடம் கிட்கிந்தை எனக் கூறுகிறது. மகரிஷி வேத வியாசர் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை அனுமன் பிறந்த இடம் என கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் உள்ள அஞ்சநேரி அல்லது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம். ஹம்பி அருகேயுள்ள அஞ்சனாத்திரி மலை கிட்கிந்தை என்று பலராலும் கூறப்படுகிறது.[13][14][15][16]

சிறு வயது

தொகு
குழந்தை அனுமன் ஒரு பழம் என்று நினைத்து சூரியனைப் பிடிக்கும் காட்சி

வால்மீகியின் ராமாயணத்தின்படி, தனது குழந்தைப் பருவத்தில் ஒரு நாள் காலையில், அனுமனுக்குப் மிகுந்த பசி ஏற்பட்டது. வானில் சிவப்பு நிறத்தில் ஞாயிறு (விண்மீன்) உயர்ந்து வருவதைக் கண்டார். அது ஒரு பழுத்த பழம் என்று அதைத் தவறாக எண்ணி, அதைச் சாப்பிட வானில் தாவினார். இந்து புராணங்களில் சொல்லப்படும் தேவர்களின் தலைவனான இந்திரன் அனுமனைத் தடுத்துத் தனது வஜ்ராயுதத்தால் அவரது முகத்தில் தாக்கினார். அது அனுமனை அவரது தாடையில் தாக்கியது, உடைந்த தாடையுடன் அவர் இறந்து பூமியில் விழுந்து விடுகிறார். இதனால் அவரது தந்தை, வாயு (காற்று), (பிரிவு 4.65 இல் ராமாயணம் கூறுகிறது), வருத்தமடைந்து. காற்றை நிறுத்தி விடுகிறார். காற்று பற்றாக்குறை காரணமாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துன்பத்தை உருவாக்கியது. அனைவரும் இந்தப் பிரச்சினையைச் சிவனிடம் கொண்டுச் செல்கின்றனர்.

அவர் தலையிட்டு அனுமனை உயிர்ப்பிக்க, வாயு மீண்டும் அனைத்து உயிர்களுக்கும் காற்றினை அளித்தார். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால் அனுமானின் உடலும் அதைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கும் எனச் சிவன் வரம் அளித்தார். மீண்டும் அவருக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என இந்திரன் வரம் அளித்தார். இந்திரனுடன் சேர்ந்து மற்ற தேவர்களான அக்னிதேவனும் அனுமனுக்கு நெருப்பினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வருணன் நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வாயு காற்றினால் எவ்வித தீங்கும் ஏற்படாது எனவும், வரமளித்தனர். மும்மூர்த்திகளின் ஒருவரான பிரம்மா தேவர்,அனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் எனவும் அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வரமளித்தார். விஷ்ணு பகவானோ "கதா" என்னும் ஆயுதத்தை வழங்கினார். எனவே இந்த வரங்களினால் அனுமன் ஒரு சிரஞ்சீவியாகவும், தனித்துவமான சக்திகளையும் பலத்தையும் கொண்டவரகவும் மாறுகிறார்.[17]

இந்த நிகழ்வுக்குப் பிறகு சிறிது காலம் கழித்துக் குறும்புக்கார சிறுவனான அனுமன், தனது சக்திகளை அப்பாவி மக்களின் மீது சிறு சிறு சேட்டைகளாகப் பயன்படுத்தத் தொடங்குகிறார். ஒரு நாள் அவர் ஒரு தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முனிவரிடம் இவ்வாறு சேட்டைகளில் ஈடுபடும் போது அந்த முனிவர் கோபமுற்று அனுமனது வரங்கள் அனைத்தும் மறக்க சபிக்கிறார்.

இராமாயணத்தில் அனுமன்

தொகு
ராவணன் அனுமனின் வாலில் தீ வைத்தால்

சுந்தர காண்டம் எனப்படும் இராமாயணப் பகுதியில் அனுமனின் பின்வரும் வீரதீரச் செயல்கள் பேசப்படுகின்றன. அனுமன் இராமனை பிரிந்து தவிக்கும் சீதையைக் காண வான் மார்க்கமாக கடல் கடந்து இலங்கைக்கு சென்றதாக இராமாயணம் கூறுகிறது. சீதையை அசோக வனத்தில் சந்தித்து, இராமன் சீதையைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியையும், இராமனின் அடையாளமாக அவரது கணையாழியையும் அனுமன் தருகிறார்.[18] பின்னர் சீதையைச் சிறைப் பிடித்து வைத்திருக்கும் இலங்கை வேந்தன் இராவணனை அவனது அரசவையில் சந்தித்து, சீதையை விடுவிக்குமாறும் இல்லாவிட்டால் இராமன் போர் தொடுக்க வேண்டி இருக்கும் என்பதனையும் தூதுவனாகத் தெரிவிக்கிறார். தூதுவனை மதியாத இராவணன், அனுமனின் வாலில் தீ வைக்க, அங்கிருந்து தப்பிய அனுமன் இலங்கைத் தலைநகரத்தையே தன் வாலில் இருந்த தீயால் எரிந்து சாம்பலாகும்படி செய்து விட்டுத் திரும்புகிறார்.[19] இலங்கையில் இருந்து திரும்பியவுடன் இராமனைச் சந்தித்து, "கண்டேன் சீதையை" என்கிற நற்செய்தியையும், இராவணன் சமாதானத்திற்கு உடன்படாததையும் தெரிவிக்கிறார்.அனுமன் "சொல்லின் செல்வன்" எனவும் அழைக்கப்படுகிறார். பின்னர் போர் மூள்கிறது. போரில், சஞ்சீவினி மலையையே தனது கரத்தால் தூக்கி வந்து போரிலே மயக்கமுற்றவர்கள் நினைவு திரும்பிட வழி வகுத்ததாகவும் இராமாயணம் சொல்கிறது.

அனுமன்–இராமன் முதற் சந்திப்பு

தொகு

இராமனும் இலக்குவனும் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்து கொண்டு இருக்கையில், அவர்கள் உண்மையில் யாரெனக் கண்டுகொள்ள, சுக்ரீவன் அனுமனை அனுப்புகிறான். அனுமன் அந்தண வேடத்தில் இராம இலக்குவனை அடைந்து அவர்கள் யாரென வினவுகிறான். இராமன் தாங்கள் யாரெனக் கூறத் தொடங்கியதுமே, அனுமன் இராமன் காலில் வீழ்ந்து தன்னை அனுமன் என அறிவிக்க, இராமன் அனுமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது தொடங்கும் இராமன்–அனுமன் நட்பு எப்போதும் என்றென்றும் நிலைத்து திகழ்கிறது.[20] அனுமனின் இதயத்தில் இராமன் எப்போதும் ஒளி வீசித் திகழ்கிறார்.

அனுமனது உருமாறும் திறன்

தொகு

இராமயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராக சொல்லப்படுகிறது. இராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார். பின்னர், சீதையைக் கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார். இது போன்று உருவினை மாற்றிக் கொள்ளும் சித்திகளை அனுமன் தனது இளமைப் பிராயத்தில் சூரியக் கடவுளிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

அனுமன் சஞ்சீவினி மலையைக் கொணர்ந்தது

தொகு
அஹி மற்றும் மஹியை வதைத்த கையுடன் சஞ்சீவனி மலையை கொண்டு வரும் அனுமார்

போரில் இராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மூர்ச்சை அடைய, இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுப்பப் படுகிறார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறார். அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. அன்றைய தினம் முடிவடையும் முன் மூலிகையினைக் கொணர்ந்தால் தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்கிற தறுவாயில், அனுமன் பெரியதோர் உருக்கொண்டு, சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து, வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்தடைகிறார். பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்க, இராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமனை கட்டித் தழுவுகிறார். அனுமனைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்பொடு அறிவிக்கிறார்.
அனுமன் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகையில் இராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியைத் தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமனை நோக்கி அம்பினைத் தொடுகிறார். அம்பினில் இராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமனைச் சும்மா இருக்க, அவ்வம்பு அனுமனது காலைத் துளைக்கிறது. உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம் அவன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகச் சொன்னதைக் கேட்டதும் பரதன் தன் தவற்றை நினைத்து வருந்துகிறார். பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமன் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார். அனுமனோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைகிறார்.

அனுமன் தனது இதயத்தைத் திறந்து காட்டுதல்

தொகு

இராவண வதம் முடித்து இராமன் முதலானோர் அயோத்தி திரும்பி இராமன் முடி சூட்டிய பின், தனக்கு உதவி செய்தவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது இராமன் அருகே யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வர, இராமன் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டு, அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட முடியாது எனப் புகழ்கிறார். அக்கணம் சீதையோ ஏதாவது ஒரு பரிசினை தங்கள் நினைவாக அனுமனுக்கு தர வேண்டுமன விழைந்து, தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்திங்கள் பதித்த விலை உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார். அதை பெற்றுக்கொண்ட அனுமன், அந்த மாலையில் பதித்திருந்த இரத்தினங்களை வெளியே எடுத்து அதில் இராமர்-சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார். ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை. இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப் பார்த்து நகைக்க, அனுமனோ அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து அதில், தன் இதயத்தில் இராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.

மகாபாரதத்தில் அனுமன்

தொகு
பீமன் அனுமனின் வாலை தூக்க முயற்சிக்கிறான்

இராமயணத்தைப்போல மகாபாரதத்தில் அனுமன் முக்கிய கதைப்பாத்திரம் இல்லை. ஆனால் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன் உறவு வருகிறது. பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது, காட்டு வழியே பீமன் பயணிக்கும்போது, அங்கே வயோதிக குரங்கு ஒன்று படுத்துக் கொண்டிருக்க, அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. பீமன் அதன் வாலை தள்ளி வைத்து விட்டு செல்லலாம் என எண்ணி, வாலைத் தூக்க யத்தனித்தான். ஆனால் சிறந்த பலசாலி எனப்பெயர் பெற்ற பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை. பின்னர் பீமன், அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்து, அக்குரங்கிடம் மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிட, அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.
குருக்ஷேத்திரப் போரில், அர்ஜூனனின் தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இது மானசீகமாக தேரின் பலத்தினைக் கூட்டியதாகச் சொல்வார்கள். கண்ணன் போர்க்களத்தில் பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோது, அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது. போர் நிறைவடைந்தபின், அர்ஜூனனும், கண்ணனும் தேரில் இருந்து கீழே இறங்கியபின், கண்ணன் அனுமனிடம் இதுவரை தேரின் கொடியாக இருந்தமைக்கு நன்றி சொல்லிட, உடனே அனுமன் தன் உருவினைக் காட்டி, கண்ணனை வணங்கி விட்டு, கொடியில் இருந்து மறைந்து விடுகிறார். அனுமன் மறைந்தவுடனேயே, தேர் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அர்ஜூனனைப் பார்த்து கண்ணன், "அர்ஜூனா, இதுவரை போரினில், இத்தேரின் மேல் வீசப்பட்ட அனைத்து கொடிய பாணங்களையும் தாங்கி நின்றது என்றால், அதற்கு நானும் அனுமனும் இத்தேரினில் இருந்ததுவே காரணம். இல்லாவிட்டால், இத்தேர் எப்போதோ அப்பாணங்களின் சக்தியினால் எரிந்து போயிருக்கும்" என்றார்.

மற்ற நூல்கள்

தொகு

ராமாயணம் மற்றும் மகாபாரதம் தவிர, பல நூல்களில் அனுமன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கதைகளில் சில முந்தைய காவியங்களில் குறிப்பிடப்பட்ட அவரது சாகசங்களை சேர்க்கின்றன, மற்றவை அவரது வாழ்க்கையின் மாற்று கதைகளை கூறுகின்றன. கந்த புராணம் ராமேஸ்வரத்தில் அனுமன் பற்றி குறிப்பிடுகிறது.[21] சிவ புராணம் தென்னிந்தியப் பதிப்பில், ஹனுமான் சிவன் மற்றும் மோகினி (விஷ்ணுவின் பெண் அவதாரம்) ஆகியோரின் மகனாக விவரிக்கப்படுகிறார். தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பிரபலமான சுவாமி ஐயப்பன் வழிபாடுடன் அவர் இணைக்கப்பட்டுள்ளார். முக்திகா உபநிஷத் என்பது ராமர் மற்றும் ஹனுமான் முக்தி பற்றிய விசாரணையைக் கையாளும் உரையாடலின் ஒரு பகுதியாகும்.[22] 16 ஆம் நூற்றாண்டின் இந்தியக் கவிஞர் துளசிதாஸ் எழுதிய அனுமன் சாலிசா, அனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பக்திப் பாடல். அனுமனை நேருக்கு நேர் சந்தித்த தரிசனங்கள் இருப்பதாக அவர் கூறினார். இந்தக் கூட்டங்களின் அடிப்படையில், அவர் ராமாயணத்தின் அவாதி மொழி பதிப்பான ராம்சரித்மனாஸ் எழுதினார்.[23]

மற்ற சமயங்கள்

தொகு

பௌத்தம்

தொகு

ராமாயணத்தின் திபெத்திய பௌத்தம் (தென்மேற்கு சீனா) மற்றும் கோட்டான் இராச்சியம் (மேற்கு சீனா, மத்திய ஆசியா மற்றும் வடக்கு ஈரான்) பதிப்புகளில் ஹனுமான் தோன்றுகிறார். கோட்டானிய பதிப்புகள் ஜாதகா கதைகள் போன்ற கருப்பொருளைக் கொண்டுள்ளன, ஆனால் பொதுவாக ஹனுமான் கதையில் உள்ள இந்து நூல்களைப் போலவே உள்ளன. மேலும், திபெத்திய பதிப்பில், ராமர் மற்றும் சீதைக்கு இடையேயான காதல் கடிதங்களை அனுமன் சுமந்து செல்வது போன்ற நாவல் கூறுகள் தோன்றும், மேலும் இந்து பதிப்பில் ராமர் சீதைக்கு ஒரு செய்தியாக திருமண மோதிரத்தை அனுப்புகிறார். மேலும், திபெத்திய பதிப்பில், ராமர் ஹனுமானுடன் அடிக்கடி கடிதங்கள் மூலம் தொடர்பு கொள்ளாததற்காக அவரைக் கண்டிக்கிறார்.[24][25] ராமாயணத்தின் இலங்கைப் பதிப்புகளில், ஹனுமானின் துணிச்சலையும் புதுமையான திறனையும் விவரிக்கும் பல புராணக்கதைகள் சிங்கள பதிப்புகளில் காணப்படுகின்றன. உருவங்கள் சம்பந்தப்பட்ட கதைகள் பௌத்த கருப்பொருள்களைக் கொண்டுள்ளன, மேலும் இந்து தர்மத்தின் படி உட்பொதிக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை.[26] சீன பௌத்த நூல்களில், புத்தர் ஹனுமானுடன் சந்தித்ததை புராணங்கள் குறிப்பிடுகின்றன.[27] கிழக்கு ஆசிய பௌத்த நூல்களில் ஹனுமனின் வருகை, 6 ஆம் நூற்றாண்டில் இல் சீன மற்றும் திபெத்திய மொழிகளில் ராமாயணத்தின் மொழிபெயர்ப்பில் அதன் வேர்களைக் கண்டறியலாம்.[28] சீனா மற்றும் சப்பான் இரண்டிலும், இந்தியாவைப் போலவே, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே ஒரு தீவிரமான பிளவு இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கையும் மனிதர்களுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. மேற்கத்திய மரபுகளைப் போல விலங்குகள் அல்லது இயற்கையை விட மனிதர்களை உயர்த்துவது இல்லை. ஒரு தெய்வீக குரங்கு சீனா மற்றும் சப்பானின் வரலாற்று இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, ஜப்பானிய உரையான கெய்ரன்ஷுயோஷு, தெய்வீக குரங்கைப் பற்றிய அதன் புராணங்களை முன்வைக்கும் போது, ​​அது ஒரு பறக்கும் வெள்ளைக் குரங்கை விவரிக்கிறது.[29]

சமணம்

தொகு

விமலாசூரி எழுதிய ராமாயணத்தின் சமண பதிப்பான பௌமாசாரியா அனுமனை ஒரு தெய்வீக குரங்கு என்று குறிப்பிடவில்லை, மாறாக ஒரு வித்யாதாரா (ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினம், சமண அண்டவியலில் தேவதை). அவர் பவங்காதி (காற்று தெய்வம்) மற்றும் அஞ்சனா சுந்தரியின் மகன். அஞ்சனா தனது மாமியார்களால் விரட்டப்பட்ட பின்னர், ஒரு வனக் குகையில் அனுமனைப் பெற்றெடுக்கிறாள். அவளுடைய தாய்வழி மாமா அவளை காட்டிலிருந்து காப்பாற்றுகிறார். இந்து நூல்களில் இருந்து முக்கிய வேறுபாடுகள் உள்ளன: சமண நூல்களில் ஹனுமான் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்டவர், ராமர் யாரையும் கொல்லாத ஒரு பக்தியுள்ள சமணர், மற்றும் ராவணனைக் கொன்றவர் லக்ஷ்மணன். அனுமன் ராமனைச் சந்தித்து சீதை ராவணனால் கடத்தப்பட்டதைப் பற்றி அறிந்த பிறகு ராமரின் ஆதரவாளராக மாறுகிறார். அவர் ராமரின் சார்பாக இலங்கை செல்கிறார், ஆனால் சீதையை விட்டுக்கொடுக்க ராவணனை சமாதானப்படுத்த முடியவில்லை. இறுதியில், ராவணனுக்கு எதிரான போரில் ராமனுடன் சேர்ந்து பல வீரச் செயல்களைச் செய்கிறான். சமண "ராமாயணம்" கதையின் பல பதிப்புகளில், அனுமன் மற்றும் ராமர் தொடர்பை விளக்கும் பத்திகள் உள்ளன. அனுமன், இந்த பதிப்புகளில், இறுதியில் ஒரு சமண துறவியாக மாறி அனைத்து சமூக வாழ்க்கையையும் துறக்கிறார்.[10]

சீக்கியம்

தொகு

சீக்கியத்தில் இந்துக் கடவுளான ராமர் ஸ்ரீ ராம் சந்தர் என்று குறிப்பிடப்படுகிறார். மேலும் ஹனுமானின் கதை செல்வாக்கு பெற்றுள்ளது. ஹிர்தா ராம் பல்லா இயற்றிய ஹனுமன் நாடகம் மற்றும் கவி கனகனின் தாஸ் குர் கதா போன்ற சீக்கிய நூல்கள் அனுமனின் வீரச் செயல்களை விவரிக்கின்றன.[30]

தென்கிழக்கு ஆசிய நூல்கள்

தொகு

ராமகியன் போன்ற இந்திய அல்லாத பதிப்புகள் உள்ளன.vஇந்த ராமாயணத்தின் பதிப்புகள் மச்சானு, ராவணன் மகள் சுவன்னமாச்சாவால் பிறந்த அனுமனின் மகன் என குறிப்பிடுகின்றன. மற்றொரு புராணக்கதை மத்ஸ்யராஜா அல்லது மத்ஸ்யகர்பா என்றும் அழைக்கப்படும் ஒரு தேவதை அனுமனின் மகன் என்று கூறுகிறது. மத்ஸ்யராஜாவின் பிறப்பு பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: ஒரு மீன் ("மத்ஸ்ய") அவர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அனுமனின் வியர்வைத் துளிகளால் செறிவூட்டப்பட்டது.[31] தென்கிழக்கு ஆசிய நூல்களில் உள்ள ஹனுமான், பல்வேறு வழிகளில் இந்திய இந்து பதிப்பிலிருந்து வேறுபடுகிறார். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், கதையின் அம்சங்கள் இந்து பதிப்புகள் மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் காணப்படும் ராமாயணத்தின் பௌத்த பதிப்புகளைப் போலவே இருக்கும்.

முக்கியத்துவம் மற்றும் செல்வாக்கு

தொகு

அனுமான் இடைக்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவரானார் மற்றும் ராமரின் சிறந்த பக்தராக சித்தரிக்கப்பட்டார்.[32] அனுமன் மீதான பக்தி மற்றும் அவரது இறையியல் முக்கியத்துவம் 2வது மில்லினியத்தில், "ராமாயணம்" இயற்றப்பட்ட நீண்ட காலத்திற்குப் பிறகு வெளிப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தில் இசுலாமிய ஆட்சி வந்த பிறகு அவரது முக்கியத்துவம் வளர்ந்தது.[6] அவர் சக்தி ("வலிமை, வீர முனைப்பு மற்றும் உறுதியான சிறப்பு") மற்றும் பக்தி ("அவரது தனிப்பட்ட கடவுள் ராமனிடம் அன்பான, உணர்ச்சிபூர்வமான பக்தி") ஆகியவற்றின் சிறந்த கலவையாக பார்க்கப்படுகிறார். அவர் தற்காப்புக் கலைகளின் புரவலர் கடவுளாக இருந்துள்ளார். அவர் ஒரு திறமையான இலக்கண நிபுணர், தியானம் செய்யும் யோகி மற்றும் விடாமுயற்சியுள்ள அறிஞர் என்று கூறப்படுகிறது. நிதானம், நம்பிக்கை மற்றும் ஒரு காரணத்திற்காக சேவை செய்தல் ஆகியவற்றின் மனித மேன்மைகளை அவர் எடுத்துக்காட்டுகிறார்.[10][33]

அனுமர் உருவங்கள்

தொகு

அனுமனின் ஆரம்பகால சிற்பங்கள் குப்தர் காலத்தைச் சேர்ந்தவையாகும், இதில் அனுமன் ஒரு தனி உருவமாக சித்தரிக்கப்படவில்லை. அனுமானின் தனிப்பட்ட "மூர்த்திகள்" எட்டாம் நூற்றாண்டிலிருந்து தோன்றின. இந்த மூர்த்திகள் அனுமனை ஒரு கை உயர்த்தி, ஒரு கால் அரக்கனை அடக்கி, நிமிர்ந்த வாலுடன் சித்தரித்தன.[10] அனுமனின் உருவப்படம் வால்மீகியின் "ராமாயணத்தில்" இருந்து பெறப்பட்டது. அவர் பொதுவாக ராமாயணத்தின் மற்ற மைய நபர்களான ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணருடன் சித்தரிக்கப்படுகிறார். அவர் ஒரு கதை போன்ற ஆயுதங்களோடு காணப்படுகிறார்.[34]அவரது உருவப்படம் மற்றும் கோவில்கள் இன்று பொதுவானவை. அவர் பொதுவாக ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணருடன், அருகில் அல்லது தனி சன்னதியில் வைணவக் கோயில்களில் காட்டப்படுகிறார். மேலும் அவர் வழக்கமாக தனது மார்பைத் திறந்து, ராமர் மற்றும் சீதையின் உருவங்களை அடையாளமாக அவரது இதயத்திற்கு அருகில் காட்டுகிறார். அவர் சைவ சமயம் பின்பற்றுபவர்கள் மத்தியிலும் பிரபலமானவர்.[7] அனுமர் உருவச் சிலைகள் பல்வேறு உருவங்களில் வணங்கப்படுகிறார். வீரகோலம், நின்றக் கோலம், யோகக் கோலம் போன்ற உருவங்களில் அனுமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.[35]

அனுமனுக்கான கோயில்கள்

தொகு
அனுமன் சுடுமட்சிலை

இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் அமைக்கப்படுகின்றன. தனிக்கோயில்கள் பெருமளவு அனுமருக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்தமையால், பெரிய சிலைகள் வைக்கப்படுகின்றன.

அறியப்பட்ட பழமையான சுதந்திர அனுமன் கோயில் மற்றும் சிலை கஜுராஹோ இல் உள்ளது.[36] தமிழ்நாட்டில் நாமக்கல்லில் இருக்கும் 18 அடி உயர அனுமன் சிலை மிகவும் புகழ் பெற்றது. காசியிலும் அனுமனுக்குத் தனியான கோயில் உண்டு. உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலை, ஆந்திர மாநிலம் பரிதலாவில் உள்ளது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Brown, N.R. (2011). The Mythology of Supernatural: The Signs and Symbols Behind the Popular TV Show. Penguin Publishing Group. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-101-51752-9. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  2. Williams, G.M. (2008). Handbook of Hindu Mythology. Handbooks of world mythology. OUP USA. p. 148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533261-2. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  3. Brian A. Hatcher (2015). Hinduism in the Modern World. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-04630-9.
  4. Bibek Debroy (2012). The Mahabharata: Volume 3. Penguin Books. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-310015-7.
  5. J. Gordon Melton; Martin Baumann (2010). Religions of the World: A Comprehensive Encyclopedia of Beliefs and Practices, 2nd Edition. ABC-CLIO. pp. 1310–1311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-204-3.
  6. 6.0 6.1 Paula Richman (2010), Review: Lutgendorf, Philip's Hanuman's Tale: The Messages of a Divine Monkey, The Journal of Asian Studies; Vol 69, Issue 4 (Nov 2010), page 32
  7. 7.0 7.1 7.2 Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism. Infobase. pp. 177–178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7564-5. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
  8. George M. Williams (2008). Handbook of Hindu Mythology. Oxford University Press. pp. 146–148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533261-2.
  9. Catherine Ludvik (1994). Hanumān in the Rāmāyaṇa of Vālmīki and the Rāmacaritamānasa of Tulasī Dāsa. Motilal Banarsidass. pp. 2–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1122-5.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 Lutgendorf, Philip (2007). Hanuman's Tale: The Messages of a Divine Monkey. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-530921-8. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  11. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 68.
  12. Encyclopaedic Dictionary of Puranas Vol 2.(D-H) pp=628–631, Swami Parmeshwaranand, Sarup & Sons, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-226-3
  13. Deshpande, Chaitanya (2016-04-22). "Hanuman devotees to visit Anjaneri today". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-04-16.
  14. Bose, Mrityunjay (2020-11-07). "Maharashtra govt to develop Hanuman's birthplace Anjaneri". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2021-04-16.
  15. Malagi, Shivakumar G. (2018-12-20). "At Hampi, fervour peaks at Hanuman's birthplace". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  16. "Anjaneya Hill". பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  17. Catherine Ludvik (1994). Hanumān in the Rāmāyaṇa of Vālmīki and the Rāmacaritamānasa of Tulasī Dāsa. Motilal Banarsidass. pp. 61–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1122-5.
  18. 5. சூடாமணிப்படலம்
  19. 13. இலங்கைஎரியூட்டு படலம்
  20. 3. நட்புக் கோட் படலம்
  21. Diana L. Eck (1991). Devotion divine: Bhakti traditions from the regions of India : studies in honour of Charlotte Vaudeville. Egbert Forsten. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-6980-045-5. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  22. Deussen, Paul (September 1997). Sixty Upanishads of the Veda (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
  23. Catherine Ludvík (1994). Hanumān in the Rāmāyaṇa of Vālmīki and the Rāmacaritamānasa of Tulasī Dāsa. Motilal Banarasidas publ. pp. 164–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1122-5. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  24. Susan Whitfield; Ursula Sims-Williams (2004). The Silk Road: Trade, Travel, War and Faith. Serindia Publications. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932476-13-2.
  25. J. L. Brockington (1985). Righteous Rāma: The Evolution of an Epic. Oxford University Press. pp. 264–267, 283–284, 300–303, 312 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-815463-1.
  26. John C. Holt (2005). The Buddhist Visnu: Religious Transformation, Politics, and Culture. Columbia University Press. pp. 138–140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50814-8.
  27. Arthur Cotterall (2012). The Pimlico Dictionary of Classical Mythologies. Random House. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4481-2996-6.
  28. Rosalind Lefeber (1994). The Ramayana of Valmiki: An Epic of Ancient India-Kiskindhakanda. Princeton University Press. pp. 29–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-06661-5.
  29. Richard Karl Payne (1998). Re-Visioning "Kamakura" Buddhism. University of Hawaii Press. pp. 65–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-2078-7.
  30. Louis E. Fenech (2013). The Sikh Zafar-namah of Guru Gobind Singh: A Discursive Blade in the Heart of the Mughal Empire. Oxford University Press. pp. 149–150 with note 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-993145-3.
  31. Camille Bulcke; Dineśvara Prasāda (2010). Rāmakathā and Other Essays. Vani Prakashan. pp. 117–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5000-107-3. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  32. Devdutt Pattanaik (1 September 2000). The Goddess in India: The Five Faces of the Eternal Feminine. Inner Traditions * Bear & Company. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-807-5. பார்க்கப்பட்ட நாள் 18 July 2012.
  33. Philip Lutgendorf (2002), Evolving a monkey: Hanuman, poster art and postcolonial anxiety, Contributions to Indian Sociology, Vol 36, Issue 1–2, pages 71–110
  34. T. A. Gopinatha Rao (1993). Elements of Hindu iconography. Motilal Banarsidass. pp. 58, 190–194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0878-2.
  35. David N. Lorenzen (1995). Bhakti Religion in North India: Community Identity and Political Action. State University of New York Press. p. 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-2025-6.
  36. Reports of a Tour in Bundelkhand and Rewa in 1883–84, and of a Tour in Rewa, Bundelkhand, Malwa, and Gwalior, in 1884–85, Alexander Cunningham, 1885

பாஹரி சுந்தர்

தொகு

தமிழில் உள்ள ஹனுமான் சாலிசா என்பது ஹனுமனின் அபரிமிதமான சக்தி, பக்தி, தைரியம் மற்றும் ஞானத்தை ஆசீர்வதிக்கும் ஒரு பக்திப் பாடல்.

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அனுமன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமன்&oldid=4104947" இலிருந்து மீள்விக்கப்பட்டது