நெருப்பு
நெருப்பு அல்லது தீ அல்லது அக்கினி (Fire) என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.[1]. துருப்பிடித்தல் (Rusting), சமிபாடு போன்ற ஆக்சிசனேற்ற செயல்முறைகள் மெதுவாக நிகழ்வதனால், இந்த விரைவான ஆக்சிசனேற்ற செயல்முறையில் இருந்து வேறுபடுவதுடன் நெருப்பை உருவாக்குவதில்லை.
நெருப்பு பழைய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான். உணவு சமைத்தான்.
நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் ஆக்சிசன் தேவைப்படுகிறது. ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த இலைச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் அறிவியல் வளர்ச்சியினால் கந்தகம் கொண்டு தீக்குச்சிகள் தயாரிக்கப்பட்டு, தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. நெருப்பை "அக்னி" என்னும் பெயரினால் கடவுளாகவும் வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
சுடர்/தீச்சுடர் அல்லது பிழம்பு/தீப்பிழம்பு என்பதே நெருப்பின் கண்ணுக்குத் தெரியும் பகுதியாகும். எரிபொருளினதும், அதற்கு வெளியிலிருக்கும் மாசுக்களினதும் தன்மை, மற்றும் அளவில் எரியும் தீச்சுடர் அல்லது தீப்பிழம்பின் நிறம், நெருப்பின் அடர்த்தி, தீவிரம் என்பன தங்கியிருக்கும்.
நெருப்பின் சுடரில் மேற்பரப்பில் அதிகப்படியான வெப்பம் இருக்கும். நெருப்பானது கட்டுப்பாடற்று ஏற்படும்போது பொருள் சார்ந்த அழிவுகளையும், தாவரங்கள், விலங்குகள், மனிதருக்கு ஆபத்தையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. அதேவேளை இயற்கையில் நேரும் நெருப்பானது, சூழல் மண்டலம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள அல்லது மீளமைத்துக் கொள்ளவும் உதவுகின்றது]].[2].
நெருப்பின் தோற்றுவாய்
தொகுபொதுவாக நெருப்பு என்பது பின்வரும் நிலைகளில் தோன்றுகின்றது.
1. கட்டுப்பாடான எரித்தல் - ஓர் எரிபொருள் எரிக்கப்படும்போது தோன்றும் நெருப்பு. எ.கா.: சமையலுக்கு, அல்லது வெப்பத்தை உருவாக்க விறகுகளையோ, அல்லது வேறு எரிபொருளையோ எரித்தல்.
2. கட்டுப்பாடற்ற எரிதல்
- இது விபத்தினால் தற்செயலாக தோன்றும் நெருப்பாக இருக்கலாம். எ.கா.:எண்ணெய்க் கிணறு, அல்லது கட்டடங்களில் தானாக ஏற்படும் நெருப்பு.
- இயற்கையாகத் தோன்றும் நெருப்பாக இருக்கலாம். எ.கா.: காட்டுத்தீ
- திட்டமிட்டு எரிப்பை செய்வதனால் ஏற்படும் பெரு நெருப்பாக இருக்கலாம். எ.கா.:வாழிடங்களை எரிக்கும்போது, அது பின்னர் தானாகவே பெரு நெருப்பாக கட்டுப்பாடற்று எரிதல்.
சுடர்
தொகுநெருப்பு என்பது சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் தீச்சுடர் அல்லது தீச்சுவாலையையே குறிக்கின்றது. சுடர் என்பது புலப்படும் ஒளிக்கற்றை , அகச்சிவப்புக் கதிர், மற்றும் சில நேரங்களில் புற ஊதாக் கதிர் என்பவற்றையும் உமிழும். இது அதிர்வெண் நிறமாலை உமிழ்கின்ற வாயுக்கள் மற்றும் திட பொருளைக்கொண்ட ஒரு கலவையாகும்.
இயற்கை மாசுபாடு
தொகுநெருப்பு அனைத்து பொருளையும் கரியாக மாற்றிவிடும். எனவே பூமியில் உள்ள கார்பனின் அளவை நெருப்பு அதிகரிக்கிறது. எனவே சுற்றுசூழல் மாசுபடுகின்றது.
இந்தியாவில் நெருப்பின் வரலாறு
தொகுநெருப்ப்பு என்பது தீமையை அழித்து புனிதம் சேர்ப்பத்தாக இந்துக்களால் நம்பப்படுகிறது. அதனால் திருமணம் உட்பட பல சுப நிகழ்வுகளில் இந்தியர்கள் அக்கினியைப் பயன் படுத்துகின்றனர்.
வேத காலத்திலிருந்தே நெருப்பு புனிதமாக கருதப்படுகிறது. சொவுராட்டிரர்கள் எனும் இந்தியர்கள் நெருப்பை மட்டுமே தெய்வமாக வழிபடுவார்கள்.
நெருப்பின் வகைகள்
தொகுநெருப்பு பல காரணங்களால் உருவாக்கப்படுகின்றன. உராய்வதால் உருவாகும் நெருப்பே அனைத்திற்கும் பிரதானம் ஆகும்.
- இயற்கை நெருப்பு
- செயற்கை நெருப்பு
இயற்கை நெருப்பு
தொகுகாட்டுத்தீ போன்றவை இயற்கை நெருப்பின் வகைகளாகும்.சூரியன் இயற்கை நெருப்பிற்கு உதாரணம் ஆகும்.
செயற்கை நெருப்பு
தொகுதீக்குச்சினால் உருவாகும் நெருப்பு போன்றவை செயற்கை நெருப்பு ஆகும்.
நெருப்பு குறித்த படிமங்கள்
தொகு-
குவைத்தில் உள்ள எண்ணெய்க் கிணறு பற்றி எரியும் காட்சி
-
பள்ளியில் ஏற்பட்ட தீ
-
தீ மூட்டுதல்
-
தீக்குச்சியிலிருந்து தீமூட்டல்
-
நெருப்புச் சூறாவளி
தொகுகாடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும்போது உண்டாகும் உராய்வினால் நெருப்பு பற்றிக் கொள்ளும். இத்தகைய காட்டுத் தீ (WILD FIRE) என்றழைக்கப்படும் நெருப்பு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். சில வேளைகளில் காற்றின் வேகம் மற்றும் சுற்றுச்சூழலில் காணப்படும் வெப்பநிலையைப் பொறுத்து இந்த காட்டுத் தீயானது, ஒரு நெருப்புப் பந்தாக உருவெடுத்து நெருப்புச் சுழலாக உருமாறும். காற்றின் வேகச் சுழற்சி காரணமாக, செங்குத்தாய் உருவாகும் இத்தகைய நெருப்புப் கோளங்கள் சில பொழுதுகளில் முப்பது அடி முதல் இருநூறு அடி உயரமும், சுமார் பத்து அடி அகலமும் கொண்ட வெப்பச் சூறாவளியாக மாறிவிடும். காற்று வீசும் திசை மற்றும் வேகத்தைப் பொறுத்து இந்நெருப்புச் சூறாவளி நீண்ட நேரம் நீடிக்கும். இத்தகைய நெருப்புச் சூறாவளியின் வெப்பநிலையானது மிக அதிகளவில் காணப்படும். இதன் காரணமாக இது கடந்து செல்லும் பாதையில் உள்ள மரங்கள், செடிகள் எல்லாம் சொற்ப நேரத்தில் தீயில் கருகி மடியும். இந்த நெருப்புச் சூறாவளி, மிகவும் குறுகிய காலத்தில் இயற்கைப் பேரழிவை உண்டாக்கி விடும் தன்மையுடையது. மரங்கள் செடிகள் உள்ளிட்ட தாவரங்கள் மட்டும் இல்லாமல் காட்டில் வசிக்கும் பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் முதலானவையும் அகப்பட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாக மாண்டு போகும்.[3]
நெருப்பை நெருங்கவிடாத ரொடோடென்றன் மரம்
தொகுகாட்டில் திடீரென உருவாகும் காட்டுத் தீயானது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு வைக்காது அழித்துவிடும். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் நெருங்க விடாமல் காத்துக்கொள்ளும் தகவமைப்பைத் தன்னகத்தே கொண்ட மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
இமயமலை ரொடோடென்றன் ( Himalayan Rhododendran) எனப்படும் இத்தகைய மரத்தின் அருகில் நெருப்பானது பரவி வருகையில், பல அடுக்குகளாகத் தகவமைப்புப் பெற்றுள்ள இதன் மரப் பட்டைகளிலிருந்து நீர் போன்றதொரு திரவம் வடியத் தொடங்கிவிடும். இதனால் நெருப்பினால் உண்டாகும் அழிவிலிருந்து இத்தகைய மரங்கள் நெருப்பை நெருங்கவிடாமல் தப்பித்துக் கொள்ளும். பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இத்தகைய மரங்கள் பறவைகளைத் தன்னகத்தே கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாழிடங்களாக விளங்குகின்றன. அதுபோல, பலத்த காற்றினையும் எதிர்த்து நிற்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் இவை திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து உருவாக்கப்படும் மலர்ச் சாறு மருத்துவத் தன்மை நிறைந்தது. தமிழில் காட்டுப் பூவரசு என இது அழைக்கப்படுகிறது. நீலகிரியில் வாழும் படுகர்கள் தம் மொழியில் இதனை பில்லி என்றழைக்கின்றனர். பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவர்கள் இம்மரத்தில் காணப்படும் பூக்களை, போரசு என்று கூறுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி மலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகள்) அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான இடங்களில் இம்மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இது வழங்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் ரொடோடென்றன் மரங்கள் காணப்படுகின்றன.[4]
புது வகை நெருப்பு கண்டுபிடிப்பு
தொகுஅறிவியல் அறிஞர்கள் சிலர் நிகழ்த்திய நெருப்புச் சுழற்காற்று ஆய்வு ஒன்றில், இதற்கு முன்பு யாரும் கண்டிடாத, இன்னும் அமைதியான மற்றும் துல்லியமான முறையில் எரியும் நெருப்புச் சுழலில் சுழன்றுகொண்டிருக்கும் நீல மற்றும் ஊதா நிற தீப்பிழம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக, மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு விஞ்ஞானிகள் தொன்மையான மஞ்சள் நெருப்பை விட தூய்மையாக எரிகிற நீலப் புயல் சுடர் ஒன்றை உருவாக்கிக் காட்டினர். இந்த நெருப்பின் மூலம் திறன் மிகு சூழலிய எண்ணெய்க் கசிவுச் சுத்திகரிப்பு முறை மேற்கொள்ள வாய்ப்புண்டு.[5]
Read more at: http://tamil.gizbot.com/scitech/scientists-discover-the-blue-whirl-beautiful-new-kind-fire-tamil-011837.html
Read more at: http://tamil.gizbot.com/scitech/scientists-discover-the-blue-whirl-beautiful-new-kind-fire-tamil-011837.html
மேலும் பார்க்க
தொகுhttp://tamil.gizbot.com/img/2016/08/ssssss-10-1470822344.jpg
மேற்கோள்கள்
தொகு- ↑ Glossary of Wildland Fire Terminology. National Wildfire Coordinating Group. November 2009. http://www.nwcg.gov/pms/pubs/glossary/pms205.pdf. பார்த்த நாள்: 2008-12-18
- ↑ Begon, M., J.L. Harper and C.R. Townsend. 1996. Ecology: individuals, populations, and communities, Third Edition. Blackwell Science Ltd., Cambridge, Massachusetts, USA.
- ↑ "நெருப்பு சூறாவளி". பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2017.
- ↑ "நெருப்பு நெருங்காத மரம்". பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2017.
- ↑ "நீல புயல் : ஒரு புதிய வகை நெருப்பு கண்டுபிடிப்பு..!". பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2017.