எண்ணெய்க் கிணறு
எண்ணெய்க் கிணறு என்பது பெற்றோலிய எண்ணெய் மற்றும் வளிம ஐதரோகாபன் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக அல்லது அவற்றை எடுப்பதற்காகப் புவியின் மேற்பரப்பினூடு அல்லது கடற்படுகையின் மீது செய்யப்பட்ட துளைகளைக் குறிக்கும். இவை பல ஆயிரம் மீட்டர்கள் வரை ஆழமுள்ளவை.
வரலாறுதொகு
9 ஆம் நூற்றாண்டிலிருந்தே அசர்பைஜான் நாட்டிலுள்ள இன்றைய பாக்கு நகரைச் சூழவுள்ள இடங்களில் எண்ணெய் வயல்கள் இருந்துள்ளன. மத்தியகால இஸ்லாமிய உலகின் பெற்றோலியத் துறைக்கான நேப்தா இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த எண்ணெய் வயல்களைப் பற்றி 10 ஆம் நூற்றாண்டில் அல்-மசுதி என்பவரும், 13 ஆம் நூற்றாண்டில் மார்க்கோ போலோவும் விபரித்துள்ளனர். இவற்றிலிருந்து பல கப்பல்கள் நிறைந்த எண்ணெய் இங்கு உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 1264 ஆன் ஆண்டில் அசர்பைஜானின் கரையோரத்திலுள்ள பாக்கு நகருக்குச் சென்ற மார்க்கோ போலோ அங்கே ஊற்றுக்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவதைக் கண்டுள்ளார். அப் பகுதியிலிருந்த ஊற்றொன்றிலிருந்து நூறு கப்பல்களில் நிரப்பக்கூடிய எண்ணெய் கிடைக்கக் கூடும் என அவர் குறித்துள்ளார்.
இப்பகுதிகளில் ஆழம் குறைந்த பள்ளங்களைத் தோண்டி எண்ணெயை எடுத்தனர். அத்துடன் கைகளால் தோண்டப்பட்ட சுமார் 35 மீட்டர்கள் வரை ஆழம் கொண்ட துளைகள் 1594 ஆம் ஆண்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. பாக்குவே முதலாவது உண்மையான எண்ணெய் வயலாகும். 1830 ஆம் ஆண்டளவில் இப்பகுதியிலிருந்த சுமார் 116 கிணறுகளில் இருந்து 3,840 மெட்ரிக் டன்கள் (சுமார் 28,000 பீப்பாக்கள்) எடையுள்ள எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாகத தெரிகிறது. 1849 ஆம் ஆண்டில் ரஷ்யப் பொறியியலாளரான எஃப். என். செம்யெனோவ் என்பவர் அப்செரோன் குடாநாட்டில் எண்ணெய்க் கிணறு தோண்டுவதற்கு வடக் கருவி (cable tool) ஒன்றைப் பயன்படுத்தினார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பென்சில்வேனியாவிலுள்ள புகழ் பெற்ற கிணறு கர்னல் டிரேக் என்பவரால் தோண்டப்பட்டது. 19 ஆன் நூற்றாண்டின் இறுதியில் பாக்குவிற்கு அண்மையிலுள்ள பிபி-எய்பட் (Bibi-Eibat) எண்ணெய் வயலில் கடலுள் துளையிடல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ அதே காலப்பகுதியில் 1896 ஆம் ஆண்டில் கலிபோர்னியாக் கரையில் அமைந்திருந்த சம்மர்லாண்ட் எண்ணெய் வயலில் முதல் கடலினுள் அமைந்த எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது.
தொடக்க கால எண்ணெய்க் கிணறுகள் வடக் கருவிகளை நிலத்துள் அடித்துச் செலுத்துவதன் மூலம் தோண்டப்பட்டன. பின்னர் சுழல் துளைப்பான்கள் (rotary drill) பயன்பாட்டுக்கு வந்தன. இவை கூடிய ஆழத்துக்கும் விரைவாகவும் துளைகளை இட வல்லவையாக இருந்தன. 1970 களுக்கு முன் பெரும்பாலான எண்ணெய்க் கிணறுகள் நிலைக்குத்தானவை. எனினும் தற்காலத் துளைக்கும் தொழில்நுட்பங்கள், நிலைக்குத்திலிருந்து விலகிய திசைகளிலும் துளைகளை இடக்கூடிய வல்லமையை உருவாக்கியுள்ளன. போதிய அளவு ஆழத்துக்குச் செல்லக்கூடிய சரியான கருவிகள் இருந்தால் கிடைநிலையிலும் துளைகளை இடலாம். ஐதரோகாபன்களைக் கொண்டிருக்கும் பாறைப் படைகள் கிடையாகவே இருப்பதால், பெற்றோலிய வலயத்தில் இடப்படும் கிடையான துளைகள் அவ்வலயத்தில் கூடிய மேற்பரப்பைக் கொண்டுள்ளன. இதனால் உற்பத்தி வீதமும் கூடுகின்றது. சரிவாக அல்லது கிடையாகத் துளைப்பதன் மூலம் துளைக்கும் இடத்திலிருந்து விலகியிருக்கும் எண்ணெய்ப் படிவுகளையும் அணுகக் கூடியதாக உள்ளது. இதனால், துளை கருவிகளை அமைக்க முடியாத அளவுக்குக் கடினமான இடங்களுக்கு, அல்லது சூழல் தொடர்பான பெறுமதியுள்ள இடங்களுக்கு அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்குக் கீழுள்ள பகுதிகளிலிருந்தும் எண்ணெய் எடுக்க முடிகிறது.
எண்ணெய்க் கிணற்றின் வாழ்வுக்காலம்தொகு
எண்ணெய்க் கிணறு ஒன்றின் உருவாக்கத்தையும் அதன் பயன்படு காலத்தையும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- திட்டமிடல்
- துளைத்தல்
- நிறைவு செய்தல்
- உற்பத்தி
- கைவிடல்