ஆரணி புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம்

(புத்திரகாமேஷ்டி யாகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புத்திரகாமேஷ்டி யாகம், என்பது குழந்தைப் பேறு வேண்டி செய்யப்படும் யாகம் ஆகும். இது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படும் யாகங்களில் ஒன்றாகும்.[1] இந்த யாகத்தினை செய்தால், அதன் பலனாக குழந்தை பேரு கிடைக்கும் நம்பிக்கை. இந்து சமய புராணமான இராமாயணத்தில் இதைப் பற்றிய குறிப்பு உண்டு.[2][3] இராமனின் தந்தையான தசரதர் குழந்தைப் பேறின்றி இருந்த போது, இந்த யாகத்தை நடத்தி, ராமர் உள்ளிட்ட நான்கு குழந்தைகளைப் பெற்றார் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது.[4] தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகில் உள்ள புதுக்காமூரில் ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் is located in இந்தியா
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
Location within Tamil Nadu
ஆள்கூறுகள்:12°40′19″N 79°16′49″E / 12.6719449°N 79.2803659°E / 12.6719449; 79.2803659
பெயர்
பெயர்:அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு:புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்
தமிழ்:அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை மாவட்டம்
அமைவு:ஆரணி
கோயில் தகவல்கள்
மூலவர்:புத்திர காமேட்டீஷ்வரர் (சிவன்)
சிறப்பு திருவிழாக்கள்:புஷ்ப பல்லக்கு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோவில்
வரலாறு
அமைத்தவர்:தசரத மன்னன்
புத்திர காமேட்டீஷ்வரர்

தற்காலத்தில் இந்த யாகத்தினை பெரும்பாலானோர் தனிப்பட்ட முறையில் செய்வதில்லை. இந்து சமய கோயில்களில் மகா புத்ர காமேஷ்டி ஹோமம் செய்கின்றார்கள். இதில் இதில் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்திடத் தடையாக உள்ள பித்ரு தோஷங்கள் உள்ளிட்ட பிற தோஷங்கள் நீங்கிடவும், குழந்தை வரம் வேண்டியும் இந்த யாகத்தில் கலந்து கொள்கின்றார்கள்.[5]

அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தனக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாததால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார் மன்னர். குழந்தைப் பேறுக்கு வழி சொல்லுமாறு தம் குலகுரு வசிஷ்டரிடம் அறிவுரை கேட்டார். அவரோ "புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் புத்திரப் பேறு உண்டாகும்' என்று ஆலோசனை கூறினார்.

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்

அதனை ஏற்ற தசரதச் சக்ரவர்த்தி யாகம் செய்ய தகுந்த இடத்தைக் கூறுமாறு வசிஷ்டரிடம் வேண்டினார். வசிஷ்டரும் ஓர் இடத்தைக் கூற, அங்கே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, புத்திரகாமேஷ்டி யாகம் மேற்கொண்டார். அந்த யாகத்தின் பலனாக தசரதருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அதன்பின்னர் தசரதர் இந்தத் தலத்தே ஆலயம் எழுப்பி, சிவபெருமானை வழிபட்டு, அவருக்கு புத்திரகாமேட்டீஸ்வர் என்ற திருநாமம் சூட்டினார் என்று தலபுராணம் கூறுகிறது.

ஒரு முறை ஜமதக்னி முனிவரின் கமண்டலத்தில் இருந்து கீழே சிதறிய நீர், ஆற்று நீர்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுவே கமண்டல நதி ஆனது. இந்த நதியின் கரையில்தான் புத்திரகாமேட்டீஸ்வரரின் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரில் மட்டும், நதி வடக்கில் இருந்து கிழக்காகத் திரும்பி பின்னர் மீண்டும் திசை திரும்பி ஓடுகிறது. தற்போது மழைக்காலங்களில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடும் நதியாகிவிட்டது.

இந்தத் தலத்தில், மூலவர் புத்திர காமேட்டீஸ்வரர், உற்ஸவர் சோமாஸ்கந்தர், அம்பாளின் திருப்பெயர் பெரியநாயகி. இங்கே கருவறையில் படமெடுத்தாடும் ஒன்பது தலை நாகம் குடையாகப் பிடித்திருக்க அதன் அடியில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் திருக்காட்சி அளிக்கிறார். இங்கே பெருமானுக்கு பெüர்ணமிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது சுவாமி புறப்பாடு கண்டருள்கிறார்.

அம்பாள் பெரியநாயகிக்கு தனி சந்நிதி உள்ளது. சந்நிதி தனி கொடிமரத்துடன் திகழ்கிறது. கோயிலுக்கு வெளிப்புறத்தில் தசரத மன்னருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கே தசரதர், சக்ரவர்த்தி அலங்காரத்தில் இல்லாமல், யாகம் செய்யும் எளிய கோலத்தில் கைகளில் ருத்திராட்ச மாலை, கமண்டலம் ஆகியவற்றோடு முனிவர் போல் காட்சி தருகிறார். உற்ஸவ நாட்களில் இவருக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

குழந்தை பாக்கியம் பெற: திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் வருத்தம் கொண்டவர்கள், இங்கே புத்திர காமேட்டீஸ்வரரை நம்பிக்கையுடன் வழிபட, விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கே தசரதச் சக்ரவர்த்தியே யாகம் செய்து புத்திர பாக்கியம் பெற்றார் என்பதால், இந்தத் தலத்தின் இறைவன் குழந்தை பாக்கியம் அருளும் ஈசனாகத் திகழ்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதற்கான சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். வீட்டில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும் என்ற மனம் நிறைந்த ஆசையுடனும் வேண்டுதலுடனும், ஏழு திங்கள் கிழமைகள் விரதம் இருக்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் ஆறு வாரங்களுக்கும் குழந்தைகளுக்கு அன்னம் அளித்து, விரதம் இருந்து பின்னர் தாங்கள் அன்னம் உண்டு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். பின்னர் ஏழாவது வார திங்கள் கிழமையில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளிப் பூ சாற்றி, கோயிலில் உள்ள பவள மல்லி மாலை அணிவித்து, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.

ஆனி மாத பெளர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு 11 சிவாச்சாரியர்கள், புத்திர காமேஷ்டி யாகம் செய்கின்றனர். இதிலும் அன்பர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளை மேற்கொள்ளுகின்றனர்.

ஜாதகத்தில் புத்திர பாக்கிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் என இருந்து தோஷம் ஏற்பட்டால், அந்த தோஷத்தினைப் போக்க, கோயிலில் உள்ள வேம்பு, ஆலம் மரத்தின் அடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மேலும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தும் வழிபட்டு வேண்டியன நிறைவேறப் பெறுகிறார்கள். இவற்றுக்கென்று சிறப்புக் கட்டணங்களும் கோயிலில் உண்டு.

இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகப் பெருமானும், அவருக்கு எதிரே அனுமனும் சந்நிதி கொண்டுள்ளனர். தாங்கள் செய்யத் தொடங்கும் புதிய செயலின் துவக்கத்தில், விநாயகப் பெருமானை வணங்கிச் சென்று, அச்செயல் சிறப்பாக முடிந்ததும் அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே ஆஞ்சநேயர் கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளது சிறப்பு.

கோயில் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி, ஸ்வர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ரலிங்கம், காளி, வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் அறுமுகப் பெருமான், பாமா-ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவருக்கும் கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் காட்சி தருகின்றன [6]

சான்றுகள்

தொகு
  1. "தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு ஊஞ்சல் சேவை".
  2. "அனுமனின் அவதாரக் கதை!".
  3. http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13281&ncat=748&Print=1
  4. புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  5. "ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் சதசண்டீ யாகம் நாளை தொடக்கம்".
  6. ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் வரலாறு[தொடர்பிழந்த இணைப்பு]