தாடகை
தாடகை இராமாயணக் காப்பியத்தில் வருகின்ற ஒரு கதைமாந்தர்களுள் ஒன்று. அகத்தியரின் சாபத்தால் அரக்கியாக மாறும் இயக்கர் குலப் பெண்ணாக இவள் உருவாக்கப்பட்டுள்ளாள். பல்வேறு வகையான கொடுமைகளைச் செய்துகொண்டு காட்டில் வாழுகிறாள். விசுவாமித்திர முனிவர் செய்த வேள்வியைக் குழப்புவதற்கு அவள் முயன்றபோது, அவ்வேள்விக்குப் பாதுகாப்புத் தருவதற்காக முனிவரால் அழைத்துவரப்பட்ட இராமன் அவளைக் கொல்கிறான் என்பது கதை. கம்ப இராமாயணத்தில் பால காண்டத்தின் தாடகை வதைப் படலம் என்னும் பகுதியில் இந்த நிகழ்வு வருகின்றது.
இது இராமாயணத்தின் தொடக்கப் பகுதியில் மட்டும் வரும் ஒரு சிறு துணைக் கதைமாந்த வகையைச் சார்ந்தது. இராமாயணம் கூறும் இராமனின் அவதார நோக்கத்தை எடுத்துக் காட்டுவதற்கான முதல் முயற்சியாகவே இந்தக் கதைமாந்தப் படைப்பு அமைந்துள்ளது. இது ஒரு சிறு கதைமாந்தப் படைப்பு எனினும், மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. கொடுமையான இயல்புகளைக் கொண்ட பெண்களைத் தாடகையுடன் ஒப்பிட்டுப் பேசும் வழக்குத் தமிழரிடையே சில பகுதிகளில் காணப்படுவதும் குறிப்பிடத் தக்கது.
தாடகையின் உருவமும் இயல்புகளும்
தொகுகருநிறம் கொண்ட[1] தடித்த உடலும் கோரைப் பற்களும் குகை போன்ற வாயும் கொண்டவள்.[2] எமனைப் போன்ற தோற்றம் உடையவள்;[3] நெருப்புச் சொரியும் கண்கள் உடையவள். வைரம் பாய்ந்த கல்போன்ற நெஞ்சுடையவள்.[4] கால்களில் அணிந்த சிலம்புகளுக்கிடையே மலைகளைச் செறியும்படி வைத்த கால்களைக் கொண்டவள்.[5] ஆயிரம் மதயானைகளுக்கு ஒப்பான வலிமை உடையவள்.[6] பெரியமலைகள் இரண்டுடனும்; தன்னிடம் தோன்றிய நஞ்சுடனும்; இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; ஊழிக் காலத்துப் பெரு நெருப்புடனும்; இரண்டு பிறைச் சந்திரர்கள் சேர்ந்து; எழுகின்ற கடல் ஒன்று உண்டென்றால் அது; யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளது உடலை ஒத்ததாகும்[7] எனக் கம்ப இராமாயணம் பாடல்கள் அவளுடைய தோற்றத்தையும் இயல்புகளையும் வர்ணிக்கின்றன.
தாடகையின் வரலாறு
தொகுவிசுவாமித்திரருடன், காட்டுக்குச் செல்லும் இராமனும், இலக்குவனும் காட்டின் அழிவு நிலைக்கான காரணம் குறித்துக் கேட்டபோது அதற்குக் காரணமான தாடகையின் வரலாறு பற்றி முனிவர் அவர்களுக்கு விளக்குவதாகக் கம்ப இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
பிறப்பும், திருமணமும்
தொகுமிகுந்த வலிமை கொண்ட இயக்கர் குலத்தைச் சேர்ந்த சற்சரன் என்பவனுடைய மகன் சுகேது. அவன் தூய்மையான இயல்புகளைக் கொண்டவன். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் பிரமனை வேண்டிப் பல ஆண்டுகள் கடுமையான தவம் செய்தான். இதனால் மகிழ்ந்த பிரமன் அவன் முன் தோன்றி, அவனுக்கு மயில் போன்ற அழகும் மதம் கொண்ட யானையை ஒத்த வலிமையும் கொண்ட ஒரு மகள் பிறப்பாள் என வரம் அருளினார். இந்த வரத்தின் காரணமாகச் சுகேதுவுக்கு மகளாகப் பிறந்தவளே தாடகை. மணப்பருவம் எய்தியபோது அவளது தந்தையான சுகேது அவளைத் தமது இனத்தைச் சேர்ந்தவனான சுந்தன் என்பவனுக்கு மணம் செய்து வைத்தான். அவர்களுக்கு வலிமை பொருந்திய, மாரீசன், சுவாகு என்னும் இரு மைந்தர்கள் பிறந்தனர்.[8]
அகத்தியர் சாபம்
தொகுஒரு முறை சுந்தன் அகத்தியருடைய ஆச்சிரமத்துக்கு வந்து மரங்களைப் பிடுங்கி வீசி எறிந்து அட்டூழியம் செய்தான். அகத்தியர் சினம் கொண்டு அவனை நோக்க அவன் எரிந்து சாம்பலானான். இதையறிந்த தாடகை தனது மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அகத்தியரைப் பழிவாங்கும் நோக்குடன் அவரது ஆச்சிரமத்தை அடைந்தாள். தாடகையின் மைந்தர்கள் அகத்தியரை அணுகவே கோபங்கொண்ட அவர் மூவரையும் அரக்கர்கள் ஆகுமாறு சபித்தார். இதன் பின்னர் மாரீசனும், சுகேதுவும் இராவணனுக்குப் பாட்டனான சுமாலி என்பவனை அணுகி அவனுடன் மகன் முறை கொண்டாடி அவனுடன் சேர்ந்துகொண்டனர். மகன்களைப் பிரிந்த தாடகை அங்க நாட்டுக் காட்டில் வந்து வாழலானாள்.
தாடகையின் கொடுமைகள்
தொகுதாடகையின் கொடுஞ் செயல்கள் பற்றி விசுவாமித்திரர் இராம இலக்குமணர்களுக்கு விளக்கும் நிகழ்வு கம்ப இராமாயணத்தில் வருகிறது. இதன்படி, தாடகை வளம் மிக்க மருத நிலத்தை அழித்துப் பாலை நிலம் ஆக்கினாள். அங்க நாட்டில் வாழ்பவர்களை எல்லாம், கொன்று தின்பதன் மூலம் அவர்களைக் குலத்தோடு அழித்து வந்தாள். உயிர்களையெல்லாம் தனது உணவுப் பொருள்களாகவே எண்ணும் தன்மை உடையவளாக இருந்தாள். மிருக பலம் கொண்டவளாக வேள்விகளுக்கு இடையூறு செய்து வந்தாள்.
தாடகையின் இறப்பு
தொகுதாடகையின் இறப்புக்கான நிகழ்வுகள் குறித்துக் கம்ப இராமாயணம் பின்வருமாறு விளக்குகிறது. விசுவாமித்திரர் தாடகையைப் பற்றிக் கூறிக்கொண்டு இருக்கும்போதே அவள் அவர்கள் முன் தோன்றினாள். மூன்று கூரிய முனைகளைக் கொண்ட சூலத்தைக் கையில் கொண்டிருந்த அவள், மூவரையும் பார்த்து "எனது காவலுக்குரிய இந்த நிலத்திலே உள்ளதெல்லாம் அழியும்படி கருவறுத்துவிட்டேன். எனக்குத் தின்ன ஊன் கிடையாதென்றெண்ணி. உணவாக வந்தீர்களோ. விதி உந்த அழிய வந்தீர்களோ?" என்று கேட்டாள். எனினும், அவள் பெண்ணாகையால் அவளைக் கொல்வது அறம் அல்ல என்று எண்ணிய இராமன் சிறிது தயங்கினான். முனிவர் பல்வேறு எடுத்துக் காட்டுகளையும் காரணங்களையும் கூறி இராமனது தயக்கத்தைப் போக்க முயன்றார்.[9]
"இவ்வாறான கொடுஞ் செயல்களைச் செய்பவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது. நாணம் முதலான பெண்மைக் குணம் உடையவர்களுக்குத் தீங்குசெய்தால் அது கண்டு வீரம் மிக்க ஆடவர் நகைத்துப் பரிகசிப்பர்; வாள்முதலான போர்க் கருவிகளில் வல்ல வலிமைமிக்க வீரர்களான ஆண்களின் தோளாற்றலும்; இத்தாடகையின் பெயரைச் சொல்லக் கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை என்று கூறும் அந்த அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும். பெண்ணாகிய இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன வேறுபாடிருக்கிறது? இந்திரன் முதலானோரும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண் என நினைக்கலாமா. உயிர்களைக் கொன்று தின்பதைவிட. தீயசெயல் எது உள்ளது? இப்படிப்பட்டவளைப் பெண் என்று சொல்வது இகழ்ச்சிக்குரியதேயாகும். .......... அரச குலத்தவனாகிய நீ இவளது தீச்செயலை அறிந்தும் இவ்வாறு தணிந்து நிற்பது தருமம் அல்ல; இந்த அரக்கியைக் கொல்வாயாக".
என்று விசுவாமித்திரர் கூறினார். இதைக் கேட்ட இராமன், அறமில்லதாக இருந்தாலும், முனிவரின் கட்டளையை ஏற்றுச் செயல்படுவதே தனக்கு அறமாகும் எனக் கூறித் தாடகையை எதிர்ப்பதற்குத் தயாரானான். தாடகை தனது சூலத்தையும், பாறைகளையும் மூவர் மீதும் எறிந்து போராடினாள். இறுதியாக இராமனுடைய அம்புக்கு இரையாகி மாண்டாள்.
தாடகைக்கு நற்கதி
தொகுதுளசி இராமாயணத்திலும், சீதா கல்யாணம் என்னும் வில்லுப்பாட்டு நூலிலும் இராமன் தாடகைக்கு நற்கதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இது வேறு எந்த இராமாயணத்திலும் இல்லை. சீதா கல்யாணத்தில், தான் இராமனை "மாயன்" என்று அறியாமல் கெட்டுவிட்டதாகவும், அவருடைய கையால் இறப்பதற்குப் பாக்கியம் செய்திருப்பதாகவும் கூறித் தன் பெயர் உலகின் எப்போதும் விளங்கும்படி வரங்கொடுக்கும்படி தாடகை கேட்டுக்கொண்டாளாம். அவள் மீது இரக்கம் கொண்ட இராமன், நீ தென்கிழக்கு மூலையிலே உதிக்கும் நட்சத்திரம் ஆவாய். உன்னைத் தாடகை வெள்ளியென மக்கள் சொல்வார்கள் என வரமளித்தாராம்.[10]
குறிப்புகள்
தொகு- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம், பாடல் 49
- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம், பாடல் 52
- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம், பாடல் 21
- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம், பாடல் 50
- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம், பாடல் 30.
- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம், பாடல் 21
- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம், பாடல் 22.
- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம்
- ↑ கம்பராமாயணம், தாடகை வதைப்படலம், பாடல்கள் 38 - 44
- ↑ மணவாளன், அ. அ., பக். 81.