பத்திராசலம் கோவில்

பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில் (Sri Sita Ramachandraswamy temple) (Telugu: శ్రీ భద్రాచలం సీతారామచంద్ర స్వామి వారి దేవస్థానము) இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் இராமருக்காக அமைக்கப்பட்ட இந்து சமயக் கோவிலாகும். பத்ராச்சலம் நகரத்தில் அமைந்த கோவிலில் மூலவரான இராமருக்கும் அவர் துணைவி சீதைக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டு தோறும் இராமநவமியன்று மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.[1]


பத்திராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்

மூலவர்: வைகுண்ட இராமர்
உற்சவர்:
புராண பெயர்: பத்ராச்சலம், பத்திரகிரி
கட்டிய காலம்: பொ.ஊ. 1674
பாடியவர்கள்: இராமதாசர்
தல விருட்சம்:
தீர்த்தம்: கோதாவரி ஆறு
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி

வரை

கோவில் விழாக்கள்: வக்கீயக்கார மகோத்சவம்,

ஸ்ரீ இராம நவமி பிரம்மோத்சவம்,

அமைவிடம்: பத்ராச்சலம்
மாவட்டம்: பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம்
மாநிலம்: தெலுங்கானா, இந்தியா

புராணக்கதை

தொகு

பத்திராசலம் கோவில் 17 நூற்றாண்டில் வாழ்ந்த துறவியும் கீர்த்தனைகளை இயற்றியவருமான பக்த இராமதாஸ் என்ற கஞ்சர்ல கோபண்ணா என்பவருடைய வாழ்க்கையுடன் மிகவும் இணைந்துள்ளது. கோபண்ணா பத்திராசலத்தில் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியல் வட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். இவர் அரசாங்கக் கருவூலத்தின் பணத்தைப் பயன்படுத்தி இந்தக் கோவிலைக் கட்டினாராம். இதனால் அரசு இவரை கோல்கொண்டா சிறைச்சாலையில் அடைத்து கடுங்காவல் தண்டனை வழங்கியதாம். பத்திராசல இராமர், கோபண்ணா கோவில் கட்ட செலவழித்த பணத்தை தம் தெய்வ சக்தியால் அந்நாட்டை ஆண்ட சுல்தானுக்குத் திரும்பக் கொடுத்தாராம். இதனால் வியப்புற்ற சுல்தான் உடனே கோபண்ணாவை விடுதலை செய்தார். இதைத் தொடர்ந்து கோபண்ணா பத்திராசல இராமதாசர் என்னும் பெயர் பூண்டு தெலுங்கில் பற்பல கீர்த்தனைகளை இராமர் பேர் பாடி தொகுத்தாராம்.

புகழ் பெற்ற இதிகாசமான இராமாயணத்துடன் பத்திராசலமும் விச்யநகரமும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இராமர், இலக்குவன் மற்றும் சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது தங்கியதாகக் கருதப்படும் பர்ணசாலை பத்திராசலத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இன்று பத்திராசல இராமர் கோவில் அமைந்துள்ள இடத்தில் கோதாவரி நதியைக் கடந்ததாக நம்பப்படுகிறது. புராணங்கள் மேரு மற்றும் மேனகையின் மகனான பத்திரன் என்பவன் இராமரை நோக்கி தவமியற்றியதாகச் சொல்கிறது. கபீர்தாஸ் என்ற இசுலாமியர் கூட இக்கோவிலுடன் தொடர்பிலிருந்திருக்கிறார். இக்கோவிலில் நுழைய கபீர்தாசுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். அப்போது கோவிலில் இருந்த மூலவர் மற்றும் துணைக் கடவுளர் சிலைகளும் மறைந்து போயினவாம். பின்னர் கபீர்தாசர் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடைத்தவுடன் சிலைகள் மீண்டும் தங்கள் இடத்தில் மீண்டும் தோன்றினவாம்.

பத்திராசலம் உலகிலுள்ள பலநூறு ஆயிரம் பக்தர்களைத் தன வசம் கவர்ந்திழுக்கிறது. புண்ணிய நதியான கோதாவரி பத்திராசலம் என்னும் இம்மலையைச் சுற்றியவாறு தெற்கு நோக்கிப் பாய்கிறது. இம்மலை மேரு மற்றும் மேனகாவின் மகனான பத்திரன் பெயரால் பத்திரகிரி என்று அழைக்கப்படுகிறது. இம்மலையின் வரலாரோ இராமாயணத்துடன் இணைந்துள்ளது. இராமயணத்தில் தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்ட மலை சூழ்ந்த பகுதியில் இராமன், இலக்குவன் மற்றும் சீதை ஆகிய மூவரும் அவர்கள் வனவாசத்தை இங்கே நிகழ்த்தியதாகத் தெரிகிறது. இந்தக் கோவிலுடன் தொடர்புடைய மற்றொரு புராணச் செய்தியில் திருமால் பக்த பத்திரன் என்னும் மலைநாட்டு (அரச) முனிவனின் கடும் தவத்தை மெச்சி அவருக்கு அருளும் நோக்கத்தில் இராமாவதாரம் எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பத்திராசலம் பற்றிய மேலதிகமான தகவல்களுக்கு பத்திராசலம் கோவில் என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்

இராம அவதாரம்

தொகு

வைகுண்ட இராம அவதாரம் நிகழக் காரணமாக வரலாறு நமக்குச் சொல்வது பத்திரன் என்னும் பக்தனின் வேண்டுகோளை ஏற்று திருமால் இராமனாக அவதரித்தார் என்பதாகும். கோதாவரி நதிதீரத்தில் தண்டகாரண்யத்தில் பத்திர முனிவர் இராமபிரானின் அருள் வேண்டித் தவமியற்றினார். முனிவர் இராமனை தன உள்ளத்தில் அமரும்படி வேண்டினார். இராமபிரானோ தான் தன துணைவி சீதையைத் தேடிச் செல்வதாகவும், சீதையைக் கண்டு சிறை மீட்டு, இராவணனை தண்டித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் அயோத்தி திரும்பும் வழியில் தன பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். எனினும் இராமாவதாரத்தில் தன பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது போயிற்று. முனிவரும் தன கடும் தவத்தை தொடர்ந்து அச்சுறுத்தினார். இதைத் தொடர்ந்து திருமால் வைகுண்ட இராமனாக அவதரித்தார். தன பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்ற தன துணைகளான இலக்குவ மற்றும் சீதை ஆகியோருடன் சங்கநாதம் ஒலித்தவாறு முனிவர் முன் தோன்றினார். இராமபிரான் தன நான்கு கைகளுடன், வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம், மற்ற இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, சீதையைத் தன இடது மடியிலும், இலக்குவனை வலது மடியிலும் அமர்த்தி இருந்த கோலத்தில் காட்சி தருகிறார். இந்த தெய்வ திருச்சிலைகள் அமர்ந்த இடம் பத்திர முனிவரின் தலைப் பகுதி என்பதால் இந்த மலை பத்திராசலம் என்ற பெயரில் விளங்கித் திகழ்கிறது.

பத்திராசலம் அருகே பத்திரி ரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் 17 ஆம் நூற்றாண்டில் வசித்துவந்த இராம பக்தையான போகல தம்மக்கா என்ற பெண்மணி வைகுண்ட இராமர், சீதா மற்றும் இலக்குவன் சிலைகளைக் கண்டெடுத்தாகச் சொல்கிறார்கள். ஒரு இரவில் வைகுண்ட இராமபிரான் இவள் கனவில் தோன்றி முனிவர்களும் தவயோகிகளும் வழிபட்ட என் சிலை பத்திரகிரியில் உள்ளது என்றும், இவற்றை தேடிக் கண்டுபிடித்து பூசை செய்து வர முக்தி அடைவாய்' என்று வாய் மலர்ந்தருளினார். மறு நாளே இப்பெண்மணி இந்த சிலைகளைத் தேடி அலைந்து முடிவில் ஒரு கரையான் புற்றருகில் கண்டுபிடித்தாள். புற்றில் உள்ளே இருந்த இச்சிலைக்கு குடம் குடமாய் கோதாவரி நீரால் முழுக்காட்டினாள். புற்று கரைந்து சிலை வெளிப்பட்டது. அன்று முதல் இவள் தினந்தோறும் சிலைக்குப் பூசை செய்தாள், கீழே விழுந்த பணம் பழத்தை எடுத்து தெய்வத்திற்குப் படைத்தாள். பின்னாளில் கிராமத்தார் உதவியுடன் ஒரு மண்டபமும் கட்டினாள்.

பக்த இராமதாசும் கோவில் திருப்பணிகளும்

தொகு

பத்திராசலம் கோவிலைக் கட்டியவர் கஞ்சர்ல கோபண்ணா என்ற பக்த இராமதாஸ் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டு (பொ.ஊ. 1630) கம்மமேட் வட்டம் நிலகொண்டபள்ளி என்னும் கிராமத்தில் லிங்கன்ன மூர்த்தி மற்றும் காமாம்பா ஆகிய பெற்றோர்களுக்கு மகனாக அவதரித்தார். வட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த இவர் தன அலுவலகப் பணிகளைச் செம்மையாகவும் சிறப்பாகவும் செய்து வந்தார். நவாப்புக்காக செவ்வனே நிலவரிகளை வசூலித்ததோடு இராம நாமத்தை ஓதியும் தன வீட்டில் ஏழைகளுக்கு உணவளித்தும் மகிழ்ந்தார் ஒரு சமயம் பல்வோஞ்ச பரகானா (palvoncha paragana). என்ற கிராமத்து மக்கள் பத்திராசலத்தில் சிலைகளைக் காணச் (ஜடர) சென்ற செய்தியினைக் கேள்விப்பட்டு தானும் ஆவல் மிகுதியுடன் அங்கு சென்றார். அங்கே கண்ட சிலைகளின் அழகில் மயங்கினார். அப்போதே கிராம மக்களிடம் கோவில் கட்டும் திருப்பணிக்காக நிதியுதவி வேண்டினார். கிராம மக்கள் அவரிடம் நிலவரியாக வசூலித்த பணத்தை கோவில் கட்டும் பணிக்காகச் செலவு செய்யுமாறும், அறுவடை முடிந்தவுடன் செலவு செய்த பணத்தை திரும்பக் கொடுத்து ஈடு செய்து விடுவதாகவும் கூறினர். இதனைத் தொடர்ந்து கோல்கொண்டா நவாப்பிடம் தேவையான அனுமதி பெறாமல் நிலவரி மூலம் வசூலான ரூபாய் ஆறு லட்சம் பணத்தைச் செலவு செய்து கோவில் திருப்பணிகளை நிறைவு செய்தார்.

கோவில் திருப்பணிகள் முடிவுறும் தருவாயில், சுதர்சன சக்கரம் ஒன்றை மூலவர் விமானத்தின் மேல் நிறுவும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பெரும் அவதியுற்று உறக்கத்தில் ஆழ்ந்தார். இராமர் அவர் கனவில் தோன்றி அவரை கோதாவரி நதியில் முழுக்குப் போடுமாறும் அங்கே அவருக்கு வேண்டிய விடை கிடைக்கும் எனக் கூறி மறைந்தார். மறுநாள் இராமதாசர் நதியில் முங்கிய போது ஒரு சுதர்சன சக்கரத்தை அங்கு கண்டெடுத்தார். இந்த சக்கரம் இந்த நதியில் அவருடைய அன்பிற்குரிய கடவுள் இராமரால் அருளப்பட்டது என்று நம்பினார்.

திருப்பணிகள் முடிந்த தருவாயில் அவருக்குப் பல இன்னல்கள் காத்திருந்தன. நிலவரிப் பணத்தைத் தவறான வழியில் கோவில் கட்டப் பயன்படுத்திய குற்றத்திற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று கோல்கொண்டா சிறையில் சொல்லவொண்ணாத் துன்பங்களை அனுபவித்தார். துன்பங்களைத் தாங்க இயலாத நிலையில், இராமதாசர் இராமபிரானிடம் தம்மைக் காத்தருளும்படி பாடிப் பணிந்தார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள் தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.

குதூப் சாகி அரச வம்சத்தைச் சேர்ந்த கோல்கொண்டா அரசர் தானிஷா, இராமதாசர் சிறை பிடிக்கப்பட்ட பின்பு இராமர் பால் காட்டிய இறை நம்பிக்கையும் பக்தியையும் கண்டு மெய்சிலிர்த்தார். தானும் ஒரு இராம பக்தனாக மாறினார். மேலும் ஒரு படி முன்னேறி கோவில் நிர்வாகச் செலவுகளைத் தன அரசே ஏற்கும்படி அமைத்தார்.

இது மட்டுமல்லாமல் இராமனும் இலக்குவனும் ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து இராமதாசர் செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை திரும்பச் செலுத்தி தமது பக்தனைச் சிறையிலிருந்து விடுவித்த நிகழ்வு கண்டு கோல்கொண்டா அரசர் நெகிழ்ந்து போனார். பின்னிரவில் வந்து தம்மை அணுகிய இந்த இரண்டு நபர்களிடம் அரசர் தாம் பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வழங்கினார். இதன் பின்னர் இந்த இருவரும் அரசரிடம் பெற்ற இரசீதினை சிறையில் இருந்த இராமதாசரின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள். மறுநாள் கண்விழித்த அரசர் இரவு தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இவர்கள் இராமனும் இலக்குவனுமே என்று உணர்ந்தார். உடனே இராமதாசரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். இராமதாசரைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார். ஆனால் இராமதாசரோ தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் இறைவனின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் காணலாம்.

இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் ரூபாய் 20000/- அளவிலான வருமானமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இந்த ஆணை குதூப் சாகி அரச வம்சம் ஆண்ட காலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை (pearls) யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்றும் கூட ஆந்திர அரசு இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

இராமதாசர் கோவிலில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி (Suprabhata Seva) தொடங்கி இரவு பவலிம்பு சேவை வரை தினசரி நடக்க வேண்டிய நித்ய பூசைகளையும் சேவைகளையும் தொகுத்து கல்வெட்டாக இரண்டு தூண்களில் சிலாசாசனலு என்ற பெயரில் செதுக்கி வைத்துள்ளார். இந்தக் கல்வெட்டுக்கள் தினசரி அலுவல்கள், சடங்குகள் மற்றும் பூசைகள் பற்றி விவரிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பல்வோஞ்ச பரகானாவின் வட்டாட்சியரான தும்ரு நரசிம்ம தாசா மற்றும் இவரின் சக ஊழியரான வரத இராமதாசா ஆகிய இருவரும் குண்டூரிலிருந்து வந்து பத்திராசலம் கோவிலின் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

படிமக் காட்சி

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திராசலம்_கோவில்&oldid=4049319" இலிருந்து மீள்விக்கப்பட்டது