தாமரைகுளம் பதி

[1][2]அய்யாவழி

தாமரைகுளம் பதி

வைகுண்டசுவாமியால் உருவாக்கப்பட்ட அய்யாவழி வழிபாட்டு தலமே தாமரைகுளம்பதி. கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி முனையில் இருந்து 5 கிமீ தொலைவில் தாமரைகுளத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. அய்யா வைகுண்டசாமி நீண்ட நாட்களாக தங்கிருந்து மக்களுக்கு நாமமும், பதமும் வழங்கி மக்கள் அக,புற பிணிகளை நீக்கி அருளாட்சி செய்த தலமே தாமரைகுளம் பதி.

அய்யா வைகுண்டர்

தர்மத்தை நிலைநிறுத்த இறைவன் தொடர்ந்து அவதாரங்களை எடுத்து அவதார தேவைகளை நிறைவு செய்தார். கலியுகத்தில் வைகுண்டசுவாமியாக அவதரித்த திருமால் கலியால் மக்கள் அடையும் துயரங்களுக்கு தீர்வு வழங்கி தர்மவாழ்விற்கு வழி காட்டினார். அவ்வாறு 1008 அவதரித்த வைகுண்ட அவதாாரம் மும்மூர்த்திகளின் அம்சமாக தனிசிறப்பை பெற்றது

சிறப்பு பெயர்கள்

தாமரைகுளம்பதி, தென்தாமரைகுளம் பதி, அகிலம்தந்த தாமரைபதி, தாமரைபதி, தாமரைகுளம் ஸ்ரீமன் நாராயண சுவாமிபதி, ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில், அகிலம் இயற்றிய பதி, விருந்துண்டபதி போன்ற சிறப்பு பெயர்களை பெற்றது.

ஐம்பதி

சுவாமிதோப்புபதி, தாமரைகுளம்பதி, அம்பலபதி, முட்டபதி, பூப்பதி ஆகிய அய்யாவழி வழிபாட்டு தலங்கள் மட்டும் பதி என்ற சிறப்பை பெறுகிறது. இவை அய்யாவால் தோற்றுவிக்கப்பட்டு , அய்யா நீண்ட காலமாக தங்கி இருந்து மக்களுக்கு அருளாசி வழங்கி அற்புதங்கள் நிகழ்த்தப்பட்ட சிறப்பை பெற்ற முதன்மை வழிபாட்டு தலங்கள் பதிகள் என்ற சிறப்பை பெற்றது. ஐம்பதிகள் என்றும் பஞ்சபதிகள் என்றும் சிறப்பு பெறுகிறது.

அகிலத்திரட்டு அம்மானை

தாமரைகுளம்பதியில் வைத்துதான் அரிகோபாலசீடர் அய்யாவழி புனிதநூலான அகிலத்திரட்டு அம்மானை நூலை இயற்றினார்.

குருபரம்பரையினர் மற்றும் பணிவிடைகள்

அய்யா வைகுண்டசுவாமியை தாமரைகுளம் ஊருக்கு அழைத்துவந்து விருந்து அளித்து உபசரித்த அய்யாவின் அடியார் உடையகுட்டிநாடார் தாமரைகுளம்பதியின் முதல் குருவாக அய்யா வைகுண்டசுவாமியால் இறைப்பணியாற்ற அமர்த்தப்பட்டனர். அதன் பின்னர் குரு.உடையகுட்டிநாடாரின் வாரிசுகள் தொடர்ந்து குருவாக இருந்து தாமரைகுளம் பதியில் குருத்துவபணிகளை மேற்க்கொண்டுவருகின்றனர். தற்போது பூஜிதகுரு உடையகுட்டிநாடாரின் பரம்பரையினரான

குரு. சௌ.இராஜசேகரன்

குரு.சௌ.பிரபாகரன்

குரு.இரா.சௌந்தரராஜபாண்டியன்

குரு.ஸ்ரீ.ஜெகன்

குரு.சௌ.பி.ஹரிபிரசாத்

குரு.சௌ.பி.ஆனந்த்

குரு.சௌ.பி.வினோத்

ஆகியோர் பதியின் குருத்துவப்பணிகளோடு அய்யாவுக்கு பணிவிடைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்வாகம்

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அய்யாவழி மக்களுக்கும், பக்தர்களுக்கும் புனித தலமாக தாமரைகுளம்பதி உள்ளது.

பக்தர்களுக்கு வழங்கப்படும் நாமம் மற்றும் பதியில் உள்ள முத்திரி கிணற்றின் பதம் ஆகியவை நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. தக்காரின் நேரடி நிர்வாகத்தில் பரம்பரைகுரு.சௌ.இராஜசேகரன், குரு.சௌ.பிரபாகரன், குரு.இரா.சௌந்தரராஜபாண்டியன், குரு.ஸ்ரீ.ஜெகன் ஆகியோர் குருத்துவப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவிழாக்கள்

1.சித்திரை திருவிழா

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். பதினொரு நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் தொட்டில் வாகனம், சர்ப்பவாகனம், கருட வாகனத்தில், தாமரைபூவாகனம், என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி அய்யா வைகுண்டசுவாமி அருள்புரிவார். நாள்தோறும் அன்னதர்மம் நடைபெறும். எட்டாம் நாள் திருவிழாவில் தாமரைகுளம் ஊரின் முக்கிய வீதிகளில் வாகனத்தில் வீதிஉலா வந்து கலிவேட்டை நடைபெறும். பதினொன்றாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு பணிவிடைகள் மற்றும் வாகனபவனி, பக்தர்களுக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. தினந்தோறும் மூன்று வேளைகளும் பணிவிடைகள் வைகுண்டசுவாமிக்கு நடைபெறுகிறது.

2.கார்த்திகை திருஏடுவாசிப்புவிழா

அய்யா வைகுண்டசுவாமியின் திருவருளால் அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடுவாசிப்பு திருவிழாவாக நடைபெறும். இத்திருவிழா கார்த்திகை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை துவங்கி ஏழுநாட்கள் நடைபெறுகிறது அதன் பின்னர் பதினேழு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஏழு நாட்கள் நடைபெற்று திருஏடு வாசிப்பு திருவிழா முடியும். (தொடக்க காலத்தில் ஏட்டுபிரதிகள் இல்லாத நிலையில் மூலஏடு தாமரைகுளம்பதியில் மட்டுமே இருந்தது. அதனால் அகிலத்திரட்டு அம்மானை ஏட்டை தாமரைகுளம்பதியில் இருந்து சுவாமிதோப்பு பதிக்கு கொண்டு சென்று பதினேழு நாட்கள் தொடர்ச்சியாக திருஏடு வாசிப்பு திருவிழா முடிந்ததும் பின்னர் மீண்டும் தாமரைகுளம்பதியில் ஏழு நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுவதால் இந்த திருவிழா இடைவெளி ஏற்பட்டது. தற்போது படி ஏடுகள் எல்லா பதிகளிலும் மற்றும் தாங்கல்களிலும் இருப்பதால் தற்போது திருஏடு எடுத்துச்சென்று வாசிக்கப்படும் வழக்கம் இல்லை)

3.அய்யா அவதார தின விழா

மாசி மாதம் 20 ம் நாள் அய்யா வைகுண்டசுவாமியின் அவதார நாள் கொண்டாடப்படுகிறது. தாமரைகுளம்பதியில் அய்யா அவதார நாள் சிறப்பு பணிவிடைகளுடன் அன்னதர்மம் மற்றும் வாகனபவனியுடன் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து அய்யாவழி பக்தர்கள் வழிபாடு செய்ய தாமரைகுளம்பதிக்கு வருகின்றனர். அய்யா வைகுண்டசுவாமி அவதார தினத்தன்று தமிழக அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RH) வழங்குகிறது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.

  1. "Construction – அய்யா துணை :: தாமரைகுளம் பதி :: இணைய பக்கம்" (en-US).
  2. தாமரைகுளம், பதி (04/04/2020). "தாமரைகுளம் பதி". மூல முகவரியிலிருந்து 04/04/2020 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரைகுளம்_பதி&oldid=2964953" இருந்து மீள்விக்கப்பட்டது