19-ஆம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டு (nineteenth century) அல்லது 19-ஆம் நூற்றாண்டு (19th century) கிரிகோரியன் நாட்காட்டிப்படி கிபி 1801 சனவரி 1-இல் தொடங்கி 1900 திசம்பர் 31-இல் முடிவடைந்தது. 19-ஆம் நூற்றாண்டு 2-ஆம் ஆயிரமாண்டின் ஒன்பதாவது நூற்றாண்டு ஆகும்.
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் 1830கள் 1840கள் 1850கள் 1860கள் 1870கள் 1880கள் 1890கள் |
19-ஆம் நூற்றாண்டு பரந்த சமூக எழுச்சியைக் கண்ட ஒரு காலப்பகுதி ஆகும். ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களின் பெரும்பாலான நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. முதல் தொழிற்புரட்சி, 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கினாலும், இந்த நூற்றாண்டில் முதல் முறையாக அதன் பிரித்தானியத் தாயகத்திற்கு அப்பால் விரிவடைந்தது, குறிப்பாக ஐரோப்பாவின் கீழை நாடுகள், இரைன்லாந்து, வடக்கு இத்தாலி மற்றும் வடகிழக்கு ஐக்கிய ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களை மறுசீரமைத்தது. சில தசாப்தங்களுக்குப் பிறகு, இரண்டாவது தொழிற்புரட்சி மேலும் பெரிய நகரமயமாக்கலுக்கு வழிவகுத்தது, உற்பத்தித்திறன், பெறுதி, செழிப்பு ஆகியவை உயர் மட்டங்களுக்கு வளர்ந்தது, இது 20-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.
இசுலாமிய வெடிமருந்துப் பேரரசுகள் வீழ்ச்சியடைந்தன, ஐரோப்பிய பேரரசுவாதம் தெற்காசியா, தென்கிழக்காசியா, மற்றும் கிட்டத்தட்ட அனைத்து ஆப்பிரிக்காவையும் குடியேற்ற ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. பாரிய எசுப்பானிய, முகலாயப் பேரரசுகளின் சரிவும் இக்காலத்தில் இடம்பெற்றது. இது ஐக்கிய அமெரிக்காவுடன் சேர்ந்து பிரித்தானிய, பிரெஞ்சு, செருமனிய, உருசிய, இத்தாலிய, சப்பானியப் பேரரசுகளின் செல்வாக்கு பெருக வழிவகுத்தது. ஆங்கிலேயர்கள் 1815-இற்குப் பிறகு சவாலற்ற உலகளாவிய மேலாதிக்கத்தை அனுபவித்தனர்.
நெப்போலியப் போர்களில் பிரான்சின் தோல்விக்குப் பிறகு, பிரித்தானிய, உருசியப் பேரரசுகள் பெரிதும் விரிவடைந்து, உலகின் முன்னணி சக்திகளில் இரண்டாக மாறின. உருசியா தனது எல்லையை நடு ஆசியா, காக்கேசியா வரை விரிவுபடுத்தியது. உதுமானியர் மேற்கத்தியமயமாக்கல் மற்றும் டான்சிமாத் எனப்படும் சீர்திருத்தத்தின் ஒரு காலகட்டத்திற்கு உட்பட்டனர், இதன் மூலம் மத்திய கிழக்கில் முக்கிய பிரதேசங்களில் தங்கள் கட்டுப்பாட்டை பெருமளவில் அதிகரித்தனர். இருப்பினும், உதுமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்து, பால்கன் குடா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை இழந்து, ஐரோப்பாவின் நோய்வாய்ப்பட்ட நாடாக அறியப்பட்டது.
மராத்திய, சீக்கியப் பேரரசுகள் போன்ற இந்தியத் துணைக்கண்டத்தில் எஞ்சியிருந்த சக்திகள் பாரிய சரிவை சந்தித்தன, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் அவர்களின் அதிருப்தி 1857 இந்தியக் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் இந்நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியா பின்னர் நேரடியாக பிரித்தானிய முடியரசால் ஆளப்பட்டது.
பிரித்தானியாவின் வெளிநாட்டு உடைமைகள் குறிப்பாக கனடா, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகியவற்றில் 19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும், ஆப்பிரிக்காவில் நூற்றாண்டின் கடைசி இரண்டு தசாப்தங்களிலும் பரந்த பிரதேசங்களின் விரிவாக்கத்துடன் வேகமாக வளர்ந்தன. நூற்றாண்டின் இறுதியில், ஆங்கிலேயர்கள் உலகின் ஐந்தில் ஒரு பகுதியையும், உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். நெப்போலியனுக்குப் பிந்தைய காலத்தில், மிகப்பெரிய அளவில் முன்னோடியில்லாத உலகமயமாக்கலை ஏற்படுத்தியது.
வரலாற்றுக் காலப் பகுதிகள்
தொகு- தொழிற்புரட்சி
- பேரரசுவாதம்
- மெய்சி காலம் (சப்பான்)
- சிங் அரசமரபு (சீனா)
- சூலு இராச்சியம் (தென்னாப்பிரிக்கா)
- டான்சிமாத், (உதுமானியப் பேரரசு)
- உருசியப் பேரரசு
போர்கள்
தொகு- நெப்போலியப் போர்கள்
- எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள்
- எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள்
- 1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்
ஏனைய போர்கள்
தொகு- 1804–1813: உருசிய பாரசீகப் போர்.
- 1810: மெக்சிக்கோ விடுதலைப் போர்.
- 1812–1815: பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812
- 1814–1816: ஆங்கிலேய-நேபாளப் போர்
- 1839–1842: முதலாம் அபினிப் போர்
- 1846–1848: மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
- 1857: சிப்பாய்க் கிளர்ச்சி, 1857
- 1861–1865: அமெரிக்க உள்நாட்டுப் போர்
- 1879: ஆங்கில-சூலூ போர்
- 1880–1881: முதல் பூவர் போர் தொடக்கம்
- 1894–1895: முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895), தைவான் சப்பானியப் பேரரசுக்குக் கையளிக்கப்பட்டது.
- 1896-1898: பிலிப்பீனியப் புரட்சி
- 1898: எசுப்பானிய அமெரிக்கப் போர்
- 1899–1902: இரண்டாம் பூவர் போர் தொடக்கம்.
- 1899–1902: பிலிப்பைன்-அமெரிக்கப் போர் தொடக்கம்.
அறிவியலும் தொழில்நுட்பமும்
தொகு19 ஆம் நூற்றாண்டில் அறிவியலின் பிறப்பு ஒரு தொழிலாக உருவானது; scientist என்ற சொல்லை ("அறிவியலாளர்", "விஞ்ஞானி") 1833 இல் வில்லியம் ஹியூவெல் அறிமுகப்படுத்தினார்.[2]
- 1807: ஹம்பிரி டேவி பொட்டாசியம், சோடியம் ஆகியவற்றைத் தனைமைப்படுத்தினார்.
- 1859: சார்லசு டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.
- 1861: ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் நான்கு மாக்சுவெல்லின் சமன்பாடுகளை வெளியிட்டார்.
- 1865: கிரிகோர் மெண்டல் தனது மெண்டலின் விதிகளை அறிவித்தார்.
- 1869: திமீத்ரி மெண்டெலீவ் தனிம அட்டவணையைக் கண்டுபிடித்தார்.
- 1877: ஆசப் ஆல் செவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார்
- 1896: என்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்; ஜெ. ஜெ. தாம்சன் எதிர்மின்னியை அடையாளப்படுத்தினார்.
மருத்துவம்
தொகு- 1804: மார்ஃபீன் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1842: மயக்க மருந்து முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டது.
- 1847: குளோரோபாரம் கண்டுபிடிக்கப்பட்டது, இது விக்டோரியா மகாராணிக்கு 1853 இல் அவரது எட்டாவது பிள்ளையான இளவரசர் லியோப்போல்டின் பிறப்பின் போது கொடுக்கப்பட்டது.
- 1855: கோக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1885: இலூயி பாசுச்சர் வெறிநாய்க்கடி நோய்க்கான முதலாவது தடுப்பு மருந்தை வெற்றிகரமாக செலுத்தினார்.
- 1889: ஆஸ்பிரின் கண்டுபிடிக்கப்பட்டது.
விளையாட்டு
தொகு- 1867: குத்துச்சண்டைக்கான விதிகள் வெளியிடப்பட்டன.
- 1872: முதலாவது பன்னாட்டு காற்பந்தாட்டம் இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் விளையாடப்பட்டது.
- 1877: முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையில் விளையாடப்பட்டது.
- 1891: கூடைப்பந்தாட்டம் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1895: கைப்பந்தாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1896: ஒலிம்பிக்கு விளையாட்டுகள் ஏதென்சில் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வுகள்
தொகு- 1801: பிரித்தானியாவும், அயர்லாந்து இராச்சியமும் இணைந்தன.
- 1808-09: சுவீடனிடம் இருந்து ரஷ்யா பின்லாந்தைக் கைப்பற்றியது.
- 1810கள்-1820கள்: பல இலத்தீன் அமெரிக்க காலனித்துவ நாடுகள் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன.
- 1812 - இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.
- 1818 - இலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதல் தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.
- 1819: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நவீன சிங்கப்பூர் நகரத்தை உருவாக்கியது.
- 1823-87: பிரித்தானியா பர்மாவைக் கைப்பற்றியது.
- 1826 - யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.முத்திவழி என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.
- 1830: பிரான்ஸ் அல்ஜீரியாவைக் கைப்பற்றியது.
- 1848: கம்யூனிச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
- 1865: அமெரிக்க உள்நாட்டு போரில் ஐக்கிய அமெர்க்க மாநிலங்கள் வெற்றி.
- 1874: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
- 1880-1902: போவர் போர்
- 1895-1896: எதியோப்பியா இத்தாலியைப் போரில் வென்றது.
- 1899-1913: பிலிப்பீன்ஸ் - ஐக்கிய அமெரிக்கா போர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Killing ground: photographs of the Civil War and the changing American landscape பரணிடப்பட்டது 2017-02-28 at the வந்தவழி இயந்திரம்". John Huddleston (2002). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-6773-8
- ↑ Snyder, Laura J. (2000-12-23). William Whewell. Stanford University. http://www.science.uva.nl/~seop/entries/whewell/. பார்த்த நாள்: 2008-03-03.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் 19-ஆம் நூற்றாண்டு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.