பிரித்தானியப் பேரரசு

ஐக்கிய ராச்சியத்தால் ஆளப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகள்

பிரித்தானியப் பேரரசு (British Empire) உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது ஆகும்.[1] ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகின் முதன்மையான வல்லரசாகத் திகழ்ந்தது. ஐரோப்பியக் குடியேற்றவாதப் பேரரசுகளைத் தோற்றுவித்த 15 ஆம் நூற்றாண்டின் புத்தாய்வுக் கடற் பயணங்களுடன் தொடங்கிய கண்டுபிடிப்புக் காலத்தின் விளைவாக இது உருவாகியது. 1921 ஆம் ஆண்டளவில் பிரித்தானியப் பேரரசு உலகின் 458 மில்லியன் மக்களை உள்ளடக்கியதாக இருந்தது. இது அக்காலத்தின் உலக மக்கள்தொகையின் காற்பங்கு ஆகும். 33 மில்லியன் சதுர கிலோமீட்டர் (13 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருந்த இப்பேரரசு உலக மொத்த நிலப்பரப்பிலும் காற்பங்கைத் தன்னுள் அடக்கியிருந்தது. இதனால் இதன் மொழி மற்றும் பண்பாட்டுப் பரவல் உலகம் தழுவியதாக இருந்தது. இது உயர் நிலையில் இருந்தபோது, இதன் ஆட்சிப்பரப்பு புவிக் கோளத்தில் எல்லாப் பகுதிகளிலும் பரவி இருந்ததனால், "பிரித்தானியப் பேரரசில் சூரியன் மறைவதில்லை" என்று சொல்லப்பட்டது.

பிரித்தானியப் பேரரசு
British Empire (ஆங்கில மொழி)
கொடி of பிரித்தானியப் பேரரசு British Empire (ஆங்கில மொழி)
ஒரு காலத்தில் பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது அனைத்து பகுதிகளும் (வெளிர் சிவப்பு) மற்றும் தற்போதைய ஐக்கிய இராச்சியம், பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள் மற்றும் மகுட சார்புகள் (அடர் சிவப்பு)
1897 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசு
பிரித்தானியப் பேரரசினதும் அதன் செல்வாக்குப் பகுதிகளினதும் நிலப்படம்

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த ஐந்து பத்தாண்டுகளில் இப் பேரரசுக்குள் அடங்கியிருந்த பல நாடுகள் விடுதலை அடைந்தன. இவற்றுட் பல விடுதலையடைந்த பிரித்தானியப் பேரரசு நாடுகளின் பொதுநலவாய நாடுகள் குழுவில் சேர்ந்து கொண்டன. சில நாடுகள் பிரித்தானியப் பேரரசர் / பேரரசியையே தமது நாடுகளின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டிருந்தன.

தொடக்கம் (1497-1583)

தொகு

பெரிய பிரித்தானியா வின் ஐக்கிய இராச்சியம் உருவாக முன்னரே பிரித்தானியப் பேரசுக்கான அடிப்படை அமைக்கப்பட்டுவிட்டது. அக்காலத்தில் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் தனித்தனி அரசுகளாக இருந்தன. போர்த்துக்கீசரதும், ஸ்பானியர்களதும் கடல் கடந்த புத்தாய்வுப் பயணங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 1496 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அரசரான ஏழாம் ஹென்றி, வட அத்திலாந்திக் வழியாக ஆசியாவுக்குச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்காக ஜான் கபோ (John Cabot) என்பவரை அமர்த்தினார். 1497 இல் பயணத்தைத் தொடங்கிய கபோ, ஆசியா எனத் தவறாகக் கருதிக் கனடாவில் இறங்கினார். ஆனாலும், குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சி எதுவும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த ஆண்டில் கபோ அமெரிக்காக்களுக்கான பயணத்தைத் தொடங்கினார் எனினும் அதன் பின்னர் அவரது கப்பல்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இதன் பின் 16 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில், முதலாம் எலிசபெத்தின் ஆட்சி தொடங்கிப் பல காலங்களுக்குப் பின்வரை ஆங்கிலக் குடியேற்றங்களை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆங்கில - ஸ்பானியப் போர்க் காலத்தில், ரோமன் கத்தோலிக்க ஸ்பெயினுக்கும், புரட்டஸ்தாந்திய இங்கிலாந்துக்கும் பகைமையும் போட்டியும் நிலவின. சர் ஜான் ஹோக்கின்ஸ், சர் பிரான்சிஸ் டிரேக் போன்ற தனியார் கடற்போராளிகள் அமெரிக்காக்களில் இருந்த ஸ்பானியத் துறைமுகங்களையும், புதிய உலகிலிருந்து பெருமளவு செல்வத்தைக் கொண்டுவரும் அவர்களின் கப்பல்களையும் தாக்கிக் கொள்ளையிட இங்கிலாந்து அனுமதி வழங்கியது. அவ்வேளையில், புகழ் பெற்ற எழுத்தாளர்களான ரிச்சார்ட் ஹக்லுயிட், ஜான் டீ ஆகியோர், ஸ்பெயினுக்கும், போர்த்துக்கலுக்கும் போட்டியாக இங்கிலாந்தும் தனது குடியேற்றங்களை உருவாக்கவேண்டும் எனக் கோரிவந்தனர். அப்போது, ஸ்பெயின் அமெரிக்காவில் உறுதியாக நிலைகொண்டிருந்தது. போர்த்துக்கல் நாடோ, ஆபிரிக்கா, பிரேசில், சீனா ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் வணிக நிலைகளை அமைத்திருந்தது. பிரான்ஸ் செயிண்ட் லாரன்ஸ் ஆற்றுப் பகுதியில் குடியேறத் தொடங்கியிருந்தது.

அயர்லாந்தின் பெருந்தோட்டங்கள்

தொகு

கடல் கடந்த குடியேற்றங்களைப் பொறுத்த அளவில், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்து ஒரு பிந்திய வரவாக இருந்தாலும் அயர்லாந்தில் அது ஒருவகையான உள்நாட்டுக் குடியேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தின் பெருந்தோட்டங்களை நடத்திவந்த ஆங்கிலக் குடியேற்றக்காரர்கள் பிரித்தானியப் பேரரசின் உருவாக்கத்துக்கு முன்னோடிகளாக இருந்தனர் எனலாம். இத்திட்டங்களில் ஈடுபட்டிருந்த பலருக்கு, குறிப்பாக, "மேற்கு நாட்டார்" (West Country men) என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு குழுவினருக்குத் தொடக்க கால வட அமெரிக்கக் குடியேற்றங்களிலும் ஈடுபாடு இருந்தது. சர் ஹம்பிரி கில்பர்ட், சர். வால்ட்டர் ராலி, சர். பிரான்சிஸ் டிரேக், சர். ஜான் ஹோக்கின்ஸ், ரிச்சார்ட் கிரென்வில், சர். ரால்ஃப் லேன் ஆகியோர் இவர்களுள் அடங்கியிருந்தனர். அயர்லாந்தைக் குரொம்வெல்லின் படைகள் ஆக்கிரமித்த பின்னர், பெரும்பான்மை ஐரியக் கத்தோலிக்கர் தமது நிலங்களை இழக்கவேண்டி ஏற்பட்டது. இங்கிலாந்தையும், ஸ்காட்லாந்தையும் சேர்ந்த புரட்டஸ்தாந்திய நில உரிமையாள வகுப்பினர் அவர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டனர்.

முதல் பிரித்தானியப் பேரரசு (1583 - 1783)

தொகு

1578 இல் சர் ஹம்பிரி கில்பர்ட்டுக்கு, நாடுகாண் பயணத்துக்கும் கண்டுபிடிப்புக்குமான உரிமம் முதலாம் எலிசபெத் அரசியால் வழங்கப்பட்டது. அவர் முதலில் மேற்கிந்தியத் தீவுகளை நோக்கிப் பயணமானார். முதலில் கடற் கொள்ளைகளில் ஈடுபடுவதும் பின்னர் திரும்பும் வழியில் வட அமெரிக்காவில் குடியேற்றம் ஒன்றை அமைப்பதும் அவரது நோக்கமாக இருந்தது. காலநிலை சரியாக இல்லாததால் பயணம் தொடக்கத்திலேயே தோல்வியில் முடிந்தது. 1583 ல் கில்பர்ட் மீண்டும் இரண்டாவது தடவையாக முயற்சியைத் தொடங்கினார். இந்தத் தடவை நியூபவுண்ட்லாந்துக்குச் சென்று அங்கிருந்த சென். ஜான்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினார். எனினும், அங்கே எவ்விதக் குடியேற்றமும் அமைக்கப்படவில்லை. கில்பர்ட் இங்கிலாந்துக்குத் திரும்பு முன்னரே காலமானார். இவரது அரைச் சகோதரரான வால்ட்டர் ராலி அவரது பணியைத் தொடர்ந்தார். ராலி இதற்கான சொந்த உரிமத்தை எலிசபெத் அரசியிடமிருந்து 1584 ல் பெற்றிருந்தார். அவர், இன்றைய வட கரோலினாவின் கரையில் இருந்த ரோனோக் என்னுமிடத்தில் குடியேற்றம் ஒன்றை நிறுவினார். போதிய உணவு முதலியன கிடைக்காமையால் இக் குடியேற்றம் தோல்வியில் முடிந்தது.

1603ல், ஸ்காட்லாந்தின் அரசனான ஆறாம் ஜேம்ஸ், இங்கிலாந்தின் அரசரானார். 1604 ஆம் ஆண்டில் இலண்டன் ஒப்பந்தத்தை உருவாக்கி ஸ்பெயினுடனான பகைமைக்கு ஒரு முடிவுகட்டினார். இங்கிலாந்தின் மிக முக்கியமான எதிரியுடன் அமைதி ஏற்பட்டதும், அது தனது நாடுபிடிக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த முடிந்தது. தொடக்கத்தில் இங்கிலாந்தின் முயற்சிகள் வெற்றி அடையாவிட்டாலும், 17 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசு உருக்கொள்ளத் தொடங்கியது. வட அமெரிக்காவிலும், கரிபியத் தீவுகளிலும் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதுடன், ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்வதற்காக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி என்னும் தனியார் நிறுவனமும் தொடங்கப்பட்டது. இக் காலம் முதல், 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிவிப்புக்குப் பின் 13 குடியேற்றங்களை இழந்தது வரையான காலப்பகுதி பின்னர் "முதலாம் பிரித்தானியப் பேரரசு" என அழைக்கப்பட்டது.

அமெரிக்காக்கள்

தொகு

தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்த போதிலும், கரிபியத் தீவுகளின் குடியேற்றம் நல்ல வருமானம் கொடுக்கும் குடியேற்றமாக அமைந்தது. 1604 ஆம் ஆண்டில் கயானாவில் நிறுவப்பட்ட ஒரு குடியேற்றம் இரண்டு ஆண்டுகள் மற்றுமே நிலைத்திருந்ததுடன் அதன் முக்கிய நோக்கமான தங்கப் படிவுகளைத் தேடும் முயற்சியும் வெற்றி அளிக்கவில்லை. சென் லூசியா (1605), கிரெனடா (1609) ஆகிய தீவுகளில் அமைக்கப்பட்ட குடியேற்றங்கள் விரைவிலேயே கைவிடப்பட்டாலும், சென் கிட்ஸ் (1624), பார்படோஸ் (1627), நெவிஸ் (1628) ஆகிய தீவுகளில் அமைந்த குடியேற்றங்கள் வெற்றி பெற்றன. போர்த்துக்கேயரால், பிரேசிலில் தொடங்கப்பட்டது போல், இக் குடியேற்றங்களில் விரைவிலேயே கரும்புத் தோட்டங்கள் தொடங்கப்பட்டன. இத்தோட்டங்கள் வேலையாட்களுக்காக அடிமைகளிலேயே தங்கியிருந்தன. முதலில், டச்சுக் கப்பல்களே அடிமைகளை இப் பகுதிகளுக்கு விற்பனை செய்து பதிலுக்குச் சர்க்கரையை வாங்கிச் சென்றன. இவ்வணிகத்தில் பெருகி வந்த வருமானத்தை ஆங்கிலேயரின் கைகளிலேயே வைத்திருக்கும் நோக்குடன், ஆங்கிலக் குடியேற்றங்களுடன், ஆங்கிலக் கப்பல்கள் மட்டுமே வணிகம் செய்யலாம் என்னும் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது ஐக்கிய டச்சு மாகாணங்களுடன், ஆங்கில-டச்சுப் போர்கள் எனப்பட்ட தொடரான பல போர்கள் இடம்பெற்றன. இறுதியில் அமெரிக்காக்களில் இங்கிலாந்தின் நிலை உறுதிப்பட டச்சுக்காரரின் நிலை தாழ்ந்தது. 1655ல், ஸ்பெயினின் பிடியிலிருந்த ஜமேக்காவை இங்கிலாந்து தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன், 1666ல், பகமாசிலும் குடியேற்றங்களை நிறுவியது.

இங்கிலாந்தின் முதலாவது நிரந்தரமான கடல்கடந்த குடியேற்றத்தை 1607ல் ஜேம்ஸ்டவுனில், கப்டன் ஜான் சிமித் என்பவர் நிறுவினார், வெர்ஜீனியாக் கம்பனி என்னும் நிறுவனம் இதனை நிர்வாகம் செய்தது. இந் நிறுவனத்தின் ஒரு கிளையே 1609ல் கண்டுபிடிக்கப்பட்ட பெர்முடாத் தீவில் ஒரு குடியேற்றத்தை நிறுவியது. இந் நிறுவனத்தின் உரிமைப் பட்டயம் 1624 ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டு இப் பகுதிகளை இங்கிலாந்து அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வெர்ஜீனியாக் குடியேற்றநாட்டை உருவாக்கியது. 1610ல், நியூபவுண்ட்லாந்தில் நிலையான குடியேற்றங்களை நிறுவுவதற்காக நியூபவுண்ட்லாந்து கம்பனி நிறுவப்பட்டது. எனினும் இது அதிக வெற்றியளிக்கவில்லை. 1620ல், பெரும்பாலும், தூய்மைவாத மதப் பிரிவினையாளர்களுக்கான பாதுகாப்பிடமாக பிளைமவுத் குடியேற்றம் உருவானது. மத வேறுபாடுகள் தொடர்பில் துன்புறுத்தப்படுவதில் இருந்து தப்புவதற்காகப் பல பிற்காலக் குடியேற்றக்காரர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு கடல்கடந்து சென்றனர். இவ்வாறு, மேரிலாந்து ரோமன் கத்தோலிக்கர்களுக்கும், ரோட் தீவு பல மதத்தவர்களுக்காகவும் உருவானவை. கரோலினா மாகாணம் 1663ல் உருவானது. இரண்டாம் ஆங்கில-டச்சுப் போரைத் தொடர்ந்து, 1664 ஆம் ஆண்டில் டச்சுக் குடியேற்றமாக இருந்த தற்போதைய நியூ யார்க்கான, நியூ ஆம்ஸ்டர்டாமைப் பேச்சுவார்த்தைகள் மூலம் இங்கிலாந்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதற்கு ஈடாக சுரினாமை இங்கிலாந்து டச்சுக்காரருக்கு விட்டுக்கொடுத்தது. 1681ல் பென்சில்வேனியாக் குடியேற்றம் வில்லியம் பென் என்பவரால் நிறுவப்பட்டது.

1695 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாடாளுமன்றம், "ஸ்காட்லாந்துக் கம்பனி" என்னும் நிறுவனத்துக்கு உரிமப் பட்டயம் ஒன்றை வழங்கியது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனம் 1698ல் பனாமாத் தொடுப்புப் பகுதிக்குச் சென்று அங்கே கால்வாய் ஒன்றை வெட்டும் நோக்குடன் குடியேற்றம் ஒன்றையும் அமைத்தது. எனினும் அயலில் இருந்த ஸ்பானியக் குடியேற்றக்காரரின் முற்றுகையாலும், மலேரியா நோயினாலும் இக் குடியேற்றம் இரண்டு ஆண்டுகளின் பின் கைவிடப்பட்டது. இத்திட்டம் ஸ்காட்லாந்துக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. ஸ்காட்லாந்தின் முதலீடுகளின் கால்பகுதி இத்திட்டத்தினால் இழக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் அமைப்பதற்கு ஸ்காட்லாந்து ஒத்துக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது.

தெற்கில் புகையிலை, பருத்தி, அரிசி போன்றவற்றையும், வடக்கில் கப்பல்களுக்கான பொருட்களையும், கம்பளிகளையும் வழங்கிய அமெரிக்கக் குடியேற்றங்கள், கரிபியக் குடியேற்றங்களைப்போல் கூடிய வருமானம் தருபவையாக இருக்கவில்லை. ஆனாலும், இப்பகுதிகளின் பெரிய செழிப்பான வேளாண்மை நிலங்களும், இப் பகுதிகளின் காலநிலையும் பெருமளவு ஆங்கிலக் குடியேற்றக்காரரைக் கவர்ந்தது. அமெரிக்கப் புரட்சி 1775 ஆம் ஆண்டில் அப்பகுதிகளில் 13 குடியேற்றங்களுக்கான சொந்த அரச நிர்வாகத்தை ஏற்படுத்தியது. 1776 ஆம் ஆண்டில் விடுதலை அறிவிப்புச் செய்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவாக்கப்பட்டது. சுமார் 20 - 30% குடியேற்றக்காரர் பிரித்தானிய அரசருக்கு ஆதரவாக இருந்தனர். புதிய அரசு தனது விடுதலையைப் பாதுகாப்பதற்காகப் போரில் ஈடுபட்டது. இந்த அமெரிக்க விடுதலைப் போரின் முடிவில் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடக்கத்திலிருந்தே அடிமை முறையே மேற்கிந்தியத் தீவுகளில் பிரித்தானியப் பேரரசின் அடிப்படையாக இருந்தது. 1807 ஆம் ஆண்டில் இம்முறை ஒழிக்கப்படும்வரை இது நீடித்தது. ஆபிரிக்காவில் இருந்து சுமார் 35 இலட்சம் மக்கள் அடிமைகளாக அமெரிக்காக்களுக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பிரித்தானிய அரசே பொறுப்பாகும்.

அடிமை வணிகருக்கு இத்தொழில் பெரும் வருமானத்தை ஈட்டிக் கொடுத்ததுடன், மேற்குப் பிரித்தானிய நகரங்களான பிரிஸ்டல், லிவர்பூல் போன்றவற்றின் முக்கிய நிதி ஆதாரமாகவும் விளங்கியது. முக்கோண வணிகம் என வழங்கப்பட்ட இவ் வணிகத்தில், ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள் என்பவற்றுடன் மூன்றாவது புள்ளியாக இந்த நகரங்கள் விளங்கின. எனினும் அடிமைகள் கடத்திவரப்பட்ட கப்பல்களின் சுகாதாரக் குறைவினாலும், மோசமான உணவினாலும் பயணத்தின் போதே இடைவழியில் பலர் இறக்க நேரிட்டது. இந்த இறப்பு விகிதம் ஏழுபேருக்கு ஒருவர் என்ற அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆசியா

தொகு

16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்தும், நெதர்லாந்தும், ஆசியாவுடனான வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்த போர்த்துக்கல் நாட்டுக்குப் போட்டியாகப் புறப்பட்டன. பயணங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்கு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இக் கம்பனிகளுன் முக்கிய நோக்கம் அதிக வருமானம் தரக்கூடிய வாசனைப் பொருள்களின் வணிகத்தில் நுழைவதாகும். எனவே அக்கம்பனிகள், அப்பொருட்களின் மூலமான இந்தோனீசியத் தீவுக்கூட்டப் பகுதியிலும், வணிக வலையமைப்பில் முக்கிய இடமாக விளங்கிய இந்தியாவிலும் கவனம் செலுத்தலாயின. இலண்டனும், அம்ஸ்டர்டாமும் வட கடலுக்குக் குறுக்கே அண்மையில் அமைந்திருந்ததால், இரு நாட்டுக் கம்பனிகளுக்குமிடையே எதிர்ப்புணர்வும் போட்டியும் நிலவியது. இது பிணக்குகளுக்கு வழிவகுத்தது. நெதர்லாந்தினர் முன்னர் போர்த்துக்கீசரின் பலம்பொருந்திய இடமாக இருந்த மலூக்குப் பகுதியில் நெதர்லாந்து நாட்டினரது கை ஓங்கியிருந்தது. அதே வேளை, இந்தியாவில் பிரித்தானியருக்குப் பல வெற்றிகள் கிடைத்தன. இறுதியாக இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி மிகப்பெரிய குடியேற்றவாத வல்லரசாகத் திகழ்ந்தபோதும், நெதர்லாந்தின் உயர்தர நிதிமுறைகள், 17 ஆம் நூற்றாண்டின் மூன்று ஆங்கில-டச்சுப் போர்கள் என்பவற்றால் ஒரு குறுகிய காலம் நெதர்லாந்து ஆசியாவில் அதிக செல்வாக்குடன் விளங்கியது. 1688ல் டச்சுக்காரரான ஆரெஞ்சின் வில்லியம் இங்கிலாந்தின் அரியணையில் ஏறியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை தணிந்து இங்கிலாந்துக்கும், நெதர்லாந்துக்கும் இடையே அமைதி ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்தோனீசியத் தீவுக்கூட்டங்களின் வாசனைப் பொருட்கள் வணிகத்தை நெதர்லாந்துக்கும், இந்தியப் புடவை வணிகம் இங்கிலாந்துக்கும் விடப்பட்டன. விரைவிலேயே, இலாப அடிப்படையில் புடவை வணிகம் வசனைப் பொருள் வணிகத்தை விஞ்சியது. 1720ல், விற்பனையில் ஆங்கிலக் கம்பனி, டச்சுக் கம்பனியை முந்தியது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி, தனது கவனத்தை வாசனைப் பொருள் வணிக வலையமைப்பின் முக்கிய இடமொன்றாக விளங்கிய சூரத்திலிருந்து, பின்னர் மதராஸ் எனப் பின்னர் அழைக்கப்பட்ட சென். ஜார்ஜ் கோட்டை, பம்பாய், சுத்தானுட்டி ஆகிய இடங்களை நோக்கித் திருப்பியது. பம்பாய் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுக்கு, கத்தரீன் டி பிரகன்சாவை அவர் திருமணம் செய்துகொண்டபோது போத்துக்கீசரால் சீதனமாக வழங்கப்பட்டது. சுத்தானுட்டி வேறும் இரு ஊர்களுடன் இணைந்து பின்னர் கல்கத்தா ஆனது.

பிரான்சுடன் உலகளாவிய போராட்டங்கள்

தொகு

1688ல் இங்கிலாந்துக்கும், நெதர்லாந்துக்கும் இடையே ஏற்பட்ட அமைதி இரண்டு நாடுகளும் கூட்டணியாக பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பாவிலும் கடல்கடந்த நாடுகளிலும் போர்களில் ஈடுபடுவதற்கு வழிவகுத்தது. இப் போர்களில் நெதர்லாந்து ஐரோப்பாவில் அது ஈடுபட்ட தரைப் போர்களில் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருந்ததால், கடல்கடந்த நாடுகளில் அதன் கவனம் குறையலாயிற்று. இதனால் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நெதர்லாந்தைவிட முக்கியமான குடியேற்றவாத வல்லரசு ஆகியது. 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து உலகின் முதன்மையான குடியேற்றவாத நாடாகியதுடன், பிரான்ஸ் அதன் முக்கிய போட்டி நாடாகவும் விளங்கியது.

1700ல் ஸ்பெயினின் இரண்டாம் சார்லஸ் இறந்தபின் ஸ்பெயினும், அதன் குடியேற்ற நாடுகளும் பிரான்ஸ் அரசனின் பேரனான அஞ்சுவின் பிலிப்பேயின் கைக்கு வந்தபோது, பிரான்சும், ஸ்பெயினும் அவற்றில் குடியேற்ற நாடுகளும் ஒன்றிணையக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது. இது, இங்கிலாந்துக்கும், ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருந்தது. 1701ல், பிரித்தானியா, போர்த்துக்கல், நெதர்லாந்து ஆகிய நாடுகள், புனித ரோமப் பேரரசுடன் சேர்ந்து கொண்டு, பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் எதிரான எசுப்பானிய வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டன. இது 1714 ஆம் ஆண்டுவரை நீடித்தது. போரின் இறுதியில் செய்துகொள்ளப்பட்ட உட்ரெக்ட் ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தப்படி, பிலிப் தனதும் தனது வாரிசுகளும் பிரான்சின் அரசுக்கு உரிமை கோருவதில்லை என ஏற்றுக்கொண்டார். அத்துடன், ஸ்பெயின் தனது ஐரோப்பியப் பேரரசையும் இழந்தது.

இரண்டாவது பிரித்தானிய இராச்சியத்தின் தோற்றம்

தொகு

பசிபிக் ஆய்வு

தொகு
 
தெற்குக் கண்டம் எனக் கருதப்படும் டெரா ஆஸ்திராலிசுவைக் கண்டுபிடிக்கும் ஜேம்ஸ் குக்கின் திட்டம்

1718 முதல், பிரித்தானியாவில் பல்வேறு குற்றங்களுக்காகவும் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டனர்.[2] 1783 இல் பதின்மூன்று குடியேற்றங்களை பிரித்தானியா இழந்ததை அடுத்து, உலகின் வேறு பகுதிகளில் குடியேறுவதற்கு பிரித்தானியர் தள்ளப்பட்டனர். பிரித்தானியாவின் பார்வை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆத்திரேலியா நோக்கி சென்றது.[3] ஆத்திரேலியாவின் மேற்குக் கரை ஐரோப்பியர்களுக்காக இடச்சுப் பயணி வில்லெம் ஜான்சூன் என்பவரால் 1606 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பின்னர் புதிய ஒல்லாந்து ந்ன டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால் பெயரிடப்பட்டது.[4] ஆனாலும் இங்கு குடியேற்றங்களை ஆரம்பிக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை. 1770 இல் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் கிழக்குக் கரையை தென்பசிபிக் பெருங்கடலில் தனது அறிவியல் பயணம் மேற்கொண்டபோது கண்டுபிடித்தார். இதனை அவர் பிரித்தானியாவுக்காக உரிமை கோரி, நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.[5] 1778, இல் குக்கின் தாவரவியலாளர் யோசப் பேங்க்சு என்பவர் பிரித்தானிய அரசுக்கு பொட்டனி விரிகுடாவில் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை அறிக்கையாக சமர்ப்பித்தார். 1787 இல் முதல் தொகுதிக் குற்றவாளிகளைக் கப்பல் புறப்பட்டு 1788 இல் கிழக்குக் கரையில் தரையிறங்கியது.[6] 1840 வரை பிரித்தானியா குற்றவாளிகளை நியூ சவுத் வேல்சிற்குக் கொண்டு வந்தது.[7] ஆத்திரேலியக் குடியேற்றங்கள் கம்பளி மற்றும் தங்க ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றதாக விளங்கியது.[8] விக்டோரியா குடியேற்றத்தில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் தலைநகர் மெல்பேர்ண் அக்காலத்தில் உலகின் மிகவும் பணக்கார நகரமாகவும்,[9] பிரித்தானிய இராச்சியத்தில் இலண்டனுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது.[10]

குக் தனது கடற்பயணத்தின் போது நியூசிலாந்துக்கும் சென்றார். இந்நாடு இடச்சுப் பயணி ஏபெல் டாஸ்மான் என்பவரால் 1642 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவை ஜேம்ச் குக் வடக்கு, தெற்குத் தீவுகள் என பிரித்தானிய முடியாட்சிக்காக முறையே 1769 இலும் 1770 இலும் உரிமை கோரினார். ஆரம்பத்தில், அங்கிருந்த மாவோரி பழங்குடி மக்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே வணிகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்து வந்தது. ஐரோப்பியக் குடியேற்றம் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அதிகரித்த அளவில் காணப்பட்டது. அங்கு பல வணிக மையங்கள் குறிப்பாக வடக்குத் தீவில் ஏற்படுத்தப்பட்டன. 1839 இல், நிஒயூசிலாந்து கம்பனி அங்கு பெருமளவு நிலங்களைக் குடியேற்றத்துக்காகக் கொள்வனவு செய்ய முடிவு செய்தது. 1840 பெப்ரவரி 6 இல் காப்டன் வில்லியம் ஒப்சன், மற்றும் 40 இற்கும் ஏற்பட்ட மாவோரி தலைவர்கள் வைத்தாங்கி ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.[11] இதுவே நியூசிலாந்தின் தோற்ற ஆவணம் எனப் பலராலும் கருதப்படுகிறது.[12] ஆனாலும், மாவோரி, ஆங்கில மொழி ஆவாணங்களில் சில மொழிபெயர்ப்புகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன.[13] இதனால் இது எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே விளங்கி வந்தது.[14]

நெப்போலியனின் பிரான்சுடன் போர்

தொகு

முதலாம் நெப்போலியனின் கீழிருந்த பிரான்சு பிரித்தானியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. முன்னர் இடம்பெற்ற போர்களைப் போலல்லாமல், நெப்போலியனுடனான போர் இரு நாடுகளுக்கும் இடையிலான சித்தாந்தங்களின் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தியது.[15] நெப்போலியனின் இராணுவத்தினர் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைக் கைப்பற்றியது போல , நெப்போலியன் பிரித்தானியாவை ஆக்கிரமிக்க அச்சுறுத்தி வந்தான்.

 
நெப்போலியனின் தோல்வியுடன் வாட்டர்லூ போர் முடிவுற்றது.

நெப்போலியப் போர்களில் வெற்றியடைவதற்கு பிரித்தானியா பெருமளவு வளத்தை செலவளிக்க வேண்டி வந்தது. பிரெஞ்சுத் துறைமுகங்கள் அரச கடற்படையால் முற்றுகையிடப்பட்டன. இதன் மூலம் 1805 இல் திரஃபல்கார் சமரில் பிராங்கோ-எசுப்பானிய கப்பற்படையைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற முடிந்தது. 1810 இல் கைப்பற்றப்பட்ட இடச்சுக் குடியேற்றங்கள் உட்பட பல வெளிநாட்டுக் குடியேற்றங்கள் தாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. 1815 இல் ஐரோப்பிய இராணுவங்களின் கூட்டணியுடன் பிரான்சைத் தோற்கடிக்க முடிந்தது.[16] பிரித்தானியா இதன் மூலம் மீண்டும் சமாதான உடன்படிக்கைகளில் பயனாளியாக இருந்தது: பிரான்சு இயோனியன் தீவுகள், மால்ட்டா (1797, 1798 இல் ஆக்கிரமித்திருந்தது), மொரிசியசு, செயிண்ட் லூசியா, தொபாகோ ஆகியவற்றைக் கொடுத்தது. எசுப்பானியா டிரினிடாட்வைக் கொடுத்தது. நெதர்லாந்து பிரித்தானிய கயானா, கேப் காலனி ஆகியவற்றைக் கொடுத்தது. பிரித்தானியா குவாதலூப்பு, மர்தினிக்கு, பிரெஞ்சு கயானா, ரீயூனியன் ஆகியவற்றை பிரான்சுக்கும், சாவா, சுரிநாம் ஆகியவற்றை நெதர்லாந்துக்கும், கொடுத்தது. இலங்கையைக் கைப்பற்றியது.[17]

அடிமை வணிகம் ஒழிப்பு

தொகு
 
பிரித்தானியக் குடியேற்றமான அண்டிக்குவாவில் சர்க்கரைத் தொழிற்சாலை, 1823

தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புடன், அடிமைகளின் மூலம் உற்பத்தியான பொருட்களுக்கு பிரித்தானியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் குன்றியது.[18] வழக்கமான அடிமை கிளர்ச்சிகளை அடக்குவதற்கான செலவும் அதிகரித்தது. பிரித்தானியத் தடைவாத இயக்கங்களின் ஆதரவுடன், பிரித்தானிய நாடாளுமன்றம் 1807 இல் அடிமை வணிகச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் பிரித்தானியாவில் அடிமை வணிகத்தைத் தடை செய்தது. 1808இல் சியேரா லியோனி குடியேற்றம் பிரித்தானியாவின் அதிகாரபூர்வமான அடிமைகளற்ற குடியேற்றமாக அறிவிக்கப்பட்டது.[19] 1832 நாடாளுமன்ற சீர்திருத்தம் மேற்கிந்தியக் குழுவின் வீழ்ச்சியைக் கண்டது. அடிமை ஒழிப்பு சட்டம் 1833 இல் கொண்டுவரப்பட்டது. பிரித்தானிய இராச்சியம் முழுக்க (செயிண்ட் எலனா, இலங்கை, மற்றும் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் விலகலாக) 1834 ஆகத்து 1 முதல் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.[20] பிரித்தானிய அரசு அடிமை வண்கம் செய்தோருக்கு நட்ட ஈடு வழங்கியது.

பிரித்தானியப் பேரரசின் முன்னாள் காலனிகள்

தொகு
 1. அங்கியுலா
 2. அமெரிக்க ஐக்கிய நாடு
 3. அயர்லாந்து குடியரசு
 4. அன்டிகுவா பர்புடா
 5. ஆங்காங்
 6. ஆத்திரேலியா
 7. ஆப்கானித்தான்
 8. இசுரேல்
 9. இந்தியா
 10. இலங்கை
 11. ஈராக்
 12. உகாண்டா
 13. எகிப்து
 14. ஐக்கிய அரபு அமீரகம்
 15. கத்தார்
 16. கயானா
 17. கனடா
 18. காம்பியா
 19. கானா
 20. கிரிபட்டி
 21. கிரெனடா
 22. குவைத்
 23. கென்யா
 24. சாம்பியா
 25. சிங்கப்பூர்
 26. சிம்பாப்வே
 27. சியேரா லியோனி
 28. சீசெல்சு
 29. சுவாசிலாந்து
 30. சூடான்
 31. செயிண்ட் கிட்சும் நெவிசும்
 32. செயிண்ட் லூசியா
 33. செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
 34. சைப்பிரசு
 35. சொலமன் தீவுகள்
 36. டிரினிடாட் மற்றும் டொபாகோ
 37. டொமினிக்கா
 38. தன்சானியா
 39. துவாலு
 40. தென்னாப்பிரிக்கா
 41. தொங்கா
 42. நவூரு
 43. நியூசிலாந்து
 44. நியூபவுண்ட்லாந்து
 45. நைஜீரியா
 46. நோவா ஸ்கோசியா
 47. பகாமாசு
 48. பகுரைன்
 49. [[பாக்கித்தான்
 50. பார்படோசு
 51. பிஜி
 52. புரூணை
 53. பெர்முடா
 54. பெலீசு
 55. போக்லாந்து தீவுகள்
 56. போட்சுவானா
 57. மலாவி
 58. மலேசியா
 59. மால்ட்டா
 60. மாலைத்தீவுகள்
 61. மியான்மர்
 62. மொரிசியசு
 63. யெமன்
 64. லெசோத்தோ
 65. வங்காளதேசம்
 66. வட அயர்லாந்து
 67. வனுவாட்டு
 68. ஜமேக்கா
 69. ஜிப்ரால்ட்டர்
 70. ஜோர்தான்

வரைபடம்

தொகு

 

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. Ferguson, Niall (2004). Empire, The rise and demise of the British world order and the lessons for global power. Basic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-02328-2.
 2. Smith, p. 20.
 3. Smith, pp. 20–21.
 4. Mulligan & Hill, pp. 20–23.
 5. Peters, pp. 5–23.
 6. James, p. 142.
 7. Britain and the Dominions, p. 159.
 8. Fieldhouse, pp. 145–49
 9. Cervero, Robert B. (1998). The Transit Metropolis: A Global Inquiry. Chicago: Island Press. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55963-591-6.
 10. Statesmen's Year Book 1889
 11. Smith, p. 45.
 12. "Waitangi Day". History Group, New Zealand Ministry for Culture and Heritage. பார்க்கப்பட்ட நாள் 13 December 2008.
 13. Porter, p. 579.
 14. Mein Smith, p. 49.
 15. James, p. 152.
 16. Lloyd, pp. 115–118.
 17. James, p. 165.
 18. "Why was Slavery finally abolished in the British Empire?". The Abolition Project. பார்க்கப்பட்ட நாள் 31 December 2016.
 19. Porter, p. 14.
 20. Hinks, p. 129.

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானியப்_பேரரசு&oldid=3794318" இலிருந்து மீள்விக்கப்பட்டது