வில்லெம் சான்சூன்
வில்லெம் சான்சூன் (Willem Janszoon, அண். 1570 - 1630), டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆத்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் சான்சு எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்சுடர்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
வில்லெம் சான்சூன் | |
---|---|
பிறப்பு | c. 1570 |
இறப்பு | c. 1630 |
பணி | தேடலாய்வாளர் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஇவரது ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் ஏதும் அறியப்படவில்லை. டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த ஔட் கம்பனி (Oude compagnie) என்ற நிறுவனத்தின் "ஒல்லாந்தியா" என்ற கப்பலில் டச்சு கிழக்கிந்திய நாடுகளுக்குச் செல்ல இவர் பணிக்கப்பட்டார்[1]. 1601, மே 5 இல் ஜான்ஸ் மீண்டும் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றார்[2].
மூன்றாம் தடவையாக 1603, டிசம்பர் 18 இல் நெதர்லாந்தில் இருந்து கிழக்கிந்தியாவுக்கு தனது பயணத்தை டுயிஃப்க்கன் என்ற கப்பல் கப்டனாக சென்றார்[3]. 1605, நவம்பர் 18 இல் ஜாவாவின் பான்டமில் இருந்து புறப்பட்டு மேற்கு நியூ கினி நோக்கிச் சென்றார். அதன் பின்னர் அவர் அரபூரா கடலின் கிழ்க்கெல்லையைக் கடந்து டொரெஸ் நீரிணையைக் காணாமல் 1606 பெப்ரவரி 26 இல் குயின்ஸ்லாந்தின் கேப் யோர்க் கரையை இவர் அடைந்த நிகழ்வு ஆஸ்திரேலியாக் கண்டத்தைக் கண்ட முதலாவது ஐரோப்பியராக பதியப்பட்டது. ஜான்சூன் மேலும் கிட்டத்தட்ட 320 கிமீ தூரம் கரையார வழியே சென்றார்.
இவரது கரையோரக் கடற்பயணங்களில் அங்குள்ள பழங்குடியினரால் இவரது 10 மாலுமிகள் வரை கொல்லப்பட்டனர். கடைசியாக ஜூன் 1606 இல் மீண்டும் பான்டம் நகரை அடைந்தார். இவர் தாம் கண்ட நிலத்திற்கு "சீலண்ட்" என்ற டச்சு மாகாணத்தின் நினைவாக "நியூ சீலண்ட்" ("Nieu Zelandt") எனப் பெயரிட்டார். ஆனாலும் இப்பெயர் ஏபல் டாஸ்மான் அவர்களினால் நியூசிலாந்து நாட்டிற்கு பெயரிடுவதற்குப் பயன்பட்டது.