டொரெஸ் நீரிணை
டொரெஸ் நீரிணை (Torres Strait) என்பது ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினி தீவிற்கும் இடையில் அமைந்துள்ள நீரிணை ஆகும். இது கிட்டத்தட்ட 150 கிமீ அகலமானது. இதன் தெற்கே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தூர வடக்கில் அமைந்துள்ள கேப் யோர்க் தீபகற்பமும், வடக்கே பப்புவா நியூ கினியின் மேற்கு மாகாணமும் அமைந்துள்ளன.
புவியியல்
தொகுடொரெஸ் நீரிணை பவளக் கடலை கிழக்கே அரபூரா கடலுடன் இணைக்கிறது. இது ஒரு பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கடற் பாதை ஆயினும், இங்குள்ள கற்பாறைகளும், சிறு தீவுகளும் கடற்பயணம் மேற்கொள்வோரைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்கும். இதன் தெற்கே உள்ள எண்டெவர் நீரிணை, வேல்ஸ் இளவரசர் தீவிற்கும் ஆஸ்திரேலியாவின் பெருந்தரைப் பகுதிக்கும் இடையில் உள்ளது.
இந்நீரிணையில் டொரெஸ் நீரிணைத் தீவுகள் எனப்படும் பல தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன. குறைந்தது 274 தீவுகள் இக்கூட்டத்தில் உள்ளன. இவற்றில் 17 தீவுகளில் தற்போது மக்கள் குடியிருப்புக்கள் உள்ளன. 6,800 இற்கும் அதிகமான டொரெஸ் நீரிணைத் தீவு மக்கள் (ஆஸ்திரேலியப் பழங்குடிகள்) இந்தத் தீவுகளில் வாழ்கின்றனர். மேலும் 42,000 பேர் இடம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் பெருந்தரைப் பகுதியில் வாழ்கின்றனர்.