நாகம்மை

நாகம்மை (Nagammai) (1885–1933) ஒரு இந்திய சமூக செயற்பாட்டாளர் மற்றும் பெண் உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் இந்தியாவில் இயங்கி வந்த புலனடக்க இயக்கம் மற்றும் வைக்கம் சத்யாக்கிரகம் ஆகியவற்றில் கலந்து கொண்டமைக்காக நன்கு அறியப்பட்டவர் ஆவார். இவர் சுய மரியாதை இயக்கத்தை தலைமை தாங்கிய ஈ. வெ. ரா. பெரியாரின் மனைவியாவார்.

தொடக்க கால வாழ்க்கைதொகு

நாகம்மை சென்னை மாகாணத்தில் இருந்த சேலம் மாவட்டத்தில் தாதம்பட்டி என்ற ஊரில் ரெங்கசாமி மற்றும் பொன்னுத்தாய் என்ற பெற்றோருக்கு 1885 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். நாகம்மை முறையான கல்வி பயின்றதில்லை. 1898 ஆம் ஆண்டு தனது 13 ஆம் வயதில் தனது மைத்துனர் இராமசாமியை மணந்தார்.[1] இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்து ஐந்து மாத காலத்தில் இறந்து விட்டது.[2]

செயற்பாடுகள்தொகு

1919 ஆம் ஆண்டில், இராமசாமி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். நாகம்மை இவரது அரசியல் வாழ்க்கைக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்கான அழைப்பு விடுத்த போது, ஈரோட்டில் பெண்களைக் கொண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.[3][4] இந்த இயக்கமானது நாட்டின் பிற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த போது மற்ற காங்கிரஸ் தலைவர்கள் காந்தியை போராட்டங்களைக் கைவிட வேண்டினர். காந்தி இந்தப் போராட்டத்தின் முடிவு என் கைகளில் இல்லை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் உள்ளது என்றார். அந்த இரண்டு பெண்கள் நாகம்மை மற்றும் நாகம்மையின் மைத்துனி கண்ணம்மாள் ஆகியோர் ஆவர்.[1][3]

திருவாங்கூர் மாகாணத்தில் தீண்டாமையானது ஆதிக்கம் செலுத்திய காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைவதையும், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடப்பதற்கும் தடை இருந்தது.[2] காங்கிரசு தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் மற்றும் தெருக்களுக்குள் நுழைவதைத் தடை செய்வதை எதிர்த்து வைக்கம் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கியது. நாகம்மை மற்றும் இராமசாமி ஆகியோர் 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நாகம்மை போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை முன்னின்று நடத்தி மே 1924 இல் கைது செய்யப்பட்டார்.[5]

1925 ஆம் ஆண்டில் இராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது இயக்கத்தில் பெண்கள் பங்குபெறுவதை ஊக்கப்படுத்தினார். இவர் பல விதவை மறுமணங்கள் மற்றும் சுயமரியாதைத் திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.[1] இராமசாமி ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த போது குடியரசு இதழின் ஆசிரியராக இருந்தார்.[1]

பெருமைகள்தொகு

நாகம்மை 1933 ஆம் ஆண்டு மே 11 ஆம் நாள் ஈரோட்டில் மறைந்தார்.[1] தமிழ்நாட்டில் பல பள்ளிகள் நாகம்மையின் பெயரைத் தாங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்கு தமிழக அரசாங்கம் பெரியார் ஈ. வெ. ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.[6]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகம்மை&oldid=2994926" இருந்து மீள்விக்கப்பட்டது