மு. க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்) (பிறப்பு: மார்ச்சு 1, 1953), (மு.க. ஸ்டாலின்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மகன் ஆவார்.

மு.க.ஸ்டாலின்
8-ஆவது தமிழக முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஆர். என். ரவி
முன்னவர் எடப்பாடி க. பழனிசாமி
தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
28 ஆகத்து 2018
முன்னவர் மு.கருணாநிதி
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
25 மே 2016 – 3 மே 2021
துணை துரைமுருகன்
முதல்வர் ஜெ. ஜெயலலிதா,
ஓ. பன்னீர்செல்வம்,
எடப்பாடி க. பழனிசாமி
முன்னவர் விஜயகாந்த்
1-ஆவது தமிழ்நாடு துணை முதலமைச்சர்
பதவியில்
29 மே 2009 – 15 மே 2011
ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா
முதல்வர் மு. கருணாநிதி
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் ஓ. பன்னீர்செல்வம்
தொகுதி ஆயிரம் விளக்கு
உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
13 மே 2006 – 15 மே 2011
முதல்வர் மு. கருணாநிதி
முன்னவர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம்
பின்வந்தவர் மோகன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2011
முதல்வர் ஜெ. ஜெயலலிதா,
ஓ. பன்னீர்செல்வம்,
எடப்பாடி க. பழனிசாமி
முன்னவர் தொகுதி உருவாக்கப்பட்டது
தொகுதி கொளத்தூர்
பதவியில்
13 மே 1996 – 15 மே 2011
முதல்வர் மு. கருணாநிதி,
ஜெ. ஜெயலலிதா,
ஓ. பன்னீர்செல்வம்
முன்னவர் கே. ஏ. கிருஷ்ணசாமி
பின்வந்தவர் பா. வளர்மதி
தொகுதி ஆயிரம் விளக்கு
37-ஆவது சென்னை மாநகராட்சி மன்றத்தலைவர்
பதவியில்
25 அக்டோபர் 1996 – 6 செப்டம்பர் 2002
முன்னவர் ஆறுமுகம்
பின்வந்தவர் மா. சுப்பிரமணியம்
தனிநபர் தகவல்
பிறப்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
1 மார்ச்சு 1953 (1953-03-01) (அகவை 70)
மதராசு,
மதராசு மாநிலம்
(தற்போது சென்னை, தமிழ்நாடு), இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்)
துர்கா ஸ்டாலின் (தி. 1975)
உறவினர் கருணாநிதி குடும்பம்
பிள்ளைகள் உதயநிதி ஸ்டாலின்
செந்தாமரை
பெற்றோர் தந்தை: மு. கருணாநிதி
தாய்: தயாளு அம்மாள்
இருப்பிடம் 25/9, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கல்வி இளங்கலை
படித்த கல்வி நிறுவனங்கள் மாநிலக் கல்லூரி, சென்னை
பணி
 • அரசியல்வாதி
கையொப்பம்
இணையம் mkstalin.in
பட்டப்பெயர்(கள்) தளபதி

இவர் தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக 2006-2011, துணை முதலமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.[1] 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகத்து 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.[2][3]

இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தால் 2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் மு.க. ஸ்டாலின் 30-ஆவதாக இடம் பெற்றார்.[4]

ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும்

மு.க. ஸ்டாலின் 1953-ஆம் ஆண்டு கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகச் சென்னையில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைவதற்கு 4 நாட்கள் முன்பு பிறந்ததால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயர் இடப்பட்டது.

மு. க. ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார்.  1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்றார். ஆகத்து 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மு.க. ஸ்டாலினுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[5][6][7][8]

இவர் ஆகத்து 25, 1975-இல் துர்கா (என்கிற சாந்தாவை) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். மேலும் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் நடிகரும் அரசியல்வாதியும் ஆவார், அவர் தமிழ் திரைப்பட இயக்குனர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், மற்றும் இவரது மகள் செந்தாமரை சபரீசன் தொழில்முனைவோராகவும், கல்வியாளராகவும் மற்றும் சென்னை சன்ஷைன் பள்ளிகளின் இயக்குநராக உள்ளார். அவர் தொழிலதிபர் மற்றும் அரசியல் வியூகவாதி சபரீசன் வேதமூர்த்தியை மணந்தார்.

தந்தையைப் போலவே மு.க.ஸ்டாலினும் நாத்திகன் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார், ஆனால் அவர் எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவர் அல்ல என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை

மு. க. ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரத்தில் தி.மு.க. இளைஞரணி என்ற அமைப்பினை தொடங்கினார்.

14 வயதில், 1967-இல் தனது தாய்மாமன் முரசொலி மாறனுக்காக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்தார். 1973-ஆம் ஆண்டு மு. க. ஸ்டாலின் திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976-ஆம் ஆண்டு அவசர நிலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் (MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது மு. க. ஸ்டாலின் தனது தீவிர அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சிறையில் இருந்தபோது அவர் கடுமையாக தாக்கப்பட்டார், மேலும் அவரோடு சிறையில் அடைக்கப்பட்டு இருந்து சி. சிட்டிபாபு காயங்களாலும், காவல் துறையின் சித்திரவதைகளாலும் அவரைப் பாதுகாக்கும் போது இறந்து போனார்.[சான்று தேவை] சிறையில் இருந்த போதிலும் கூடத் தனது இறுதியாண்டு பி.ஏ. தேர்வுகளை எழுதி முடித்தார்.

மு. க. ஸ்டாலின் திமுக இளைஞர் அணியை உருவாக்கினார். 1982-ஆம் ஆண்டு தொடங்கி திமுகவின் இளைஞரணி செயலாளராக மு. க. ஸ்டாலின் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்துள்ளார்.

இளைஞரணி பட்டம்

மு. க. ஸ்டாலின் 1968-ஆம் ஆண்டு கோபாலபுரத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து முடிதிருத்தும் கடையில் திமுக இளைஞரணியை தொடங்கினார். 1983-ஆம் ஆண்டில், இவர் கோபாலபுரம் இளைஞரணியை மாநிலம் தழுவிய அணியாக மாற்றி நாற்பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் இளைஞரணியின் செயலாளராக பதவி வகித்துள்ளார். இளைஞரணியின் ஆரம்ப கட்டங்களில், மு. க. ஸ்டாலின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, தமிழக இளைஞர்களுக்கு அடிமட்ட அளவில் தீவிர அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை வழிநடத்தினார்.[9]

சட்டமன்ற உறுப்பினர்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1989-இல் மீண்டும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற  தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக அரசு 1991-ஆம் ஆண்டு தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடிப்பதற்குள் கலைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு அதே சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட அவர், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் தோல்வியடைந்தார். மீண்டும் 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற  தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் மு. க. ஸ்டாலின் .

2003-இல், திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். 2011-ஆம் ஆண்டு, மு. க. ஸ்டாலின் முதல் முறையாகத் தனது ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து சென்னை புறநகரில் உள்ள கொளத்தூர் தொகுதிக்கு மாறி போட்டியிட்டார்.

சென்னை மாநகராட்சி மேயர்

1996-ஆம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைத் மு. க. ஸ்டாலின் பெற்றார். இவர் சிங்கார சென்னை (அழகான சென்னை) என்றழைக்கப்படும் திட்டத்தை உருவாக்கினார்.

மு. க. ஸ்டாலின் மேயர் பதவியில் இருந்தபோது துப்புரவுப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து சென்னை நகரத்தின் குப்பை அள்ளும் முறைகளை நவீனப்படுத்தினார். சென்னை நகரத்தின் சாலைகள் புதுப்பொலிவு பெற்றன. மிகப்பெரிய மேம்பாலங்களை கட்டி சென்னை நகரத்தின் நெரிசலுக்கு தீர்வு கண்டார். இவரது ஆட்சியில், 9 பெரிய மேம்பாலங்களும், 49 குறும்பாலங்களும் கட்டப்பட்டன. இதுதவிர 18 முக்கியச் சாலை சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டது. அவரது பதவிக் காலத்தில், நெரிசல் மிகுந்த 10 சாலைகளில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதி மீதம் இருந்தது.  மு. க. ஸ்டாலின் 2001-ஆம் ஆண்டு 2-ஆவது முறையாக அவர் சென்னை மக்களால் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும் 2002-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா கொண்டு வந்த ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்ற சட்டத் திருத்தத்தால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் மு. க. ஸ்டாலின் .

இருப்பினும், சென்னை  உயர்நீதிமன்றம், சட்டமியற்றும் அமைப்புகள், தனிநபர்களின் "கணிசமான உரிமைகளை" பின்னோக்கிப் பாதிக்கும் சட்டங்களை உருவாக்குவதை "தடுக்கவில்லை" என்று கூறி சட்டத்தை ரத்து செய்தது. இருப்பினும், சென்னை (இப்போது சென்னை) சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம்- 1919-இன்கீழ், மு.க.ஸ்டாலினைப் போலன்றி, முந்தைய மேயர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மேயராக இருக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. எனினும் மு. க. ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.[10]

அமைச்சர்

2006-ஆம்  ஆண்டு  நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மு. க. ஸ்டாலின் , தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1,75,493 மகளிர் சுய உதவிக் குழுக்களை நிறுவி மாநிலம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைப் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றினார். ஒகேனக்கல் மற்றும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் போன்ற பல்வேறு விரிவான குடிநீர் திட்டங்களையும் அவர் தொடங்கினார். 2008-இல், அவர் திமுகவின் பொருளாளராகப் பொறுப்பு வகித்தார்.

துணை முதலமைச்சர்

தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி, 2009-இல் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், அது முதல் அவருக்கு சக்கர நாற்காலி தரப்பட்டது. அவரது உடல்நிலை காரணமாக அவரது துறைகளில் இருந்து பல துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை, எனவே அவரது மகனான இவருக்கு சில துறைகள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தார்,இவர் அமைச்சரவையில் உள்ளூர் நிர்வாக அமைச்சராக பதவி வகித்தார். இதன் விளைவாக தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.இவர் அந்த பதவியில் 29 மே 2009 முதல் 15 மே 2011 வரை பதவி வகித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்

2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​ஸ்டாலின் நமக்கு நாமே என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்குச் சென்றார். அந்தத் தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை வென்றார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டில், ஸ்டாலின் மற்றொருமுறை நமக்கு நாமே சுற்றுப்பயணத்திற்குச் சென்றார். பின்னர் 2018-ஆம் ஆண்டில், அவரின் தந்தை கருணாநிதி மறைவுக்கு பின், ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்றார்.

2019 பொதுத் தேர்தல் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மு.க. ஸ்டாலின் தேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, மாநிலத்தில் 2019 பொதுத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை தாங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களையும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 21-இல் 12 இடங்களையும் 52% வாக்குகளைப் பெற்று வென்றது. திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

மு. க. ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தினார். இதன் பலனாக சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் 159 இடங்களை திமுக கூட்டணி வென்றது. திமுக மட்டும் தனித்து 132 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. 2021 மே 7 -ஆம் தேதி மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் பதவியேற்ற மு. க. ஸ்டாலின் , கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை உடனடியாக தொடங்கினார். தமிழக மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் நிலை, ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகங்களின் நிலையை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றைத் தொடங்கினார்.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை முன்னேற்ற எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், ஜீன் டிரேஸ், அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் நிதிச் செயலாளர் எஸ். நாராயண் உள்ளிட்ட முன்னணி பொருளாதார நிபுணர்களைக் கொண்ட புதிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2021-இல் கோயில் அர்ச்சகர்களாகப் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும்  இந்து சமய அறநிலையத் துறையில்  பணி நியமன ஆணையை  மு. க. ஸ்டாலின் வழங்கினார். கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரின் சம உரிமைக்காக பாடுபட்ட சீர்திருத்த தலைவர் தந்தைப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கியதாக மு.க.ஸ்டாலினை பல்வேறு கட்சித் தலைவர்களும் பாராட்டினர்.[யார்?]

ஆகஸ்ட் 2021-இல், ‘இந்தியா டுடே’ இதழ் நடத்திய "மூட் ஆஃப் தி நேஷன்" கணக்கெடுப்பில், 42% ஆதரவுடன் இந்தியாவின் அனைத்து முதல்வர்களிலும் மு. க. ஸ்டாலின் முதலிடம் பிடித்தார்.

2021 செப்டம்பரில், தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி தினமாகக் கொண்டாடப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்தார். மத்திய அரசால் வெளியிடப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம்,  கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம், சென்னை-சேலம் விரைவு சாலை திட்டம், நியூட்ரினோ ஆய்வகம் மற்றும் மூன்று விவசாய திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடிய பத்திரிகையாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளாக  அதிமுக அரசு தொடர்ந்த 5570 வழக்குகளை ஸ்டாலின் அரசு செப்டம்பர் 2021-இல் திரும்பப் பெற்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2022-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலை செய்யப்பட்டதை பாராட்டி, முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்து, அவரைக் கட்டி அணைத்து தனது மகிழ்ச்சிகளை தெரிவித்தார்.[சான்று தேவை]

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

உங்கள் தொகுதியில் முதல்வர் என்பது, தொகுதியினர் எழுப்பும் மனுக்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட குறை தீர்க்கும் சேவையாகும்.

மு. க. ஸ்டாலின் பதவியேற்ற முதல் 100 நாட்களில் 4.57 லட்சம் மனுக்களில் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டது.[2][3]

மு. க. ஸ்டாலின் அவர்கள்  தனது தேர்தல் பிரசாரத்தின் போது தொடங்கப்பட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்திலிருந்து இந்த துறை உருவானது. குடிமக்களிடம் குறைகளைச் சேகரித்த ஸ்டாலின், தான் பதவியேற்றதும் 100 நாட்களில் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். கோ.வி.லெனின் போன்ற நிபுணர்களும், பத்திரிகையாளர்களும், இத்திட்டத்தை திமுகவின் அடிப்படைக் கொள்கையான ‘மக்களிடம் செல்’  என்ற கட்சியின் நிறுவனர் மறைந்த சி.என் அண்ணாதுரை அவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கையை பின்பற்றி அமைந்துள்ளதாக பாராட்டினர்.[4]

மக்களைத் தேடி மருத்துவம்

தமிழக மக்களின் வீடுகளைத் தேடி அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 2021 ஆகஸ்ட் 5 -ஆம் தேதி ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை மு. க. ஸ்டாலின் தொடங்கினார். தொடங்கப்பட்டதிலிருந்து, இத்திட்டம் ஆரம்பச் சுகாதாரப் பராமரிப்பு முறையை மாற்றியமைத்து, மக்களின் வீடுகளுக்குச் சென்று  அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை ஏழை எளியவர்களுக்கு வழங்கி வருகின்றது.

இத்திட்டம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்து, திடீர் மரணங்களை உண்டாக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் தொற்று அல்லாத நோய்களைக் கண்டறிகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பெண் பொதுச் சுகாதாரப் பணியாளர்கள், மகளிர் சுகாதாரத் தன்னார்வலர்கள் (WHVகள்), இயன்முறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் பொது மக்களின் வீடுகளுக்கே சென்று  சுகாதார சேவையை வழங்குவார்கள்.[5]

இத்திட்டத்தின் மூலம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டும், கிராமங்களில் அதிகம் கண்டறியப்பட்டு , பரிசோதனை செய்யப்பட்டு மாதந்தோறும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதிக கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. குழந்தைகளின் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிறவி குறைபாடுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு போர்ட்டபிள் டயாலிசிஸ் இயந்திரம் மூலம் உரிய நேரத்தில் டயாலிசிஸ் செய்யப்படும் என்று மு. க. ஸ்டாலின் உறுதியளித்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தொலைதூரங்களில் வாழும் பழங்குடி மக்களின் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.[6]

தமிழகத்தின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை

மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில் தமிழகத்தின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை 14 ஆகஸ்ட் 2021 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  மாநிலத்தின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளைக் கலந்தாலோசித்த பிறகு முழுமையான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது, மேலும் மிக  முக்கியமாக தற்போதுள்ள சாகுபடி செய்யக்கூடிய நிலத்தை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரிப்பதை இலக்காக கொண்டது. தற்போது சுமார் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும், அதை 11.75 லட்சம் ஹெக்டேராக உயர்த்த விவசாய நிதிநிலை அறிக்கை இலக்காக நிர்ணயித்துள்ளது.[7]

வரவு செலவுத் திட்டத்தின் கீழ், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் வகையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[10] [11]

விவசாய நிதிநிலை அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்

 1. 2021 நடப்பு  ஆண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம்  பனைமரக்கன்றுகளை அரசாங்கம் விநியோகிக்கும்.
 2. பொது விநியோக முறை மூலம் பனை வெல்லம் விநியோகம் மேற்கொள்ளப்படும்.
 3. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயி நெல் ஜெயராமனின் நினைவாகப் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்படும்.
 4. வேளாண் துறையின் கீழ் தனி இயற்கை வேளாண்மை பிரிவு அமைக்கப்படும். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்.
 5. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் போன்ற குறைந்த மழைப்பொழிவு  உள்ள மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ‘சிறுதானிய இயக்கம்’ தொடங்கப்படும்.
 6. கூட்டுறவுச் சங்கங்கள் முலம் சிறுதானியங்களை  கொள்முதல் செய்து சென்னை, கோவை போன்ற நகரங்களில் பொது விநியோக முறை மூலம் விற்பனை செய்யப்படும்.
 7. நடப்பு அரவைப் பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 42.50 அரசு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக , 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 8. விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்கட்டமைப்புடன்  தனித்து சூரிய சக்தியால் இயங்கும் 10 குதிரைத் திறன் கொண்ட பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் மொத்தம் 5,000 சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகள் முதலமைச்சரின் விரிவான திட்டத்தின் கீழ்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.114.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 9. மேலும், மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும், 1,000 விவசாயிகளுக்கு, புதிய மோட்டார் பம்புசெட்டுகள் வாங்குவதற்கும், பழைய பம்புசெட்டுகளை மாற்றுவதற்கும், 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். இதற்காக 1 கோடி நிதி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி

மு. க. ஸ்டாலின் அவர்கள் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தைத் தொடங்கினார். இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வ அடிப்படையிலான கல்வித் திட்டம் இத்திட்டம்.  இத்திட்டத்தின் கீழ் 92,000 குடியிருப்புகளில் உள்ள 3.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் 200,000 பெண் தன்னார்வலர்களால் தினமும் 90 நிமிடங்களுக்குக் கற்பிக்கப்படுகிறார்கள்.[12] கற்றல் இடைவெளியில் ஏற்பட்ட மொத்த மீட்சியில் 24% க்கும் அதிகமானவை ‘இல்லம் தேடிக் கல்வி’ அமர்வுகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், பின்தங்கிய பிரிவினரிடையே உள்ள  மீட்பு மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் கள வல்லுநர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்கள் இத்திட்டத்தை பாராட்டியுள்ளனர்.[13] [14]

இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48

மு. க. ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 18, 2021 அன்று ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ என்ற  திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சைக்கான செலவை மாநில அரசே ஏற்கும்.

மு. க. ஸ்டாலின் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது சாலை விபத்துகளைக் குறைத்தல், உயிரிழப்புகளைத் தடுப்பது, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.[15]

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் அல்லது மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதல் 48 மணி நேரம் இலவசமாகச் சிகிச்சை பெறுவார்கள்.[16]

மருத்துவமனைகளில் விபத்துக்குள்ளானவர்களுக்கு அடையாளம் காணப்பட்ட 81 சிகிச்சை தொகுப்பின் கீழ்  சிகிச்சைகள் அளிக்கப்படும். அவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரங்களுக்கு தனிநபருக்கு ₹1 லட்சம் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் தகுந்த சிகிச்சை அளித்தால் பெரும்பாலான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால், தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும் என்பது இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

முதலமைச்சரின் தகவல் பலகை

மு. க. ஸ்டாலின் தனது அலுவலகத்தில் ‘தகவல் பலகை' கண்காணிப்பு அமைப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  டிசம்பர் 23, 2021 அன்று, அனைத்து நலத் திட்டங்களையும், அவை செயல்படுத்தப்பட்ட நிலை, நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க அவருக்கு உதவும்.[17]

தகவல் பலகையில்  சரியான கண்காணிப்பு, அதிக செயல்திறன், தாமதங்களை நீக்குதல் மற்றும் உடனடி முடிவெடுப்பதற்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அணைகளில் நீர் சேமிப்பு நிலைகள், மழைப்பொழிவு முறைகள், குற்றங்கள் குறித்த தினசரி அறிக்கைகள், மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றம், வேலைவாய்ப்பு நிலவரங்கள் மற்றும் மாநிலத்தில் உரிமையியல் இருப்புகள் போன்றவற்றையும் இது முதலமைச்சரிடம் தெரிவிக்கும். தகவல் பலகையில், முதல்வர் உதவி எண் மற்றும் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை மற்றும் வேண்டுகோள்கள் கண்காணிக்கப்படுகின்றன.[18]

நான் முதல்வன்

மார்ச் 1, 2022 அன்று ‘நான் முதல்வன்’ திட்டத்தை மு. க. ஸ்டாலின் தொடங்கினார். இது ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் இளைஞர்களை நாட்டின் நலனுக்காக அவர்களின் திறமைகளை   மேம்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்காக புதிய இணைய முகப்பை மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்துள்ளார்.[19]அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, பயிற்சி அளிப்பது, அவர்களுக்கு தொழில் மற்றும் கல்வி வழிகாட்டுதலை வழங்குவதை இந்த திட்டம் முக்கிய  நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள் நேர்காணல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும் வகையில் ஆங்கிலத்தில் பேசப் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப குறியீட்டு முறை மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சிகள் வழங்குவார்கள் .  மேலும், உளவியல் ஆலோசகர்கள் மற்றும்  ஊட்டச்சத்து மருத்துவர்கள், உடல் தகுதி மற்றும் மாணவர்களின் ஆளுமையின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த வழிகாட்டுதலை வழங்குவார்கள்.[20]

பசுமைத் தமிழ்நாடு இயக்கம்

செப்டம்பர் 24, 2022-ஆம் ஆண்டு பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை மு. க. ஸ்டாலின் தொடங்கினார். இது அடுத்த பத்து ஆண்டுகளில் மாநிலத்தின் பசுமைப் பரப்பை 23.7% இல் இருந்து 33% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[21] இணைய முகப்பு வழியாக மரம் நடும் முயற்சிகள், இணையம் வழியே நாற்றுகள் வாங்குதல்  போன்றவற்றால் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் பணி எளிமையாக்கப்பட்டுள்ளது.[22]

புதுமைப் பெண்

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான 'புதுமைப் பெண்' திட்டத்தை மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உயர்கல்வியில் அரசுப் பள்ளிகளில் பெண்களின் சேர்க்கை விகிதம் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்து மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரிப் பள்ளிகளையும் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு, பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடிக்கும் வரை மாதந்தோறும் ₹1,000 உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.[23]

இத்திட்டத்திற்காக மாநில அரசு 2022-23 நிதி நிலை அறிக்கையில் ₹698 கோடியை ஒதுக்கியது. முதற்கட்டமாக 171 கோடி ரூபாய் செலவில் மாநகராட்சிகளால் நடத்தப்படும் 25 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக உயர்த்தப்படும் என்றும் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த சிறப்புப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டு, கலை, இலக்கியம், இசை, நடனம் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை மாணவர்களிடையே ஊக்குவிக்கப்படும்.[24]

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம்

குழந்தைகளின் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்க 2022 செப்டம்பர் 15 அன்று ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ மு. க. ஸ்டாலின் தொடங்கினார். மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்ற குறைபாடுகளை நீக்கவும், ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.[25]

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS) (2019-21) அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒரு பெரிய உடல்நலப் பிரச்சனையாகக் குழந்தைகளிடையே இரத்த சோகை  நோய் குறிப்பிடப்பட்டுள்ளது.[26]

இந்தப் போதாமையைக் குறைக்கும் வகையில் மு. க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலம் முழுவதும் உள்ள 1,500க்கும் மேற்பட்ட அரசு நடத்தும் பள்ளிகளில் ₹33.56 கோடி செலவில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 1.14 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி குழந்தைகள் பயன்பெறுவார்கள். கல்வி-சத்துணவு இணைப்பு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பது ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கை.[27]

பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனை குழு

23 அக்டோபர் 2022 அன்று மு. க. ஸ்டாலின் 22 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனை  குழுவை (GCCC) அமைத்தார். பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா; நந்தன் எம் நிலேகனி, இன்ஃபோசிஸ் வாரியத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர்; எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆறாவது நிர்வாக இயக்குநர்; டாக்டர் ரமேஷ் ராமச்சந்திரன், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர்-இயக்குநர்; பூவுலகின் நண்பர்களின் ஒருங்கிணைப்பாளர் ஜி சுந்தர்ராஜன் மற்றும் ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

GCCC குழு தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்திற்குக் கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும், பருவநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு மாநில செயல் திட்டத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் காலநிலை நடவடிக்கை குறித்த நடைமுறை உத்தியை வழிகாட்டவும் உருவாக்கப்பட்டது.[28]

GCCC இன் குறிப்பு விதிமுறைகளில் பருவநிலை மாற்றத்திற்கான வழிகாட்டுதல் மற்றும் நீண்டகால பருவநிலை-தாழ்த்தக்கூடிய வளர்ச்சிப் பாதைகள், உத்திகள் மற்றும் செயல் திட்டம் ஆகியவை வாழ்வாதாரம், சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வு மற்றும் பொறுப்பான சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.

பருவநிலை ஆலோசனை குழு, பின்பற்றப்படும் உத்திகளின் அடிப்படையில் முடிவுகளை அவ்வப்போது கண்காணிக்கும். இதுதவிர ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், ஆராய்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் இடைநிலைப் பணிகளுக்கான தொடர்ச்சியான மற்றும் நீடித்த உந்துதலைக் கொடுக்கும்.[29]

நிலை மாற்றம் குறித்த தற்போதைய கொள்கைகளின் செயல்திறனை ஆலோசனை குழு மதிப்பீடு செய்து, பொருத்தமான நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிலையான நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளும். மாநில சுற்றுச்சூழல், பருவ நிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

பருவநிலை மாற்றத் துறையில் தமிழ்நாடு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு பசுமைப் பணி, தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலப் பணி ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.[30]

போட்டியிட்ட தேர்தல்கள்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 ஆயிரம் விளக்கு திமுக தோல்வி 47.94 கே. ஏ. கிருஷ்ணசாமி அதிமுக 50.44[11]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 ஆயிரம் விளக்கு திமுக வெற்றி 50.59 தம்பிதுரை அதிமுக (ஜெயலலிதா அணி) 30.05[31]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 ஆயிரம் விளக்கு திமுக தோல்வி 39.19 கே. ஏ. கிருஷ்ணசாமி அதிமுக 56.5[32]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 ஆயிரம் விளக்கு திமுக வெற்றி 69.72 ஜீநாத் ஷெரிப்டீன் அதிமுக 22.95[12]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 ஆயிரம் விளக்கு திமுக வெற்றி 51.41 எஸ். சங்கர் தமாகா 43.78[13]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 ஆயிரம் விளக்கு திமுக வெற்றி 46.0 ராஜாராம் அதிமுக 43.72[14]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 கொளத்தூர் திமுக வெற்றி 47.7 சைதை துரைசாமி அதிமுக 45.78[15]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 கொளத்தூர் திமுக வெற்றி 54.3 ஜே. சி. டி. பிரபாகர் அதிமுக 31.8[16][17]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 கொளத்தூர் திமுக வெற்றி 60.86 ஆதிராஜாராம் அதிமுக 20.27[18]
வெற்றி தோல்வி

பொழுதுபோக்கு

ஸ்டாலின் துடுப்பாட்டம், கணினி விளையாட்டு, பூப்பந்தாட்டம், சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.[9]

மேற்கோள்கள்

 1. "தமிழக ஆளுநரின் பத்திரிகைக் குறிப்பு", மே 29, 2008.
 2. 2.0 2.1 "Karunanidhi makes Stalin Deputy Chief Minister". TheHindu.com.
 3. 3.0 3.1 "Stalin appointed Tamil Nadu Deputy CM" (in en). https://www.indiatoday.in/headlines-today-top-stories/story/stalin-appointed-tamil-nadu-deputy-cm-48892-2009-05-28. 
 4. 4.0 4.1 "IE100: The list of most powerful Indians in 2019" (in en-IN). 2019-09-30. https://indianexpress.com/article/india/ie100-list-of-most-powerful-indians-in-2019-narendra-modi-amit-shah-mukesh-ambani-gogoi-mohan-bhagwat-6039930/. 
 5. 5.0 5.1 http://www.bharatstudent.com.+"M K Stalin, A. R. Rahman & Mylswamy Annadurai|A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Photo Gallery, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Stills, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Gallery, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Photos" (in en) இம் மூலத்தில் இருந்து 2019-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190811200511/http://www.bharatstudent.com/cafebharat/event_photos_3-Hindi-Events-M_K_Stalin_A_R_Rahman_Mylswamy_Annadurai-Photo-Galleries-1,8,4359,1.php. 
 6. 6.0 6.1 "Rahman, Stalin get honorary doctorates" (in en). 2009-08-01. https://www.hindustantimes.com/india/rahman-stalin-get-honorary-doctorates/story-E3U4gzMBfuiwIPJzn85RyN.html. 
 7. 7.0 7.1 "Stalin, Rahman, Annadurai conferred honorary doctorates | Asian Tribune" இம் மூலத்தில் இருந்து 2019-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190811200515/http://www.asiantribune.com/node/22046. 
 8. "A R Rahman to be awarded honorary doctorate". https://www.news18.com/news/india/rahman-awarded-doctorate-310195.html. 
 9. 9.0 9.1 தட்ஸ் தமிழ் மு.க ஸ்டாலின் பரணிடப்பட்டது 2010-09-02 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-06-2009
 10. 10.0 10.1 "Mayor's office slips out of Stalin's hand-Cities-NEWS-The Times of India". 2007-03-11. https://web.archive.org/web/20070311121408/http://timesofindia.indiatimes.com/articleshow/msid-13690000,prtpage-1.cms. 
 11. 11.0 11.1 "Statistical report on Tamil Nadu Assembly election 1984". Election Commission of India. 1984. p. 25 இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113110352/https://www.eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1984/StatisticalReportTamilNadu84.pdf. 
 12. 12.0 12.1 "Statistical report on Tamil Nadu Assembly election 1996". Election Commission of India. 1996. p. 261 இம் மூலத்தில் இருந்து 7 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007221700/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf. 
 13. 13.0 13.1 "Statistical report on Tamil Nadu Assembly election 2001". Election Commission of India. 2001. p. 257 இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101006173934/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf. 
 14. 14.0 14.1 "Statistical report on Tamil Nadu Assembly election 2006". Election Commission of India. 2006. http://eci.nic.in/archive/May2006/index_st.htm. 
 15. 15.0 15.1 "Statistical report on Tamil Nadu Assembly election 2001". Election Commission of India. 2011. p. 36. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf. 
 16. 16.0 16.1 "The verdict 2016". The Hindu (Chennai): p. 6. 19 May 2016. 
 17. 17.0 17.1 "Green cover". The Times of India (Chennai): p. 2. 19 May 2016. 
 18. 18.0 18.1 https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS2213.htm?ac=13
 19. "Naan Mudhalvan". https://naanmudhalvan.tnschools.gov.in/home. [தொடர்பிழந்த இணைப்பு]
 20. "‘நான் முதல்வன்’ - தமிழக மாணவர்களை உலக அரங்கில் உயர்த்தும் திட்டம்" (in ta). https://www.hindutamil.in/news/vetrikodi/special-articles/902788-students-of-tamil-nadu.html. 
 21. "பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்" (in ta). https://www.dinamani.com/tamilnadu/2022/oct/08/you-can-apply-to-get-saplings-under-the-green-tamil-nadu-movement-3928687.html. 
 22. thanalakshmi.v. "வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” திட்டம்.. முதலமைச்சர் தொடங்கி வைப்பு.." (in ta). https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-green-mission-inaugurated-by-cm-stalin-today-ripjpf. 
 23. "கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் 'புதுமை பெண் திட்டம்' - செப்., 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்" (in ta). 2022-08-30. https://tamil.news18.com/news/education/govt-to-give-rs-1000-monthly-scholarship-to-girls-pursuing-higher-education-will-start-on-5th-793809.html. 
 24. "தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகள்: அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்க பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி" (in ta). 2022-09-06. https://tamil.news18.com/news/education/thagaisal-and-model-schools-will-start-tn-school-education-department-decision-797155.html. 
 25. தினத்தந்தி (2022-09-15). "பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்" (in ta). https://www.dailythanthi.com/News/State/tamil-nadu-launches-free-breakfast-scheme-in-govt-schools-for-class-1-to-5-792712. 
 26. குணசேகரன், துரைராஜ். "#TNBreakfast Scheme: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி- மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்!" (in ta). https://www.vikatan.com/government-and-politics/news/tn-breakfast-breakfast-scheme-for-government-school-students-inaugurated-by-cm. 
 27. "தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ்) 5-ன் இரண்டாம் கட்ட முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது". https://pib.gov.in/pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1774695. 
 28. "முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பு" (in ta). https://www.hindutamil.in/news/environment/886727-tn-climate-change-management-committee-headed-by-cm-stalin.html. 
 29. Revathi (2022-10-22). "முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு: அரசாணை வெளியீடு!" (in en-US). https://tamilminutes.com/climate-change-management-committee-headed-by-chief-minister/. 
 30. Esakkiammal. "தமிழக முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு" (in en). http://www.kumudam.com/news/tamilnadu/48008. 
 31. "Statistical report on Tamil Nadu Assembly election 1989". Election Commission of India. 1989. p. 254 இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101006153620/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf. 
 32. "Statistical report on Tamil Nadu Assembly election 1991". Election Commission of India. 1991. p. 27 இம் மூலத்தில் இருந்து 7 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007161404/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf. 

வெளி இணைப்புகள்

முன்னர்
ஆர். ஆறுமுகம்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1996-2002
பின்னர்
மா. சுப்பிரமணியம்
முன்னர்
எடப்பாடி க. பழனிசாமி
தமிழக முதலமைச்சர்
2021-முதல்
பின்னர்
--
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._ஸ்டாலின்&oldid=3767172" இருந்து மீள்விக்கப்பட்டது