எம். ஆர். ராதா

தமிழக நடிகர்

எம். ஆர். ராதா (ஏப்ரல் 14, 1907 – செப்டம்பர் 17, 1979) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.

எம். ஆர். ராதா
இயற் பெயர் மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன்
பிறப்பு ஏப்ரல் 14, 1907(1907-04-14)
சென்னை, இந்தியா
இறப்பு செப்டம்பர் 17, 1979(1979-09-17) (அகவை 72)
சென்னை, இந்தியா
வேறு பெயர் நடிகவேல்
தொழில் நடிகர்
துணைவர் சரஸ்வதி ராதா,
தனலெட்சுமி ராதா,
பிரேமாவதி ராதா,
ஜெயமால் ராதா,
கீதா ராதா,
பிள்ளைகள் எம். ஆர். ஆர். வாசு,
ராசியா,
ராணி,
ராதாரவி,
ரதி கலா,
ராதிகா சரத்குமார்,
ராஜூ,
மோகன்,
நிரோஷா

பிறப்புதொகு

எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல்[1][2] சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. இவா் ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாள் தம்பதியருக்கு 2வது மகனாக பிறந்தாா். இவா் தந்தை ராஜகோபாலன் ரஷ்யா நாட்டில் ராணுவவீரராகப் பணிபுரிந்து வந்தபோது உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார். ராதாவிற்கு ஜே.ஆர்.நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா என்னும் தம்பியும் இருந்தனர்.[3]

சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஃபோர்டர் (பாரம் சுமக்கும் பணியாளர்) ஆக வேலை செய்து வந்தார். அப்போது ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் அவர்கள் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ராதா மூன்று கனமான சூட்கேஸை ஒரே நேரத்தில் தூக்கி கொண்டு செல்லும் அழகை கண்டு தனது நாடக கம்பெனியில் இணையும்படி ராதாவிடம் கூறினார் பின்பு அந்த நாடக கம்பெனியில் இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.

குடும்பம்தொகு

மனைவிகள்தொகு

இராதாவிற்கு சரஸ்வதி, தனலெட்சுமி, பிரேமாவதி, ஜெயமால், ஆகிய மனைவிகளுக்கு பிறகு இலங்கைக்கு சென்று கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டாா், இவர்களுக்கு பிறந்தவர் தான் நடிகை ராதிகா ஆவார்.

இவா்களுள் இராதாவுடன் நாடகத்தில் நடித்த பிரேமாவதி ஒத்த அரசியலும் கருத்துச்சாய்வும் கொண்டிருந்தார். இருவரும் காதலித்து மணந்துகொண்டனர். சில ஆண்டுகளில் அவர் அம்மைநோயால் இறந்து விட்டார்.[4] அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்துவிட்டான். இவர்களின் மரணம் பற்றி அண்ணாதுரையின் திராவிடநாடு இதழில் "வருந்துகிறோம்" என்னும் தலைப்பின் கீழ், "நடிகவேல் தோழர் எம்.ஆர்.ராதாவின் துணைவியார் பிரேமா அம்மையாரும், மகனும் மறைந்துவிட்ட செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகின்றோம். பிரிவுத் துயரால் வாடும் தோழருக்கு நம் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்ற துணுக்கு இடம்பெற்றது.[5]

மக்கள்தொகு

இராதாவிற்கு தமிழரசன், எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராணி என்ற ரஷ்யா, ரதிகலா, ராதிகா, நிரோஷா, மோகன் ராதா என்னும் பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுள் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராதிகா, நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர். மோகன் ராதா தயாரிப்பாளாராக உள்ளார்.

எம். ஜி. ஆர். கொலை முயற்சிதொகு

1967, சனவரி 12 ஆம் நாள் எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா 1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார்.[6] அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார்.[சான்று தேவை] விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.இராமசாமியின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக ஈ.வெ.இராமசாமியுடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

நடிப்புதொகு

நாடகம்தொகு

ராதா, திராவிட புதுமலர்ச்சி நாடக சபா என்னும் நாடகக்குழுவின் மூலம் ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதிய பலிபீடம் உள்ளிட்ட பல நாடகங்களை நடத்தினார்.[7]

திரைப்படம்தொகு

ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் ராதாவை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை சந்தனதேவன், பம்பாய் மெயில், சத்யவாணி, சோகாமேளர். ஆகிய படங்களில் நடித்தாா்.

இதில் சந்தனதேவன், பம்பாய் மெயில் ஆகிய இருபடங்களும் சேலம் மாா்டன் தியேட்டாில் தாயாாிக்கபட்ட படம் இதில் ராதா நடித்து கொண்டு இருக்கும் போது அந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்த பி.எஸ்.ஞானம் என்பவரை கடத்தி கொண்டு போய் காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தபோது அந்த படத்தின் இயக்குனரும் மாா்டன் தியேட்டா்ஸ் உாிமையாளரும் ஆன டி. ஆர். சுந்தரம் அவா்கள் எம்.ஆா்.ராதாவை அங்கிருந்து வெளியேற்றினாா். ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.

பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் [8] என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது இழந்தகாதல் என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.

இவர் நடிகனாகவும், நகைச்சுவையாகவும், வில்லனாகவும் பல குணசித்திர வேடங்களில் நடிப்பதை கண்டும் அதில் திராவிட கொள்கையயை தைாியமாகவும் நடிப்பாற்றலால் அந்த கருத்துகளை சமுதாயத்தில் மக்களிடையே கூா்மையான நடிப்பால் காட்டியதால் அவருக்கு அன்றைய திராவிட கொள்கை பரப்பு செயளாலா் ஆன பட்டுகோட்டை அழகிாிசாமி அவா்கள் எம். ஆர். இராதா அவா்கள் தனது நடிப்பால் (நடிப்பு) கூா்மையான (வேல்) கருத்துகளை கூறுவதால் நடிகவேல் என்ற பட்டத்தை கொடுத்தாா்.

எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.

அரசியல் வாழ்வுதொகு

துவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும்,[9] பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார்.[10] காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் ""வாக்குசேகரித்தார்"".[9] இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.

தனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.[11]

நடித்த படங்கள்தொகு

எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்:

 1. ராசசேகரன்
 2. சந்தனத்தேவன்
 3. பம்பாய் மெயில்
 4. சத்தியவாணி
 5. சோகாமேளர்
 6. ரத்தக்கண்ணீர்
 7. ஆயிரம் ரூபாய்
 8. கை கொடுத்த தெய்வம்
 9. பாவ மன்னிப்பு
 10. சித்தி
 11. புதிய பறவை
 12. பலே பாண்டியா
 13. பெற்றால்தான் பிள்ளையா
 14. தாய்க்குப்பின் தாரம்
 15. குமுதம்
 16. கற்பகம்
 17. தாயை காத்த தனயன்
 18. பாகப்பிரிவினை
 19. பணம் பந்தியிலே
 20. நல்லவன் வாழ்வான்

இராதாவின் நாடகங்கள்தொகு

 1. ரத்தக்கண்ணீர்
 2. கீமாயணம்
 3. லட்சுமிகாந்தன்
 4. தூக்குமேடை
 5. பேப்பர் நியூஸ் [12]

எழுதிய நூல்கள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

 1. "The ultimate bad guy". தி இந்து (27-07-2014). பார்த்த நாள் 22 பெப்ரவரி 2018.
 2. "எம்.ஆர்.ராதா : பெரியாரின் துருவேறாத போர்வாள்!". புதிய கலாச்சாரம் (சூலை 2008). பார்த்த நாள் 24-02-2018.
 3. சாருநிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், மு.பதிப்பு 2008
 4. நாராயணன், மாலன் (2006-01-027). "வரலாற்றின் வழித் தடங்கள்". பார்த்த நாள் 2007-11-03.
 5. திராவிடநாடு (இதழ்) நாள்:18-3-1951, பக்கம் 12
 6. ஆர். எம். பி. பாண்டியன், நடிகவேள் எம். ஆர். ராதாவின் சீரிய சிந்தனைகள், சென்னை மாலா பதிப்பகம், 1971, பக். 15
 7. குடிஅரசு, 1945-02-24, பக்.8
 8. எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்த திருவாரூர் தங்கராசு
 9. 9.0 9.1 சுதாங்கன். சுட்டாச்சு சுட்டாச்சு (இரண்டாம் பதிப்பு ). சென்னை: கிழக்கு பதிப்பகம். ISBN 81-8368-048-8. 
 10. ராதாவின் கொள்கைப் பிடிப்பைப் பற்றி "த இந்து" நாளிதழில் வந்த குறிப்பு (ஆங்கில மொழியில்)
 11. டி என், கோபாலன். "காயாத கானகத்தே". நினைவில் நின்றவை (பிபிசி): pp. எட்டாவது பாகம். http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml. பார்த்த நாள்: 2007-11-03. 
 12. திராவிடநாடு (இதழ்) நாள்:23-3-1952, பக்கம் 7

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._ராதா&oldid=2952810" இருந்து மீள்விக்கப்பட்டது