ஜெமினி கணேசன்

தமிழ் திரைப்பட நடிகர்

ஜெமினி கணேசன் (Gemini Ganesan, 16 நவம்பர் 192022 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசன்
மிஸ் மாலினி படத்தில் ஜெமினி கணேசன் (1947)
பிறப்புகணபதி சுப்பிரமணியன் சர்மா [1]
(1920-11-16)நவம்பர் 16, 1920 [2]
புதுக்கோட்டை இந்தியாஇந்தியா
இறப்புமார்ச்சு 22, 2005(2005-03-22) (அகவை 84)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்காதல் மன்னன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1947–2002
வாழ்க்கைத்
துணை
அலமேலு (1940–2005) (His death)
புஷ்பவல்லி
சாவித்திரி(1954–1981) (Deceased)
பிள்ளைகள்1.ரேவதி
2.கமலா
3.நாராயணி
4.ஜெயலட்சுமி
5.ராதா
6. பானுரேகா
7.விஜய சாமுண்டீஸ்வரி
8.சதீஷ்கிருஷ்ணா

பிறப்பு

தமிழகத்தின் புதுக்கோட்டையில் 16 நவம்பர் 1920இல் ராமசாமி ஐயர், கங்கம்மாள் இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். இவரது இயற்பெயர் கணபதிசுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.[1]

வளர்ப்பு

ரத்னகண்ணு ராமசாமி ஐயா் கணேசன் என்பதன் முழுபெயர் கொண்ட ஜெமினிகணேசன், தனது 10ஆவது வயதில் தன் தந்தையை இழந்து தனது சித்தப்பா நாராயணன் அரவணைப்பில் வளர்ந்தார்.[1]

படிப்பு

கணேசன் மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை-யில் பயின்று வேதியியலில் அறிவியல் இளவர் (B.Sc. Chemistry) பட்டம் பெற்றார்.[1]

குடும்பம்

ஜெமினி கணேசன், தன் வீட்டினர் செய்த ஏற்பாட்டின்படி பாப்ஜி என்ற அலமேலு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி நான்கு பெண்மக்கள் பிறந்தனர்.

தன்னோடு திரைப்படங்களில் நடித்த புஷ்பவல்லி என்பவரோடு வாழ்ந்தார். இவர்களுக்கு பானுரோகா (1954 அக்டோபர் 10]], ராதா என்னும் இரண்டு பெண்மக்கள் பிறந்தனர்.[3]

மனம்போல் மாங்கல்யம் என்ற படத்தில் தன்னுடன் நடித்த சாவித்திரி என்ற நடிகையோடு வாழ்ந்தார். இவர்களுக்கு விஜயசாமுண்டீஸ்வரி (1958) என்ற மகளும் சதீஷ்கிருஷ்ணா (1965) என்ற மகனும் பிறந்தனர்.[1]

கல்லூரி ஆசிரியர்

கல்லூரிக்கல்வியை முடித்த கணேசன் சென்னை கிருத்துவ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]

திரையுலகில்

தொடக்க காலப்பணி

பின்னர், ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களைத் தேர்வுசெய்யும் கேஸ்டிங் டைரக்டராகப் பணியாற்றினார்.[1]

நடிகர்

முதல் படம்

1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் முதன்முறையாக சிறிய வேடம் ஒன்றில் நடித்த ஜெமினி கணேசன், தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

பெயர்க்காரணம்

ஆரம்ப காலப் படங்களில் அவரது பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. "பராசக்தி' மூலமாக தமிழ்த்திரையுலகிற்கு வந்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே அழைக்கப்பட்டார். எனவே, பெயர்க்குழப்பம் ஏற்படுவதை தவிப்பதற்காக, தனது பெயருடன் தான் திரையுலகில் நுழைந்த ஜெமினி நிறுவனத்தின் பெயரை முன்பகுதியில் இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.[1]

வில்லன்

ஜெமினி கணேசன் இரண்டு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவை:

1952-இல் வெளியான "தாயுள்ளம்' என்ற படத்தில் ஜெமினி கணேசன் வில்லனாகவும் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாகவும் நடித்தனர். பிற்காலத்தில் ஆர்.எஸ்.மனோகர் வில்லன் ஆகவும் ஜெமினி கதாநாயகன் ஆகவும் நிலைபெற்று விட்டனர். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் ஜெமினி கணேசன் இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார்.[1]

கதாநாயகன்

கதாநாயகன் வேடத்தில் ஜெமினி நடித்த முதல் படம் 1953-ஆம் ஆண்டு வெளியான "பெண்'. இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். 1953-ஆம் ஆண்டில் வெளிவந்த "மனம்போல மாங்கல்யம்' படத்தில் முதன்முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். "வஞ்சிக் கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் அவர் ஒரு சாகச நாயகனாக நடித்தார். "நான் அவனில்லை' படத்தில் ஒன்பது தோற்றங்களில் ஜெமினி நடித்துள்ளார். "முகராசி" என்ற படத்தில் மட்டுமே எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம் "ஆஷாதீப'" என்கிற மலையாள படம். தமிழில் "ஆசைமகன்' என்ற பெயரில் வெளிவந்தது.[1] தொடர்ந்து நடித்த கணவனே கண்கண்ட தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன.

இயக்குநர்

ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் "இதய மலர்' மட்டுமே. தாமரை மணாளன் இப்படத்தை இணைந்து இயக்கியிருந்தார்.[1]

பாடகர்

"இதயமலர்' திரைப்படத்தில் "லவ் ஆல்' என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.[1]

தயாரிப்பாளர்

சொந்தமாக ஜெமினி தயாரித்த ஒரே படம் "நான் அவனில்லை' மட்டுமே. இது வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் பிலிம்பேர் விருது பெற்றார்.[1]

தொலைக்காட்சியில் தொகுப்பாளர்

ஜெமினிக்கு இந்தி மொழி மிக நன்றாகத தெரியும். 1980-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான "ஹம்லோக்' சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் ஜெமினி தமிழில் முன் கதைச்சுருக்கம் தொகுத்தளித்தார்.[1]

சிறப்பு

ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.

புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி" போன்ற பல படங்களை இயக்கினார்.

கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் பிலிம்பேர் விருதினையும் பெற்றார்.

பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.

தமக்குப் பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர், ஏ. வி. எம். ராஜன், முத்துராமன் ஆகியோருடனும் ஜெமினி கணேசன் பல படங்களில் இணைந்து நடித்தார்.

திரை நாயகியர்

எந்த ஒரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாகப் பொருந்தி விடும் திறன் கொண்டமையாலேயே காதல் மன்னன் என்றும் அவர் அறியப்பட்டார். அவருடன் மிக அதிகமான படங்களில் நடித்தவர்களில் சாவித்ரி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

சாவித்ரியுடன் அவர் நடித்த முதல் படம் "மனம்போல மாங்கல்யம்". இதன் படப்பிடிப்பு நடைபெறும் வேளையில்தான் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இதன் பிறகும், இருவரும் இணைந்து "பாசமலர்", "பாதகாணிக்கை", "ஆயிரம் ரூபாய்", "யார் பையன்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இவற்றிற்கு முந்தைய படமான "மிஸ்ஸியம்மா"வும் மிகப் பெரும் புகழ் பெற்ற படமாகும்.

பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம் "ஆஷாதீபம்" என்கிற மலையாள படம். தமிழில் "ஆசைமகன்" என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கு பிறகு இவர்கள் "ஆசை" , "மல்லிகா" , "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "பொன்னு விளையும் பூமி" , "வீரபாண்டிய கட்டபொம்மன்" , "மீண்ட சொர்கம்" ஆகிய படங்களில் வெற்றி கொடி நாட்டினர்.

சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.

அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

பின்னணிப் பாடகர்கள்

பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய டி.எம். சௌந்தரராஜன் ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த ஏ. எம். ராஜா. இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. ஸ்ரீநிவாஸ். இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம். ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப் பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.

அறுபதுகளின் இறுதியில் வெளிவரத்துவங்கிய ஜெமினி கணேசனின் படங்களில், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது பாடற்குரலானார். சுமைதாங்கி போன்ற படங்களில் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை.

1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி. என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார்.

குணச்சித்திர வேடங்கள்

ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா".

சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே கமல்ஹாசன் நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் உன்னால் முடியும் தம்பி என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான அவ்வை சண்முகி.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

ஜெமினி கணேசன் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்கள்

தமிழில் மட்டுமே 97 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் "மிஸ் மாலினி' (1947). 1950களில் தொடங்கி 60-வரை அதிகபட்சமாக 41 திரைப்படங்களிலும், 60-களில் 30 படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் "அவ்வை சண்முகி'(1996).

விரிவான தரவுகளுக்கு -

பிற மொழிப் படங்கள்

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவும் பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார்.

அவரது கல்யாணப்பரிசு இந்தி மொழியில் நஸ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் அவர் நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் "மிஸ் மேரி" (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார். தமிழ் நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டிய பாலிவுட் தமிழ் நடிகர்களை வெகு காலத்திற்கு வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியில் அவரது பங்களிப்பு மிகக் குறைவே.

அஞ்சல் தலை வெளியீடு

 
அஞ்சல் தலை

தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை 2006ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

துணுக்குகள்

 • ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. பராசக்தி (திரைப்படம்) மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.
 • ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் பிலிம்பேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.
 • ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.
 • தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்". இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்ரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 • ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய "இதயமலர்" திரைப்படத்தில் "லவ் ஆல்" என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.
 • ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான ஹம்லோக் சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.
 • இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா தாம் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.
 • ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நினைவெல்லாம் நித்யா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.
 • ஜெமினி கணேசனின் மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.

மறைவு

சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு காலமானார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.

விருதும் பட்டங்களும்

அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர்.[4] அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.[5]

மேற்கோள்கள்

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 ரத்தினம் ராமசாமி, ஜெமினி கணேசன் 100!, தினமணி 2019 திசம்பர் 01
 2. Times of India (Firm) (1982). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman.
 3. [https://web.archive.org/web/20191211043705/http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6213 பரணிடப்பட்டது 2019-12-11 at the வந்தவழி இயந்திரம் பா. ஜீவசுந்தரி, செல்லுலாய்ட் பெண்கள்:ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி புஷ்பவல்லி
 4. "Tribute to Gemini Ganesan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 22 November 2010 இம் மூலத்தில் இருந்து 19 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130519040832/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-22/chennai/28234468_1_kamala-selvaraj-film-industry-tamil-nadu. பார்த்த நாள்: 1 January 2012. 
 5. "ஜெமினி கணேசனுக்கு தபால் தலை வெளியீடு".

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமினி_கணேசன்&oldid=3931799" இலிருந்து மீள்விக்கப்பட்டது